என் மலர்tooltip icon

    ஈரோடு

    தமிழ்வழியில் படிக்கும் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே கூகலூரில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் ‘ஸ்மார்ட்’ வகுப்பு தொடக்க விழா நடந்தது. விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு ‘ஸ்மார்ட்’ வகுப்பை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் சீருடைகள் மாற்றி அமைக்கப்படும். இதன் மூலம் தனியார் பள்ளிக்கும், அரசு பள்ளிக்கும் இடையே உள்ள வேறுபாடு அகலும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக்காக 50 சதவீதம் இடம் ஒதுக்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

    9, 10, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட உள்ளது. இதன் மூலம் மாணவ-மாணவிகள் உலக செய்திகளை தெரிந்து கொள்ளலாம். பட்டயக் கணக்காளர் படிப்பு படிக்க பிளஸ்-2 முடித்த 25 ஆயிரம் பேருக்கு இந்த ஆண்டு முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    மேலும், பிளஸ்-2 படித்தவுடன் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற உத்தரவாதத்துடன் இந்த அரசு பல்வேறு புதிய பாடத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த கல்வி ஆண்டில் அரசு பள்ளிக்கூடங்களில் 1 லட்சம் மாணவ-மாணவிகள் கூடுதலாக சேர்ந்து உள்ளனர். வரும் கல்வி ஆண்டில் 3 லட்சம் மாணவ, மாணவிகளை அரசு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் 4 ஆயிரத்து 622 நூலகங்கள் உள்ளன. இதில் கடந்த ஒரு மாதத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்து உள்ளனர். இலங்கையில் உள்ள நூலகத்துக்கு 1 லட்சம் சிறந்த நூல்கள் அரசின் சார்பில் விரைவில் வழங்கப்பட உள்ளது. தமிழ் வழி கல்வி படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த அரசு ஊக்கத்தொகை வழங்க உள்ளது.

    அதன்படி பள்ளியில் சிறந்த வருகை, ஒழுக்கம், நல்ல மதிப்பெண், சமூக சேவையில் ஆர்வம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரமும், பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.20 ஆயிரமும் என மொத்தம் 960 பேருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

    இதற்காக 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். அவர் கள் சிறந்த மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பள்ளியில் புதிய வகுப்பறையை எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டு புதிய வகுப்பறையை திறந்து வைத்தனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் உள்ள கல்வி நிறுவனத்தின் நடுநிலைப்பள்ளியில் கூடுதலாக 4 வகுப்பறைகள் ரூ.22 லட்சம் மதிப்பில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்டுள்ளது.

    இதற்கான திறப்பு விழா இன்று நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டு புதிய வகுப்பறையை திறந்து வைத்தனர்.

    நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், சூரம்பட்டி ஜெகதீஷ், கேசவமூர்த்தி, ஜெயராஜ், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் தெய்வநாயகம், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் டி.எஸ்.ஆர். செந்தில்ராஜன், டி.எஸ்.ஆர். ராஜ்கிரண், ஜீவா ரவி, பொன்.சேர்மன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதைத்தொடர்ந்து ஈரோடு மேட்டூர் ரோடு மற்றும் சத்தி ரோட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான தரைமட்டப்பாலம் அமைப்பதற்கான பூமி பூஜையை எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்.

    பின்னர் கருங்கல்பாளையத்தில் ரூ.3 லட்சம் மதிப்பில் போர்வெல் அமைத்து பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகத்தை எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்.
    ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் விஷேச பூஜை மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து அம்மனை பக்தர்கள் வழி படுவார்கள். #temple

    ஈரோடு:

    ஆடி மாதம் என்றலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படும். ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் விஷேச பூஜை மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து அம்மனை பக்தர்கள் வழி படுவார்கள்.

    வழக்கமாக வெள்ளிக் கிழமை மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் பெண் பக்தர்கள் அம்மன் கோவில்களுக்கு அதிகமாக வருவார்கள். இன்று ஆடி மாதம் 2-வது வெள்ளிக்கிழமை ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.

    இதையொட்டி ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் இன்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிகாலை முதலே பக்தர்கள் குறிப்பாக பெண் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

    மேலும் அன்னதானம், கூழ் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனால் கோவில் வளாகம் முழுவதும் திருவிழா போல காட்சி அளித்தது. மேலும் கோவிலில் விளக்கு பூஜையும் நடந்தது. இதில் பெண்கள் பலர் கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்தனர்.

    இதே போல பண்ணாரியம்மன் கோவில், கோபி அடுத்த பாரியூர் அம்மன், ஈரோடு சின்ன மாரியம்மன், நடு மாரியம்மன், சூரம்பட்டி மாரியம்மன், வீரப்பன் சத்திரம் மாரியம்மன், கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், ஓங்காளியம்மன், பார்க் ரோடு எல்லை மாரியம்மன், ராஜாஜி புரம் மாகாளியம்மன், கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன் கோவில் உள்பட ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதில் ஏரானமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். #temple

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையேயான 14 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டிகள் இன்று (வெள்ளிகிழமை) முதல் 29 வரை மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறவுள்ளது. #Statejuniorcricket

    மொடக்குறிச்சி:

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையேயான 14 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டிகள் இன்று (வெள்ளிகிழமை) முதல் 29 வரை மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறவுள்ளது.

    திருவாரூர் மாவட்டதில் நடைபெறும் முதல் சுற்று லீக் போட்டியில் ஈரோடு மாவட்ட இளையோர் 14 வயதுக்குட்பட்டோர் அணி வீரர்கள், நாமக்கல் திருவாரூர் மற்றும் வேலூர் மாவட்ட அணிகளுடன் விளையாட உள்ளனர். இதற்கான ஈரோடு மாவட்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    கே.அபிஷேக் அணித்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் மேலும் எஸ் தரணீதர், கே.ராகுல், பி.ராகுல், எம்.ஹரிஸ் மணிகண்டன், ஏ.அபிஜித், எம்.ஹரிஹரன், எம்.நித்தின், ஜெ.அஸ்வத், ஜெ.ஸ்வனித், கி.மோகனரமேஷ் முகமது ரபான், எம்.பிரனேஷ்குமரன், டி.கே.சோமேஸ் கந்தன் கீதாஞ்சலி ஆகியோரும் அணி பயிற்சியாளராக வி.மோகன்ராஜும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இத்தகவலை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ஜாபர்ஆசிக்அலி தெரிவித்துள்ளார். #Statejuniorcricket

    சத்தியமங்கலத்தில் கல்லூரிக்கு பஸ் விட கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். #studentstruggle

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலத்தில்அரசு கலை கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 950 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    கல்லூரிக்கு செல்ல சரியாக பஸ் வசதி இல்லை என்று மாணவர்கள் கூறி வந்தனர். ஒரேயொரு பஸ் மட்டும் செல்கிறது.

    அந்த பஸ்சும் அத்தாணி ரோட்டில் இறக்கிவிட்டு சென்று விடுகிறதாம். மேலும் அங்கிருந்து கல்லூரிக்கு 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டுமாம்.

    சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து அரசு கலை கல்லூரிக்கு 4 கி.மீ. தூரம் உள்ளது.

    ஆகவே பஸ் நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி இன்று காலை கல்லூரி மாணவ- மாணவிகள் அத்தாணி ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பும் ஏற்பட்டது. இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் போலீசார் விரைந்தனர். மாணவ-மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு மாணவ-மாணவிகள் தங்களது கோரிக்கையை மனுவாக கொடுத்தனர்.

    மனுவை போலீசார் பெற்றுக் கொண்டு அதிகாரிகளிடம் கொடுத்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து மாணவ- மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். #studentstruggle

    வெள்ளகோவில் அருகே குடும்ப தகராறில் தூக்கு போட்டு ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #suicidecase
    முத்தூர்:

    வெள்ளகோவில் கச்சேரி வீதியை சேர்ந்தவர் கோபி (வயது 31). கர்நாடக மாநிலத்தில் பைனான்ஸ் நடத்தி வருகிறார். இவரது மனைவி சிவரஞ்சனி (22). இவர் வெள்ளகோவில் அருகே உள்ள அரசு பள்ளி ஒன்றில் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாகவும் இதனால் சிவரஞ்சனி வேதனையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    15 நாட்களாக வேலைக்கும் போகவில்லை. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த சிவரஞ்சனி தனது சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டின் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி சிவரஞ்சனியின் உடல் மீட்கப்பட்டது.

    பின்னர் பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்காதது வேதனை அளிக்கிறது என்று குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். #Farmers

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த விவசாயிகள் குறை கேட்பு நாள் கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என கேட்டு கொண்டனர்.

    மேலும் விவசாயி ஒருவர் பேசும் போது, “கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் தேதியை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். ஆனால் அதன் படி வாய்க்காலில் ஏன் தண்ணீர் திறக்கவில்லை? இதனால் எங்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது” என்று கூறினார்.

    இதற்கு பதில் அளித்து மாவட்ட கலெக்டர் பிரபாகர் கூறியதாவது.-

    கீழ்பவானி வாய்க்காலுக்கு முன் கூட்டியே தண்ணீர் திறந்தால் அது பாசனத்துக்கு சரியாக இருக்காது என்று ஒரு சில விவசாயிகள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த விசயத்தில் சில விவநாய சங்கத்தினர் உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்து வருகிறார்கள். இது சரியானது அல்ல.

    விவசாயிகளுக்கு தண்ணீர் திறப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாயிகளுக்கு தண்ணீர் தேவைப்படும் பொழுது தண்ணீர் திறக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Farmers

    ஆசனூர் அருகே வனக்காப்பாளரை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrestcase

    தாளவாடி:

    தலமலை வனச்சரகத்தில் வனக்காப்பாளராக பணி புரிபவர் சுதாகர் (வயது 36). இவர் நேற்று பெஜலட்டி கிராமத்துக்கு தலமலை வழியாக செல்லும் அரசு பஸ்சில் சென்றார்.

    திம்பம் பஸ் நிறுத்தத்தில் பெஜலட்டி கிராமத்தை சேர்ந்த முத்தன் (38) என்பவர் பஸ்சில் ஏறினார். அவர் சுதாகரை ஜாடையாக பேசிக் கொண்டு வந்தாராம்.

    பெஜலட்டி கிராமத்தில் சுதாகர் இறங்கி சென்றபோது அவரை தகாத வார்த்தைகளால் பேசிய முத்தன் கைகளால் தாக்கி பீர் பாட்டிலால் குத்த முயன்றார். உடனிருந்த வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் அவ்வழியே வந்த மாவோயிஸ்ட் தடுப்பு காவலர்கள் தடுத்தனர்.

    இது தொடர்பாக வனக்காப்பாளர் சுதாகர் ஆசனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து முத்தனை கைது செய்தார்.

    பின்னர் சத்தியமங்கலம் கோர்ட்டில் முத்தனை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ஆப்பக்கூடல் அருகே விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accidentcase

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள அத்தாணி குப்பாண்டபாளையத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 34).

    இவர் நேற்று இரவு 9 மணி அளவில் சரக்கு ஆடடோவில் ஆப்பக்கூடல் அருகே கரட்டூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென ஆட்டோ அவரது பிடியில் இருந்து நிலை தடுமாறி ரோட்டோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது.

    இதில் குருமூர்த்தி சம்பவ இடத்திலேயே ஆட்டோ இடிபாட்டில் சிக்கி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தால் இரவில் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் ஆப்பக்கூடல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விபத்தில் பலியான குருமூர்த்தி உடல் மீட்கப்பட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை நடக்கிறது.

    இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை வருகிறார்கள்.

    விபத்தில் பலியான குருமூர்த்திக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். #accidentcase

    சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. #DMKprotest
    ஈரோடு:

    ஈரோடு தெற்கு மாவட்ட தி.முக சார்பில் கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமை தாங்கினார்.

    தெற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான முத்துசாமி, மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி. பா. சச்சிதானந்தம், மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி. சந்திரகு மார், மாநகர செயலாளர் சுப்பிரமணியம்,

    மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் பழனிச்சாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.இ. பிரகாஷ், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கோட்டை ராமு, கோட்டை பகுதி செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ‘வஞ்சிக்காதே வஞ்சிக்காதே தமிழக அரசே வஞ்சிக்காதே’, ‘திரும்ப பெறு திரும்ப பெறு சொத்து வரி உயர்வை திரும்ப பெறு’ ஆகிய கோ‌ஷங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன.

    பின்னர் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வீட்டு வரி, வாடகை வீட்டு வரி, குப்பை வரி, தண்ணீர் வரி என இந்த அரசு வரலாறு காணாத அளவில் வரிகளை உயர்த்தி வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. இந்த அரசு கையாளாகாத அரசாக உள்ளது என்பதை இது காட்டுகிறது.

    உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் தி.மு.க. வெற்றி பெறும் என்ற பயம் காரணமாக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இந்த அரசு சாக்கு போக்கு சொல்லி வருகிறது.

    உள்ளாட்சி நிர்வாகம் முடங்கியதால் மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய ரூ.3 ஆயிரத்து 500 கோடி வரவில்லை. சொத்து வரி உயர்வை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம் அறிவித்ததும் சொத்து வரியை 50 சதவீதமாக குறைத்துள்ளனர்.
     
    ஆனால் சொத்து வரி உயர்வை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும். ஒரு டெண்டர் எடுத்தால் அதன் மதிப்பு ரூ. 5 கோடி என்றால் இவர்கள் ரூ. 7 கோடியாக கணக்கு காட்டி அதன்மூலம் ரூ. 2 கோடி கொள்ளை அடிக்கிறார்கள். இப்படி இந்த அரசு ஊழல் நிறைந்த அரசாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #DMKprotest

    சந்திர கிரகணத்தை யொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்கள் உள்பட அனைத்து கோவில்களும் முன் கூட்டியே நடைகள் சாத்தப்படுகிறது. #LunarEclipse
    ஈரோடு:

    இன்று இரவு சந்திர கிரகணம் நடக்க உள்ளது. இந்த சந்திர கிரகணம் நீண்ட நேரமாக நீடிக்கும் என்பதால் வரலாற்று சிறப்பு வாய்ந்த கிரகணமாக பார்க்க முடிகிறது.

    மேலும் இந்த கிரகணத்தை அனைவரும் தெளிவாக பார்க்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

    சந்திர கிரகணத்தை யொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்கள் உள்பட அனைத்து கோவில்களும் முன் கூட்டியே நடைகள் சாத்தப்படுகிறது.

    பண்ணாரியம்மன் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில், கோட்டை பெருமாள் மற்றும் ஈஸ்வரன் கோவில், திண்டல் வேலாயுதசாமி கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் இன்று இரவு 8.30 மணிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்ட கோவில்கள் பூட்டப்படுகிறது.

    மறுநாள் காலை 6 மணிக்கு கோவில்கள் சுத்தம் செய்யப்பட்டு புண்யாகம் செய்து மீண்டும் பூஜைகள் நடைபெறும். #LunarEclipse

    நாடு முழுவதும் லாரிகள் வேலை நிறுத்தம் இன்று 8-வது நாளாக நீடித்து வரும் நிலையில் ஈரோட்டிலிருந்து ரெயில்கள் மூலம் ஜவுளிகள் வெளி மாநிலத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. #LorryStrike
    ஈரோடு:

    நாடு முழுவதும் லாரிகள் வேலை நிறுத்தம் இன்று 8-வது நாளாக நீடித்து வருகிறது.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று வரை சுமார் ரூ 400 கோடி மேல் பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. இதில் ஜவுளிகள் மற்றும் மஞ்சள் மூட்டை மூட்டையாக குடோன்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    சுமை தூக்கும் தொழிலாளர்கள் கடந்த ஒரு வார காலமாக வேலையில்லாமல் தவித்து வருகிறார்கள். வேலை நிறுத்தம் எப்பொழுது வாபஸ் ஆகுமோ? என்று காத்திருக்கிறார்கள்.

    இந்த நிலையில் ஈரோட்டில் இருந்து ரெயில்கள் மூலம் ஜவுளிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு ரெயில் நிலைய பார்சல் அலுவலகம் முன் ஜவுளி பண்டல்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    ஈரோட்டிலிருந்து பெரும்பாலும் வெளிமாநிலங்களுக்கு இந்த ஜவுளிகள் அனுப்பப்பட்டு வருவதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். கர்நாடகா, ஆந்திரா மும்பை,ஹைதராபாத் விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளுக்கு ஜவுளி பண்டல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

    இதேபோல் கேரள மாநிலம் பாலக்காடு திருச்சூர், கொல்லம் ஆகிய பகுதிகளுக்கும் மேலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் ரெயில்கள் மூலம் ஜவுளிகள் அனுப்பப்பட்டு வருகிறது.

    ரெயில்கள் மூலம் சொற்ப அளவில்தான் ஜவுளிகள் மற்றும் இதர பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது அதேசமயம் மலைபோல் பல்வேறு பொருட்கள் தேங்கி உள்ளன. #LorryStrike

    ×