என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள், வணிக வளாகங்கள், துணி கடைகள், மருந்து கடைகள், பல்பொருள் அங்காடிகளில் பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்து, அதற்கு மாற்று பொருட்களை பயன்படுத்த ஒருவார காலத்திற்குள் மாறும்படி 21.3.2022 அன்று செய்தி வெளியிடப்பட்டது.
மேலும் இதை தீவிரமாக கண்காணிக்க மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் தனித்தனியே குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுக்கள் பகுதி வாரியாக திடீர் ஆய்வுகள் மேற்கொள்வார்கள். அவ்வாறு அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், சேமித்து வைத்தல், போக்குவரத்து செய்தல், விநியோகித்தல், விற்பனை செய்தல் மற்றும் உபயோகப்படுத்துதல் போன்றவை கண்டறியப்பட்டால் சிறிய வணிக விற்பனையாளர்களுக்கு முதல் தடவை ரூ.100, 2-வது தடவை ரூ.200 3-வது தடவை ரூ.300 அபராதம் விதிக்கப்படும்.
இதேபோல் மளிகை கடைகள், மருந்து கடைகளுக்கு ரூ.1000 முதல் ரூ.5 ஆயிரம் வரையும், வணிக வளாகங்கள், துணிக் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையும், பயன்படுத்தப்பட்ட மற்றும் தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேமித்தல், வழங்குதல், கொண்டு செல்லுதல், விற்பனை செய்தல் மற்றும் பகிர்ந்தளித்தால் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையும் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதேபோல் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள மற்றொரு அறிவிப்பில், தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என்கிற உறுதி மொழியை 1.4.2022 அன்று பொதுமக்கள், மாணவர்கள், வணிகர்கள், அரசு ஊழியர்கள் ஆகிய அனைவரும் ஏற்க வேண்டும்.
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத இயற்கையில் கிடைக்கும் வாழையிலை, பாக்குமர இலை, காகித சுருள், கண்ணாடி உலோகத்தால் ஆன குவளைகள், காகித உறிஞ்சு குழாய்கள், காகித துணி கொடிகள், உணவு தேக்கரண்டிகள், அலுமினியத்தாள், தாமரை இலை, மூங்கில் மரம், மண் பொருட்கள், துணி, காகிதம், சணல் பைகள், பீங்கான் பாத்திரங்கள், மண் குவளைகளை பயன்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம்:
வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் தமிழக எல்லையோர ஆந்திர மாநில பகுதிகளில் கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் நிரம்பி வரலாறு காணாத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக பாலாற்றில் இருந்து பிரிந்து செல்லும் கால்வாய்கள் மூலம் கரையோர கிராமங்களில் உள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பின.
ஆனாலும் பாலாற்றில் 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி அளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பல ஆண்டுகளுக்கு பிறகு ஆறு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்தபடி சென்றது.
பாலாற்றின் குறுக்கே வாயலூர், வல்லிபுரம், பழையசீவரம் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் முழுவதும் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது.
இதன்காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கும் கிணறுகளில் நீரூற்று அதிகரித்துள்ளது.
தற்போது கோடைகாலம் தொடங்கிய நிலையிலும் பாலாற்றில் தொடர்ந்து தண்ணீர் ஓடுகிறது. இதன் காரணமாக காஞ்சிபுரம் மற்றும் பாலாற்றின் கரையோர மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததன் காரணமாகவே பாலாற்றில் தொடர்ந்து தண்ணீர் ஓடுவதாக பாலாறு கீழ் வடிநில கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். பாலாற்றில் வெள்ளம் ஓடுவது தொடர்பாக அதன் கரையோர பகுதி மக்கள் கூறியதாவது:-
காஞ்சிபுரம் பாலாற்றில் பல ஆண்டுகளுக்கு பிறகு கோடை காலத்திலும் தண்ணீர் ஓடுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே மழை சரியாக பெய்யாததால் பாலாறு பாலைவனம் போல காட்சியளித்தது.
ஆனால் கடந்த ஆண்டு பெய்த வரலாறு காணாத மழை காரணமாக பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கரையோர மக்கள் அச்சத்துக்கு ஆளானார்கள்.
பல ஆண்டுகளாக பாலாறு வறண்டு கிடந்ததால் வெள்ள நீரை அதன் மணல் பகுதிகள் ஒன்றாகவே உறிஞ்சியது. அதன் பிறகே ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. இதன் காரணமாக கிராம பகுதிகளுக்கு வெள்ள பாதிப்பு ஏற்படவில்லை.
தற்போது மழை காலம் முடிவடைந்து கோடைக் காலம் தொடங்கியுள்ளது. ஆனாலும் பாலாற்றில் தண்ணீர் ஓடுவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதுதொடர்பாக பாலாறு கீழ் வடிநில கோட்ட அதிகாரிகள், ‘நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. இதனால் கோடை காலத்திலும் தண்ணீர் ஓடுகிறது’ என்றனர்.
பள்ளிக்கரணை:
பள்ளிக்கரணை, வி.ஜி.பி. சாந்தி நகர், 3-வது தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் பள்ளிகரணை லேபர் காலனி முதல் தெருவில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
நேற்று இரவு அவர் வியாபாரம் முடிந்ததும் வழக்கம் போல் கடையை பூட்டிச்சென்றார். இந்த நிலையில் இன்று காலை வெங்கடேசன் கடையை திறக்க வந்த போது ஷட்டர் பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது கடைக்குள் வைத்தி ருந்த ரூ.2 லட்சத்து 74 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இது குறித்து பள்ளிக்கரணை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அங்குள்ள கண்காணிப்பு காமிராவில் 2 மர்ம வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வருவதும், அவர்கள் கடைக்குள் நுழைந்து கொள்ளையில் ஈடுபடுவதும் பதிவாகி உள்ளது.
இதனை வைத்து கொள்ளையர்களை பிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பிரதான சாலையில் அனீஷ் என்பவர் பிரியாணி கடை மற்றும் டீ ஸ்டால் என இரண்டு கடைகள் வைத்து நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடைக்குச் சென்ற இரண்டு ஆசாமிகள் கடையில் இருந்த உரிமையாளர்களிடம் மாதம் மாதம் 10,000 ரூபாய் செலவிற்கு கொடுக்க வேண்டும் இல்லையென்றால் கடை நடத்த விடமாட்டோம் என கூறி மிரட்டியதும் 3,000 ரூபாய் மட்டும் அனுப்புவதாகக் கூறி கடை உரிமையாளர் கூகுள் மேப் மூலமாக அனுப்பிள்ளார்.
மீதமுள்ள 7 ஆயிரம் ரூபாயை உடனே தரும்படி கேட்டதும் அதற்கு பணம் தற்போது இல்லை என கூறியதும் ஆத்திரமடைந்த இரண்டு பேரும் சாலையில் இருந்த கற்களை எடுத்து கடையை நோக்கி வீசி கண்ணாடிகளை உடைத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி கடைகளை அடித்து நொறுக்கி கடையின் உரிமையாளரையும் தாக்கியுள்ளனர். இதை பார்த்ததும் கடையில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அதன் பின் பொதுமக்கள் கூட்டம் கூடவே இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து அப்பகுதி வியாபாரிகள் சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சேதமடைந்த கடைகளை பார்வையிட்டனர். பின்னர் அந்த கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்ட நபர்கள் திருநீர்மலை ரங்கா நகர் 2-வது தெருவை சேர்ந்த சுகுமார் (36) மற்றும் தினேஷ் (38) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து வீட்டில் பதுங்கியிருந்த இருவரையும் சங்கர் நகர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சுகுமார் மீது சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும், பல்லாவரம், பம்மல் அதன் சுற்றியுள்ள கடைகளில் ரூ.5000, மற்றும் ரூ.10,000 வரை மாமூல் கேட்டு வாங்கி வந்ததும் தெரிய வந்தது. அது மட்டுமின்றி சங்கர் நகர் காவல்நிலையத்தில் அவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரிய வந்தது.
தினேஷ், சுகுமார் உடன் இணைந்து கடந்த ஆறு மாத காலமாக மாமூல் வசூல் வேட்டையில் ஈடுபட்டதும் விசரணையில் தெரிய வந்தது. போலீசார் அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
கைதான தினேஷ், தாம்பரம் மாநகராட்சி 31-வது வார்டு தி.மு.க. கவுன்சிலரான சித்ராதேவியின் கணவர் முரளியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. சுகுமார் தி.மு.க. அடிப்படை உறுப்பினர் ஆக உள்ளார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவகத்தில் நுகர்வோர் உரிமைகள் தினவிழா நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி கலந்து கொண்டார். அப்போது அவர் போசியதாவது:-
வணிக சந்தையில் வாங்கும் பொருட்களின் தரம், பாதுகாப்பு, நியாயமான விலை, உற்பத்தியாளர் குறித்த விவரம், சேவைகள் மற்றும் அதன் விதிமுறைகள் போன்றவை குறித்து நுகர்வோர் அறிந்து அதைப்பயன்படுத்துவது மிக இன்றியமையாதது.
எனவே இது குறித்து விழிப்புணர்வை உருவாக்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் கருத்தரங்கு கட்டுரைப்போட்டி மற்றும் கவிதைப்போட்டி நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் பொதுமக்களிடையே இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் மற்றும் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் ஆகியவை இச்சட்டத்தை செயல்படுத்தும் கருவியாக அமைந்துள்ளது.
நுகர்வோர்களுக்கு உரிமைகள் மட்டுமல்லாமல் கடமைகளும் உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே நுகர்வோர் உரிமைகளையும், கடமைகளையும் நன்கறிந்து விழிப்புணர்வோடு செயல்படுவது சமூக பொருளாதார வளர்ச்சிக்கு ஊன்று கோலாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத் ரய்யா, இணைப்பதிவாளர் லட்சுமி, முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜோதி சங்கர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசுக்கு எதிராக 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்து இருந்தன.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத்தை தொடர வேண்டும். தேசிய பணமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.
நேற்று முதல் நாள் போராட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை. பல்வேறு இடங்களில் தொழிற்சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
இன்று 2-வது நாளாக தொழிற்சங்கத்தினரின் போராட்டம் நடைபெற்றது. எனினும் நேற்றை விட இன்று கூடுதல் அரசு பஸகள் வழக்கம் போல் இயங்கின.
இதனால் போக்குவரத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. சில இடங்களில் மட்டும் பஸ்கள் இல்லாததால் பயணிகள் அவதி அடைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 80 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டது. தனியார் பஸ்களும் முழுமையாக இயங்கியதால் போக்குவரத்து பாதிப்பு இல்லை. ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின.
காஞ்சிபுரம் பணிமனை முன்பு தொ.மு.ச. மாநில துணை செயலாளர் ரவி தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நிர்வாகிகள் சுதாகரன், சுந்தரவரதன், சி.ஐ.டி.யூ நிர்வாகிகள் நந்தகோபால், இளங்கோவன், ஐ.என்.டி.யூ.சி., ராமநீராவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கெண்டனர்.
செங்கல்பட்டு பணிமனையில் 84 அரசு பஸ்கள் உள்ளன. இதில் 15 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. தனியார் பஸ்கள் முழுவதும் இயங்கின. இதனால் அச்சரப்பாக்கம், செய்யூர், கடப்பாக்கம், உத்திரமேரூர், மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
தனியார் பஸ்களில் கூட்டம் அலைமோதியது. பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
ரெயில் நிலையத்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. செங்கல்பட்டு புதிய பஸ்நிலையம் அருகே உள்ள பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். செங்கல்பட்டு டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மாமல்லபுரத்திற்கு தாம்பரம், செங்கல்பட்டு, திருவான்மியூர் பகுதிகளில் இருந்து வரும் அரசு பஸ்கள் குறைக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. இதனால் பஸ் நிலையம், புராதன சின்னம் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 75 சதவீத பஸ்கள் ஓடின. தனியார் பஸ்கள் முழுவதும் இயங்கியது. இதனால் பெரிய அளவில் போக்குவரத்து பாதிப்பு இல்லை. ரெயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது.
மணவாளநகர் ஜங்சனில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் கஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம்:
மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள், தொழிலாளர் விரோத திட்டங்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ஊதிய உயர்வு, ஒப்பந்த தொழிலாளர்களை முறைப்படுத்துதல், தனியார் மயத்துக்கு எதிர்ப்பு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இன்றும், நாளையும் நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தொழிற்சங்கத்தினர் அழைப்பு விடுத்து இருந்தனர்.
அதன்படி இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை. இதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு பஸ்கள் அதிக அளவில் இயங்காததால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 140 பஸ்கள் உள்ளன. இதில் 10 பஸ்கள் மட்டுமே காலையில் ஓடின இதனால் பஸ் நிலையங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்துக்கிடந்தனர்.
காஞ்சிபுரத்தில் தனியார் பஸ்கள் வழக்கம் போல் ஓடின. போலீசார் வாகனங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அரசு பஸ்கள் குறைந்த அளவில் இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, திருத்தணி, ஆர்.கே. பேட்டை, பொதட்டூர் பேட்டை, பொன்னேரி ஆகிய 6 போக்குவரத்து பணிமனையில் மொத்தம் 223 அரசு பஸ்கள் உள்ளன. இதில் 80 பஸ்கள் மட்டுமே இயங்கியது. மாவட்டம் முழுவதும் 37 சதவிகிதம் அரசுப் பஸ்கள் மட்டுமே ஓடின.
தனியார் பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கியது.
திருவள்ளூர் உழவர் சந்தை அருகே எ.ஐ.டி.யூ.சி மாவட்டத் தலைவர் கஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட துணை செயலாளர் குருமூர்த்தி, மண்டலத் தலைவர் சுந்தர் ராஜன், மாநில பொதுச்செயலாளர் அருண்பிரசாத், மாவட்ட செயலாளர் சீனிவாசன், ராஜேந்திரன், சண்முகம், முரளி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களை திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திர தாசன் திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ் வெங்கடேசன் மற்றும் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதேபோல் திருத்தணி நகராட்சி அலுவலம் முன் 100-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு பணிமனையில் மொத்தம் 84 அரசு பஸ்க்கள் உள்ளன. இங்கிருந்து மாமல்லபுரம், கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், சூனாம்பேடு, கடப்பாக்கம், செய்யூர், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், உத்திரமேரூர், சாலவாக்கம், வடக்குப்பட்டு, திருப்போர் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
தொழிற்சங்கத்தினர் போராட்டத்தையொட்டி இன்று 3 அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது.பெரும்பாலான பஸ்கள் ஓடாததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் கூடுதல் கட்டணம் கொடுத்து ஆட்டோக்களில் பயணம் செய்தனர்.
செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் வழக்கத்தை விட கூட்டம் காணப்பட்டது. இதேபோல் அனைத்து மின்சார ரெயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
பூந்தமல்லியில் மொத்தம் 149 பஸ்களில், 18-ம், குன்றத்தூரில் மொத்தம் உள்ள 29 பஸ்களில் 5 பஸ்கள் மட்டுமே இயங்கின. இதனால் காலையில் வேலைக்கு மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் ஷேர் ஆட்டோக்கள் மற்றும் லோடு ஆட்டோக்களில் பயணம் செய்து சென்றனர். ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப் பட்டதால் சிலர் நடந்தே சென்றனர்.
தாம்பரம்:
சென்னையின் நுழைவு வாயிலான தாம்பரத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தாம்பரம் பகுதியில் இருந்து அரசு பஸ் மூலம் வேலைக்கு செல்வது வழக்கம் இன்று பேருந்துகள் வேலைநிறுத்தம் காரணமாக தாம்பரம் பணிமனையில் இருந்து இயக்கப்பட வேண்டிய 186 பஸ்களில் 5 பஸ்கள் மட்டுமே இயங்கியது. இதுபோல் குரோம்பேட்டையில் பணிமனையில் இருந்து 220 பஸ்கள் இயக்கப்பட வேண்டும். ஆனால் காலை 16 பஸ்கள் மட்டுமே இயங்கியதால் பொதுமக்கள் பள்ளி கல்லூரி செல்பவர்கள் வேலைக்கு செல்பவர்கள் என பலரும் பஸ்சிற்காக பல மணி நேரம் காத்திருந்து ஏமாற்றமே அடைந்தனர்.
இதனால் அவர்கள் அவ்வழியாக வரும் தனியார் பஸ்கள் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வேன்களில் ஷேர் ஆட்டோக்கள் போன்றவற்றில் கட்டணங்கள் செலுத்தி கடும் சிரமத்துக்கு உள்ளாகி தங்களது அலுவலகங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதைப் பயன்படுத்தி ஷேர் ஆட்டோக்கள் மற்றும் தனியார் வாகனங்கள் வழக்கமாக அழைத்துச் செல்லும் போது பெறக் கூடிய கட்டணத்தை விட இரண்டு மடங்கு கூடுதலாக வசூலிக்கின்றனர் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
பேருந்துகள் இயங்காததால் பெரும்பாலான பொதுமக்கள் தாம்பரத்தில் இருந்து மின்சார ரெயிலில் பயணித்தனர். இதனால் மின்சார ரெயிலில் வழக்கத்தை விட இன்று கூட்டநெரிசல் அதிகமாகவே காணப்பட்டது. நாளொன்றுக்கு தாம்பரம் ரெயில் நிலையத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில்களை பயன்படுத்திய நிலையில் இன்று பஸ்கள் இயங்காததால் பெரும்பாலான பொதுமக்கள் ரெயிலிலேயே பயன்படுத்த வேண்டி நிலை ஏற்பட்டதால் ரெயில் நிலையங்களில் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.
அரசு பஸ்சை பயன்படுத்தும் பள்ளி கல்லூரி மாணவர்கள் அவதி அடைந்தனர். இந்த கல்வி ஆண்டில் பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு அரசு இலவச பஸ் பாஸ் வழங்க வில்லை என்றாலும் பள்ளி சீருடையில் அல்லது பள்ளி கல்லூரி அடையாள அட்டையை வைத்துக் கொண்டு அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவித்திருந்தது.
இதைப் பயன்படுத்திய ஏராளமான அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் கல்லூரி மாணவ, மாணவிகள் தினமும் கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் சென்று வந்தனர். இன்று அரசுப் பஸ்கள் 5 சதவீத மட்டுமே இயங்கும் நிலையில் அரசுப் பஸ்சை பயன்படுத்தி பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பெரும்பாலானோர் தங்களது பள்ளி கல்லூரிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். சிலர் பள்ளி கல்லூரிக்கு செல்லாமல் அவரவர் வீடுகளுக்கு திரும்பி சென்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த சங்கராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் லட்சிய கண்ணன் (வயது 3). கடந்த 20-ந்தேதி இரவு 9 மணி அளவில் வீட்டில் குழந்தை லட்சிய கண்ணன் விளையாடி கொண்டிருந்தான்.
அப்போது திடீரென குழந்தையின் அலறல் சத்தம் கேட்டவுடன் குழந்தையின் அருகில் சென்று பார்த்தபோது குழந்தையை தேள் கொட்டியது தெரிந்தது. குழந்தையை உடனடியாக வாலாஜாபாத் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர் குழந்தையை மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் இரவு லட்சிய கண்ணன் பரிதாபமாக இறந்து போனான்.
இதுகுறித்து சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மத்திய கூட்டுறவு வங்கி, 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 7 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், 2 நகர கூட்டுறவு வங்கிகள், 3 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், 29 பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் ஒரு வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் என பல்வேறு கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக விவசாயிகளுக்கு தேவையான பயிர் கடன்கள், விதை, உரங்கள், இடுபொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
மேலும் குறுகிய கால மற்றும் மத்திய கால வேளாண் கடன்கள் வழங்கப்படுகிறது.
கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ஒரு குடும்பத்திற்கு 40 கிராமுக்கு உட்பட்ட நகைக் கடன்களை தகுதிகளின் கீழ் உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 93 கூட்டுறவு நிறுவனங்களில், நகைக் கடன் வழங்கி வரும் கூட்டுறவு நிறுவனங்களில் பொது நகைக்கடன் கள ஆய்வு செய்யப்பட்டது. இதில் 40 கிராமிற்குட்பட்டு அடமானம் வைக்கப்பட்ட பொது நகைக்கடன்கள் 18 ஆயிரத்து 443 பயனாளிகளின் அசல் ரூ.58.08 கோடி மற்றும் வட்டி ரூ.5.62 கோடி தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். அப்போது அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசியதாவது:-
“கூட்டுறவு சங்கங்கள் மூலம் சுய உதவிக்குழுக் களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகையில் 31.3.2021-ல் நிலுவை நிற்கும் ரூ.2,756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சுயஉதவிக்குழுக்களுக்கு கடன்கள் கள ஆய்வு செய்யப்பட்டு, தகுதியானவர்களுக்கு விரைவில் தள்ளுபடி வழங்கிட ஆவன செய்யப்பட உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாயிகள் பயனடையும் வகையில், கடனை உரிய காலத்திற்குள் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடனாக பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், நடப்பு ஆண்டுக்கு ரூ.70 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு தற்போது வரை 11,149 விவசாயிகளுக்கு ரூ.67.20 கோடி அளவிற்கு பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பண்ணை சாரா கடன்கள், வீட்டு அடமானக் கடன், தொழில் முனைவோர் கடன், பணிபுரியும் மகளிருக்கான கடன், தாட்கோ கடன், டாப்செட்கோ கடன், டாம்கோ கடன் போன்ற பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்பட்டும், மக்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதற்காக கூட்டுறவு கணினி மயமாக்கப்பட்டு, விரைந்த சேவையினை அளித்து வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் எம்.எல். ஏ.க்கள் க.சுந்தர், சி.வி.எம். பி.எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார், துணை மேயர் குமரகுருநாதன், மாவட்ட கூட்டுறவு துறை இணைப் பதிவாளர் லட்சுமி முருகன், நகர தி.மு.க. செயலாளர் சன்பிரண்ட் கே. ஆறுமுகம் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.






