என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    பிரியாணி கடையில் மாதம் ரூ.10 ஆயிரம் மாமூல் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது

    பல்லாவரம் அருகே பிரியாணி கடையில் மாதம் ரூ.10 ஆயிரம் மாமூல் கேட்டு மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தாம்பரம்:

    சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பிரதான சாலையில் அனீஷ் என்பவர் பிரியாணி கடை மற்றும் டீ ஸ்டால் என இரண்டு கடைகள் வைத்து நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடைக்குச் சென்ற இரண்டு ஆசாமிகள் கடையில் இருந்த உரிமையாளர்களிடம் மாதம் மாதம் 10,000 ரூபாய் செலவிற்கு கொடுக்க வேண்டும் இல்லையென்றால் கடை நடத்த விடமாட்டோம் என கூறி மிரட்டியதும் 3,000 ரூபாய் மட்டும் அனுப்புவதாகக் கூறி கடை உரிமையாளர் கூகுள் மேப் மூலமாக அனுப்பிள்ளார்.

    மீதமுள்ள 7 ஆயிரம் ரூபாயை உடனே தரும்படி கேட்டதும் அதற்கு பணம் தற்போது இல்லை என கூறியதும் ஆத்திரமடைந்த இரண்டு பேரும் சாலையில் இருந்த கற்களை எடுத்து கடையை நோக்கி வீசி கண்ணாடிகளை உடைத்துள்ளனர்.

    அதுமட்டுமின்றி கடைகளை அடித்து நொறுக்கி கடையின் உரிமையாளரையும் தாக்கியுள்ளனர். இதை பார்த்ததும் கடையில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அதன் பின் பொதுமக்கள் கூட்டம் கூடவே இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து அப்பகுதி வியாபாரிகள் சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சேதமடைந்த கடைகளை பார்வையிட்டனர். பின்னர் அந்த கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்ட நபர்கள் திருநீர்மலை ரங்கா நகர் 2-வது தெருவை சேர்ந்த சுகுமார் (36) மற்றும் தினேஷ் (38) என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து வீட்டில் பதுங்கியிருந்த இருவரையும் சங்கர் நகர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சுகுமார் மீது சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும், பல்லாவரம், பம்மல் அதன் சுற்றியுள்ள கடைகளில் ரூ.5000, மற்றும் ரூ.10,000 வரை மாமூல் கேட்டு வாங்கி வந்ததும் தெரிய வந்தது. அது மட்டுமின்றி சங்கர் நகர் காவல்நிலையத்தில் அவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரிய வந்தது.

    தினேஷ், சுகுமார் உடன் இணைந்து கடந்த ஆறு மாத காலமாக மாமூல் வசூல் வேட்டையில் ஈடுபட்டதும் விசரணையில் தெரிய வந்தது. போலீசார் அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    கைதான தினேஷ், தாம்பரம் மாநகராட்சி 31-வது வார்டு தி.மு.க. கவுன்சிலரான சித்ராதேவியின் கணவர் முரளியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. சுகுமார் தி.மு.க. அடிப்படை உறுப்பினர் ஆக உள்ளார்.

    Next Story
    ×