என் மலர்
செய்திகள்

மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை கார் மீது லாரி மோதல்- 3 பேர் பலி
மாமல்லபுரம்:
பாண்டிச்சேரியை சேர்ந்தவர்கள் செந்தில் (வயது 40), முருகன்(53), ஜெயராமன் (70). இவர்கள் உறவினர்கள் திலகம் என்கிற சுபா,மூர்த்தி, சுந்தரவரதன் ஆகியோருடன் ஒரே காரில் இன்று காலை சென்னை தி.நகரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புறப்பட்டனர்.
இன்று அதிகாலை 5 மணி அளவில் கார், மாமல்லபுரம் அருகே உள்ள குன்னத்தூர் கிழக்கு கடற்கரை, சாலையில் வந்து கொண்டிருந்தது.
அப்போது எதிரே வந்த மினி கண்டெய்னர் லாரி திடீரென கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி முழுவதும் நசுங்கியது.
காரில் இருந்த செந்தில், முருகன், ஜெயராமன் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் திலகம், மூர்த்தி, சுந்தரவரதன் ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த 3 பேரும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான 3 பேரின் உடல்களும் பரிசோதனைக்காக அங்கு வைக்கப்பட்டு உள்ளது.
விபத்து நடந்ததும் கண்டெய்னர் லாரியின் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருமண நிகழ்ச்சிக்கு வந்த போது விபத்தில் சிக்கி 3 பேர் பலியான சம்பவம் உறவினர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






