என் மலர்tooltip icon

    ஈரோடு

    லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ஈரோட்டில் பிரதான தொழில்கள் அனைத்தும் முடங்கிப் போய் வருகிறது. குறிப்பாக ஈரோடு மாட்டுசந்தையும் வெறிச்சோடி காணப்பட்டது.

    ஈரோடு:

    பெட்ரோல் டீசல் விலையை 3 மாதத்திற்கு ஒரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும் சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும். பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20-ந் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு மாவட்டத்தில் 5 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை இதனால் சுமார் ரூ. 350 கோடி வரை வர்த்தகம் முடங்கியுள்ளது. புடவை துணிமணிகள் வெளிமாநிலங்களுக்கு செல்ல முடியாமல் லாரி புக்கிங் ஆபீஸ் மற்றும் குடோன்களில் தேக்கம் அடைந்து வருகின்றன.

    லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ஈரோட்டில் பிரதான தொழில்கள் அனைத்தும் முடங்கிப் போய் வருகிறது. குறிப்பாக ஜவுளிகள் மஞ்சள் எண்ணெய் வித்துக்கள் காய்கறிகள் போன்ற தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வரிசையில் தற்போது கருங்கல்பாளையத்தில் நடந்த மாட்டு சந்தையும் இணைந்துள்ளது.

    ஈரோடு கருங்கல் பாளையத்தில் ஒவ்வொரு வியாழன் தோறும் மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம்.

    இந்த சந்தைக்கு வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவு வியாபாரிகள் வருவார்கள் குறிப்பாக மகாராஷ்டிரா குஜராத் ,கேரளா, மேற்கு வங்காளம் ,கோவா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவு வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி செல்வார்கள்.

    இந்நிலையில் லாரிகள் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக இன்று நடந்த மாட்டுச்சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. இதனால் மாட்டுச்சந்தை களை இழந்து காணப்பட்டது. வியாபாரமும் பாதிக்கு பாதியாக குறைந்தது.

    இன்று 200 பசு மாடுகளும் 100 எருமை மாடுகளும் 200 வளர்ப்பு கன்றுகளும் விற்பனைக்கு வந்தன. அவை 16 ஆயிரம் முதல் 34 ஆயி ரம் வரை விற்பனையானது.

    இது குறித்து மாட்டு சந்தை மேலாளர் முருகன் கூறியதாவது.-

    கடந்த 2 வாரமாகவே மழை காரணமாக வெளி மாநில வியாபாரிகள் அதிகம் வரவில்லை. இந்நிலையில் லாரி உரிமையாளர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தம் காரணமாக. இன்று சந்தைக்கு குஜராத், கர்நாடகா, குஜராத், மேற்குவங்காளம் வியாபாரிகள் யாரும் வரவில்லை.

    ரூ.3 கோடி வரை மாட்டு சந்தையில் விற்பனை நடக்கும் .ஆனால் இன்று ரூ.1 கோடிக்கு மட்டுமே மாடுகள் விற்பனை ஆனது ரூ.2 கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடும் வன ஊழியர்களுக்கு பாதுகாப்பு குறித்து வன உயிரின ஆராய்ச்சியாளர் பயிற்சி அளித்தார்.
    தாளவாடி:

    சத்தியமங்கலம் வனப் பகுதியில் ஒரு லட்சத்து 4 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது.

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 7 வனச்சரங்கள் உள்ளன. மழைப்பொழிவுக்கு பின் வனத்தில் வாழும் வன விலங்குகள் நடமாட்டம் குறித்த கணக்கெடுப்புப்பணி ஆகஸ்ட் மாதம் நடைபெறுகிறது.

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள சத்தியமங்கலம், பவானிசாகர், தலமலை, டி.என்.பாளையம், ஆசனூர், தாளவாடி, கேர்மாளம் ஆகிய 7 வனச்சரகத்தில் ஈடுபட உள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் வனவர் தலைமையில் 5 பேர் இதில் பணியில் உள்ளனர்.

    கணக்கெடுப்பில் பணியில் ஈடுபடும் வன ஊழியர்களுக்கு வன உயிரின ஆராய்ச்சியாளர் சக்திவேல் பயிற்சி அளித்தார். கேர்மாளம் வனச்சரகத்தில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த கணக்கெடுப்பில் வன ஊழியர்கள் ஜிபிஎஸ், ரேஞ்ச் பைண்டர் போன்ற கருவிகளை பயன்படுத்தி கணக்கெடுப்பு மேற்கொள்ள உள்ளனர்.

    ரேஞ்ச் பைண்டர் மூலம் தொலைவில் உள்ள வன விலங்குகள் நடமாட்டத்தையும் நீர்நிலைகளையும் ஆய்வு செய்ய முடியும்.

    5 கி.மீ. பரப்பளவிற்குள் கண்ணில் தென்படும் வன விலங்குகள், தாவரங்கள், நீர் நிலைகள், மரங்கள் என அனைத்தும் குறிப்பு எடுக்க புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய செல்லிடை பேசி வழங்கப்பட்டுள்ளது.

    இந்த செல்லிடைபேசியில் ஜிபிஎஸ் உதவியுடன் செல்போனில் கணக்கெடுப்பு பதிவு செய்வது மட்டுமின்றி ரோந்து பணிக்கும் பயன்படுத்தலாம்.

    இந்த கருவிகளை பயன்படுத்துவது எப்படி? என்பது குறித்து வன ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
    ஓடும் ரெயிலில் பயணிகளிடம் திருடிய மர்ம நபர் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்தில் தொடர்ந்து பயணிகளிடம் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது.

    ரெயில் நிலைய பிளாட் பாரத்தில் படுத்திருக்கும் பயணிகளிடம் சக பயணிகள் போல் படுத்து அவர்களின் பை மற்றும் செல்போன் போன்றவற்றை திருடிக் கொண்டு சென்று விடுகின்றனர். இதேபோல் ஓடும் ரெயிலிலும் இரவில் அயர்ந்து தூங்கும் பயணிகளிடம் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வருகிறார்கள்.

    கோவை வரதராஜபுரம் இந்திரா கார்டன் விவேகானந்தா நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 63). இவர் மனைவி, மகனுடன் தஞ்சை சென்று இருந்தார்.

    பின்னர் நேற்று இரவு தஞ்சாவூரிலிருந்து கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன் பதிவு பெட்டியில் பயணம் செய்தனர். ஈரோடு அருகே நள்ளிரவில் ரெயில் வரும் போது அயர்ந்து தூங்கினார்கள்.

    அப்போது சீனிவாசனின் பையை ஒரு மர்ம நபர் நைசாக திருடி சென்று விட்டார். அதில் ரூ 7 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ரூ 28 ஆயிரம் மதிப்புள்ள ஐ பேடு, ரூ 8 ஆயிரம் மதிப்புள்ள கேமராவும் இருந்தது. இவை அனைத்தும் திருடு போய் விட்டன.

    இந்த ரெயிலின் அடுத்த பெட்டியில் கோவை காந்திபுரம் 100 அடி ரோடு ராஜா நாயுடு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் அம்சப் ரியா (வயது 24) பயணம் செய்தார்.

    இவரும் தூங்கி சமயத்தில் அவரிடம் இருந்த ரூ 17 ஆயிரம் மதிப்புள்ள விலை உயர்ந்த ஒரு செல்போன் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள மற்றொரு செல்போனையும் மர்ம நபர் திருடி சென்று விட்டார்.

    இந்த இரண்டு சம்பவத்திலும் ஒரே நபர்தான் கைவரிசை காட்டி இருக்கக்கூடும் எனத் தெரியவருகிறது. ரெயில் ஈரோடு வந்ததும் இருவரும் ஈரோடு ரெயில் நிலைய போலீசில் 2 பேரும் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பொதுமக்கள் யாரும் எதிர்பாராத வகையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் அந்த பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக மழை பெய்வதுபோல் மேகக்கூட்டங்கள் சூழ்ந்தாலும் மழை பெய்யவில்லை.

    நேற்று பகலில் வழக்கம் போல் வெயில் அடித்தது. மாலையில் மேகக்கூட்டங்கள் சூழ்ந்து வந்தாலும் மழை பெய்யாமல் ஏமாற்றியது.

    அதே சமயம் இரவில் பொதுமக்கள் யாரும் எதிர்பாராத வகையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

    கன கனமழையாக பெய்யா விட்டாலும் மாவட்டம் முழுவதும் பரவலாகமழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பெருந்துறை, சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் மழை பெய்துள்ளது.

    இதனால் அந்த பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.

    இதேபோல கோபி, கவுந்தப்பாடி, ஈரோடு, கொடிவேரி அணை பகுதியிலும் இரவில் இடி மின்னலுடன் மழை பெய்தது. வனப்பகுதியான பவானிசாகர், தாளவாடி பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வனப்பகுதி ரம்மியமாக காட்சி அளித்தது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

    கொடிவேரி அணை-8.2

    பெரும்பள்ளம் அணை -6

    ஈரோடு -5

    மொடக்குறிச்சி -1

    சொத்து வரி உயர்வை கண்டித்து ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஈரோடு:

    சொத்து வரி உயர்வை கண்டித்து ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு காளை மாடு சிலை அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலை வர் ஈ.பி. ரவி தலைமை தாங்கினார். 

    துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா, மண்டல தலைவர்கள் திருச்செல்வம், ஜாபர் சாதிக், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ், நிர்வாகிகள் முகமது அர்சத், பாஷா, மகிளா காங்கிரஸ் தலைவி புவனேஸ்வரி, நிர்வாகி கே.சி. பழனிச்சாமி உள்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக பூதப்பாடி விற்பனை கூடத்தில் ரூ.2 கோடி பருத்தி தேக்கம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடியில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் தமிழகம் மட்டுமின்றி கர்நாடக போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர்.

    இங்கு பருத்தி விற்பனை அதிக அளவு விற்பனை செய்யப்படுகிறது இதனால் பருத்திக்கு புகழ் பெற்று வருகிறது விற்பனை கூட்டம்.

    இந்த வருட பருத்தி ஏலம் கடந்த மாதம் முதல் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இந்தியா முழுவதும் லாரிகள் ஸ்டிரைக் செய்வருவதால் சந்தையில் உள்ள பொருட்கள் தேக்கம் அடைந்து வருகிறது.

    நேற்று விற்பனை கூடத்தில் நடைபெற இருந்த பருத்தி ஏலம் நடைபெறவில்லை.

    இது குறித்து விவசாயிகள் கூறும்போது கடந்த 10 நாட்களாக மிகவும் சிரமமப்பட்டு பருத்தி எடுத்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம் சுமார் 6 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மூட்டைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

    சுமார் 2 கோடிக்கு மேல் விற்பனை செய்யப்படும் இந்நிலையில் லாரி ஸ்டிரைக் கால் இந்த வார விற்பனை நிறுத்தப்பட்டது வாரா வாரம் விற்பனையை வைத்துதான் விவசாய கடன் மற்றும் ஆட்கள் கூலி ஆகியவற்றை கொடுத்து வந்தோம் இந்தவாரம் என்ன செய்வது என்றும் அரசு விரைந்து பேச்சு வார்த்தை நடத்தி லாரி ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று கூறினர்.



    ஈரோடு மாவட்டம் கோபி அரசு பள்ளிக்கு சென்ற அமைச்சர் செங்கோட்டையன் மாணவ-மாணவிகளிடம் புதிய சீருடைகள் பற்றி கேட்டறிந்தார். #minister #sengottaiyan
    கோபி:

    கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று கோபி பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

    கோபி அடுத்த பெரிய கொரவம்பாளையத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளிக்கு சென்ற அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.

    அமைச்சர் உள்ளே நுழைந்ததும் மாணவ- மாணவிகள் எழுந்து “வணக்கம் ஐயா” என்று வரவேற்றனர்.

    அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட அமைச்சர் மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடினார். மாணவர்களிடம் “புதிதாக போட்டு இருக்கும் பள்ளி சீருடை எப்படி உள்ளது?” என்று கேட்டார்.

    அதற்கு மாணவிகள் நன்றாக இருக்கிறது என்றனர். உடனே அமைச்சர் 2-வது செட் சீருடை விரைவில் உங்களுக்கு கிடைக்கும் என்றார்.

    பிறகு அவர் கூறும்போது, “கியூ ஆக் போர்டு” திட்டம் மூலம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன் முதலாக கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. அரசின் திட்டத்தை பயன்படுத்தி மாணவ-மாணவிகள் நன்கு படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று கூறினார். #minister #sengottaiyan
    நீர்ப்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் 96 அடியை எட்டியது.
    ஈரோடு:

    தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டியதையொட்டி ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 45 அடியிலிருந்த பவானிசாகர் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. 8 ஆண்டுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டியது.

    இந்த நிலையில் பருவ மழை தணிந்து மழை குறைந்தது. இதனால் நீர்வரத்தும் குறைந்தது. நேற்று மாலை முதல் நீர்பிடிப்பு பகுதியான ஊட்டி மலைப் பகுதியில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

    நேற்று அணைக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்தது. இன்று அதிகாலையில் இருந்து இது மேலும் அதிகரித்தது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 869 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையின் நீர்மட்டமும் உயர்ந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.13 அடியாக இருந்தது.

    அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து வருவதால் ஈரோடு, திருப்பூர், மற்றும் கரூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
    திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரச்சலூர்:

    அரச்சலூர் அடுத்த கஸ்தூரிபா கிராமம் காலனியைச் சேர்ந்தவர் மணி. இவரது மகள் சசிகலா (வயது21). இவர் பி.எஸ்.சி முடித்துவிட்டு தற்போது திருப்பூர் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    இவரது பெற்றோர் கூலி வேலை பார்த்து வருகிறார்கள். ஒரே ஒரு தங்கை. பெயர் கார்த்திகா. பள்ளியில் படித்து வருகிறார்.

    நேற்று சசிகலா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். பெற்றோர் வேலைக்குச் சென்றுவிட்டனர். தங்கையும் பள்ளிக்கு சென்று விட்டார்.

    மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த தங்கை கார்த்திகா வீட்டின் கதவு தாழ்பாள் போட்டு இருப்பதை கண்டு கதவைத் திறக்கும்படி கூறினார்.

    ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினரை அழைத்தார். அவர்களும் கதவை தட்டினர். எனினும் கதவு திறக்கப்படவில்லை.

    இதனால் அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு சசிகலா தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார்.

    சசிகலாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து அரச்சலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சசிகலா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்

    நெடுஞ்சாலைக்காக சுங்க கட்டணம் வசூலிப்பது புதிய முறை கொள்ளை என வெள்ளையன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #vellaiyan

    ஈரோடு:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் ஈரோட்டில் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    வணிகர்கள் மிகுந்த வலிமையோடு செயல்பட வேண்டிய காலம் இது அந்நிய முதலீடு ஆன்லைன் வர்த்தகம் போன்றவை சில்லரை வணிகர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது சில்லறை வணிகர்கள் கடைப் பிடிக்க முடியாத பல்வேறு சட்டங்கள் தற்போது நடைமுறையில் உள்ளது சில்லறை வணிகர்கள் அன்னிய முதலீட்டாளர்கள் உடன் போட்டி போடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    முன்பு ஆங்கிலேயர்கள் எவ்வாறு நமது நாட்டிற்குள் நுழைந்தார்களோ அதேபோன்று அந்நிய முதலீடு ஆன்லைன் வர்த்தகம் வந்துள்ளது.

    பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து லாரி ஸ்டிரைக் நடந்து வருகிறது இதை ஆட்சியாளர்களுக்கு இடித்துரைக்கும் வகையில் லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் இப்போதாவது பெட்ரோல் டீசல் விலையை மத்திய மாநில அரசுகள் குறைக்க முன்வர வேண்டும்.

    நெடுஞ்சாலைக்கு சுங்க கட்டணம் வசூலிப்பது கொடுமையானது இது புதிய முறை கொள்ளை ஆகும் எனவே மத்திய அரசு இதை கைவிட வேண்டும் லாரி உரிமையாளர் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும் லாரி உரிமையாளர்கள் போராட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

    இவ்வாறு வெள்ளையன் கூறினார்.  #vellaiyan

    பவானி கூடுதுறையில் குளிக்கும் இடத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டுள்ளது. #BhavaniKooduthurai
    பவானி:

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றுக்கு தொடர்ந்து 70 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    வெறும் பாறைகளாக காட்சி அளித்த பவானி கூடுதுறையில் தற்போது ஆற்று வெள்ளம் சீறிப் பாய்ந்து செல்கிறது.

    தற்போது ஆடி மாதத்தை யொட்டி ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் பவானி கூடுதுறையில் குளிக்க வருகிறார்கள்.

    இவர்களுக்கு பவானி சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் எச்சரிக்கையும் அறிவுரையும் வழங்கப்பட்டு வருகிறது.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூடுதுறையில் குளிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் கூடுதுறையில் குளிக்கும் இடத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை போர்டும் வைக்கப்பட்டுள்ளது.

    அதில், “பக்தர்கள் கவனத்திற்கு... காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகளவில் உள்ளதால் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கப்படுகிறது.” என்று கூறப்பட்டு உள்ளது. மேலும் பவானி நகராட்சி சார்பிலும் காவிரி ஆற்றங்கரையோரம் தண்டோரா போட்டு மக்கள் எச்சரிக்கப்பட்டு வருகிறார்கள்.

    கூடுதுறையில் இறங்கி குளிப்பவர்கள் கரை பகுதியில் நின்று குளித்தால் மட்டும்போதும் ஆர்வத்தில் ஆற்றில் இறங்கி தூரமான இடத்துக்கு சென்று விட வேண்டாம் என நகராட்சியும் பவானி போலீசாரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    கடந்த 3 ஆண்டுக்கு பிறகு காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் காவிரி ஆற்று வெள்ளத்தை காண பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டு உள்ளது.

    இவர்கள் பவானி காவிரி ஆற்றுப்பாலத்தில் கூட்டமாக நின்றபடி காவிரி ஆற்றில் கரைபுரண்டு செல்லும் வெள்ளத்தை பார்த்தபடி செல்கிறார்கள்.  #BhavaniKooduthurai


    லாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலியால் ஈரோடு மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் இன்று(புதன்கிழமை)முதல் தங்களது உற்பத்தியை நிறுத்தி உள்ளனர். #LorryStrike

    ஈரோடு:

    லாரி உரிமையாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20-ந் தேதி முதல் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு மாவட்டத்திலும் 5 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. இதனால் பல கோடி மதிப்பிலான வர்த்தகம் முடங்கியுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் பிரதான தொழிலாக ஜவுளித் தொழில் உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் இருந்து மேற்கு வங்காளம் கொல்கத்தா, ராஜஸ்தான் மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களுக்கு அதிகளவில் ஜவுளி துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

    லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக கடந்த ஐந்து நாட்களாக பலகோடி மதிப்பிலான ஜவுளிகள் குடோன்களில் தேக்கம் அடைந்து வருகின்றன.

    இதனை அடுத்து ஈரோடு மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் இன்று(புதன்கிழமை) முதல் தங்களது உற்பத்தியை நிறுத்தி உள்ளனர்.

    இதுகுறித்து ஈரோடு விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர் கூறியதாவது,-

    ஈரோட்டில் மாணிக்கம்பாளையம் வீரப்பன்சத்திரம், நாராயண வலசு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல்ப்பட்டு வருகின்றன.

    இங்கு தினமும் ரூ.6 கோடி மதிப்பில் 20 லட்சம் மீட்டர் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஐந்து நாட்களாக ரூ. 35 கோடி மதிப்பிலான துணிகளை வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க முடியவில்லை. எனவே லாரிகள் வேலை நிறுத்தம் முடியும்வரை விசைத்தறி உற்பத்தியை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம்.

    இவர் அவர்கள் கூறினர்.

    தமிழக அரசின் இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டத்திற்கு ஈரோடு மாவட்டத்தில் இருந்து தான் அதிகளவில் வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. #LorryStrike

    ×