என் மலர்
உள்ளூர் செய்திகள்

மதுரையில் இருந்து மனைவியால் கடத்தி வரப்பட்ட கணவர் சென்னையில் மர்ம மரணம்
போரூர்:
மதுரை மாவட்டம் தல்லாகுளம் பகுதியை சேர்ந்தவர் பாலதண்டாயுதபாணி (வயது50). இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு 2மகன்கள் உள்ளனர்.
மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாலதண்டாயுதபாணி கடந்த 7 ஆண்டுகளாக ராஜலட்சுமியை பிரிந்து சகோதரர் குமாருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 13-ந் தேதி பாலதண்டாயுதபாணி மாயமானார். அவரை மனைவி ராஜலட்சுமி வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாயமான தனது அண்ணன் பாலதண்டாயுதபாணியை கண்டுபிடித்து தருமாறு தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் அவரது சகோதரர் குமார் புகார் அளித்தார்.
மேலும் மதுரை ஐகோர்ட்டு கிளையிலும் ஆட்கொணர்வு மனு ஒன்றையும் தாக்கல் செய்தார்.
அப்போது பாலதண்டாயுதபாணியை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து பாலதண்டாயுதபாணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் ராஜ லட்சுமி, கணவர் பாலதண்டாயுதபாணியுடன் சென்னை, மதுரவாயலில் தங்கி இருப்பது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து தல்லாகுளம் போலீசார் மதுரவாயல் எம்.ஜி சக்கரபாணி தெருவில் உள்ள ராஜலட்சுமியின் வீட்டிற்கு நேற்று இரவு வந்தனர். அங்குள்ள அறையில் பாலதண்டாயுதபாணி இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி மதுரவாயல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் ஆகியோர் பாலதண்டாயுதபாணியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பாலதண்டாயுதபாணி எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. போலீசார் வரும் நேரத்தில் அவர் இறந்து கிடந்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் மதுரவாயல் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து ராஜலட்சுமியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அப்போது ராஜலட்சுமி கூறும்போது, கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவர் பாலதண்டாயுதபாணிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. எனவே சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து இருந்தோம். சிகிச்சை முடிந்து காலையில்தான் “டிஸ்சார்ஜ்” செய்து அழைத்து வந்தோம். இந்த நிலையில் கணவர் உடல் நிலை மேலும் பாதிக்கப்பட்டு திடீரென உயிரிழந்துவிட்டார் என்று கூறிஉள்ளார்.
ஆட்கொணர்வு மனுவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட வேண்டிய பாலதண்டாயுதபாணி மர்மமாக உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜலட்சுமி, தனது கணவர் பாலதண்டாயுதபாணியை சென்னைக்கு அழைத்து வந்தது ஏன்? எப்படி அழைத்து வந்தார்? அவருக்கு உதவியவர்கள் யார்? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.






