என் மலர்tooltip icon

    ஈரோடு

    சென்னிமலையில் பெண்ணை கடத்தி கொலை செய்த தொழிலாளி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், முகாசிபிடாரியூர் ஊராட்சி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் தனசேகர் (வயது 24). தொழிலாளி.

    இதே பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவரது மனைவி சிந்து (27). ஆறுமுகம் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். சிந்து சென்னிமலையில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றினார்.

    சிந்துவுக்கு தனசேகர் உறவு முறையில் தம்பி ஆவார். இந்த நிலையில் தனசேகரிடம் சிந்துவின் கணவர் ஆறுமுகம் குடும்ப செலவிற்கு ரூ. 5 ஆயிரம் பணம் கேட்டார்.

    நேற்று முன்தினம் ஆறுமுகத்தை தொடர்பு கொண்ட தனசேகர் தோப்பு பாளையத்தில் நண்பர் ஒருவர் பணம் தருவதாக சொல்லி இருக்கிறார். நீங்களோ அல்லது சிந்துவோ நேரில் வரவேண்டும் என கூறினார்.

    இதையடுத்து சிந்துவை அழைத்து செல்லுமாறு ஆறுமுகம் கூறினார். அதன் படி சிந்துவை மோட்டார் சைக்கிளில் தனசேகர் அழைத்துச் சென்றார். பின்னர் ஆறுமுகத்தை சந்தித்த தனசேகர் ரூ. 5 ஆயிரத்தை கொடுத்து விட்டு சிந்துவை பனியம்பள்ளி பிரிவில் பஸ் ஏற்றி விட்டேன் என கூறினார்.

    ஆனால் அதன்பின்னர் சிந்து வீட்டுக்கு வரவில்லை. அவரது செல் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து சந்தேகம் அடைந்த ஆறுமுகம் இது பற்றி தனசேகரை விசாரித்தார்.

    அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சென்னிமலை போலீஸ் நிலையத்தில் சிந்துவின் உறவினர்கள் தனசேகரனை ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்தபோது சிந்துவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

    மேலும் பிணத்தை ஊத்துக்குளி அருகே உள்ள அரசன்ன மலை வனப்பகுதியில் மறைத்து வைத்ததாக கூறினார். சிந்துவின் பிணத்தை அடையாளம் காட்டினார்.

    சம்பவ இடத்திற்கு பெருந்துறை டி.எஸ்.பி. ராஜ்குமார், சென்னிமலை ஆய்வாளர் செல்வராஜ், தடய அறிவியல் நிபுணர்கள் சென்றனர். அங்கு சிந்துவின் பிணம் கிடந்தது. பிணத்தின் மீது கற்கள் வைக்கப்பட்டு இருந்தது.

    பிணத்தை போலீசார் கைப்பற்றி தனசேகரை கைது செய்தனர். போலீசாரி டம் தனசேகர் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

    எனக்கு சரியான வேலை இல்லாததால் பண நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில் ஆறுமுகம் என்னிடம் பணம் கேட்டார். அதனால் ஒருவர் வட்டிக்கு பணம் கொடுப்பதாக கூறினேன்.

    அவர் கூறியபடி பணம் வாங்க சிந்துவை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றேன். அவளது கழுத்தில் கிடந்த நகையை பார்த்ததும் என் மனது மாறியது.

    விஜயமங்கலம் ரெயில் நிலையம் அருகே சென்ற போது அங்கிருந்த வனப்பகுதியில் சென்றேன். அப்போது பைக்கில் இருந்து இறங்கிய சிந்து இங்கே எதற்காக என்னை அழைத்து வந்தாய்? என கேட்டு தகராறு செய்தாள்.

    அப்போது அங்கே கிடந்த கல்லை எடுத்து சிந்துவின் மண்டையில் அடித்தேன். அப்போதும் அவள் உயிர் போகாததால், சிந்துவின் முந்தானையை எடுத்து கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்.

    பின்னர் அவள் கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலிக் கொடியை கழற்றி வந்து எனது உறவினர் பெயரில் தனியார் வங்கியில் ரூ. 60 ஆயிரத்திற்கு அடமானம் வைத்தேன். பின்னர் அதே பணத்தில் ரூ. 5 ஆயிரத்தை சிந்துவின் கணவரிடம் கொடுத்தேன்.

    எனக்கிருந்த கடன்களை முழுவதும் அடைத்தேன். சிந்துவின் கணவரிடம், சிந்துவை பஸ் ஏற்றி விட்டதாக பொய் சொன்னேன். எனக்கு ஏற்பட்ட பண நெருக்கடியால் தான் கொலை செய்தேன்.

    இவ்வாறு தனசேகர் கூறினார்.கொலையுண்ட சிந்துவுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    சிந்துவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிந்துவை கொன்றதாக தனசேகர் கூறி இருந்தாலும் அவர் மட்டும்தான் சிந்துவை கொன்றாரா? அல்லது பலருடன் சேர்ந்து இந்த கொலையை செய்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தனியார் பஸ் கண்டக்டரிடம் செல்போன் பறித்தவரை போலீசார் கைது செய்து திருடப்பட்ட செல்போன் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கஸ்பா பேட்டை அசோகபுரத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 37). தனியார் பஸ் கண்டக்டர்.

    இவர் நேற்று ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையத்திற்கு செல்லும் தனியார் பஸ்சில் ஏறினார். பஸ்சில் அவரது பின்னால் ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். நாச்சியார் தெருவில் சென்று கொண்டிருந்தபோது பிரபாகரன் பின்னால் நின்ற அந்த வாலிபர் திடீரென பிரபாகரன் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு ஓடினார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரபாகரன் திருடன்... திருடன்... என கத்தினார். அந்த வழியாக வந்த பொதுமக்கள் செல்போனை பறித்து சென்ற வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    இது குறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த வாலிபரை விசாரணைக்காக ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    விசாரணையில் அந்த வாலிபர் சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த பிரபு (28) என்பதும் பெயிண்டராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

    அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து திருடப்பட்ட செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு ரெயில் நிலையத்தில் எதிர்பாராத விதமாக சரக்கு ரெயில் மீது என்ஜின் திடீரென மோதி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. . #Train

    ஈரோடு:

    ஈரோடு வழியாக பெங்களூருக்கு ஆயில் ஏற்றி செல்லும் சரக்கு ரெயில் இன்று காலை ஈரோடு ரெயில் நிலையத்தை நெருங்கி வந்து கொண்டிருந்தது.

    அதே நேரத்தில் எதிர் திசையில் மற்றொரு தண்ட வாளத்தில் குட்ஷெட்டில் இருந்து பணிமனை நோக்கி ஒரு ரெயல் என்ஜின் இயக்கப்பட்டது.

    எதிர்பாராத விதமாக சரக்கு ரெயில் மீது என்ஜின் திடீரென மோதியது. இதில் பணிமனை நோக்கி சென்ற ரெயில் என்ஜின் தடம் புரண்டது. இதில் அந்த என்ஜினில் உள்ள ஏணிப்படிகள் உடைந்து சேதமடைந்தன.

    என்ஜினின் வலதுபுற மேல் பகுதி சேதம் அடைந்தது. ஆனால் பெங்களூரு நோக்கி சென்ற சரக்கு ரெயிலுக்கு எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை.

    ஆயிலை ஏற்றிக் கொண்டு சென்ற சரக்கு ரெயில் வேகமாக மோதி இருந்தால் பெரும் தீ விபத்து ஏற்பட்டு இருக்கும்.

    ஆனால் அதிர்ஷ்டவசமாக அது நடைபெறவில்லை.இது பற்றிய தகவல் கிடைத்ததும் ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்ட என்ஜினை மீண்டும் தண்டவாளத்தில் நிலை நிறுத்துவதற்காக ஹைட்ராலிக் ஜாக்கி என்னும் நவீன கருவி துணையுடன் பணியில் ஈடுபட்டனர்.

    விபத்து நடந்த இடத்துக்கு ரெயில்வே உயரதிகாரிகள் மற்றும் ரெயில்வே போலீசார் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்து காரணமாக ஈரோடு ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஈரோடு நகரில் பொது மக்கள் கண்விழித்திருந்து இந்த சந்திர கிரகணத்தை வீட்டின் மொட்டை மாடியில் நின்று பார்த்து ரசித்தனர். #Lunareclipse

    ஈரோடு:

    சந்திர கரகணம் நேற்று நள்ளிரவு தமிழ் நாடு முழுவதும் மிக நன்றாக தெரிந்தது. 21-ம் நூற்றாண்டின் மிக நீளமான சந்திர கிரகணமாக நேற்று அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஈரோடு, சத்தியமங்கலம், கோபி, பெருந்துறை, சென்னிமலை, கவுந்தப்பாடி, அந்தியூர், ஆப்பக்கூடல், புஞ்சைபுளியம்பட்டி, பவானி, பவானிசாகர், கொடுமுடி, சிவகிரி என அனைத்து பகுதிகளிலும் சந்திர கிரகணம் மிக தெளிவாக தெரிந்தது.

    நள்ளிரவு 12 மணிக்கு மேல் மெதுவாக பிடித்த கிரகணம் பிறகு போக போக சந்திரனை மெல்ல மெல்ல மறைத்தது. கருப்பு கலரில் மறைக்கப்பட்ட சந்திரன் பிறகு முழுவதும் மறைக்கப்பட்டு செம்மண் கலரில் தெரிந்தது.

    ஈரோடு நகரில் பல பொது மக்கள் கண்விழித்திருந்து இந்த சந்திர கிரகணத்தை வீட்டின் மொட்டை மாடியில் நின்று பார்த்து ரசித்தனர்.

    வெறும் கண்ணால் சந்திரகிரகணத்தை தாராளமாக பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பயமின்றி மக்கள் கிரகணம் பிடிப்பதை ஆர்வத்துடன் பார்த்தனர்.

    பள்ளி மாணவ- மாணவிகளும் நேற்று நள்ளிரவு வரை தூங்காமல் காத்திருந்து கிரகணத்தை பார்த்து மகிழ்ந்தனர்.  #Lunareclipse

    8 நாட்களாக நடைபெற்ற வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து ஈரோட்டில் லாரிகள் ஓடத் தொடங்கியது. #LorryStrike

    ஈரோடு:

    பெட்ரோல் டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவந்து விலையை குறைக்க வேண்டும் நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டிற்கு ஒருமுறை சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20ஆம் தேதி முதல் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெற்றது.

    எட்டாவது நாளாக நேற்று லாரிகள் வேலை நிறுத்தம் நீடித்த நிலையில் மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டு வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனையடுத்து லாரிகள் போக்குவரத்து வழக்கம் போல் இயங்கத் தொடங்கின.

    ஈரோட்டில் தேங்கி கிடந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளி மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை வடமாநிலங்களுக்கு அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கிடங்குகளில் அதிகம் இருப்பதால் இவற்றை முழுமையாக அனுப்புவதற்கு சில தினங்கள் ஆகும் என டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

    லாரிகள் வேலை நிறுத்தத்தால் முடங்கிக் கிடந்த தொழில்களும் மீண்டும் புத்துணர்வு பெறத் தொடங்கியுள்ளன. வேலை இழந்த சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கிடங்குகளில் தேங்கிக் கிடந்த சரக்குகளை பார்சல் அலுவலகங்களுக்கு மாட்டு வண்டிகள் மூலமாக அனுப்பி வைக்கின்றனர். லாரிகளில் ஏற்றப்பட்டு தற்போது அனுப்பும் பணியையும் துரிதகதியில் நடைபெற்று வருகிறது. ஆனாலும் கடந்த ஒரு வார காலமாக பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்து இருப்பதால் இவற்றை முழுமையாக அனுப்பி இயல்பு நிலைக்கு திரும்ப சில தினங்கள் ஆகும் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். #LorryStrike

    ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் பாதாள சாக்கடை பணிகள் முடிக்கப்பட்ட பகுதியில் திடீர் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த இடம் மிகவும் அபாயகரமாக காட்சி அளிக்கிறது. #Ditch

    ஈரோடு:

    ஈரோடு மாநகர பகுதி களில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி இப்போது உச்சக்கட்டத்தில் நடந்து வருகிறது.

    இதனால் பல இடங்களில் தோண்டப்பட்ட இடங்களில் ரோடுகள் போடப்பட்டும் பல இடங்களில் ரோடுகள் போடப்படாமலும் உள்ளது.

    இந்த நிலையில் ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் பாதாள சாக்கடை பணிகள் முடிக்கப்பட்ட பகுதியில் திடீர் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த இடம் மிகவும் அபாயகரமாக காட்சி அளிக்கிறது.

    அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் பயந்து செல்ல வேண்டியதுள்ளது. பகல் நேரத்தி லாவது பார்த்து போய் விடலாம். ஆனால் இரவு நேரத்தில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்றால் சரி... அதே சமயம் வெளியூரை சேர்ந்தவர்களாக இருந்தால் தெரியாமல் பள்ளத்தில் விழுந்து விபரீதமாகி விடும்.

    ஆகவே இந்த திடீர் பள்ளத்தை மூடி மக்களின் பயத்தை போக்க வேண்டும். தாமதிக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண் டும் எனவும் கேட்டு கொண்டுள்ளனர்.

    அபாய பள்ளம் உடனடியாக மூடப்படுமா?. #Ditch

    ஈரோடு மாவட்டத்தில் தீவிர காச நோய் கண்டுபிடிப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தீவிர காச நோய் கண்டுபிடிப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. மேலும் இது தொடர்பாக சிறப்பு வாகனம் மூலம் ஈரோடு மாவட்டம் முழுவதும் இலவச காசநோய் பரிசோதனை செய்யப்பட உள்ளது.

    இதற்காக சிறப்பு வாகனம் வந்துள்ளது. இந்த வாகனம் மூலம் வரும் 30-ந் தேதி வரை ஆகஸ்ட் 4-ந் தேதி வரை பல்வேறு ஊர்களுக்கு சென்று இலவச பரிசோதனை செய்யப்பட உள்ளது.

    ஈரோட்டில் வரும் 30-ந் தேதி ஓடைப்பள்ளம், கிருஷ் ணம்பாளையம் காலனி, ராஜாஜிபுரம், செங்குட்டுவன் தெருவில் பரிசோதனை முகாம் நடக்கிறது.

    அதே போல் அன்று சித்தோடு அம்பேத்கார் நகர், நாராயண வலசு, கஸ்பாபேட்டை, லக்காபுரத்திலும் இலவச பரிசோதனை நடக்கிறது.

    31-ந் தேதி மொடக்குறிச்சி, சிவகிரி பகுதயிலும், 1-ந் தேதி திங்களூர் மற்றும் சென்னிமலை, 2-ந் தேதி ஜம்பை குருவரெட்டியூர், அத்தாணி பகுதியிலும், 3-ந் தேதி டி.என்.பாளையம், உக்கரம், பு.புளியம்பட்டி பகுதியிலும் நடக்கிறது. 4-ந் தேதி நம்பியூர் மற்றும் சிறுவலூர் பகுதிகளிலும் இலவச காசநோய் பரிசோதனை நடக்கிறது.

    ஈரோடு மாவட்ட கலெக்டர் இதை தெரிவித்தார்.

    ஈரோடு அருகே ஓடும் பஸ்சில் செல்போன் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Robberycase

    ஈரோடு:

    திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 19). அரவிந்த இன்று காலை 7 மணி அளவில் தனது நண்பருடன் ஈரோடு பஸ் நிலையத்திற்கு வந்தார்

    ஈரோடு பஸ் நிலையத்திலிருந்து பன்னீர்செல்வம் பார்க்கிற்கு செல்லும் அரசு டவுன் பஸ்சில் ஏறினர் பஸ் சவிதா வளைவில் திரும்பியபோது அரவிந்த் பின்னால் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென அரவிந்த் பையில் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு ஓடினார்

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அரவிந்த் மற்றும் அவரது நண்பர் திருடன் திருடன் என கத்தினர் உடனடியாக பஸ்சை டிரைவர் நிறுத்தினார் தப்பி ஓடிய வாலிபரை அந்த வழியாக வந்த பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

    இதுகுறித்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வாலிபரை அழைத்து கொண்டு டவுன் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர் போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் பெயர் சிவானந்தன் (வயது 27) என்பதும் சேலம் மேட்டூர் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது .

    அவரிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிவா ஆனந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    நம்பியூர் அருகே பிரிந்து சென்ற காதல் மனைவியிடம் விஷம் குடித்துவிட்டதாக கூறிய கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள பழனி கவுண்டன்பாளையத்தில் வசித்தவர் பிரபாகர் (வயது 30). சொந்த ஊர் நம்பியூர் அடுத்த காந்திபுரம் வடக்கு வீதியாகும்.

    இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே கம்பெனியில் வேலை பார்த்த சர்மிளா தேவி என்ற பெண்ணை காலித்தார். பிறகு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

    இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிரபாகருக்கு குடிபழக்கம் இருந்ததாம். குடித்து விட்டு வீட்டுக்கு வரும் போது இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதில் கணவருடன் கோபித்து கொண்டு மனைவி சர்மிளா தேவி பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவார். பிறகு அவரிடம் இனி நான் குடிக்க மாட்டேன் என்று சமாதானம் கூறி அழைத்து வருவாராம்.

    இதே போல் மீண்டும் ஏற்பட்ட தகராறில் மனைவி கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    மனைவி பிரிந்து சென்றதால் வேதனையுடன் காணப்பட்ட பிரபாகர் கடந்த 20-ந் தேதி வீட்டில் மதுவுடன் வி‌ஷம் கலந்து குடித்து விட்டார்.

    வி‌ஷம் குடித்த அவர் போனில் மனைவியிடம் தான் வி‌ஷம் குடித்து விட்டதாக கூறினார்.

    உடனே அவரும் உறவினர்களும் ஓடி வந்து வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்த பிரபாகரை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பிரபாகர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    தேசிய மருத்துவ கமி‌ஷன் மசோதாவை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் 750 தனியார் ஆஸ்பத்திரிகளில் சுமார் 3 ஆயிரம் டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    ஈரோடு:

    தேசிய மருத்துவ கமி‌ஷன் மசோதா இன்று (சனிக்கிழமை) பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

    இந்த மசோதாவில் மக்களையும், மருத்துவ துறையையும் பாதிக்க கூடிய பல்வேறு அம்சங்கள் உள்ளன. இதை கண்டித்து ஏற்கனவே போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

    இன்று தாக்கல் செய்யப்படும் மசோவை கண்டித்து தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளை தேர்வு தலைவர் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.

    இது குறித்து அவர் மேலும் கூறியதாவது.-

    இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு மத்திய அரசால் தேர்வு செய்யப்படும், 25 பேர் கொண்ட தேசிய மருத்துவ கமி‌ஷன் குழு அமைக்கப்படும்.

    இக்குழுவில் 5 டாக்டர்களும், மருத்துவத் துறையை சாராதவர்களும் இடம் பெறுவர். முன்புள்ள அமைப்பில், மாநிலத்துக்கு பலர் என மொத்தம் 300 பேர் உறுப்பினராக இருந்தனர். மருத்துவம் சாராதவர்கள் மருத்துவமனைகள், டாக்டர்கள், மருத்துவ கல்லூரிகளை கண்காணிப்பர் என்பது சாத்தியமற்றது.

    இது போன்ற குழுக்களால், தரமற்ற மருத்துவ கல்லூரிகள், மாணவர்கள் சேர்க்கையில் தவறுகள், தரமற்ற மருத்துவர்கள் உருவாக வழிவகுக்கும்.

    அலோபதி மருத்துவர்கள் அல்லாத ஹோமியோபதி, சித்தா, யுனானி, ஆயுர்வேதிக் மருத்துவர்களுக்கு ஆறு மாத பயிற்சி வழங்கி அலோபதி சிகிச்சை வழங்க திட்டமிட்டுள்ளனர். இதனால் போலி மருத்துவர்கள் வருவாக வாய்ப்பு உள்ளது.

    மக்களுக்கான சிகிச்சையிலும் பிரச்சனை ஏற்படும். எனவே இந்த மசோதாவை கண்டித்து இன்று அகில இந்திய அளவில் ஒரு நாள் தனியார் ஆஸ்பத்திரிகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வேலை நிறுத்த போராட்டத்தில் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள 750-க்கும் மேற்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகள் பங்கேற்று உள்ளன. சுமார் 3 ஆயிரம் டாக்டர்கள் பணிக்கு செல்லவில்லை.

    இதனால் பல இடங்களில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். எனினும் அவசரக்கால அறுவை சிகிச்சைகள், மகப்பேறு சம்மந்தமான அறுவை சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தது.

    தனியார் ஆஸ்பத்திரிகள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக வழக்கத்துக்கு மாறாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. #DoctorsStrike

    100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தொழிலாளர்கள் குற்றச்சாட்டு கூறினர். #Ruralworkplan

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒன்றியத்துக் குட்பட்ட 10 பஞ்சாயத்துகள் உள்ளன. இங்கு மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர் வேலை பார்த்து வந்தனர்.

    ஆனால் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இவர்களுக்கு பணி வழங்கவில்லையாம்.

    இது தொடர்பாக 100 நாள் திட்ட தொழிலாளர்கள் கூறும் போது, ‘‘எங்களுக்கு வேலை கொடுக்காமல் வேலைக்கு சென்றது போல் பலர் வங்கி கணக்கில் பணம் வரவாகி உள்ளது. இது எப்படி என்று தெரியவில்லை. பின்னர் தொழிலாளர்களுக்கு நூறோ... இரு நூறோ... கொடுத்து விட்டு மீதி பணத்தை அதிகாரிகளே வாங்கி கொண்டனர்’’ என்று புகார் கூறினர்.

    மேலும் இது பற்றி தொழிலாளர்கள் அதிகாரிகளிடம் கேட்ட போது, தொழிலாளர்கள் கணக்கில் பணம் எடுக்கப்பட்டு ஜே.சி.பி.க்கு கொடுக்கப்பட்டது என்று அதிகாரிகள் கூறினார்களாம்.

    எனவே வேலையே தராமல் எப்படி அரசு பணத்தை தொழிலாளர்கள் கணக்கில் செலுத்தப்பட்டது? இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் தொழிலாளர்கள் குற்றச்சாட்டு கூறினர்.

    இது தொடர்பாக சுமார் 500 தொழிலாளர்கள் பவானி சாகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரத்துடன் திரண்டு தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    இதனால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம் சில தொழிலாளர் பிரதிநதிகளுடன் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு கூறினார். #Ruralworkplan

    பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்னும் 3 நாட்களில் 100 அடியை எட்டி விடும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். #BhavaniSagarDam
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், லட்சக்கணக்கான விவசாய விளைநிலங்களின் ஆதாரமாக விளங்கி வருவது பவானிசாகர் அணையாகும். அணையின் மொத்த கொள்ளளவு 120 அடியாகும். இதில் சேறும், சகதியும் போக 105 அடிக்கு தண்ணீர் சேமித்து வைக்க முடியும்.

    கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலை பகுதியில் மிதமான மழை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

    இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகளவில் வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 27 அடி உயர்ந்து உள்ளது. இன்னும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இன்று காலை 9 மணி நேர நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 97.02 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5,142 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து பாசனத்திற்காக தடப்பள்ளி-அரக்கன் கோட்டை வாய்க்காலுக்கு வினாடிக்கு 850 கனஅடியும், காலிங்கராயன் வாய்க்காலுக்கு 650 கனஅடியும், குடிநீருக்காக கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி நீரும் திறந்து விடப்படுகிறது.

    பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்னும் 3 நாட்களில் 100 அடியை எட்டி விடும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். #BhavaniSagarDam

    ×