என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தை அடுத்த திருப்புட்குழி தாமரைக்குளம் தெருவை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 45). கொத்தனார். இவரது மனைவி வளர்மதி. குடும்பத்தகராறு காரணமாக கணவருடன் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்நிலையில், மனமுடைந்த ஜெகதீசன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு பாலுசெட்டி சத்திரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த அவரது மனைவி வளர்மதி பாலுசெட்டி சத்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாராக வேலை பார்த்து வந்தவர் உமாதேவி. இவரது கணவர் ராஜா. இவர்களது 1½ வயது குழந்தை தர்ஷன்.
இவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலு செட்டிசத்திரம் அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து பெங்களூர் மார்க்கமாக கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென்று அந்த கண்டெய்னர் லாரி தறிகெட்டு ஓடத் தொடங்கியது. முன்னால் சென்று கொண்டிருந்த 2 சொகுசு கார்களை கண்டெய்னர் லாரி இடித்து தள்ளியது.
பின்னர் பெண் போலீஸ் உமாதேவி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீதும் கண்டெய்னர் லாரி மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த சம்பவத்தில் பெண் போலீஸ் உமாதேவி, குழந்தை தர்ஷன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்தில் உமாதேவியின் கணவர் ராஜா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். சம்பவ இடத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், கூடுதல் டி.எஸ்.பி. ஜெயராமன், டி.எஸ்.பி. ஜூலியஸ் சீசர் ஆகியோர் விரைந்து சென்று பார்வையிட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம், ஏப்.13-
காஞ்சிபுரம் மண்டல இணைப்பதிவாளரும் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய தலைவருமான லட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மண்டலத்திலுள்ள (காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் அடங்கியது) கூட்டுறவு நிறுவனங்களில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள 126 விற்பனையாளர் மற்றும் 64 கட்டுநர் பணியிடங்களுக்கும் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம், காஞ்சிபுரம் மண்டலம் மூலம் கடந்த 20.06.2020 தேதியில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு 10.12.2020 முதல் 24.12.2020 வரையில் நேர்முக தேர்வு நடத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த 25.08.2021 அன்று நடந்த கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கையின் போது கூட்டுறவுத்துறை அமைச்சரால் வெளியிடப்பட்ட அறிவிப்பு மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகள் ஆகியவற்றினை செயல்படுத்தும் விதமாக 2020ம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் மூலம் 20.06.2020 அன்று காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
போரூர்:
சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள மோட்டார் பம்ப் நிறுவனத்தில் அதே பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 37). வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவர் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த ஊழியர் ஜெயச்சந்திரன் என்பவருடன் சேர்ந்து நேற்று மாலை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் ஆண்டாள் நகரில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையின் மேல் பகுதியில் விளம்பர போர்டு வைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக விளம்பர போர்டு சரிந்து விழுந்து மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கேபிள் மீது உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில் தினேசும், ஜெயச்சந்திரனும் தூக்கி வீசப்பட்டனர். உடல் கருகிய டிரைவர் தினேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். லேசான காயத்துடன் ஜெயச்சந்திரன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
சென்னை மதுரவாயல் தனலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (84) இவரது மனைவி தனலட்சுமி (70). கடந்த 7-ந் தேதி அதிகாலை தனலட்சுமி வெந்நீர் வைப்பதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார் .அப்போது கியாஸ் கசிந்து இருந்ததால் திடீரென சிலிண்டர் வெடித்தது.
இதில் தனலட்சுமி மீது தீப்பற்றியது அவரை காப்பாற்ற சென்ற பாலசுப்பிரமணி மீதும் தீ பரவியது. தீயில் கருகிய இருவரும்கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தனர். இந்த நிலையில் பாலசுப்பிரமணி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். தனலட்சுமிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் நோய் பரவல் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான சேவை பாதிக்கப்பட்டது. குறிப்பாக வெளிநாட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டு, ‘வந்தே பாரத்’ மற்றும் ‘ஏர் பபுள்’ திட்டத்தில் மட்டும் இயங்கி வந்தது.
இந்நிலையில் தற்போது நோய் பாதிப்பு குறைந்து வருவதை தொடர்ந்து கொரோனா கட்டுப்பாடுகளை மத்திய-மாநில அரசுகள் தளர்த்தி உள்ளது. இதையடுத்து வெளிநாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது.
கொரோன கட்டுபாடு தளர்வுகளால் சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவையில் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
சென்னையில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமான சேவை மூலம் பயணிகளின் எண்ணிக்கை 12 லட்சத்து 87 ஆயிரத்து 441 ஆக உயர்ந்து உள்ளது. விமான சேவையும் 9 ஆயிரத்து 66 ஆக அதிகரித்து உள்ளன.
கடந்த ஜனவரி மாதத்தில் விமான சேவை 7ஆயிரத்து 751 ஆகவும் பயணிகள் எண்ணிக்கை 8 லட்சத்து 42 ஆயிரத்து 703 ஆகவும் இருந்தது. இது பிப்ரவரி மாதத்தில் விமான சேவை 6 ஆயிரத்து 496 ஆகவும் பயணிகள் எண்ணிக்கை 9 லட்சத்து 14 ஆயிரத்து 793ஆகவும் இருந்தது.
பிப்ரவரி மாதத்தை விட மார்ச் மாதத்தில் விமான பயணிகள் எண்ணிக்கை 40 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-
கொரோனா கட்டுப்பாடு தளர்வுகளுக்கு பின்னர் விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விமானத்தின் எரிபொருளின் விலை உயர்ந்ததால், டிக்கெட் கட்டணமும் உயர்ந்துள்ளது. அப்படி இருந்தும் கோடைகாலம் என்பதால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வர்த்தக ரீதியாக செல்வோர் எண்ணிக்கை தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இதனால் டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூர் ஆகிய மெட்ரோ நகரங்களுக்கு பயணிகள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அதேபோல் மற்ற நகரங்களுக்கும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
வெளிநாட்டு விமான சேவையை பொருத்தவரை கோடை விடுமுறை காலம் என்பதால் சுற்றுலாவுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும் பிரிட்டிஷ் ஏர்வேஸ், எமிரேட்ஸ், ஏர் பிரான்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் விமான சேவைகளை தொடங்கியிருக்கிறது. இனி வரும் நாட்களில் அந்த நிறுவனங்களின் சேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கையும் உயரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், காமராஜர் சாலையில் டயர் கடை ஒன்று உள்ளது. இந்த கடையின் பின்பகுதியில் பழமையான கோவில் காணப்படுகிறது.
சுற்றிலும் கட்டிடங்கள் மற்றும் கடைகள் இருந்ததால் இந்த கோவில் பற்றி யாருக்கும் தெரியவில்லை.
இந்த நிலையில் டயர் கடைக்கு பின்னால் உள்ள கோவில் குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவியது. கடைக்கு பின்னால் பல ஆண்டுகளாக மறைந்து இருந்த கோவில் குறித்து அறிந்து காஞ்சிபுரம் நகர மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
இதையடுத்து அந்த பகுதிக்கு சென்று ஏராளமானோர் பார்வையிட்டனர். அப்போது டயர் கடை நடத்தி வருபவர் இந்த இடம் தனக்கு சொந்தமானது என்று தெரிவித்து வந்தார்.
இதற்கிடையே நேற்று இரவு அமைச்சர் சேகர்பாபு இந்த கோவிலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் பல 100 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவசமாதி அடைந்துள்ள கோயில் ஒன்று உள்ளது.வருவாய்த்துறையினரின் ஏடுகளில் கல்மடம் என பதிவாகி இருக்கிறது. இக்கோயில் தொடர்பாக நீதிமன்றத்திலும் பல்வேறு வழக்குகள் நடந்துள்ளன. இக்கோயிலானது தனிப்பட்ட நபருக்குரியதா அல்லது லிங்கா யச் சமுதாயத்தினருக்கு சொந்தமானதா என அவர்கள் தரும் ஆவணங்களைப் பார்த்து முடிவு செய்யப்படும்.
நீதிமன்ற உத்தரவுகளும் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதையும் அறநிலையத்துறை சட்டப்பிரிவு ஆய்வு மேற்கொண்டு தொடர்ந்து கண்காணிக்கும்.
தற்போது ஆக்கிரமித்து இருப்பதாக கூறப்படும் இந்த இடத்தை அவர்களே வைத்துக் கொள்வதா அல்லது அவர்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு கொடுத்தால் அதை அனைவரும் வந்து வழிபடும் படியாக சிறந்த கோயிலாக மாற்றுவதா என்பதை ஆவணங்களைப் பொறுத்தே முடிவு செய்யப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் ரூ.1200 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பில் இருந்த சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. 129 ஏக்கர் நிலம் தன்வசப்படுத்தப்பட்டுள்ளது. அறநிலையத்துறை ஆக்கிரமிப்புகள் எதுவாக இருந்தாலும் பாரபட்சமின்றி அகற்றப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது காஞ்சிபுரம் எம்.பி.செல்வம், எல்.ஏ.க்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி. எழிலரசன், அறநிலையத்துறை இணை ஆணையர் பொன்.ஜெயராமன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவ.ருத்ரய்யா மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
ஸ்ரீ பெரும்புதூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் தலைமையில், போக்குவரத்து ஆய்வாளர் கார்த்திக், ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
போரூர்:
சென்னை நெசப்பாக்கம் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமசாமி. அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். காலையில் கடை திறக்க வந்தபோது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு ராமசாமி அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் வைத்து இருந்த ரூ38ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் சுருட்டி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை-பயிற்சிப் பிரிவின் சார்பாக எம்.எஸ்.எம்.இ. தொழில் நிறுவனங்களுடன் இணைந்து, மாவட்ட அளவிலான தொழிற் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் வருகிற 21-ந் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரகடம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இத்தொழிற் பழகுநர் சேர்க்கை முகாமில் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 8, 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி அடைந்தவர்கள் பங்கு பெற்று பயன் அடையலாம்.
மேலும், விவரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை 044-29894560 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
போரூர்:
போரூர் அடுத்த காரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தர்மன்.இவர் அதே பகுதி பூந்தமல்லி சாலையில் நடந்த சென்ற போது ஆட்டோவில் வந்த மர்ம வாலிபர் செல்போனை பறித்து தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தியபோது, செல்போன் பறித்து தப்பியது திருமழிசை பகுதியை சேர்ந்த பிரபல வழிப்பறி திருடன் ஜான்பால் என்கிற கருப்பு என்பது தெரிந்தது. அவனை போலீசார் கைது செய்தனர். அவன் மீது ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.






