என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல் சாகுபடி
    X
    நெல் சாகுபடி

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாய சாகுபடி 9,180 ஹெக்டேர் அதிகரிப்பு

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போதைய நிதி ஆண்டில் நெல் சொர்ணாவாரி பருவத்தில் 6,774 ஹெக்டேரும், சம்பா பருவத்தில் 15,316 ஹெக்டேரும், நவரை பருவத்தில் 25,748 ஹெக்டேரும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டமாக இருந்தபோது 2017-18-ம் ஆண்டில் 1,05,455 ஹெக்டேர் விவசாய நிலங்கள் இருந்தன.

    இவற்றில் ஒரு ஹெக்டேர் விவசாய நிலத்தில் 2 போகம் சாகுபடி செய்யப் பட்டால் சாகுபடி பயிர் பரப்பு 2 ஹெக்டேராகவும், 3 போகம் சாகுபடி செய்யப்பட்டால் 3 ஹெக்டேராகவும் கணக்கிடப்படுகிறது. இதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நிலங்களில் 1,24,593 ஹெக்டேர் அளவுக்கு சாகுபடி நடைபெற்றது.

    இந்த சதுப்பு நிலங்களின் மதிப்பு 2018-19-ம் ஆண்டில் 96,169 ஹெக்டேராக குறைந்தது. பயிர் சாகுபடி செய்யப்பட்ட பரப்பளவும் 1,08,986 ஹெக்டேராக குறைந்தது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2019-20-ம் ஆண்டில் விவசாய சாகுபடி நிலங்களின் பரப்பு 36,766 ஹெக்டேராக இருந்தது. இந்த நிலங்களில் 48,145 ஹெக்டேர் அளவுக்கு பயிர் சாகுபடி செய்யப்பட்டது.

    நெல் சொர்ணவாரி பருவத்தில் 4,421 ஹெக்டேரும், சம்பா பருவத்தில் 15,284 ஹெக்டேரும், நவரை பருவத்தில் 18,786 ஹெக்டேரும் சாகுபடி செய்யப்பட்டன.

    ஏரிகள் மூலம் 22,867 ஹெக்டேர் விவசாய நிலங்களும், கிணறுகள் மூலம் 9,200 ஹெக்டேர் விவசாய நிலங்களும், ஆழ்துளை கிணறுகள் மூலம் 6,480 ஹெக்டேர் விவசாய நிலங்களும் பயன் பெற்றன.

    மழையை எதிர்நோக்கும் மானாவாரி நிலங்களிலும் விவசாய பயிர்கள் பயிரிடப்பட்டன. கடந்த 2021-22-ம் ஆண்டில் விவசாய நிலங்களின் பரப்பு 39,048 ஹெக்டேராக அதிகரித்தது.

    இந்த நிலையில் தற்போதைய நிதி ஆண்டில் நெல் சொர்ணாவாரி பருவத்தில் 6,774 ஹெக்டேரும், சம்பா பருவத்தில் 15,316 ஹெக்டேரும், நவரை பருவத்தில் 25,748 ஹெக்டேரும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    மொத்தமாக 57,365 ஹெக்டேர் அளவுக்கு சாகுபடி நடைபெற்றுள்ளது. இது கடந்த ஆண்டு சாகுபடி பரப்பை ஒப்பிடும்போது 9,180 ஹெக்டேர் அதிகமாகும். இந்த ஆண்டில் ஏரிப்பாசனம் மூலம் 22,867 ஹெக்டேர் விவசாய நிலங்களும், ஆழ்துளை கிணற்றின் மூலம் 6,480 ஹெக்டேர் விவசாய நிலங்களும், கிணறுகள் மூலம் 9,200 ஹெக்டேர் விவசாய நிலங்களும் பயன்பெற்றன.

    இதற்கிடையே காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓடும் பாலாறு, செய்யாற்றில் தடுப்பணைகளை அதிகப்படுத்த வேண்டும். ஏரி, குளங்களை தூர்வாரி நீர் ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும். இதன் மூலம் விவசாயத்துக்கு மேலும் புத்துயிர் கொடுக்க முடியும் என்று விவசாய சங்கங்கள் தெரிவிக்கின்றன.

    Next Story
    ×