search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக மாநில தலைவர் எல் முருகன்
    X
    பாஜக மாநில தலைவர் எல் முருகன்

    தமிழகத்தில் முக்கிய பிரமுகர்கள் பலரும் பா.ஜனதாவில் இணைய ஆர்வமாக உள்ளனர்- எல் முருகன்

    தமிழகத்தில் முக்கிய பிரமுகர்கள் பலரும் பா.ஜனதாவில் இணைய ஆர்வமாக உள்ளனர் என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் மாற்று கட்சியினர் சுமார் ஆயிரம் பேர் பாரதீய ஜனதா கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ஜனதா மாநிலத் தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்.

    பின்னர் எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜனதா கட்சியில் தொழிலதிபர்கள், கலைத்துறையினர், மருத்துவர்கள், தணிக்கையாளர்கள் என தமிழகத்தில் உள்ள முக்கியப் பிரமுகர்கள் பலரும் ஆர்வமுடன் இணையவுள்ளனர்.

    இதற்கு காரணம் என்னவெனில் மத்திய அரசை சிறப்பாக வழிநடத்தும் மோடியின் தலைமையே காரணமாகும். ஆற்றல் மிக்க தலைவராக பிரதமர் மோடியை கருதுகிறார்கள். கடந்த 6 மாதங்களில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலுமே பல ஆயிரக்கணக்கானோர் கட்சியில் இணைந்து கொண்டிருக்கிறார்கள், இளைஞர் பட்டாளம் பா.ஜ.க.வை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறது. வர இருக்கும் தேர்தலில் பா.ஜ.க. அதிகமான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதே பலரின் கனவாகவும் இருக்கிறது. இது நிச்சயம் நடக்கும்.

    பிரதமர் மோடியின் செயல்பாடுகளை,மக்கள் நலத்திட்டங்களை பார்த்து அத்தனை நாடுகளுமே பாராட்டி வருகின்றன. மக்களின் நீண்ட நாள் கனவான அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கி இருக்கிறது. இனி வரும் 5 மாத காலமும் கடுமையாக உழைத்து, சட்டபேரவைத் தேர்தலில் அதிகமான உறுப்பினர்களை தாமரைச் சின்னத்தில் போட்டியிட வைத்து, சட்டசபையை பா.ஜ.க.அலங்கரிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக எல்.முருகனுக்கு ஐம்பொன்னால் செய்யப்பட்ட முருகன் சிலை மற்றும் வேல் ஆகியவற்றை கட்சித் தொண்டர்கள் பரிசாக வழங்கினர்.

    நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கே.எஸ். பாபு, அமைப்பு சாரா தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர் டி.கணேஷ், கைத்தறி சங்க மாநில துணைத் தலைவர் வி.சுபாஷ், காஞ்சிபுரம் மாவட்ட துணைத் தலைவர் ஓம்.சக்தி. பெருமாள், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×