என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள அரசு பஸ்கள்
    X
    காஞ்சிபுரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள அரசு பஸ்கள்

    திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் இயங்கவில்லை

    மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள், தொழிலாளர் விரோத திட்டங்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன.

    காஞ்சிபுரம்:

    மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள், தொழிலாளர் விரோத திட்டங்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன.

    தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ஊதிய உயர்வு, ஒப்பந்த தொழிலாளர்களை முறைப்படுத்துதல், தனியார் மயத்துக்கு எதிர்ப்பு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இன்றும், நாளையும் நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தொழிற்சங்கத்தினர் அழைப்பு விடுத்து இருந்தனர்.

    அதன்படி இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை. இதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு பஸ்கள் அதிக அளவில் இயங்காததால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 140 பஸ்கள் உள்ளன. இதில் 10 பஸ்கள் மட்டுமே காலையில் ஓடின இதனால் பஸ் நிலையங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்துக்கிடந்தனர்.

    காஞ்சிபுரத்தில் தனியார் பஸ்கள் வழக்கம் போல் ஓடின. போலீசார் வாகனங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அரசு பஸ்கள் குறைந்த அளவில் இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, திருத்தணி, ஆர்.கே. பேட்டை, பொதட்டூர் பேட்டை, பொன்னேரி ஆகிய 6 போக்குவரத்து பணிமனையில் மொத்தம் 223 அரசு பஸ்கள் உள்ளன. இதில் 80 பஸ்கள் மட்டுமே இயங்கியது. மாவட்டம் முழுவதும் 37 சதவிகிதம் அரசுப் பஸ்கள் மட்டுமே ஓடின.

    தனியார் பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கியது.

    திருவள்ளூர் உழவர் சந்தை அருகே எ.ஐ.டி.யூ.சி மாவட்டத் தலைவர் கஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட துணை செயலாளர் குருமூர்த்தி, மண்டலத் தலைவர் சுந்தர் ராஜன், மாநில பொதுச்செயலாளர் அருண்பிரசாத், மாவட்ட செயலாளர் சீனிவாசன், ராஜேந்திரன், சண்முகம், முரளி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோ‌ஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    அவர்களை திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திர தாசன் திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ் வெங்கடேசன் மற்றும் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    இதேபோல் திருத்தணி நகராட்சி அலுவலம் முன் 100-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    செங்கல்பட்டு பணிமனையில் மொத்தம் 84 அரசு பஸ்க்கள் உள்ளன. இங்கிருந்து மாமல்லபுரம், கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், சூனாம்பேடு, கடப்பாக்கம், செய்யூர், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், உத்திரமேரூர், சாலவாக்கம், வடக்குப்பட்டு, திருப்போர் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    தொழிற்சங்கத்தினர் போராட்டத்தையொட்டி இன்று 3 அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது.பெரும்பாலான பஸ்கள் ஓடாததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் கூடுதல் கட்டணம் கொடுத்து ஆட்டோக்களில் பயணம் செய்தனர்.

    செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் வழக்கத்தை விட கூட்டம் காணப்பட்டது. இதேபோல் அனைத்து மின்சார ரெயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    பூந்தமல்லியில் மொத்தம் 149 பஸ்களில், 18-ம், குன்றத்தூரில் மொத்தம் உள்ள 29 பஸ்களில் 5 பஸ்கள் மட்டுமே இயங்கின. இதனால் காலையில் வேலைக்கு மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் ஷேர் ஆட்டோக்கள் மற்றும் லோடு ஆட்டோக்களில் பயணம் செய்து சென்றனர். ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப் பட்டதால் சிலர் நடந்தே சென்றனர்.

    Next Story
    ×