என் மலர்
உள்ளூர் செய்திகள்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் காஞ்சிபுரத்தில் பட்டு சேலை விலை அதிகரிப்பு- நெசவாளர்கள் பாதிப்பு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பட்டுச்சேலை உலகப் புகழ்பெற்றது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமானோர் பட்டுச் சேலை வாங்குவதற்கு காஞ்சிபுரம் வந்து செல்வார்கள்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பட்டு நெசவுத்தொழிலை நம்பி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் காஞ்சிபுரத்தில் பட்டு சேலைகள் விற்பனை ஆண்டுதோறும் ரூ.500 கோடிக்கு மேல் நடந்து வருகிறது.
இந்த நிலையில் பட்டுச் சேலைகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் விலை சுமார் 40 சதவீதம் வரை தற்போது உயர்ந்து இருப்பது நெசவாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கோறா (சாயம் ஏற்றப் படாத நூல்) ஒரு கிலோ ரூ.4,500-ல் இருந்து ரூ.7 ஆயிரம் வரையும், ஒரு கிராம் பட்டு நூல் ரூ.5-ல் இருந்து ரூ.9 ஆகவும், மார்க் எனப்படும் 242 கிராம் எடை கொண்ட சரிகை ரூ.11 ஆயிரத்தில் இருந்து ரூ.17 ஆயிரமாக உயர்ந்து இருக்கிறது.
இந்த விலை உயர்வு காரணமாக காஞ்சிபுரத்தில் பட்டுச்சேலைகள் விலை 20 சதவீதம் வரை அதிகரித்து உள்ளன. இதன் காரணமாக பட்டுச்சேலைகள் விற்பனை பாதிக்கப்படுவதுடன், நெசவாளர்களுக்கான வேலை வாய்ப்புகளும் குறையத் தொடங்கி உள்ளன.
ஏற்கனவே வறுமையில் வாடும் நெசவாளர்கள் இந்த விலை உயர்வால் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் சூழல் உருவாகி இருப்பதாக கவலையுடன் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து காஞ்சிபுரத்தில் பட்டுசேலை விற்பனையாளர் மோகன் ராஜ் என்பவர் கூறியதாவது:-
பட்டுசேலை உற்பத்தி மூலப்பொருட்களான கோறா, பட்டு நூல் , சரிகை தற்போது கடும் விலை உயர்வு அடைந்து விற்கப் படுகிறது. இதன் காரணமாக பட்டு சேலைகளின் விலை 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை உயர்வடைந்துள்ளது.
இந்த விலையேற்றத்தின் காரணமாக நெசவாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. ஏற்கனவே நெசவுத் தொழில் நலிவடைந்துள்ள நிலையில் தற்போது இந்த விலையேற்றத்தின் காரணமாக நெசவுத் தொழில் முற்றிலும் முடங்கும் அபாயம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






