என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சிம்பன்சி குரங்குகளுக்காக அமைக்கப்பட்டுள்ள ஷவர்
    X
    சிம்பன்சி குரங்குகளுக்காக அமைக்கப்பட்டுள்ள ஷவர்

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் கோடை வெயிலை சமாளிக்க விலங்குகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள்

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, மான்கள், காட்டு மாடு, ஒட்டகச்சிவிங்கி போன்றவைற்றை வெயிலில் இருந்து காத்துக்கொள்ள புல்லால் ஆன நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
    தாம்பரம்:

    வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,300-க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன.

    தற்போது பனிக்காலம் முடிந்து கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து விலங்குகளை பாது காக்க உயிரியல் பூங்கா நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    யானைக்கு அதன் வளாகத்திலேயே சேற்று மண் குளியல் மற்றும் ‘‌ஷவர்’ குளியல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிம்பன்சி குரங்குகளுக்காக அதன் வளாகத்தில் ‘‌ஷவர்’ குளியல் அமைக்கப்பட்டுள்ளது.

    கோடை வெயிலில் இருந்து தற்காத்து கொள்வதற்காக பறவைகளுக்கு அதன் கூண்டுகளை சுற்றி சாக்கு பை மூலம் வெயில் உள்ளே வராத அளவுக்கு திரைகள் அமைக்கப்பட்டு தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது.

    சிங்கம், புலி, மான்கள், காட்டு மாடு, ஒட்டகச்சிவிங்கி போன்றவைற்றை வெயிலில் இருந்து காத்துக்கொள்ள புல்லால் ஆன நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    உள்ளரங்கில் காணக்கூடிய ஊர்வன உள்ளிட்ட விலங்குகளுக்கு வெயிலில் இருந்து காத்துக் கொள்வதற்காக காலை மற்றும் மாலை வேளைகளில் தரையில் தண்ணீர் தெளிக்கப்படுகிறது. மரக்கிளைகள், மரப்பொந்து போன்றவை செயற்கை முறையில் அமைத்துள்ளனர்.

    இதன்மூலம் வெயிலில் இருந்து ஊர்வன விலங்குகள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சிங்கம், புலி, சிறுத்தைகள் போன்றவற்றுக்கு ஐஸ்கட்டியாக உறைய வைத்த மாமிச உணவுகள் வெயிலை முன்னிட்டு கொடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் காலை மற்றும் மாலை வேளைகளில் அதன் கூண்டுக்குள் வைத்து தண்ணீர் பீச்சி அடித்து வெயிலில் இருந்து காத்துக்கொள்ள 2 முறை குளிப்பாட்டி வருகின்றனர். இதுபோல் அனைத்து விலங்குகளுக்கும் அதன் வசிப்பிடத்தில் 24 மணி நேரமும் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    யானை, காண்டாமிருகம், குரங்குகள், பறவைகள் போன்றவற்றுக்கு தர்பூசணி பழங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக யானை மற்றும் சிம்பன்சி குரங்குகளுக்கு இளநீரும் கொடுக்கப்படுகிறது.
    Next Story
    ×