என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடை பெற்று வருகிறது. நேற்று வெள்ளித்தேர் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஓரிக்கை பகுதியை 12-ம் வகுப்பு மாணவன் ராகுல், திருப்பக்கூடல் தெருவை சேர்ந்த நரேஷ், கோவாவில் என்ஜினீயராக வேலை பார்த்து வரும் கவியரசு ஆகியோர் தங்களது நண்பர்களுடன் விழாவை காண வந்தனர்.
அப்போது கூட்ட நெரிசலில் ஒருவரது காலை அவர்கள் மிதித்ததாக தெரிகிறது. இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மாணவர்கள் 3 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர்.
சிறிது நேரம் கழித்து மாணவர்கள் நரசிங்கராவ் தெரு வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது 15 பேர் கும்பல் திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வந்து மாணவர்களை வழிமறித்தனர்.
வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாளால் மாணவர்கள் நரேஷ், கவியரசு, ராகுல் ஆகிய 3 பேரையும் சரமாரியாக வெட்டினர். இதில் அவர்கள் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர்.
உடனே மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் நரேஷ், கவியரசு ஆகிய 2 பேரும் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராகுல் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த கவியரசு செஸ் சாம்பியன் ஆவார். விடுமுறையில் கோவில் விழாவுக்கு வந்த போது அவர் மீது தாக்குதல் நடந்துள்ளது.
இது குறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரிய தலமாக ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயில் போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் ஏகம்பர நாதர் கோவிலில் பங்குனி மாதஉற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டிற்கான பங்குனி உற்சவ விழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 7-ம் நாளான இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது.
தேரோட்டத்தையொட்டி 24 அடி உயர தேர் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏல வார்குழலியும், ஸ்ரீ ஏகாம்பரநாதரும் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினர்.
இதைத் தொடர்ந்து காலை 9 மணி அளவில்ஏலவார் குழலியும், ஸ்ரீ ஏகாம்பர நாதரும் திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இதில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி வீ.பாரதிதாசன், ஓய்வு பெற்ற நீதிபதி என்.கிருபாகரன், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மா. ஆர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு எம்.சுதாகர், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் எம். மகாலெட்சுமி யுவராஜ், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் பொன் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இதனால் காஞ்சிபுரம் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. தெருக்கள் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.
தேரோட்டத்தின் போது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகம் உள்பட 4 மாநிலங்களைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் இருந்து 1000-க்கும் மேற்பட்டோர் சிவ வாத்தியங்களை இசைத்தவாறு சென்றனர்.
திருத்தேர் 4 ராஜ வீதிகளில் உலாவந்த பின்னர் மதியம் மீண்டும் தேர் நிலையை அடைந்தது. பின்னர் உற்சவ மூர்த்திகள் தேரில் இருந்து கோவிலுக்கு சென்று எழுந்தளி பக்தர்களுக்கு அருளி பாலித்தார்.
இதனையடுத்து திருக்கோவில் உற்சவ மண்டபத்தில் பிராயச்சித்த அபிஷேகமும், விசேஷ திவ்ய சமர்ப்பணமும் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு காண கண் அடியேன் பெற்றவாறே என்ற தலைப்பில் அருட் குருநாதர் சிவாக்கர தேசிக சுவாமிகள் திருமுறை அருளுறை நிகழ்த்துகிறார்.
தேரோட்டத்தை முன்னிட்டு கோவிலில் உள்ள ஆயிரம்கால் மண்டபத்தில் காலை முதல் இரவு வரை அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படைவசதிகள் காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டு இருந்தது. சிவகாஞ்சி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பங்குனி மாத உற்சவத்தையொட்டி வருகிற 15-ந் தேதி காலையில் ஆறுமுகப் பெருமான் வீதியுலாவும். மாலையில் பிட்சாடனர் தரிசனமும், இரவு மின் அலங்காரத்துடன் குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நடைபெறுகிறது.
16-ந் தேதி ஆள்மேல் பல்லக்கு உற்சவமும், இரவு திருக்கோயில் வரலாற்றை விளக்கும் வெள்ளி மாவடி சேவைக்காட்சியும் நடைபெறுகிறது.
17-ந் தேதி சபாநாதர் தரிசனம் மற்றும் ஏலவார் குழலியம்மை ஒக்கப் பிறந்தான் குளத்துக்கு எழுந்தருளி வீதி உலா நடக்ககிறது.
முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை அதிகாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது ஏலவார் குழலி அம்மையும் ஏகாம்பர நாதரும் திருக்கல்யாண திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். அன்று இரவு தங்க இடப வாகனத்தில் சுவாமியும், அம்மனும் வீதிஉலா வருகின்றனர்.
18-ந் தேதி பகல் 12 மணிக்கு கந்தப்பொடி உற்சவமும், இரவு நூதன வெள்ளி உருத்திர கோடி விமானத்தில் வீதியுலா வருகின்றனர். 19-ந் தேதி புருஷாமிருக வாகனத்திலும், இரவு பஞ்ச மூர்த்திகள் வீதியுலா காட்சியும் நடைபெறுகிறது.
20-ந் தேதி காலையில் சந்திரசேகரர் வெள்ளி இடப வாகனத்தில் எழுந்தருளி சர்வ தீர்த்தக்குளத்தில் தீர்த்த வாரி உற்சவம் நடைபெறுகிறது. இரவு யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,300-க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன.
தற்போது பனிக்காலம் முடிந்து கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து விலங்குகளை பாது காக்க உயிரியல் பூங்கா நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
யானைக்கு அதன் வளாகத்திலேயே சேற்று மண் குளியல் மற்றும் ‘ஷவர்’ குளியல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிம்பன்சி குரங்குகளுக்காக அதன் வளாகத்தில் ‘ஷவர்’ குளியல் அமைக்கப்பட்டுள்ளது.
கோடை வெயிலில் இருந்து தற்காத்து கொள்வதற்காக பறவைகளுக்கு அதன் கூண்டுகளை சுற்றி சாக்கு பை மூலம் வெயில் உள்ளே வராத அளவுக்கு திரைகள் அமைக்கப்பட்டு தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது.
சிங்கம், புலி, மான்கள், காட்டு மாடு, ஒட்டகச்சிவிங்கி போன்றவைற்றை வெயிலில் இருந்து காத்துக்கொள்ள புல்லால் ஆன நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
உள்ளரங்கில் காணக்கூடிய ஊர்வன உள்ளிட்ட விலங்குகளுக்கு வெயிலில் இருந்து காத்துக் கொள்வதற்காக காலை மற்றும் மாலை வேளைகளில் தரையில் தண்ணீர் தெளிக்கப்படுகிறது. மரக்கிளைகள், மரப்பொந்து போன்றவை செயற்கை முறையில் அமைத்துள்ளனர்.
இதன்மூலம் வெயிலில் இருந்து ஊர்வன விலங்குகள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிங்கம், புலி, சிறுத்தைகள் போன்றவற்றுக்கு ஐஸ்கட்டியாக உறைய வைத்த மாமிச உணவுகள் வெயிலை முன்னிட்டு கொடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் காலை மற்றும் மாலை வேளைகளில் அதன் கூண்டுக்குள் வைத்து தண்ணீர் பீச்சி அடித்து வெயிலில் இருந்து காத்துக்கொள்ள 2 முறை குளிப்பாட்டி வருகின்றனர். இதுபோல் அனைத்து விலங்குகளுக்கும் அதன் வசிப்பிடத்தில் 24 மணி நேரமும் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டு உள்ளது.
யானை, காண்டாமிருகம், குரங்குகள், பறவைகள் போன்றவற்றுக்கு தர்பூசணி பழங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக யானை மற்றும் சிம்பன்சி குரங்குகளுக்கு இளநீரும் கொடுக்கப்படுகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் மேல் பவழந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன்(வயது 29). இவரது மனைவி சுஜாதா(25). இவர்களுக்கு கடந்த 8-ந் தேதி காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இந்தநிலையில் நேற்று தாய் சுஜாதாவை அவரது மாமியார் கழிவறைக்கு அழைத்து சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது குழந்தை காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து உடனடியாக விஷ்ணு காஞ்சிபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர்.
இதற்கிடையில் குழந்தையின் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு வெளியே ஆட்டோ டிரைவரிடம் விசாரித்த போது, இப்போதுதான் குழந்தையுடன் ஒரு தம்பதியை காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இறக்கிவிட்டு வருகிறேன் என்று கூறியுள்ளார்.
உடனடியாக அதே ஆட்டோவில் போலீசாரின் உதவியுடன் காஞ்சிபுரம் பஸ் நிலையத்திற்கு சென்ற உறவினர்கள் அந்த தம்பதியை தீவிரமாக தேடினர். அப்போது அங்கு மறைவாக குழந்தையுடன் நின்று கொண்டிருந்த தம்பதியை பிடித்து அவர்களிடமிருந்த பச்சிளம் குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குழந்தையை கடத்திய தம்பதியை கைது செய்தனர். குழந்தையை கடத்தியவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் பிச்சிவாக்கம், செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமன் (30) அவரது மனைவி சத்யபிரியா (23) என்பதும் திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், குழந்தையை கடத்தியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
தமிழகத்தில் பொதுவாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் குளிர் மற்றும் பனி மூட்டம் இருக்கும். இதன் பின்னர் படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும்.
கடந்த சில நாட்களாக அதிகாலை நேரத்தில் மிதமாக குளிர் அதிகரித்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை தாம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும் பனி மூட்டம் காணப்பட்டது.
படப்பை பகுதியில் சாலையே தெரியாத அளவுக்கு புகை போல் பனி மூட்டம் இருந்தது. ஆனால் பெரிய அளவில் குளிர் இல்லை. இதனை பொதுமக்கள் வித்தியாசமாக உணர்ந்தனர்.
படப்பை பகுதியில் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் படர்ந்து இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். மெதுவாக வாகனங்களை இயக்கி சென்றனர்.
இதே போல் ஒரகடம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு பகுதிகளிலும் அதிகாலையில் பனி மூட்டம் அதிகமாக இருந்தது.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு அதாவது தனிநபர்கள் அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது 100 பேருக்கு வழங்கி, தலா ரூ.1 லட்சம் வீதம் பண முடிப்பும் வழங்க உள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நல சங்கங்கள், தனிநபர்கள் உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.
சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள் பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை, சுற்றுச்சூழல் மறு சீரமைப்பு மற்றும் பாதுகாப்பு, கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை என்ற தலைப்புகளில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட கலெக்டரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 தனி நபர்கள் நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும். இதற்கான விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் (www.tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கூடுதல் தகவல்களுக்கு காஞ்சிபுரம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை அணுகலாம். பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க வருகிற 15-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
போரூர்:
வானகரம் அடுத்த அடையாளம்பட்டு பாடசாலை தெருவை சேர்ந்தவர் பாளையம். சொந்தமாக லாரி வைத்து ஆற்று மணல் சப்ளை செய்து வருகிறார்.
இவர் இரவு நேரத்தில் தனது வீட்டின் அருகே சாலையோரம் லாரியை நிறுத்தி வைப்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி லாரி மாயமாகி இருந்தது. இதுகுறித்து மதுரவாயல் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் வசந்தன், சப்-இன்ஸ்பெக்டர் கோபால் சம்பவ இடத்தில் இருந்து செங்கல்பட்டு வரை சுமார் 150 இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது லாரியை கடத்தி சென்ற மர்ம கும்பல் ராமநாதபுரத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று லாரி கடத்தலில் ஈடுபட்ட எண்ணூரை சேர்ந்த மோகன் என்கிற குட்டி மோகன், அம்பத்தூர் பகுதியை சேர்ந்த பொன்முருகன், சிலம்பரசன் மற்றும் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த செந்தில் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோன்று சென்னை உள்பட பல இடங்களில் நடைபெற்ற லாரி மற்றும் வேன் திருட்டு சம்பவங்களில் இந்த கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பாக அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆண்டுதோறும் அரசு சார்பில் விவசாயிகள் பயன் பெறும் அளவில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி தென்னேரி பகுதியில் வழக்கம்போல அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இது தொடர்பாக 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இதேபோல் கட்டவாக்கம், மஞ்சமேடு பகுதியில் அறுவடை செய்ய தயார் நிலையில் உள்ள காரணத்தால் உடனடியாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க உத்தரவிடக்கோரி ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலம் அருள் தலைமையில் விவசாயிகள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 22). இவருக்கும் உறவுக்கார பெண் பூஜா விற்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இருவரும் சுங்குவார்சத்திரம் அடுத்த சோகண்டி பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்தனர். கிருஷ்ணன் சுங்குவார் சத்திரம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கிருஷ்ணன் செல்போனில் நீண்டநேரம் வேறுஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது.
இதைகண்ட மனைவி பூஜா கணவரை கண்டித்தார். மேலும் கணவரிடம் இருந்த செல்போனை பறித்து வீசி உடைத்தார்.
இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் பூஜா குளியல் அறைக்கு சென்று விட்டார்.
இதில் மனம் உடைந்த கிருஷ்ணன் வீட்டில் மனைவியின் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிறிது நேரத்துக்குபின்னர் பூஜா குளியல் அறையில் இருந்து வெளியே வந்து பார்த்த போது கணவர் கிருஷ்ணன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து சுங்குவார்சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் விரைந்து வந்து கிருஷ்ணனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் அஸ்வினி என்ற நரிக்குறவ பெண்ணுக்கு அன்னதானம் மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு கோவிலுக்கு நேரில் சென்று அஸ்வினியுடன் அமர்ந்து அன்னதானம் சாப்பிட்டார்.
பின்னர் அவரிடம் அப்பகுதி கோரிக்கைகளை கேட்டறிந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இதையடுத்து தீபாவளி அன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நரிக்குறவர்கள், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாமல்லபுரம் பேரூராட்சி 10-வது வார்டு பகுதிக்கு நேரில் சென்று நலத்திட்டங்களை வழங்கினார்.
இதனால் நரிக்குறவர்கள், பழங்குடியினர் வசிக்கும் பகுதி பிரபலமானது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது மாமல்லபுரம் பேரூராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றியது.
மாமல்லபுரம் பேரூராட்சி, பூஞ்சேரி 10-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் பழங்குடி சமுதாயத்தை சேர்ந்த மஞ்சு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் தி.மு.க வேட்பாளரை விட 135 வாக்குகள் அதிகம் பெற்று இருந்தார்.
இதற்கிடையே அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடலூரில் இருந்து சென்னைக்கு காரில் வந்து கொண்டு இருந்தார்.
அப்போது மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது மாமல்லபுரம் பேரூராட்சி 10-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பழங்குடி சமுதாயத்தை சேர்ந்த மஞ்சுவை அழைத்து எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்கள் கூறி பாராட்டினார்.
இதனை கண்டு கட்சியினர் உற்சாகம் அடைந்தனர்.அப்போது மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி, துணைத்தலைவர் ராகவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இது குறித்து கவுன்சிலர் மஞ்சு கூறும்போது:-
எனக்கு முதன் முறையாக கிடைத்த இந்த பாராட்டால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எடப்பாடி பழனிசாமியை நேரில் பார்த்ததும் அவர் எனக்கு வாழ்த்து கூறியதும் ஆச்சரியமாக இருந்தது. அவர் என்னை நேரில் அழைத்து பாராட்டுவார் என்று நினைக்கவில்லை.
அவரது பாதுகாப்பு கார்கள் வரும் போது எனது கால்கள் நடுங்கியது., எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் நினைத்துக் கொண்டு தைரியமாக கூட்டத்தில் நின்றேன் என்றார்.
இதையும் படியுங்கள்... தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப புதிய பாடத்திட்டம்- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு






