என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த மகாலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் முதல் முறையாக மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் 51 வார்டுகளில் உள்ள பொது மக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்தனர்.
மேயர் மகாலட்சுமி இதில் கலந்து கொண்டு பொது மக்களின் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டார். பெரும்பாலானோர் சாலை, குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை அளித்து இருந்தனர்.
மனுக்களை பெற்றுக் கொண்ட மேயர் மகாலட்சுமி, உடனடியாக தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இது தொடர்பாக மேயர் மகாலட்சுமி கூறும்போது, “காஞ்சிபுரம் மாநகராட்சியில் முதல் முறையாக மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடந்து உள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
எனவே இனி வரும் நாட்களில் வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்படும்” என்றார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் இருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில் ஆற்பாக்கம் கிராமம் உள்ளது. இங்குள்ள பிடாரி கோயில் செல்லும் வழியில் உள்ள காவாங்கரையில் தலைகள் மட்டுமே தெரிந்தபடி கற்சிலைகள் புதைந்து இருந்தது.
இதனை பொதுமக்கள் பத்திரமாக தோண்டி எடுத்து சுத்தம் செய்தனர். அந்த சிலையை உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவைஆதன் ஆய்வு செய்தார்.
அப்போது இந்த கற்சிலை பல்லவர் காலத்தைச் சேர்ந்த மூத்த தேவி எனப்படும் ஜேஷ்டாதேவி சிலை என்பதும் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதும் தெரிந்தது.
மூத்ததேவி எனப்படும் ஜேஷ்டாதேவி சிலையானது 4 அடி உயரத்தில் 3 அடி அகலத்தில் தனது மகன் மாந்தன் மற்றும் மகள் மாந்தியுடன் மூவரும் அமர்ந்தநிலையில் கரண்டமகுடத்துடன் கண்ணைக் கவரும் வகையில் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த ஆபரணங்கள் மற்றும் ஆடைகளுடன் காணப்படுகிறது.
மூத்த தேவியின் வலப்பக்கம் மாட்டுத் தலை கொண்ட அவரது மகன் மாந்தன் கையில் ஆயுதத்துடனும், இடப்பக்கம் அவரது மகள் மாந்தியும் வீற்றிருக்கிறார்கள்.
மூத்த தேவி தலையின் வலப்பக்கம் தூய்மையின் அடையாளமான துடைப்பமும், வலப்பக்கம் அவரின் சின்னமான காக்கை கொடியும் உள்ளது.
மூத்த தேவியுடைய தலையில் கரண்ட மகுடமும் காதில் பத்ர குண்டலமும் கழுத்தில் சரப்பளி ஆபரணமும் தோல்களில் வாகு வளையங்களும் கைகளில் வளையல்களும் பருத்த வயிறோடு விரிந்த கால்களும் இடையில் இருந்து பாதம் வரை நீண்ட அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த ஆடையோடு புன்னகையான முகத்துடன் அழகிய புடைப்பு சிற்பமாக காட்சியளிக்கிறது.
தமிழகத்தில் தொண்டை மண்டலமாக இருந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகமான மூத்த தேவி சிலைகள் உள்ளன. அதிலும் குறிப்பாக இந்த சிலையில் மூத்த தேவியினுடைய மகனும் மகளும் பெரிய உருவமாக அவருக்கு இணையாக காட்டப்பட்டிருப்பது சிறப்பானதாகும்.
மூத்த தேவியின் இடக்கரம் தன்னுடைய மகள் மாந்தியின் இடையில் அணைத்த வண்ணம் உள்ளது கூடுதல் சிறப்பாகும்.
ஆற்பாக்கம் கிராமம் என்பது சைவம், வைணவம், பவுத்தம், சமணம் ஆகிய சமயங்கள் செழிப்புடன் வளர்ந்திருந்த ஊராகும். அந்த ஊரின் பழமையை பறைசாற்றும் வகையில் இந்த சிற்பம் அமைந்துள்ளது
மூத்த தேவிக்கு தவ்வை ஜேஷ்டாதேவி என பல பெயர்கள் உண்டு. இவர் திருமாலின் மனைவியான லட்சுமி தேவியின் மூத்த சகோதரி ஆவார். இவர் குறித்த தகவல் சங்க இலக்கியங்களில் மற்றும் திருவள்ளுவர் அவ்வையார் போன்ற பெரும் புலவர்களும் குறிப்பிட்டுள்ளனர்.
பல்லவர் காலத்தில் வழிபாட்டின் உச்சத்தில் இருந்த இந்த தாய் தெய்வம் நந்திவர்ம பல்லவனின் குலதெய்வமாக இருந்துள்ளது. இதனால் பல்லவர்கால ஆலயங்களில் வீற்றிருப்பார். சில கோயில்களில் இவருக்கென்று தனி சன்னதியும் இருந்துள்ளது. பிற்கால சோழர் காலத்திலும் வழிபாட்டில் தொடர்ந்த இந்ததெய்வம் வளமையின் அடையாளமாக குழந்தைப்பேறு தருபவளாக செல்வவளம் பெருக்குபவளாக போற்றப்பட்டாள்.
நாளடைவில் மூத்ததேவி என்பது மருவி மூதேவி ஆக வழக்கில் வந்து வழிபாடு இல்லாமல் போய் உள்ளது. இது பல்லவர்களின் இறுதிக் காலத்தை சார்ந்ததாகும்.
காஞ்சிபுரம் பல்லவர்களின் தலைநகரமாக அவர்களது ஆட்சியின் கீழ் இருந்த நகரமாகும். எனவே இந்த மாவட்டம் முழுவதும் பல்லவர்களின் வரலாற்று எச்சங்கள் இன்றும் பல இடங்களில் காணப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் பிப்ரவரி 12 மற்றும் 13-ந்தேதிகளில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.
இது 15 மாவட்டங்களில் உள்ள 311 நீர்நீலைகளில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூர் ஏரியில் எடுக்கப்பட்ட ஆய்வில் அதிக அளவில் களியன் வாத்துக்கள் குவிந்து இருப்பது தெரிந்தது.
வனத்துறையினரின் ஏற்பாட்டில் தனியார் அமைப்பினர் தினந்தோறும் மேற்கொண்ட துல்லிய ஆய்வில் 12 தனித்தனி கூட்டங்களாக 2,100 களியன் வாத்துக்கள் பரந்தூர் ஏரியில் முகாமிட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பரந்தூர் ஏரி புதிய சரணாலயமாக மாறி உள்ளது.
இது குறித்து தனியார் அமைப்பினர் கூறியதாவது:-
பரந்தூர் ஏரியில் 2100 களியன் வாத்துக்கள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இவை அனைத்தையும் புகைப்படங்களாக ஆதாரப்படுத்தி உள்ளோம்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகபட்சமாக 20 அல்லது 30 எண்ணிக்கையிலேயே களியன் வாத்துக்கள் இருந்தன. ஆனால் இவை பரந்தூர் ஏரியில் 2,100 எண்ணிக்கையில் இருந்தது ஆச்சரியமாக உள்ளது. நன்னீர் அதிகம் இருப்பதே இதற்கு காரணம் என்று தெரிகிறது.
எனவே இது போன்ற நீர்நிலைகளில் மாசுக்கள் கலப்பதையும், பறவைகள் வேட்டையாடப்படுவதையும் தடுத்தால் வாத்துக்கள் போன்ற பறவைகளை பாதுகாக்கலாம். இதற்கு வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 2015-ம் ஆண்டு இந்த வகை பறவைகள் அழிவின் விளிம்பில் உள்ள அரியவகை பறவையாக சர்வதேச அளவில் பட்டியலிடப்பட்டன. களியன் வாத்துக்களுக்கு தலை, கழுத்து பகுதிகள் சிவப்பு நிறத்தில் காணப்படும். சிமெண்டு நிறத்தில் அலகு இருக்கும். மேற்கு ஐரோப்பாவில் இருந்து இனப்பெருக்கத்துக்காக இவை மத்திய ஆசியாவில் சைபீரிய பகுதிக்கு செல்லும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கடந்த 11 தினங்களாக காலை மற்றும் மாலை நேரங்களில் பல்வேறு வாக னங்களில் ஏகாம்பர நாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
நேற்று அதிகாலை பங்குனி திருக்கல்யாண திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது நேற்று நள்ளிரவு ருத்ர கோட்டி விமானத்தில் ஏகாம்பரநாதர் ஏலவார்குழலி எழுந்தருளினார்கள். அவர்கள் 4 மாட வீதி வழியாக உலா வந்தனர்.
காஞ்சீபுரம் அனைத்து பூக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த திரு விழா வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஏகாம் பரநாதர் மற்றும் வள்ளி தேவயானை முருகன் உள் ளிட்டவர்களை வணங்கி னார்கள். மேலும் நள்ளிரவு 3 மணி வரை வாண வேடிக்கை நடைபெற்றது.
குன்றத்தூர் பஸ் டிப்போ அருகில் உள்ள நற்பவி ஆயுர்வேதா மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் 18-ந்தேதி தொடங்கியது. இந்த முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது.
முகாமில் ஆயுர்வேதா, பஞ்சகர்மா, யோகா மற்றும் இயற்கை முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் வெரிகோஸ் வெயின்ஸ் 5 நிலைகளுக்கும் டாக்டர் சரண்யா தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்கிறார்கள். சிகிச்சை முகாம் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கிறது. மேலும் விவரங்களுக்கு 91506 99903 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த கோவிலில் பங்குனி உத்திரதிருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் ஏகாம்பரநாதர் மற்றும் ஏலவார்குழலி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 11- வது நாளான இன்று அதிகாலை ஏலவார்குழலி- ஏகாம்பரநாதர் திருக்கல்யாணம் மிக விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக நேற்று இரவே ஏகாம்பரநாதர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இரவு முழுவதும் கோவில் வளாகத்தில் பரதநாட்டியம், சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.
திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். திருக்கல்யாணம் நிறைவு பெற்றதும்கு ஏகாம்பரநாதர்-ஏலவார்குழலி வீதியுலா நடந்தது.
வருகிற 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீர்த்தவாரியுடன் பங்குனி உத்திரத் திருவிழா நிறைவுபெறுகிறது.
காஞ்சிபுரத்தில் உள்ள பக்தவத்சலம் பாலிடெக்னிக் கல்லூரியில் அரசு அலுவலர்களுக்கான அடிப்படை பயிற்சியை மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
இப்பயிற்சியில் பல்வேறு துறைகளில் உள்ள காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் 275 பேர் பயிற்சி பெற உள்ளனர். பரவலாக்கப்பட்ட பயிற்சி மையங்கள் மூலம் கடந்த 4 மாதங்களில் மட்டும் சுமார் 4 ஆயிரம் பேர் உள்பட இதுவரை சுமார் 1,34,835 அரசு அலுவலர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.
நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், சென்னை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி மாவட்ட வருவாய் அலுவலர் கீதா, கல்லூரி முதல்வர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தாம்பரம் அருகே உள்ள கொளப்பாக்கம் ஏரியை ஒட்டி வரபிரசாத் நகர் உள்ளது. இது வண்டலூர் பூங்காவின் பின்புறம் அமைந்துள்ளது.
இந்த நிலையில் வர பிரசாத் நகருக்குள் நேற்று இரவு சுமார் 4 அடி நீளம் உள்ள முதலை ஒன்று ‘ஹாயாக’ சுற்றி வந்தது. இதனைக்கண்டு நாய்கள் குரைத்தன. அப்பகுதி மக்கள் வந்து பார்த்தபோது சாலையில் முதலை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலையை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று வண்டலூர் பூங்கா நிர்வாகத்தினருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து வனத்துறை அதிகாரிகள், பூங்கா ஊழியர்கள் விரைந்து வந்து குடியிருப்புக்குள் புகுந்த முதலையை லாவகமாக பிடித்தனர். பின்னர் அதனை பாதுகாப்புடன் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு சென்றனர்.
மேலும் வரபிரசாத் நகர் பகுதிக்குள் வேறு முதலை புகுந்துள்ளதா என்று சோதனையிட்டனர். ஆனால் எதுவும் சிக்கவில்லை.
குடியிருப்புக்குள் முதலைகள் வந்தால் உடனடியாக வண்டலூர் பூங்கா நிர்வாகத்துக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் முதலை புகுந்ததால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது. இதற்கு முன்பும் சதானந்தபுரம், நெடுங்குன்றம் பகுதிகளுக்குள் முதலை புகுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்படும் முதலைகள் சிறிதாக இருக்கும்போது உணவுக்காக பறவைகள் தூக்கி செல்கின்றன. அவை தவறி பூங்காவை தாண்டியுள்ள காட்டு பகுதிகளுக்குள்ளும், நீர்நிலைகளிலும் விழுந்து வளர்ந்து வருகிறது.
இப்படி வளர்ந்த முதலைகள் சதானந்தபுரம், நெடுங்குன்றம், கொளப்பாக்கம் ஏரி பகுதிகளில் இருப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
பொதுமக்களின் தொடர் குற்றச்சாட்டுக்கு பின்னர் வண்டலூர் பூங்காவில் முதலைகள் இருக்கும் நீர் நிலைகளின் மேல் பகுதியில் பறவைகள் புகாத வண்ணம் வலைகள் அமைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் பூங்காவிற்கு வெளியே தண்ணீருக்குள் இருக்கும் முதலைகளை பிடிப்பதில் சிரமம் என்பதால் அதனை தேடும் முயற்சி நடைபெறவில்லை. நீர்நிலைகளில் உள்ள முதலைகள் வெளியே வரும்போது அதனை வனத்துறையினர் பிடித்துச் செல்கின்றனர்.
எனவே வண்டலூர் பூங்காவின் பின்புறம் உள்ள பகுதிகள் மற்றும் நீர்நிலைகள் முழுவதும் வனத்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி முதலைகளை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






