என் மலர்
காஞ்சிபுரம்
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுகளுக்கு பின்னர் விமான போக்குவரத்து மற்றும் பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் விமான பயணிகளின் எண்ணிக்கை தற்போது 50 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
உள்நாட்டு விமான நிலையத்தில் 328 விமானங்களில் சுமார் 40 ஆயிரம் வருகை, புறப்பாடு பயணிகளும், 74 சர்வதேச விமானங்களில் சுமா£ 11 ஆயிரம் வருகை, புறப்பாடு பயணிகள் என மொத்தம் 51 ஆயிரம் பயணிகள் பயணம் செய்கிறார்கள்.
இனிவரும் நாட்களில் வெளிநாடு, உள்நாட்டு விமானங்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. எனவே அடுத்த சில நாட்களில் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை தடுத்து நிறுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தாம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் தேவ அருள்பிரகாசம் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆட்டோ ஒன்றை கயிறு கட்டி ஊர்வலமாக இழுத்து வந்தனர். மேலும் கேஸ் சிலிண்டர் மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு மாலை அணிவித்தும் ஒப்பாரி வைத்தும் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் வக்கீல் பொற்செழியன், தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலர் முத்துக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் பூவிழி, நகர ஒருங்கிணைப்பாளர் சாமுவேல், நகர செயலாளர்கள் ராமானுஜம், ஆதிசாலமன், திருநீர்மலை தமிழரசன் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் தொழிற்சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பட்டுச்சேலை உலகப் புகழ்பெற்றது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமானோர் பட்டுச் சேலை வாங்குவதற்கு காஞ்சிபுரம் வந்து செல்வார்கள்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பட்டு நெசவுத்தொழிலை நம்பி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் காஞ்சிபுரத்தில் பட்டு சேலைகள் விற்பனை ஆண்டுதோறும் ரூ.500 கோடிக்கு மேல் நடந்து வருகிறது.
இந்த நிலையில் பட்டுச் சேலைகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் விலை சுமார் 40 சதவீதம் வரை தற்போது உயர்ந்து இருப்பது நெசவாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கோறா (சாயம் ஏற்றப் படாத நூல்) ஒரு கிலோ ரூ.4,500-ல் இருந்து ரூ.7 ஆயிரம் வரையும், ஒரு கிராம் பட்டு நூல் ரூ.5-ல் இருந்து ரூ.9 ஆகவும், மார்க் எனப்படும் 242 கிராம் எடை கொண்ட சரிகை ரூ.11 ஆயிரத்தில் இருந்து ரூ.17 ஆயிரமாக உயர்ந்து இருக்கிறது.
இந்த விலை உயர்வு காரணமாக காஞ்சிபுரத்தில் பட்டுச்சேலைகள் விலை 20 சதவீதம் வரை அதிகரித்து உள்ளன. இதன் காரணமாக பட்டுச்சேலைகள் விற்பனை பாதிக்கப்படுவதுடன், நெசவாளர்களுக்கான வேலை வாய்ப்புகளும் குறையத் தொடங்கி உள்ளன.
ஏற்கனவே வறுமையில் வாடும் நெசவாளர்கள் இந்த விலை உயர்வால் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் சூழல் உருவாகி இருப்பதாக கவலையுடன் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து காஞ்சிபுரத்தில் பட்டுசேலை விற்பனையாளர் மோகன் ராஜ் என்பவர் கூறியதாவது:-
பட்டுசேலை உற்பத்தி மூலப்பொருட்களான கோறா, பட்டு நூல் , சரிகை தற்போது கடும் விலை உயர்வு அடைந்து விற்கப் படுகிறது. இதன் காரணமாக பட்டு சேலைகளின் விலை 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை உயர்வடைந்துள்ளது.
இந்த விலையேற்றத்தின் காரணமாக நெசவாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. ஏற்கனவே நெசவுத் தொழில் நலிவடைந்துள்ள நிலையில் தற்போது இந்த விலையேற்றத்தின் காரணமாக நெசவுத் தொழில் முற்றிலும் முடங்கும் அபாயம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆலந்தூர்:
கொரோனா நோய் தொற்று பரவல் தற்போது குறைந்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பழைய நிலைக்கு திரும்பி வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வந்ததால் வெளி நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் மட்டும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. உள்நாட்டு விமான சேவைகள் வழக்கம் போல் நடந்து வந்தது.
இதற்கிடையே நோய் தொற்று பரவல் கட்டுப் பாட்டுக்குள் வந்ததையடுத்து 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் 27-ந்தேதி முதல் வெளிநாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது. சென்னையில் இருந்தும் வெளிநாட்டு விமானங்கள் இயக்கப்பட்டன.
கடந்த சில நாட்களாக சென்னையில் இருந்து விமானங்களில் பயணம் செய்யும் உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது. இதேபோல் குவைத், சார்ஜா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
இதையடுத்து சென்னையில் இருந்து இயக்கப்படும் வெளிநாட்டு விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்று 68 வெளிநாட்டு விமான சேவைகள் நடைபெறுகின்றன.
வரும் நாட்களில் வெளி நாட்டு பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் உள் நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் சென்னை விமான நிலையம் பழைய நிலைக்கு திரும்பி வருகிறது.
மாங்காடு காவல் நிலைய பகுதியில் ஏரியா தாதா போட்டியில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு மாங்காடு கங்கை அம்மன் கோயில் தெரு பெரிய கொளுத்துவாஞ்சேரி பகுதியில் வசிக்கும் குரு (எ) குருமூர்த்தி தரப்பும், வீரா தரப்பும் முன்விரோதம் காரணமாக கல், கட்டை கொண்டு அடித்து மோதினர். இதில் குரு மூர்த்தி கத்தியால் வெட்டியதில் வீரா படுகாயம் அடைந்தார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடம் சென்ற மாங்காடு காவல் நிலைய ரோந்து வாகனத்தை கல் மற்றும் கட்டையால் தாக்கி சேதப்படுத்திய நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று ஆவடி மாவட்ட காவல் ஆணையாளர் உத்தரவுபடி குரு (எ) குரு மூர்த்தி (விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்) மற்றும் பரத்வாஜ் (இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டமாக இருந்தபோது 2017-18-ம் ஆண்டில் 1,05,455 ஹெக்டேர் விவசாய நிலங்கள் இருந்தன.
இவற்றில் ஒரு ஹெக்டேர் விவசாய நிலத்தில் 2 போகம் சாகுபடி செய்யப் பட்டால் சாகுபடி பயிர் பரப்பு 2 ஹெக்டேராகவும், 3 போகம் சாகுபடி செய்யப்பட்டால் 3 ஹெக்டேராகவும் கணக்கிடப்படுகிறது. இதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நிலங்களில் 1,24,593 ஹெக்டேர் அளவுக்கு சாகுபடி நடைபெற்றது.
இந்த சதுப்பு நிலங்களின் மதிப்பு 2018-19-ம் ஆண்டில் 96,169 ஹெக்டேராக குறைந்தது. பயிர் சாகுபடி செய்யப்பட்ட பரப்பளவும் 1,08,986 ஹெக்டேராக குறைந்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2019-20-ம் ஆண்டில் விவசாய சாகுபடி நிலங்களின் பரப்பு 36,766 ஹெக்டேராக இருந்தது. இந்த நிலங்களில் 48,145 ஹெக்டேர் அளவுக்கு பயிர் சாகுபடி செய்யப்பட்டது.
நெல் சொர்ணவாரி பருவத்தில் 4,421 ஹெக்டேரும், சம்பா பருவத்தில் 15,284 ஹெக்டேரும், நவரை பருவத்தில் 18,786 ஹெக்டேரும் சாகுபடி செய்யப்பட்டன.
ஏரிகள் மூலம் 22,867 ஹெக்டேர் விவசாய நிலங்களும், கிணறுகள் மூலம் 9,200 ஹெக்டேர் விவசாய நிலங்களும், ஆழ்துளை கிணறுகள் மூலம் 6,480 ஹெக்டேர் விவசாய நிலங்களும் பயன் பெற்றன.
மழையை எதிர்நோக்கும் மானாவாரி நிலங்களிலும் விவசாய பயிர்கள் பயிரிடப்பட்டன. கடந்த 2021-22-ம் ஆண்டில் விவசாய நிலங்களின் பரப்பு 39,048 ஹெக்டேராக அதிகரித்தது.
இந்த நிலையில் தற்போதைய நிதி ஆண்டில் நெல் சொர்ணாவாரி பருவத்தில் 6,774 ஹெக்டேரும், சம்பா பருவத்தில் 15,316 ஹெக்டேரும், நவரை பருவத்தில் 25,748 ஹெக்டேரும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மொத்தமாக 57,365 ஹெக்டேர் அளவுக்கு சாகுபடி நடைபெற்றுள்ளது. இது கடந்த ஆண்டு சாகுபடி பரப்பை ஒப்பிடும்போது 9,180 ஹெக்டேர் அதிகமாகும். இந்த ஆண்டில் ஏரிப்பாசனம் மூலம் 22,867 ஹெக்டேர் விவசாய நிலங்களும், ஆழ்துளை கிணற்றின் மூலம் 6,480 ஹெக்டேர் விவசாய நிலங்களும், கிணறுகள் மூலம் 9,200 ஹெக்டேர் விவசாய நிலங்களும் பயன்பெற்றன.
இதற்கிடையே காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓடும் பாலாறு, செய்யாற்றில் தடுப்பணைகளை அதிகப்படுத்த வேண்டும். ஏரி, குளங்களை தூர்வாரி நீர் ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும். இதன் மூலம் விவசாயத்துக்கு மேலும் புத்துயிர் கொடுக்க முடியும் என்று விவசாய சங்கங்கள் தெரிவிக்கின்றன.
போரூர்:
சென்னை வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் திருமால் சேகரன் (32). பட்டதாரியான இவர் அரசு வேலைக்கு விண்ணப்பித்துவிட்டு கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். திருமால் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் கோடம்பாக்கம் நோக்கி ஆற்காடு சாலையில் சென்று கொண்டிருந்தார் வடபழனி 100 அடி சாலையில் உள்ள சிக்னலை கடந்து சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த தண்ணீர் லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது மோட்டார் சைக்கிளோடு நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். இதில் லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக ஆர்த்தி உள்ளார். இவர் அவ்வப் போது மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் பள்ளி ஒன்றில் நடந்த மாணவர்களின் பேச்சுப் போட்டியை கலெக்டர் ஆர்த்தி மரத்தடியில் அமர்ந்து ரசித்த காட்சி வரவேற்பை பெற்று உள்ளது.
காஞ்சிபுரம், ஐயங்கார் குளத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளின் பேச்சுபோட்டி நடைபெற்றது.இதற்காக பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதில் பங்கேற்ற கலெக்டர் ஆர்த்தி மாணவர்களின் முன்பு வகுப்பறையின் திண்ணையிலேயே மரத்தடியில் அமர்ந்து பேச்சுப்போட்டியை ரசித்து பார்த்தார். அப்போது மாணவ-மாணவிகளுக்கு அவர் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து அறிவுரை வழங்கினார். மாணவர்களின் பேச்சுப் போட்டியை மரத்தடியில் அமர்ந்து கலெக்டர் ஆர்த்தி ரசித்த செயல் அங்கிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியையொட்டி மாணவ- மாணவிகளுக்கு மஞ்சப்பைகளை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, மாசுகட்டுப்பாட்டு வாரிய செயற் பொறியாளர் ரவிச் சந்திரன் பங்கேற்றனர்.
காஞ்சிபுரத்தில் பழமையான மடங்களில் ஒன்றான தொண்டை மண்டல ஆதீனம் மடத்தின் 233-வது ஆறிழீனமாக திருச்சிற்றம்பல தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரியார் கடந்த 2021-ம் ஆண்டு பொறுப்பேற்றார்.
இந்த மடத்திற்கு திருநெல்வேலி உள்ளிட்ட 89 இடங்களில் சொத்துக்கள் உள்ளன. நிர்வாக குழு உறுப்பினர்களின் ஆலோசனைபடி மடம் செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நிர்வாக குழு கமிட்டிக்கும், ஆதீனம் தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரியாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து மடத்தின் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக, நிர்வாககுழு கமிட்டிக்கு ஆதீனம் தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரியார் கடிதம் எழுதி உள்ளார்.
இந்த திடீர் மோதலுக்கு மடத்தின் சொத்துக்களுக்கு வாடகை கட்டணம் நிர்ணயம் செய்தது காரணமாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, திருச்சிற்றம்பல தேசிக ஞானபிரகாச பரமாச்சாரியார் கூறியதாவது:-
மடத்திற்கு 89 இடங்களில் சொத்துக்கள் உள்ளன. சில இடங்களில், சொத்துக்களுக்கு வாடகை நிர்ணயித்து வசூல் செய்தேன். நித்யானந்தா சிஷ்யன் எனக்கூறி, மடத்தை கைப்பற்ற நினைத்த சந்தீப் என்பவர் மீது வழக்கு தொடர்ந்து, அவரை வெளியேற்றினேன். நான் செய்யும் பணி, நிர்வாக கமிட்டி குழுவுக்கு பிடிக்கவில்லை. அவர்களின் செயல்பாடு, மிரட்டல் விடுக்கும் விதமாக இருப்பதை உணர்ந்தேன். எனவே கடந்த வாரம் நான் பொறுப்பில் இருந்து விலகும் கடிதத்தை, கமிட்டியிடம் கொடுத்தேன். இன்னும் 2 வாரத்துக்குள் மடத்தின் பொறுப்புகளை ஒப்படைக்க உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிர்வாக குழு கமிட்டி உறுப்பினர் ஒருவர் கூறும்போது, ஆதினம் தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரியார் உடல் நலம் கருதி, பொறுப்பில் இருந்து விலகுகிறேன் என கடிதம் கொடுத்துள்ளார். வருகிற 14-ந்தேதிக்கு பின் முடிவு தெரியும் என்றார்.
அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் ஹரிகிருஷ்ணாசுஜித். கல்லூரி மாணவரான இவர் பகுதி நேரமாக இரவு நேரங்களில் ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று இரவு 11மணி அளவில் ஹரிகிருஷ்ணா ஆட்டோவில் வானகரம்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது 3 வாலிபர்கள் சவாரிக்கு அழைப்பது போல நடித்து திடீரென ஹரிகிருஷ்ணாவின் விலை உயர்ந்த செல்போனை பறித்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்றத்தூர் ஆயுஷ் நல மையம் சார்பில் இலவச மருத்துவ முகாம் இன்று நடந்தது. முகாம் நாளை (சனி) மற்றும் நாளை மறுநாள் (ஞாயிறு) வரை நடக்கிறது. முகாமில் வெரிகோஸ் வெயின்ஸ் மற்றும் சொரியாசிஸ், தோல் நோய்களுக்கு ஆயுர்வேதா, பஞ்சகர்மா, யோகா மற்றும் இயற்கை முறையில் டாக்டர் சரண்யா தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக் கிறார்கள். மேலும் விபரங்களுக்கு 91506 99903 என்ற எண்ணில் தொடர்பு கொள் ளலாம்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்ப தாவது:-
கொரோனா என்ற கொடிய உயிர்க்கொல்லி நோயை தடுப்பதற்காக 15 வயதில் இருந்து 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன்படி நாளை (சனிக்கிழமை)மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 வயதில் இருந்து 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதில் முதன்மை இடத்தை வகித்தாலும், 2-வது தவணை தடுப்பூசியில் குறைந்த அளவு 94.72 சதவீத இலக்கையே எட்டியுள்ளது.
கோவேக்சின் இரண்டாவது தவணை தடுப்பூசி போடுவதற்கான இடைவெளி 28 நாட்கள் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி 2-ம் தவணை தடுப்பூசி போடுவதற்கான இடைவெளி 84 நாட்கள் ஆகும். இதுவரை 2,46,079 நபர்கள் 2-ம் தவணை தடுப்பூசி போடாத நிலையில் உள்ளனர். எனவே பயனாளிகளை நேரடியாக மற்றும் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, மாவட்ட மற்றும் வட்டார அளவில் குறுஞ்செய்தி அனுப்பியும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அதே போல கிராம வாரியாக ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் போடப்பட்டிருக்க வேண்டும்.
கொரோனா என்ற கொடிய நோயை அறவே ஒழிப்பதற்கான மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசி ஆகும். எனவே நாளை (சனிக்கிழமை) காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 385 மாபெரும் தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






