என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கோடைகாலம் தொடங்கிய நிலையிலும் காஞ்சிபுரம் பாலாற்றில் தொடர்ந்து தண்ணீர் ஓடுகிறது- நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

    பாலாற்றின் குறுக்கே வாயலூர், வல்லிபுரம், பழையசீவரம் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் முழுவதும் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் தமிழக எல்லையோர ஆந்திர மாநில பகுதிகளில் கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் நிரம்பி வரலாறு காணாத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதன் காரணமாக பாலாற்றில் இருந்து பிரிந்து செல்லும் கால்வாய்கள் மூலம் கரையோர கிராமங்களில் உள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பின.

    ஆனாலும் பாலாற்றில் 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி அளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பல ஆண்டுகளுக்கு பிறகு ஆறு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்தபடி சென்றது.

    பாலாற்றின் குறுக்கே வாயலூர், வல்லிபுரம், பழையசீவரம் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் முழுவதும் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது.

    இதன்காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கும் கிணறுகளில் நீரூற்று அதிகரித்துள்ளது.

    தற்போது கோடைகாலம் தொடங்கிய நிலையிலும் பாலாற்றில் தொடர்ந்து தண்ணீர் ஓடுகிறது. இதன் காரணமாக காஞ்சிபுரம் மற்றும் பாலாற்றின் கரையோர மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததன் காரணமாகவே பாலாற்றில் தொடர்ந்து தண்ணீர் ஓடுவதாக பாலாறு கீழ் வடிநில கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். பாலாற்றில் வெள்ளம் ஓடுவது தொடர்பாக அதன் கரையோர பகுதி மக்கள் கூறியதாவது:-

    காஞ்சிபுரம் பாலாற்றில் பல ஆண்டுகளுக்கு பிறகு கோடை காலத்திலும் தண்ணீர் ஓடுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே மழை சரியாக பெய்யாததால் பாலாறு பாலைவனம் போல காட்சியளித்தது.

    ஆனால் கடந்த ஆண்டு பெய்த வரலாறு காணாத மழை காரணமாக பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கரையோர மக்கள் அச்சத்துக்கு ஆளானார்கள்.

    பல ஆண்டுகளாக பாலாறு வறண்டு கிடந்ததால் வெள்ள நீரை அதன் மணல் பகுதிகள் ஒன்றாகவே உறிஞ்சியது. அதன் பிறகே ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. இதன் காரணமாக கிராம பகுதிகளுக்கு வெள்ள பாதிப்பு ஏற்படவில்லை.

    தற்போது மழை காலம் முடிவடைந்து கோடைக் காலம் தொடங்கியுள்ளது. ஆனாலும் பாலாற்றில் தண்ணீர் ஓடுவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதுதொடர்பாக பாலாறு கீழ் வடிநில கோட்ட அதிகாரிகள், ‘நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. இதனால் கோடை காலத்திலும் தண்ணீர் ஓடுகிறது’ என்றனர்.

    Next Story
    ×