search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்புமணி ராமதாஸ்
    X
    அன்புமணி ராமதாஸ்

    பணம் சம்பாதிக்கும் நோக்கம் இருந்தால் கட்சியை விட்டு ஒதுங்கி கொள்ளுங்கள்- தொண்டர்களுக்கு அன்புமணி எச்சரிக்கை

    யார் மீதாவது புகார் வந்தால் அவர்கள் கட்சிப் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
    காஞ்சிபுரம்:

    தமிழகம் முழுவதும் பா.ம.க. சார்பில் புதிய கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு பொறுப்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

    காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, பொதுக்குழு கூட்டம் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா அரங்கில் நடைபெற்றது.

    காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் மகேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கி பேசினார்.

    பா.ம.க. நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும், நேர்மையுடன் இருக்க வேண்டும், பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் இருப்பவர்கள் கட்சியை விட்டு ஒதுங்கிக் கொள்ளுங்கள், யார் மீதாவது புகார் வந்தால் அவர்கள் கட்சிப் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

    பின்னர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ள கருத்து, இந்தியை கற்றுக்கொண்டால் ஒற்றுமைக்கு உதவும் என தெரிவித்துள்ளார். அதற்கு நேர் எதிரான விளைவு தான் வரும்.

    இந்தி திணிப்பு கூடாது, இந்தி தேசிய மொழி கிடையாது. அது வெறும் அலுவல் மொழிதான். அது போல தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் உள்ளது. 2-வது அட்டவணையில் 22 மொழிகள் உள்ளது.

    அதே நேரத்தில் மும்மொழி கொள்கை என சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கை தான் உள்ளது. உத்தரபிரதேசத்தில் மும்மொழி கொள்கை வைத்திருக்கிறார்களா? இந்தியும், ஆங்கிலமும் மட்டும்தான் வைத்திருக்கிறார்கள். உத்தரபிரதேசத்தில் தமிழை கற்றுக்கொடுப்பார்களா?

    முதலில் பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம் தவிர கூடுதலாக வேறு ஒரு மொழியை கற்றுக்கொடுக்க சொல்லுங்கள். எந்த மொழியையும் திணிக்கக் கூடாது. அது ஒற்றுமைக்கு உதவாது வேற்றுமையை தான் வளர்க்கும்.

    இதைத்தான் ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் பார்த்தார்கள். அந்த நிலை வரக்கூடாது. மொழி என்பது வெறும் மொழி கிடையாது. அதில் நமது கலாச்சாரம் பண்பாடு எல்லாம் அடங்கி இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்துவம் இருக்கிறது.

    தனித்துவத்தில் மொழி என்பது முதலாவது இடத்தில் இருக்கிறது. அதிலே எந்த மொழியையும் யாரிடமும் திணிக்கக் கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×