என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    பூண்டு, வெங்காயம் விற்பது போல் வீடுகளுக்குள் புகுந்து திருடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    வாலாஜாபாத்:

    வாலாஜாபாத் பேரூராட்சி வல்லப்பாக்கம் பகுதியில் கடந்த வாரம் தனியாக இருந்த முதியோர்களின் வீடுகளின் பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்து 6 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தனர். இது குறித்து வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் வாலாஜாபாத் சுற்றுவட்டார பகுதிகளில் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை வாகனத்தில் வைத்து விற்பனை செய்து வந்தவர்களை வாலாஜாபாத் போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் விசாரணையில் பகல் நேரங்களில் வாகனத்தில் பூண்டு, வெங்காயத்தை விற்பனை செய்தவாறு ஒதுக்குபுறமான வீடுகளையும், முதியோர்கள் தனியாக இருக்கும் வீடுகளை கண்காணித்து இரவு நேரங்களில் அந்த வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து செல்லும் அதிர்ச்சி தகவலை போலீசாரிடம் தெரிவித்தனர்.

    அதன்படி திருவள்ளூர் மாவட்டம் தொடுகாடு கிராமத்தை சேர்ந்த கோட்டியப்பன் (வயது 55), அவரது மனைவி அரசி (45), மகன் சந்தோஷ் குமார் (24), மைத்துனர் ரஞ்சித்குமார் (23), மருமகள் துர்காதேவி (29) உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து மினி லாரியை போலீசார் கைப்பற்றினர்.

    கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 5 பேரையும் போலீசார் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    டாஸ்மாக் நிறுவன ஊழியர் வீட்டில் 22 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் சின்னையன் நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ். டாஸ்மாக் நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். இவரும், இவரது மனைவியும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 22 பவுன் தங்க நகை, வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரத்தை மர்மநபர் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.

    இதுபற்றி காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இரவு நேரத்தில் தெருவில் நடந்து வரும் கொள்ளையன், தெரு நாய்களை துரத்துவதற்காக கற்களை எடுத்து வீசியபடி சகஜமாக செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.
    ரூ.1 கோடியே 39 லட்சம் மதிப்பிலான நில மோசடி செய்த தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் ஸ்ரீநாத் பாலாஜி. இவர்களுக்கு சொந்தமாக காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி அருகே, சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகாமையில் ரூ.1 கோடியே 39 லட்சம் மதிப்பிலான 2 ஏக்கர் 30 சென்ட் நிலம் உள்ளது.

    காஞ்சிபுரத்தை சேர்ந்த ரவிச்சந்திரன், அவரது மகன் ஆகியோர் கடந்த 2019-ம் ஆண்டு இந்த நிலத்தை வாங்க முடிவு செய்து அதற்கான முன்பணமாக ரூ.80 லட்சம் கொடுத்துள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்ட நாகராஜ் இதுவரை நிலத்தை பத்திரப்பதிவு செய்யாமலும் கொடுத்த பணத்தை திரும்ப அளிக்காமலும் மோசடி செய்தது தெரியவந்தது.

    இது குறித்து ரவிச்சந்திரன் காஞ்சிபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். விசாரணையில் நாகராஜ் மற்றும் அவரது மகன் ஸ்ரீநாத் பாலாஜி திருப்புட்குழியிலுள்ள நிலத்தை ஏற்கனவே கண்ணன் என்பவருக்கு ஒப்பந்தம் செய்து ஏமாற்றி வந்தது தெரியவந்தது. ஒரே சொத்தை இரு வேறு நபர்களிடம் காண்பித்து ஏமாற்றி வந்தது தெரியவந்தது.

    காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு நில அபகரிப்பு மற்றும் பொருளாதார குற்றவியல் காவல் ஆய்வாளர் சங்கர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. குற்றம் சாட்டப்பட்ட நாகராஜ் மற்றும் அவரது மகன் ஸ்ரீகாந்த் பாலாஜி ஆகியோரை போலீசார் கைது செய்து காஞ்சிபுரம் மாவட்ட குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    சோமங்கலம் அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை:

    காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் நந்தம்பாக்கம் நந்தவனம் நகர் பகுதியை சேர்ந்தவர் வைரமுத்து (வயது 33). இவர் சென்னை கோவூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கணக்காளராக வேலை செய்து வந்தார். இவருடைய உறவினர்களான வினோத்குமார், (வயது 32), விக்னேஷ், (30) குமார் (32), முத்துப்பாண்டி (36) மற்றும் இவருடன் வேலை செய்து வரும் வெங்கடேசன் (20) ஆகியோர் சேர்ந்து நேற்று முன்தினம் மாலை செம்பரம்பாக்கம் ஏரியில் குளிக்க சென்றனர். ஏரியில் குளித்து கொண்டிருந்த போது விக்னேஷ் ஏரியின் ஆழமான பகுதியில் சென்று தத்தளித்துள்ளார். இதனை பார்த்த வைரமுத்து விக்னேஷை காப்பாற்றுவதற்காக ஆழமான பகுதிக்கு சென்று விக்னேஷை காப்பாற்றி உள்ளார். வைரமுத்துவால் தொடர்ந்து நீச்சல் அடிக்க முடியாததால் ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக பூந்தமல்லி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வந்த தீயணைப்பு வீரர்கள் அந்த பகுதிக்கு வந்து ஏரியில் மூழ்கி இறந்தவரின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் என்பதால் அவர்களால் வைரமுத்துவின் உடலை மீட்க முடியவில்லை. நேற்று மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வைரமுத்துவின் உடல் மீட்கப்பட்டது. இது குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    படப்பையில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2¼ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
    படப்பை:

    காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் உள்ள கீழ் படப்பை எஸ்.எஸ்.ஆர். அவென்யூ பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சுரேஷ் (வயது 38). இவர் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மோகனபிரியா, (32). கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேகனபிரியா குழந்தைகளுடன் சொந்த ஊரான வேலூர் மாவட்டம் திருவலம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

    சுரேஷ் தனியாக இருந்து வேலைக்கு சென்று வந்தார். இந்தநிலையில் கடந்த 16-ந் தேதி மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து வர சொந்த ஊருக்கு சுரேஷ் சென்றார். நேற்றுமுன்தினம் இரவு சுரேஷ் குடும்பத்தினருடன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுரேஷ் வீட்டின் உள்ளே சென்று பீரோ லாக்கரை பார்த்த போது அதில் இருந்த ரூ.2¼ லட்சம், 1½ பவுன் நகை மற்றும் வீட்டில் நிறுத்தி வைத்திருந்த ஒரு மோட்டார் சைக்கிள் மர்ம நபர்களால் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து சுரேஷ் மணிமங்கலம் போலீசில் புகார் அளித்தார். கொள்ளை சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா, ஸ்ரீபெரும்புதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், ஆகியோர் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனர்.

    படப்பை ஆத்தனஞ்சேரி ராகவேந்திரா நகர் பகுதியில் வசித்து வருபவர் தமிழ்வாணன், (40) இவர் படப்பை பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு படப்பை டேவிட் நகர் பகுதியில் திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்தினருடன் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்தனர். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த தமிழ்வாணன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அங்கு இருந்த 2¼ பவுன் நகை, ரூ.1500 மற்றும் ஒரு மடிக்கணினி போன்றவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தமிழ்வாணன் மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    படப்பை ஆரம்பாக்கம் பகுதியில் உள்ள காமராஜர் தெருவில் வசித்து வருபவர் சந்திரசேகர் (58). இவர் ஓரகடம் அடுத்த வடக்குப்பட்டு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். வழக்கம்போல வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய அவர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு இருந்த எல்.இ.டி. டி.வி. திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்து சந்திரசேகர் மணிமங்கலம் போலீசில் புகார் அளித்தார். இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    குவைத் மற்றும் துபாயில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.33 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 645 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    சென்னை:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு குவைத் மற்றும் துபாயில் இருந்து சிறப்பு விமானங்கள் வந்தன. குவைத்தில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த ஜிங்கா சுதாகர் (வயது 40) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி அவரது உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அதில் பிரபல நிறுவனத்தின் கிரீம்ஜெல் பாட்டிலில் தங்க துண்டுகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.19 லட்சத்து 14 ஆயிரம் மதிப்புள்ள 375 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

    அதேபோல் துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த தமீம் அன்சாரி (33) என்பவரின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் தலைக்கு பயன்படுத்தும் கிரீம்ஜெல் பாட்டிலில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

    அவரிடம் இருந்து ரூ.14 லட்சத்து 16 ஆயிரம் மதிப்புள்ள 270 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    சென்னை விமான நிலையத்தில் குவைத் மற்றும் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.33 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 645 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 2 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சிபுரத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு பட்டு சேலை வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    காஞ்சிபுரம்:

    கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக பட்டு நகரம் என பிரசித்திபெற்ற காஞ்சிபுரத்தில் பட்டு சேலை வியாபாரம் முடங்கியது. இதனால் வியாபாரிகளும், நெசவாளர்களும் அவதிப்பட்டு வந்தனர். ஊரடங்கு உத்தரவு தளர்வுகளால் பட்டுசேலை விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கங்கள், தனியார் நிறுவனங்கள் திறக்கப்பட்டு பட்டு சேலை வியாபாரம் குறைந்த அளவில் நடைபெற்று வந்தது.

    புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் பிறந்துள்ள நிலையில் முகூர்த்த நாளான நேற்று காஞ்சிபுரம் நகரிலுள்ள பட்டுசேலை விற்பனை கடைகளிலும், பட்டு கூட்டுறவு சங்கங்களிலும், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பட்டு சேலையை வாங்க காஞ்சிபுரத்தில் குவிந்தனர்.

    நீண்ட நாட்களுக்கு பிறகு பட்டு சேலை வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பட்டு சேலை விற்பனை களை கட்டினாலும், பட்டு சேலை வாங்க வெளியூர்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் வருபவர்கள் தங்கள் வாகனங்களை சாலை ஓரங்களில் நிறுத்தி உள்ளதால் காஞ்சிபுரம் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
    துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்தி வந்த ரூ.24 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் பகுதியைச் சேர்ந்த ராவுத்தர் நைனா முகமது (வயது 38), மதுரையைச் சேர்ந்த அப்துல்காதத் ஜெய்லானி (34) ஆகியோர் வந்தனர்.

    இவர்கள் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், இருவரது உடைமைகளையும் சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லை.

    இதையடுத்து 2 பேரையும் தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் 2 பேரின் உள்ளாடைகளிலும் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.24 லட்சம் மதிப்புள்ள 457 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இது தொடர்பாக 2 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர் அருகே விபத்தில் தனியார் கம்பெனி காவலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 60). இவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் உள்ள சிப்-காட்டில் தனியார் கம்பனியில் காவலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் ஏழுமலை மற்றும் அதே கம்பனியில் வேலை செய்யும் சகஊழியரான திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை சேர்ந்த சுரேஷ் (42), ஆகிய இருவரும் ஸ்ரீபெரும்புதூர் சிப்-காட் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    மோட்டார் சைக்கிளை சுரேஷ் ஓட்டி சென்றார். அப்போது சாலையில் நின்று இருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஏழுமலை தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    சுரேஷ் பலத்த காயம் அடைந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சுரேசை மீட்டு, ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிக்சைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான ஏழுமலை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்தி வந்த ரூ.2 கோடியே 18 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ 140 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 14 பேரை கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானங்கள் வந்தன. இந்த விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து துபாயில் இருந்து சென்னை வந்த விமானங்களில் பயணம் செய்த சென்னை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 14 பேர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து 14 பேரையும் தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் 14 பேரின் உள்ளாடைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 கோடியே 18 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ 140 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக 14 பேரையும் கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், தொடர்ந்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஏராளமான கல்லுரிகள், தொழிற்சாலைகள் உள்ளன. ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலம் பகுதியில் தனியார் ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவ கல்லூரி உள்ளது. அதன் அருகே தனியார் அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இங்கு கல்லூரி மாணவர்கள் வடமாநில தொழிலாளர்கள் தங்கி உள்ளனர். இந்த பகுதியில் கல்லூரி மாணவர்கள், வடமாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்கப்படுவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் வந்தது.

    தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது மருத்துவ கல்லூரி அருகே கால்வாயில் ஒரு மர்ம நபர் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்தார். போலீசாரை கண்டதும் அவர் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் விரட்டி பிடித்தனர்.

    போலீசார் அந்த வாலிபரை சோதனை செய்ததில் அவர் திருவள்ளூர் மாவட்டம் குத்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் (வயது31) என்பதும் அவரிடம் கஞ்சா இருப்பதும் அவர் கல்லூரி மாணவர்களுக்கும், வடமாநில தொழிலாளர்களுக்கும் கஞ்சா விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 1½ கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.
    காஞ்சீபுரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    காஞ்சீபுரம்:

    அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி மற்றும் இளைஞரணி சார்பில் 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் காஞ்சீபுரம் பொன்னேரி கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவு தூணில் இருந்து பேரணியாக நடந்து சென்று காஞ்சீபுரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அபுசாலி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அபுதுல்மாலிக் தலைமை தாங்கினர்.ஆர்ப்பாட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகள் யுவராஜ், மணி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
    ×