என் மலர்tooltip icon

    ஈரோடு

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 75 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் பள்ளிபாளையம் காவிரி கரையோர பகுதிகளில் இன்று காலை 1000 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. #MetturDam #CauveryRiver
    ஈரோடு:

    மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி (120 அடி) உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

    நேற்று 40 ஆயிரம் கன அடியாக திறந்து விடப்பட்ட தண்ணீர் இரவு 75 ஆயிரம் கன அடியாக திறந்துவிடப்பட்டது. இதனால் காவிரி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு பாய்ந்து ஓடுகிறது.

    சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தை பார்த்து மக்கள் மனதிலும் உற்சாக வெள்ளம் ஏற்பட்டு உள்ளது.

    மேட்டூர் அணையிலும் திறந்து விடப்படும் தண்ணீர் சேலம் மாவட்ட எல்லை வழியாக ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிபேட்டை, அம்மாபேட்டை, பவானி, பள்ளிபாளையம், ஈரோடு வழியாக பாய்ந்து செல்கிறது.

    ஈரோடு மாவட்ட எல்லையான பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை அதிகாரிகள் ஏற்கனவே பத்திரமான இடத்துக்கு செல்லும்படியும், தங்குவதற்கு மண்டபம் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் அறிவுறுத்தினர்.

    இதையொட்டி பள்ளிபாளையம் காவிரி கரையோரம் உள்ள தங்கபட்டபள்ளம், பாவடி தெரு, புதன் சந்தை பேட்டை, பெரியார்நகர், ஜனதா நகர் பகுதிகளை சேர்ந்த 500 குடும்பத்தினர் வீடுகளை காலி செய்துவிட்டு மண்டபத்துக்கு பெட்டியும் படுக்கையுமாக சென்றுவிட்டனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு மேட்டூர் அணையில் இருந்து 75 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் இன்று அதிகாலை காவிரி ஆற்றில் மேலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த மேலும் 500 வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் இன்று தங்கள் வீடுகளைவிட்டு பாதுகாப்பாக வெளியேறினர். அவர்கள் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    பள்ளிபாளையம் காவிரி கரையோர பகுதிகளில் இன்று காலை சுமார் 100 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. 1000 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பள்ளிபாளையம் மற்றும் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதிகளில் தண்டோரா போட்டு தொடர்ந்து மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் இன்று காலை வரை வெள்ள பாதிப்பு இல்லை. காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் பாய்ந்து செல்வதால் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் அறிவித்துள்ளார். கலெக்டரின் உத்தரவுபடி பொதுப்பணி துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரப் பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் குடிசைகள் அமைத்து சலவை தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் கலெக்டர் வேண்டுகோள்படி குடிசைகளை காலி செய்துவிட்டு சென்றுவிட்டனர்.

    இவர்கள் தங்கி உள்ள குடிசைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இதில் பல குடிசைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுவிட்டன. #MetturDam #CauveryRiver
    கணவரை சேர்த்து வைக்ககோரி ரகசிய திருமணம் செய்த ஆசிரியை எஸ்.பி.யிடம் புகார் மனு அளித்துள்ளார்.

    ஈரோடு:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சகாயபுரத்தை சேர்ந்தவர் ஷீலா (வயது 30). இவர் இன்று காலை ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் காங்கயம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் போது வெள்ள கோவிலை சேர்ந்த கவின்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.

    நாங்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரும் கடந்த 10.4.17 அன்று பெருந்துறையில் உள்ள ஒரு கோவிலில் ரகசிய திருமணம் செய்து கொண்டோம்.

    பிறகு அவரவர் வீட்டுக்கு சென்று விட்டோம். அவ்வப் போது சந்தித்து ஊட்டி, ஏற்காடு போன்ற ஊர்களுக்கு போய் வந்தோம்.

    இந்த நிலையில் நான் கர்ப்பம் ஆனேன். ஆனால் கணவரின் வற்புறுத்தலால் கர்ப்பத்தை கலைத்து விட்டேன்.

    இந்த நிலையில் எங்களது திருமணம் வி‌ஷயம் தெரிய வர கணவர் வீட்டில் உள்ளவர்கள் என்னை மிரட்டுகிறார்கள். திருமணம் செய்ததாக கூறினால் கொன்று விடுவோம் என்று மிரட்டுகிறார்கள்.

    எனது காதல் கணவரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு என்னுடன் உள்ள தொடர்பை துண்டித்து விட்டார்.

    இதனால் எனக்கு பாதுகாப்பு கொடுத்து காதல் கணவரை மீட்டு என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும்.

    இவ்வாறு ஆசிரியை ஷீலா அந்த மனுவில் கூறி உள்ளார். 

    தண்ணீர் திறப்பு எதிரொலியால் கால்வாய் பக்கம் குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டாம் என்று கலெக்டர் பிரபாகர் கூறியுள்ளார். #collector

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காவேரி ஆற்றில் மேட்டூர் அணைக்கு அதிக அளவில் வெள்ள நீர் வருகிறது. இதனால் அணை வேகமாக நிரம்பி வருகிறது. அணைக்கு வரும் வெள்ள நீர் முழுவதும் காவேரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவேரியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

    எனவே பொதுமக்கள் மற்றும் காவேரி ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்கு வேண்டும். அவர்கள் உடனடியாக மேடான பகுதிகளுக்கு செல்ல வேண்டும். காவேரி ஆற்றில் இறங்கவோ, ஆற்றினை கடக்கவோ முயற்ச்சிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனக் கால்வாய்களிலும் மேட்டூர் வாய்க்காலிலும் அதன் முழுக் கொள்ளளவிற்கு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    இதனால் பொதுமக்கள் தங்களது குழந்தைகளை கால்வாய்களின் அருகில் செல்லாமல் பாதுகாப்பாக இருக்கு வேண்டும். கால் வாயில் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் செல்லும் போது பொதுமக்கள் கவனமுடனும் மிகுந்த எச்சரிக்கையாகயுடனும் இருக்க வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் அதில் கூறியுள்ளார்.

    கண் மூடித்தனமாக ஓட்டு போட்ட மக்கள்தான் முதல் குற்றவாளி என காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார். #Vote #TamilaruviManian

    ஈரோடு:

    ஈரோடு சி.கே.கே. அறக்கட்டளை சார்பில் ஈரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் சி.கே.கே. அறக்கட்டளையின் 40- ஆண்டு இலக்கிய விழா நடந்தது.

    விழாவில் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    வெளி நாட்டில் வாழும் தமிழ் மக்கள் இலக்கிய சிந்தனையை நேசிக்கிறார்கள். அதே போல் நாமும் இலக்கியத்தை நேசிக்க வேண்டும்.

    இன்று பெண்கள் பெரும் பாலானோர் டி.வி. சீரியல்களை நேசிப்பதால் அவர்களின் சிந்தனை அழிந்து வருகிறது. மக்கள் பிரதிநிதிகளை குற்றம் சொல்வதை விட பெரிய குற்றம் அவர்களுக்கு கண் மூடித்தனமாக ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கும் நம்ம தான் (பொதுமக்கள்) குற்றவாளிகள்.

    இளைய தலைமுறையினர் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை கற்று கொள்ள வேண்டும். இதன் மூலம் பல நல்ல சிந்தனைகளை வளர்த்து கொள்ளலாம்.

    இலக்கியம் தொடர்பான விழாக்கள் அவ்வப்போது நடத்தப்பட வேண்டும். அப்போது தமிழ் இலக்கியங்கள் பாதுகாக்கப்படும். இதன் மூலம் தமிழும், மனித நேயமும் வளரும்.

    இவ்வாறு தமிழருவி மணியன் பேசினார்.  #Vote #TamilaruviManian

    லாரிகள் ஸ்டிரைக் தீவிரமாக நடந்து வருவதால் ஈரோட்டில் மட்டும் சுமார் ரூ.10 கோடி மதிப்புள்ள மஞ்சள்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் தேங்கி கிடக்கிறது. #LorryStrike
    ஈரோடு:

    நாடு முழுவதும் இன்று 4-வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 5 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை.

    ஈரோடு என்றதும் மஞ்சளும், ஜவுளிகளும் தான் நினைவுக்கு வரும். ஈரோடு மாவட்டம் முழுவதும் மஞ்சள் சாகுபடி அதிகளவில் நடந்து வருகிறது. அறுவடை செய்யப்படும். மஞ்சள் பதப்படுத்தப்பட்டு மூட்டைகளில் அடைத்து இந்தியா முழுவதும் தினமும் லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது லாரிகள் ஸ்டிரைக் தீவிரமாக நடந்து வருவதால் ஈரோட்டில் மட்டும் சுமார் ரூ.10 கோடி மதிப்புள்ள மஞ்சள்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் தேங்கி கிடக்கிறது. மஞ்சள் மூட்டைகள் குடோன்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இதே போல் ஈரோட்டில் மட்டும் இன்று வரை ரூ.50 கோடி மதிப்புள்ள ஜவுளிகள் தேக்கம் அடைந்து உள்ளது. ஈரோடு மாவட்டம் முழுவதும் உற்பத்தி செய்யப்படும் ஜளிகள் ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டு இங்கு இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் மற்றும் பல மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    லாரிகள் ஸ்டிரைக்கால் ஜவுளி பண்டல்கள் குவியல் குவியலாக தேங்கி கிடக்கிறது.

    மேலும் ஈரோட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும். எண்ணெய் வித்துகள் ரூ.15 கோடி அளவிலும் மாட்டு தீவனம் ரூ.2 கோடி அளவிலும், காய்கறிகள் ரூ.5 கோடி அளவிலும் தேங்கி உள்ளது.

    மொத்தம் ஈரோடு மாவட் டத்தில் மட்டும் இதுவரை ரூ.200 கோடி மதிப்பிலான பல்வேறு பொருட்கள் தேக்கம் அடைந்திருப்பதாக மஞ்சள் வியாபாரிகள் சங்க தலைவர் ராஜமாணிக்கம், தமிழ்நாடு வணிக சங்க பேரவை மாநில இணை செயலாளர் சிவநேசன் ஆகியோர் தெரிவித்தனர். #LorryStrike


    பெற்றோர் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்த இளம்பெண் 2 மாதத்தில் தற்கொலை செய்துகொண்டார்.
    பெருந்துறை:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஐவத்தம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். அவருடைய மனைவி மல்லிகா. இவர்களுடைய மகன் மகேஷ்குமார் (வயது 25). மகள் நித்யா (21). பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி.

    நித்யாவும், ஐவத்தம்பட்டி அருகே உள்ள நெல்லிகுடிப்பட்டியைச்சேர்ந்த தமின்அன்சாரி (24). என்பவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தார்கள். நித்யாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இந்தநிலையில் நித்யா தன்னுடைய பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தமின் அன்சாரியை திருமணம் செய்து கொண்டார்.

    அதன்பின்னர் புதுமண ஜோடி ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள காடபாளையத்துக்கு வந்து வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார்கள். பெருந்துறையில் உள்ள ஒரு செல்போன் கடையில் தமின் அன்சாரி வேலை பார்த்து வந்தார். இதற்கிடையே மனைவி நித்யா பெயரை, யாஸ்மின் என்று மாற்றம் செய்ததாக தெரிகிறது.

    இந்தநிலையில், கடந்த 19-ந் தேதி தமின்அன்சாரி வேலைக்குச் சென்றுவிட்டார். வீட்டில் தனியாக இருந்த நித்யா அன்று பகல் 1 மணிஅளவில், திடீரென விஷம் குடித்துவிட்டு உயிருக்கு போராடினார். இதுபற்றி அக்கம் பக்கத்தினர் தமின்அன்சாரிக்கு தகவல் கொடுத்தார்கள். விரைந்து வந்த அவர் நித்யாவை பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்று முன்தினம் இரவு 10 மணிஅளவில் நித்யா இறந்துவிட்டார்.

    இதுபற்றி பெருந்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜ்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் சுகவனம் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நித்யாவுக்கு திருமணம் ஆகி 2 மாதங்களே ஆகியுள்ளதால் ஈரோடு ஆர்.டி.ஓவும் மேல் விசாரணை நடத்த உள்ளார். காதல் திருமணம் செய்துகொண்ட 2 மாதத்திலேயே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. 
    சென்னிமலை அருகே நேற்று இரவு 6 ஆடுகளை மர்ம விலங்கு கடித்ததில் பரிதாபமாக இறந்து போனது. இறந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள முருங்கத்தொழுவு கிராமம் பனங்காட்டு தோட்டத்தில் வசிப்பவர் ரங்கசாமி (வயது 80). விவசாயி.

    இவர் 24 செம்மறி மற்றும் வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். இவர் இரவு ஆடுகளை வீடு அருகே உள்ள அவருக்கு சொந்தமான இடத்தில் பட்டி அமைத்து அதில் அடைத்து விடுவார்.

    நேற்று இரவு பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு வீட்டில் படுக்க சென்று விட்டார். இன்று காலை 6 மணிக்கு வந்து ஆட்டு பட்டியை பார்த்தபோது ரங்கசாமி திடுக்கிட்டார்.

    அங்கு அடைக்கப்பட்டு இருந்த ஆடுகளில் 6 ஆடுகளை ஏதோ மர்ம விலங்கு கடித்து குதறி மிக கோரமாக இறந்து கிடந்தன. மேலும் 5 ஆடுகள் மர்ம விலங்க கடித்து ரத்த காயத்துடன் கிடந்தன. அவை உயிருக்கு போராடின.

    ஆடுகள் பயந்து ஓடியதில் சில ஆடுகளுக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இதை பார்த்து ரங்கசாமி கதறி அழுதார். இந்த தகவல் அறிந்து அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

    கால்நடை மருத்துவர் வந்து கடிபட்ட ஆடுகளுக்கு வைத்தியம் பார்த்தார். ஆட்டு பட்டியை சுற்றி குடியிருப்பு பகுதி உள்ளதால் மற்ற மர்ம விலங்குகள் வருவதற்கு வாய்ப்புகள் குறைவு எனவும் நாய் கடித்து ரத்தம் குடித்திருக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் மக்கள் பேசி கொண்டனர்.

    இறந்த ஆடுகளின் மதிப்பு ரூ. ஒரு லட்சம் இருக்கும். உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 

    ஈரோட்டில் இன்று அதிகாலை கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை மர்ம நபர் பறித்து சென்றார்.

    திண்டல்:

    ஈரோடு திண்டல் கே. எஸ். நகரைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவரது மனைவி புஷ்பா (வயது 50) .

    கணவன்-மனைவி இருவரும் இன்று அதிகாலை 5.30 மணியளவில் வெளியூர் செல்வதற்காக வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

    செங்கோடம் பள்ளம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் புஷ்பா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை (தாலிச் செயின்) திடீரென பிடித்து இழுத்து பறித்தார்.

    இதை சற்றும் எதிர்பார்க்காத புஷ்பா திருடன்..திருடன்... என கத்தினார். வெங்கட்ராமன் உடனடியாக மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

    அதற்குள் அந்த மர்ம நபர் நகையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டார். அதிகாலை நேரம் என்பதால் உதவிக்கு யாரும் அங்கு வரவில்லை.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு வெங்கட்ராமன் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    நகை பறிப்பு நடந்த இடத்தின் அருகே பல்வேறு தனியார் வணிக வளாகங்கள் உள்ளன. அங்கு பொருத்தப்பட்டுள்ள உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாநகரில் சமீப காலமாக தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். நகை பறிப்பு சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெருந்துறை அருகே திருமணம் ஆன 2 மாதத்தில் புதுப்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெருந்துறை:

    பெருந்துறை அருகே உள்ள காடபாளையத்தை சேர்ந்தவர் தமீன் அன்சாரி. இவரது மனைவி யாஸ்மின் (வயது 24).

    இவர்கள் 2 பேரும் மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர்கள். இருவரும் காதல் செய்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    எதிர்ப்பை மீறி அவர்கள் கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்தனர். பின்னர் அவர்கள் பெருந்துறைக்கு வந்து காடபாளையத்தில் தங்கி இருந்து குடும்பம் நடத்தினர்.

    தமீன் அன்சாரி செல்போன் கடையிலும், யாஸ்மின் செருப்பு கடையிலும் வேலை பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மேலூரில் உள்ள யாஸ்மினின் தாய்க்கு தமீன் அன்சாரி போன் செய்தார். ‘‘உங்கள் மகள் அதிக வயிற்று வலியால் எலி மருந்து சாப்பிட்டு விட்டார். நான் பெருந்துறை ஐ.ஆர்.டி. ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளேன்’’ என்று கூறினார்.

    இதையடுத்து யாஸ்மினின் தாயார் மேலூரில் இருந்து பெருந்துறைக்கு வந்தார். யாஸ்மினை கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி யாஸ்மின் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பெருந்துறை போலீஸ் டி.எஸ்.பி. ராஜகுமார் வழக்குப்பதிவு செய்தார்.

    யாஸ்மின் மர்மமாக இறந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. யாஸ்மினுக்கு திருமணமாகி 2 மாதமே ஆவதால் அவரது சாவு குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஈரோடு முனிசிபல்சத்திரத்தில் மனைவி மாயமானது குறித்து கணவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் பெண்ணை தேடி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு, நேதாஜி ரோடு, முனிசிபல்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி சுஜா (வயது 42).

    இவர் கடந்த 18-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை அக்கம் பக்கத்திலும் உறவினர் வீடுகளிலும் தேடினர்.

    ஆனால் சுஜா கிடைக்கவில்லை. அவரை குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை. எனவே அவர் திடீரென மாயமானது குறித்து சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் முரளி புகார் செய்தார்.

    மாயமான தனது மனைவி சுஜாவை கண்டுபிடித்து தருமாறு அதில் அவர் கூறி உள்ளார். அதன் பேரில் சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சுஜாவை தேடி வருகின்றனர்.

    இதேபோல் சென்னிமலையை அடுத்துள்ள அம்மாபாளையம் அன்புநகர் பகுதியில் வசிப்பவர் முனியப்பன்- மாரியம்மாள் தம்பதி.

    இவர்களின் மகள் விஜயலட்சுமி (13). இவர் பள்ளி படிப்பை நிறுத்தி விட்டு வீட்டில் இருந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு அருகில் உள்ள பொது கழிவறைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்ப வில்லை.

    பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மாரியம்மாள் தனது மகளை காண வில்லை என சென்னிமலை போலீசில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் சுமார் ரூ. 100 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்து குடோன்களில் வைக்கப்பட்டுள்ளது. #LorryStrike
    ஈரோடு:

    பெட்ரோல், டீசல் விலையை 3 மாதத்துக்கு ஒரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய லாரிகள் வேலை நிறுத்தம் போராட்டம் நேற்று முதல் தொடங்கியது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் லாரிகள் ஓடவில்லை. சித்தோடு அருகே உள்ள நரிப்பள்ளம் ஓடையில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இன்று லாரி வேலை நிறுத்த போராட்டம் 2-வது நாளாக நீடித்தது. இன்றும் நரிப்பள்ளம் ஓடையில் 200-க்கும் மேற்பட் ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. லாரி டிரைவர்களும், கிளீனர்களும் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர்.

    லாரி ஸ்டிரைக்கால் ஜவுளி பொருட்கள், மஞ்சள், எண்ணெய் வித்துகள், காய்கறிகளை வெளி மாநிலங்களுக்கு ஏற்றி செல்லும் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதனால் சுமார் ரூ. 100 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்து குடோன்களில் வைக்கப்பட்டுள்ளது.

    லாரி ஸ்டிரைக் காரணமாக குடோனில் தேங்கியுள்ள நூல் பண்டல்கள்

    இது குறித்து ஈரோடு லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் துரைசாமி கூறியதாவது.-

    ஈரோட்டில் இருந்து தினமும் 2,500 லாரிகள் சென்னை, மும்பை, மேற்கு வங்காளம்,கொல்கத்தா போன்ற பெரும் நகரங்களுக்கு சென்று வருகிறது. பிற மாவட்டங்களுக்கு ஈரோட்டில் இருந்து தினமும் 1000 லாரிகள் சென்று வந்தது.தற்போது நடந்து வரும் ஸ்டிரைக்கால் இந்த லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    நாங்கள் எங்கள் வாழ்வாதார பிரச்சினைக்காக போராடி வருகிறோம். எனவே மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #LorryStrike
    தமிழக பள்ளி கல்வித்துறையில் இன்னும் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #ADMK #TNMinister #Sengottaiyan
    கோபி:

    கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம் அரசு உயர் நிலைப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடந்தது. அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு அம்மா பரிசு பெட்டகத்தை வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் குழந்தைகள் பிறப்பு விகிதம் 19 சதவீதமாக உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 7 சதவீதமாக உள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்கது. இந்த மாவட்டத்தில் அளவான குடும்பத்தை வைத்து வளமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

    தமிழக மருத்துவ துறையை பாராட்டி மத்திய அரசே விருது வழங்கி உள்ளது. தமிழக பள்ளி கல்வித்துறையில் இன்னும் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. அரசு பள்ளி கூடங்களில் உள்ள செயல்படாத பெற்றோர்- ஆசிரியர் சங்கங்கள் இந்த மாத இறுதிக்குள் மாற்றி அமைக்கப்படும். விளையாட்டு மைதானம் இல்லாத பள்ளிகளில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று நிகழ்ச்சிகளை காண மாணவ- மாணவிகளை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்படும்.

    அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. அதிகமாக மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. பள்ளியை சுத்தமாக வைத்திருப்பவர்களுக்கு நிதி வழங்கப்பட உள்ளது.


    கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.18 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த நிதி இதுவரை ரூ.69 லட்சம் வரை வழங்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Sengottaiyan
    ×