என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், காமராஜர் சாலையில் டயர் கடை ஒன்று உள்ளது. இந்த கடையின் பின்பகுதியில் பழமையான கோவில் காணப்படுகிறது.
சுற்றிலும் கட்டிடங்கள் மற்றும் கடைகள் இருந்ததால் இந்த கோவில் பற்றி யாருக்கும் தெரியவில்லை.
இந்த நிலையில் டயர் கடைக்கு பின்னால் உள்ள கோவில் குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவியது. கடைக்கு பின்னால் பல ஆண்டுகளாக மறைந்து இருந்த கோவில் குறித்து அறிந்து காஞ்சிபுரம் நகர மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
இதையடுத்து அந்த பகுதிக்கு சென்று ஏராளமானோர் பார்வையிட்டனர். அப்போது டயர் கடை நடத்தி வருபவர் இந்த இடம் தனக்கு சொந்தமானது என்று தெரிவித்து வந்தார்.
இதற்கிடையே நேற்று இரவு அமைச்சர் சேகர்பாபு இந்த கோவிலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் பல 100 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவசமாதி அடைந்துள்ள கோயில் ஒன்று உள்ளது.வருவாய்த்துறையினரின் ஏடுகளில் கல்மடம் என பதிவாகி இருக்கிறது. இக்கோயில் தொடர்பாக நீதிமன்றத்திலும் பல்வேறு வழக்குகள் நடந்துள்ளன. இக்கோயிலானது தனிப்பட்ட நபருக்குரியதா அல்லது லிங்கா யச் சமுதாயத்தினருக்கு சொந்தமானதா என அவர்கள் தரும் ஆவணங்களைப் பார்த்து முடிவு செய்யப்படும்.
நீதிமன்ற உத்தரவுகளும் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதையும் அறநிலையத்துறை சட்டப்பிரிவு ஆய்வு மேற்கொண்டு தொடர்ந்து கண்காணிக்கும்.
தற்போது ஆக்கிரமித்து இருப்பதாக கூறப்படும் இந்த இடத்தை அவர்களே வைத்துக் கொள்வதா அல்லது அவர்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு கொடுத்தால் அதை அனைவரும் வந்து வழிபடும் படியாக சிறந்த கோயிலாக மாற்றுவதா என்பதை ஆவணங்களைப் பொறுத்தே முடிவு செய்யப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் ரூ.1200 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பில் இருந்த சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. 129 ஏக்கர் நிலம் தன்வசப்படுத்தப்பட்டுள்ளது. அறநிலையத்துறை ஆக்கிரமிப்புகள் எதுவாக இருந்தாலும் பாரபட்சமின்றி அகற்றப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது காஞ்சிபுரம் எம்.பி.செல்வம், எல்.ஏ.க்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி. எழிலரசன், அறநிலையத்துறை இணை ஆணையர் பொன்.ஜெயராமன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவ.ருத்ரய்யா மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
ஸ்ரீ பெரும்புதூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் தலைமையில், போக்குவரத்து ஆய்வாளர் கார்த்திக், ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
போரூர்:
சென்னை நெசப்பாக்கம் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமசாமி. அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். காலையில் கடை திறக்க வந்தபோது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு ராமசாமி அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் வைத்து இருந்த ரூ38ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் சுருட்டி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை-பயிற்சிப் பிரிவின் சார்பாக எம்.எஸ்.எம்.இ. தொழில் நிறுவனங்களுடன் இணைந்து, மாவட்ட அளவிலான தொழிற் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் வருகிற 21-ந் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரகடம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இத்தொழிற் பழகுநர் சேர்க்கை முகாமில் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 8, 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி அடைந்தவர்கள் பங்கு பெற்று பயன் அடையலாம்.
மேலும், விவரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை 044-29894560 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
போரூர்:
போரூர் அடுத்த காரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தர்மன்.இவர் அதே பகுதி பூந்தமல்லி சாலையில் நடந்த சென்ற போது ஆட்டோவில் வந்த மர்ம வாலிபர் செல்போனை பறித்து தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தியபோது, செல்போன் பறித்து தப்பியது திருமழிசை பகுதியை சேர்ந்த பிரபல வழிப்பறி திருடன் ஜான்பால் என்கிற கருப்பு என்பது தெரிந்தது. அவனை போலீசார் கைது செய்தனர். அவன் மீது ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
அரசுக்கு செலுத்த வேண்டிய சாலை வரி உள்ளிட்ட நிலுவைக்காக சிறைப்பிடிக்கப்பட்ட 62 வாகனங்கள் மற்றும் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலக அரசு வாகனமும் ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி வருகிற 26-ந் தேதி காலை 11 மணிக்கு காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விலை நிர்ணய குழுவினால் ஏலம் விடப்படும்.
ஏலம் விடப்படும் வாகனங்களின் விவரங்கள் உள்ளிட்டவைகளை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வேலை நாட்களில் பார்வையிடலாம்.
உரிய கட்டணம் செலுத்தி ஒப்பந்த படிவத்தை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் வளையல் கடை நடத்தி வருபவர் சித்ரா. இவரது கடைக்கு அ.தி.மு.க.வின் மகளிர் அணி நகர இணை செயலளர் திலகவதி வந்தார். அப்போது அவர் மாமூல் கேட்டதாக தெரிகிறது.
ஆனால் சித்ரா பணம் கொடுக்க மறுத்தார். இதனால் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த இருவரும் நடுரோட்டில் கட்டிப்புரண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
பெண்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து சித்ரா சிவகாஞ்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அ.தி.மு.க. பிரமுகர் திலகவதியை கைது செய்தனர். மாமூல் கேட்டு கொடுக்காததால் வளையல் கடை பெண் வியாபாரியை அ.தி.மு.க. பெண் பிரமுகர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம்:
ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்துக் உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி ஆய்வு செய்தார்.
அப்போது பால்நெல்லூர் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு கலெக்டர் ஆர்த்தி சென்றார். அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவை ஆய்வு செய்தார். மேலும் குழந்தைகளிடம் பேசி அவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு தரமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என்று அங்குள்ள ஊழியர்களுக்கு கலெக்டர் ஆர்த்தி அறிவுறுத்தினார்.
இதேபோல் தத்தனூர் ஊராட்சியில் ரூ.11 லட்சத்தில் கட்டிமுடிக்கப்பட்ட அங்கன்வாடி மையம், ரூ.17 லட்சம் மதிப்பிலான மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டி, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகள், முழு சுகாதார திட்டத்தில் கட்டப்பட்ட தனிநபர் கழிவறைகள், குண்டு பெரும்பேடு ஊராட்சியில் ரூ.11 லட்சம் மதிப்பில் தோண்டப்பட்டிருந்த திறந்தவெளி கிணறு, அரசு பள்ளி சுற்றுச்சுவர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் கலெக்டர் ஆர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மேட்டுப்பாளையம் ஊராட்சியில் சாலை அமைக்கும் பணிகள் மற்றும் பன்ரூட்டி ஊராட்சியில் அரசு பள்ளி சுற்றுச்சுவர் ஆகியவற்றை கலெக்டர் ஆர்த்தி ஆய்வு செய்து பணிகள் குறித்த விவரம் மற்றும் பணிகளின் தரம் ஆகியவற்றை உறுதி செய்து நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
அப்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, ஊரக வளர்ச்சி திட்ட முதன்மை செயற்பொறியாளர் அருண் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.
திருவான்மியூர்:
சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானாத்தூர் கரிக்காட்டுக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் அரவிந்த். இவரது நண்பர் சுடலை முத்து. சாப்ட்வேர் என்ஜினீயர்களான இருவரும் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
கானாத்தூர் போலீஸ் நிலையம் எதிரே சென்ற போது மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியது. அப்போது அந்த வழியாக சென்ற போலீஸ்காரர் வீரமணி மீதும் மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.
இவர்களில் சுடலைமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். போலீஸ்காரர் வீரமணி, வாலிபர் அரவிந்த் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து தொடர்பாக கானாத்தூர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து நடந்தது எப்படி? என்பது தொடர்பாக கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்போரூர் அடுத்த வெங்கூரில் நடந்த வழிப்பறி வழக்கில் பழைய குற்றவாளியான கரும்பாக்கம், ராயல்பத்து கிராமம், முத்து மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முருகன் (39) என்பவரை போலீசார் தேடிவந்தனர்.
இந்த நிலையில் திருப்போரூர் அருகே பதுங்கி இருந்த முருகனை போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது திடீரென முருகன் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடினார்.
இதில் தவறி விழுந்ததில் முருகனின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
போரூர்:
மதுரை மாவட்டம் தல்லாகுளம் பகுதியை சேர்ந்தவர் பாலதண்டாயுதபாணி (வயது50). இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு 2மகன்கள் உள்ளனர்.
மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாலதண்டாயுதபாணி கடந்த 7 ஆண்டுகளாக ராஜலட்சுமியை பிரிந்து சகோதரர் குமாருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 13-ந் தேதி பாலதண்டாயுதபாணி மாயமானார். அவரை மனைவி ராஜலட்சுமி வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாயமான தனது அண்ணன் பாலதண்டாயுதபாணியை கண்டுபிடித்து தருமாறு தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் அவரது சகோதரர் குமார் புகார் அளித்தார்.
மேலும் மதுரை ஐகோர்ட்டு கிளையிலும் ஆட்கொணர்வு மனு ஒன்றையும் தாக்கல் செய்தார்.
அப்போது பாலதண்டாயுதபாணியை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து பாலதண்டாயுதபாணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் ராஜ லட்சுமி, கணவர் பாலதண்டாயுதபாணியுடன் சென்னை, மதுரவாயலில் தங்கி இருப்பது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து தல்லாகுளம் போலீசார் மதுரவாயல் எம்.ஜி சக்கரபாணி தெருவில் உள்ள ராஜலட்சுமியின் வீட்டிற்கு நேற்று இரவு வந்தனர். அங்குள்ள அறையில் பாலதண்டாயுதபாணி இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி மதுரவாயல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் ஆகியோர் பாலதண்டாயுதபாணியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பாலதண்டாயுதபாணி எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. போலீசார் வரும் நேரத்தில் அவர் இறந்து கிடந்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் மதுரவாயல் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து ராஜலட்சுமியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அப்போது ராஜலட்சுமி கூறும்போது, கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவர் பாலதண்டாயுதபாணிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. எனவே சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து இருந்தோம். சிகிச்சை முடிந்து காலையில்தான் “டிஸ்சார்ஜ்” செய்து அழைத்து வந்தோம். இந்த நிலையில் கணவர் உடல் நிலை மேலும் பாதிக்கப்பட்டு திடீரென உயிரிழந்துவிட்டார் என்று கூறிஉள்ளார்.
ஆட்கொணர்வு மனுவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட வேண்டிய பாலதண்டாயுதபாணி மர்மமாக உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜலட்சுமி, தனது கணவர் பாலதண்டாயுதபாணியை சென்னைக்கு அழைத்து வந்தது ஏன்? எப்படி அழைத்து வந்தார்? அவருக்கு உதவியவர்கள் யார்? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.






