என் மலர்
உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கண்டெய்னர் லாரி மோதி பெண் போலீஸ்-குழந்தை பலி
காஞ்சிபுரம்:
சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாராக வேலை பார்த்து வந்தவர் உமாதேவி. இவரது கணவர் ராஜா. இவர்களது 1½ வயது குழந்தை தர்ஷன்.
இவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலு செட்டிசத்திரம் அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து பெங்களூர் மார்க்கமாக கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென்று அந்த கண்டெய்னர் லாரி தறிகெட்டு ஓடத் தொடங்கியது. முன்னால் சென்று கொண்டிருந்த 2 சொகுசு கார்களை கண்டெய்னர் லாரி இடித்து தள்ளியது.
பின்னர் பெண் போலீஸ் உமாதேவி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீதும் கண்டெய்னர் லாரி மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த சம்பவத்தில் பெண் போலீஸ் உமாதேவி, குழந்தை தர்ஷன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்தில் உமாதேவியின் கணவர் ராஜா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். சம்பவ இடத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், கூடுதல் டி.எஸ்.பி. ஜெயராமன், டி.எஸ்.பி. ஜூலியஸ் சீசர் ஆகியோர் விரைந்து சென்று பார்வையிட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






