என் மலர்tooltip icon

    ஈரோடு

    சென்னையில் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. மீண்டும் அரசுக்கு எதிராக 8 எம்.எல்.ஏ.க்களுடன் திடீர் ஆலோசனை நடத்தி உள்ளார். இதனால் கட்சியில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. #ADMK #ThoppuVenkatachalam #EdappadiPalaniswami
    ஈரோடு:

    தமிழக முன்னாள் அமைச்சராக இருந்தவர் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம். பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள இவர் சுற்றுப்புற சூழல்துறை அமைச்சராக இருந்தார்.

    இப்போது ஈரோடு மாவட்டம் பவானி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள கே.சி. கருப்பணன் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக உள்ளார்.

    முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு கொங்கு மண்டலத்தில் கட்சி பிளவுபடாமல் இருப்பதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த கோபி எம்.எல்.ஏ. கே.ஏ. செங்கோட்டையனுக்கு அமைச்சரவையில் முக்கிய பதவி (பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்) கொடுக்கப்பட்டது.

    செங்கோட்டையனுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுத்ததில் இருந்து கொங்கு மண்டலத்தில் மற்றொரு முக்கிய நபராக விளங்கும் தோப்பு வெங்கடாச்சலத்துக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    இதனால் அரசுக்கு நெருக்கடி கொடுக்க தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. தினகரன் அணி பக்கம் தாவினார். இவரும் முன்னாள் அமைச்சர் கரூரை சேர்ந்த செந்தில் பாலாஜியும் இணைந்து அரசுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டபோதுதான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோர் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ.வை அழைத்து உங்களுக்கு மீண்டும் அமைச்சர் பதவி அல்லது கட்சியில் பெரிய பதவி தருகிறோம் என்று கூறி சமாதானப்படுத்தினர்.

    இந்த சமாதானத்தை ஏற்றுக்கொண்ட தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. மீண்டும் எடப்பாடி அணி பக்கம் தாவினார். அவருக்கு சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு தலைவர் பதவி வழங்கப்பட்டது.

    இருந்த போதிலும் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 தடவை நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டபோது தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. அதில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.

    அதே சமயம் ஈரோடு மாவட்ட எல்லையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும்போதெல்லாம் அவரை வரவேற்க தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. தவறவில்லை.

    ஈரோடு மாவட்ட அமைச்சர்கள் (செங்கோட்டையன், கருப்பணன்) உள்ளூர் எம்.எல்.ஏ.க்களை மதிப்பதில்லை. அவர்கள் பரிந்துரையை ஏற்பது இல்லை என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தினார்.


    சென்னையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள்- எம்.எல்.ஏ.க்களை அழைத்து கூட்டம் நடத்தும் போதெல்லாம் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ.வும் தவறாமல் கலந்து கொள்வார்.

    ஆனால் தனக்கென்று ஒரு வட்டாரத்தை வைத்துக் கொண்டு சில எம்.எல்ஏ.க்களுடன் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. ரகசிய கூட்டமும் நடத்தி வந்தார்.

    இப்படி அடிக்கடி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வரும் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ.வுக்கு நேற்று கட்சியில் புதிய பதவியும் கொடுக்கப்பட்டது. ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    எனினும் அவர் திருப்தி அடைந்ததாக தெரியவில்லை என்றே கூறப்படுகிறது. சென்னையில் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. மீண்டும் அரசுக்கு எதிராக 8 எம்.எல்.ஏ.க்களுடன் திடீர் ஆலோசனை நடத்தி உள்ளார்.

    இவர்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய விவகாரம் கட்சியில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு விவகாரம் உள்ள நிலையில் இப்போது தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. தலைமையில் 8 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி இருப்பது அ.தி.மு.க.வில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.

    இது குறித்தும் 8 எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நீங்கள் தனியாக நடத்தி உள்ளீர்களே? என்றும் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ.விடம் தொடர்பு கொண்டு கேட்டபோது சிரித்தார். எம்.எல்.ஏ.க்களுடன் கூட்டம் நடத்தியதை அவர் மறுக்காமல் மழுப்பினார்.

    அவர் கூறும்போது, ‘‘அமைச்சர் பதவி வேண்டும் என்று எனக்கு விருப்பம் இல்லை. எனக்கு அது முக்கியமும் அல்ல. அமைச்சர் பதவி, மாவட்ட செயலாளர் பதவி என பல முக்கிய பதவிகளை ஏற்கனவே மறைந்த அம்மா எனக்கு கொடுத்து விட்டார்.

    எம்.எல்.ஏ.க்களை மாவட்ட அமைச்சர்கள் மதிக்க வேண்டும். அவர்களின் பரிந்துரையை ஏற்க வேண்டும். அனைத்து தொகுதிகளையும் சமமாக பார்க்க வேண்டும் என்பது தான் என் கருத்து’’ என்று கூறி முடித்துக்கொண்டார்.  #ADMK #ThoppuVenkatachalam #EdappadiPalaniswami
    ஈரோட்டில் கடந்த 2 வருடமாக கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு, சூரம்பட்டி வலசு பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி மீனாம்மாள்(வயது38). தர்மராஜ் டெய்லராக உள்ளார்.

    இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2 வருடமாக மீனாம்மாள் ஈரோடு, அல்-அமீன் நகர், தோட்டம்பட்டியில் உள்ள தங்கை வீட்டில் வசித்து வந்தார்.

    கணவன்-மனைவி பிரச்சனை குறித்து இருவீட்டாரும் சமரசம் செய்ய முயன்றனர். எனினும் சுமூக முடிவு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் மீனாம்மாள் சில நாட்களாகவே மனவேதனையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று மீனாம்மாள் தற்கொலை செய்ய முடிவு எடுத்து வி‌ஷ மாத்திரையை தின்று விட்டார். இதில் அவர் மயங்கினார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மீனாம்மாளை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் மீனாம்மான் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருமணம் முடிந்ததும் மணமக்களை காரில் அழைத்து செல்வது வழக்கம். ஆனால் கோபியில் நடந்த திருமணத்திலோ மணமக்கள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வெள்ளாள பாளையத்தை சேர்ந்தவர் சரவணபவன். இவரது மகன் கவி அரவிந்த். பட்டதாரி வாலிபர்.

    இதே போல் கோபி அடுத்த எரங்காட்டூரை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகள் பிரவீனா.

    கவிஅரவிந்துக்கும் பிரவீனாவுக்கும் இருவரது வீட்டிலும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன் படி இவர்களின் திருமணம் இன்று காலை கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் நடந்தது.

    திருமணத்தில் இருவரது வீட்டு உறவினர்களும் திரளாக கலந்து கொண்டனர். திருமணம் முடிந்ததும் மணமக்களை காரில் அழைத்து செல்வார்கள். ஆனால் இங்கு நடந்த திருமணத்திலோ மணமக்கள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.


    முன்னாள் 2 மாட்டு வண்டிகள் செல்ல அதன் பின்னால் மணமக்கள் சென்ற மாட்டு வண்டி சென்றது.

    அவர்களது பின்னால் மேலும் 10 மாட்டு வண்டிகளில் உறவினர்கள் சென்றனர்.

    கார்கள் புடைசூழ மணமக்கள் செல்லும் இடத்தில் மாட்டு வண்டிகள் மூலம் புடை சூழ மணமக்கள் சென்ற காட்சி பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.

    இது குறித்து மணமக்களின் உறவினர்கள் கூறும் போது, ‘‘நாட்டு மாடுகள் நமது பாரம்பரிய சொத்து இதை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தான் இந்த ஊர்வலம்’’ என்று கூறினர்.
    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை பகுதியில் கடந்த 2 நாட்களாக இரவும் பகலும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது.

    இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டால் எந்த வேலையையும் முழுமையாக செய்ய முடியவில்லை.பள்ளி மாணவர்கள் எழுத படிக்க முடியவில்லை.கொசுக்கடியில் இரவு நேரங்களில் குழந்தைகள் தூங்கமுடியவில்லை எனவும் தொழில் மற்றும் விவசாயம் பாதிக்க பட்டு உள்ளது.

    எனவே உடனடியாக அறிவிக்கப்படாத மின்வெட்டை சீர் செய்து தடையில்லா மின் வினியோகம் வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பவானிசாகர் தொகுதி அதிமுக எம்எல்ஏவுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் வீட்டை விட்டு சென்றதால் வேறு வரன் பார்த்து 2 மாதத்தில் திருமணம் செய்ய எம்எல்ஏ வீட்டார் முடிவு செய்துள்ளனர். #ADMK #EswaranMLA
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஈஸ்வரன் (வயது 43).

    இவருக்கும் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள பனையம் பள்ளியை சேர்ந்த சந்தியா (23) என்ற பட்டாதாரி பெண்ணுக்கும் இன்று (புதன்கிழமை) சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியம்மன் கோவிலில் திருமணம் நடக்க இருந்தது.

    திருமணம் நடக்க 9 நாட்கள் இருந்த நிலையில் மணமகள் சந்தியா திடீரென மாயமானார். அக்கா வீட்டுக்கு போவதாக கூறி விட்டு சென்றவர் மாயமாகி விட்டார். நண்பருடன் சென்று விட்டதாகவும் அவரை மீட்டு தர வேண்டும் என அவரது தாயாரே கடத்தூர் போலீசில் புகார் செய்தார்.

    எம்.எல்.ஏ.வுடனான திருமணம் பிடிக்காத மணமகள் சந்தியா மணப்பாறையில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. போலீசார் மணப்பாறை சென்று புதுப்பெண் சந்தியாவை மீட்டு வந்தனர்.

    அப்போது சந்தியா கூறும் போது, ‘‘எம்.எல்.ஏ.வுக்கு வயது அதிகம் என்பதால் எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. பெற்றோர் என்னை கட்டாயப்படுத்தியதால் வீட்டை விட்டு சென்றேன்’’ என வாக்குமூலத்தில் கூறி இருந்தார்.

    சந்தியா

    இதையொட்டி திருமணம் நிச்சயிக்கப்பட்ட அதே நாளில் (இன்று) எப்படியும் வேறு ஒரு நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்ய எம்.எல்.ஏ. மற்றும் அவரது உறவினர்களும் தீவிரமாக இருந்தனர்.

    திருமணத்துக்கு தமிழக முதல்- அமைச்சர், துணை முதல்- அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ள இருந்ததால் பெண் பார்க்கும் படலம் முடுக்கி விடப்பட்டது. ஆனால் நாட்கள் மிகவும் குறைவாக இருந்ததால் பெண் பார்த்து முடிவு செய்ய தாமதம் ஏற்பட்டது.

    எப்படியும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளில் நடத்தி காட்ட வேண்டும் என்ற எம்.எல்.ஏ. தரப்பினர் முயற்சி நடக்கவில்லை. இன்று ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வுக்கு திருமணம் நடக்கவில்லை.

    இன்னும் 2 மாதத்தில் அதாவது ஐப்பசி மாதத்தில் நல்ல வரன் பார்த்து எம்.எல்.ஏ.வுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். #ADMK #EswaranMLA
    ஈரோடு சாஸ்திரி நகரில் பட்டாசு பண்டல்களை வாகனங்களில் இருந்து இறக்கியபோது பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 3 பேர் உயிரிழந்தனர். #FirecrackerExplosion
    ஈரோடு:

    ஈரோடு சாஸ்திரி நகர் வளையகார வீதியை சேர்ந்தவர் சுகுமார். இவரது மகன் கார்த்திக் (வயது 30).

    இவர்களுக்கு சொந்தமான மளிகை கடை வளையகார வீதியில் உள்ளது. இந்த கடையை ஜாஸ்மின் வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.

    கடையின் உரிமையாளர் சுகுமாரும் அவரது மகன் கார்த்திக்கும் தீபாவளியையொட்டி மளிகை கடை முன் கட்டில் போட்டு பட்டாசு விற்று வந்தார்கள்.

    இந்தாண்டும் பட்டாசு வியாபாரம் செய்ய பட்டாசுகளை வரவழைத்தனர். இன்று காலை 6 மணியளவில் மினி லோடு ஆட்டோவில் 15 மூட்டைகள் தீபாவளி பட்டாசுகள் வந்து இறங்கியது. ஆட்டோவில் வந்தவரும் கார்த்திக்கும் பட்டாசுகளை கடைமுன் இறக்கி வைத்து கொண்டிருந்தனர். 13 மூட்டைகளை இறக்கி வைத்துவிட்டனர்.

    மீதி உள்ள 2 மூட்டைகளை அவர்கள் இறக்கியபோது திடீரென பட்டாசுகள் வெடித்தது. மூட்டைக்குள் இருந்தது கல்வெடி என்று கூறப்படுகிறது.

    இதனால் அது வெடித்த சத்தம் சுமார் 1 கி.மீட்டர் தூரத்துக்கு பயங்கரமாக கேட்டது. அந்த பகுதி வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

    இந்த வெடி விபத்தில் கடை உரிமையாளர் கார்த்திக் மற்றும் பட்டாசுகளை இறக்கி வைத்த ஊழியர் ஆட்டோவில் இருந்த டிரைவர் ஆகிய 3 பேரும் உடல் சிதறி பலியானார்கள்.

    அவர்களின் உடல் சிதறி 100 அடி தூரத்தில் போய் விழுந்தது. கார்த்திக்கை தவிர பலியான 2 பேரின் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர்.

    இந்த வெடி விபத்தில் அப்பகுதியில் உள்ள 5 வீடுகளும் இடிந்து விழுந்தது. 6 மணி என்பதால் அனைவரும் எழுந்து வெளியே வந்துவிட்டனர். அதிகாலையில் சம்பவம் நடந்திருந்தால் மேலும் பலர் உயிரிழந்து இருக்க கூடும்.

    மேலும் வெடி விபத்து அதிர்வால் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. வெடிவிபத்து நடந்தபோது நில அதிர்வு ஏற்பட்டது போல் இருந்தது. #FirecrackerExplosion
    திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    பவானிசாகர்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. இந்த வழியாக தினமும் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கும், அங்கிருந்து தமிழகத்துக்கும் பஸ், கார், லாரி, வேன் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. குறுகிய வளைவுகளை கொண்டதால் அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் பாரம் தாங்காமல் வளைவில் திரும்ப முடியாமல் நின்று விடுகின்றன. மேலும் ஒரு சில நேரம் கவிழ்ந்து விடுகின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

    இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு பிஸ்கட் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை தஞ்சாவூரை சேர்ந்த திருமாறன் (வயது 45) என்பவர் ஓட்டினார். திம்பம் மலைப்பாதை 27-வது கொண்டை ஊசி வளைவில் வந்தபோது திடீரென லாரி நிலைதடுமாறி நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த பிஸ்கட் பாக்கெட்டுகள் ரோட்டோரம் விழுந்து சிதறின.

    லாரி பல்டி அடித்தபடி தடுப்புச்சுவரை தாண்டி 25-வது கொண்டை ஊசி வளைவுக்கு வந்து கிடந்தது. இந்த விபத்தில் டிரைவர் திருமாறன் படுகாயம் அடைந்தார். லாரி கவிழ்ந்ததில் டேங்கரில் இருந்து டீசல் கொட்டி ரோட்டில் ஓடியது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலத்தில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு மாலை 3 மணி அளவில் லாரியை மீட்கும் பணி நடந்தது. இதனால் திம்பம் மலைப்பாதை வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. ரோட்டின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சத்தியமங்கலத்தில் இருந்து சென்ற வாகனங்கள் பண்ணாரி சோதனைச்சாவடியிலும், கர்நாடகத்தில் இருந்து வந்த வாகனங்கள் ஆசனூர் சோதனைச்சாவடியிலும் தடுத்து நிறுத்தப்பட்டன. ஆசனூர் போலீசார் வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    மாலை 5 மணி அளவில் லாரி மீட்கப்பட்டு தூக்கி நிறுத்தப்பட்டது. அதன்பின்னரே லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதைத்தொடர்ந்து போக்குவரத்து நிலமை சீராகியது.

    திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்ததால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காயம் அடைந்த டிரைவர் திருமாறன் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். 
    ஈரோடு மாவட்டத்தில் பலத்த மழை பெய்த போது இடிதாக்கி பெண் பலியானார். அவரது உடல் மீட்கப்பட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வறுத்தெடுத்தது. சுட்டெரித்த வெயிலால் வெளியே நடமாட முடியாத நிலை இருந்தது.

    வெயிலால் வாட்டி எடுத்த மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் நேற்று ஈரோடு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

    ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்தது. மாவட்டத்தில் அதிக பட்சமாக சத்தியமங்கலம் பகுதியில் 42 மி.மீ.மழை கொட்டியது.

    இந்த மழையால் ரோட்டில் தண்ணீர் தேங்கி நின்றது. தாழ்வான பகுதியில் மழை நீர் ஓடியது.

    இதே போல் பவானியில் 38 மி.மீ.மழை பெய்தது. இந்த மழையால் பவானி மற்றும் சுற்று வட்டார பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

    மேலும் கவுந்தப்பாடி, கோபி, ஒலப்பாளையம், சிவகிரி ஆகிய பகுதிகளிலும் ஓரளவு கனமழை பெய்தது.

    மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த இந்த மழையால் வெயிலின் ஆதிக்கம் குறைந்திருந்தது.

    பவானிசாகர் அருகே பசுவபாளையத்தில் உள்ள தோட்டத்தில் அந்த பகுதியை சேர்ந்த பிரியா (வயது 30) என்ற பெண் இரவு 8 மணி அளவில் மல்லிகை பூ பறித்துக் கொண்டு இருந்தார். அப்போது லேசாக மழை பெய்தது. தொடர்ந்து அந்த பெண் பூ பறித்துக் கொண்டிருந்தார்.

    இந்த நிலையில் ஒரு இடி பிரியாவை தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். அவர் உடல் மீட்கப்பட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    வரும் பொங்கலுக்குள் அனைத்து பள்ளிகளும் தூய்மை செய்து வெள்ளை அடிக்கப்படும் என்று ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan
    ஈரோடு:

    ஈரோட்டில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    தொடக்கப்பள்ளி நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் தேவையான நிதி உதவியை நாங்கள் செய்து வருகிறோம் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற அந்த நிதிகளை வைத்துக்கொண்டு ஒவ்வொருவரும் தலா 30,000, 50,000 என அந்தப் பள்ளிகளின் நிலைமைக்கு ஏற்ப உயர்த்தி வருகிறோம்.

    அப்படி உயர்த்தி தொடரும் நிதியை வைத்துக் கொண்டு துப்புரவு பணியாளர்களை தற்காலிகமாக நியமித்துக்கொள்ள அந்தந்த பள்ளிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது எதிர்காலத்தில் பள்ளி கழிப்பிடங்கள் சுத்தம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்.

    மாணவர்களின் கழிப்பிடம் சுகாதாரமாக இருக்க இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் 57 ஆயிரம் பள்ளிகள் உள்ளன அதில் 82 லட்சம் குழந்தைகள் படிக்கின்றனர். எனவே பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை உடனடியாக செய்துவிட முடியாது படிப்படியாகத்தான் செய்ய முடியும்.



    பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை குறித்து 4 நாட்கள் முன்பு முதல்வர் ஒரு கோப்பில் கையெழுத்திட்டுள்ளார். எந்த பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது என்பதை உணர்ந்து அதற்காக ஏறத்தாழ தமிழகம் முழுவதும் 2000 ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பகுதி நேர ஆசிரியர்களாக ரூ 7,500 சம்பளத்தில் நியமித்துக் கொள்ளலாம் என்று ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    அதற்கான பணிகளில் முதன்மைக் கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர் மேற்கொண்டு வருகின்றனர். எனவே பள்ளிகளில் காலிப் பணியிடம் என்று எதிர்காலத்தில் இருக்காது. இது மட்டுமல்ல மகப்பேறுக்கு 9 மாத விடுமுறைக்கு செல்லும் பெண் ஆசிரியைகளுக்கு பதிலாக அந்த விடுப்பில் கூட தற்காலிகமாக இந்த ஆசிரியர்களை நியமித்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பள்ளிகளை சுத்தம் செய்வதற்கு ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வரும் பொங்கலுக்குள் அனைத்துப் பள்ளிகளிலும் தூய்மை செய்யும் வகையில் வெள்ளையடித்து தரப்படும். இதற்காக முதல்வர் ஆணையிட்டுள்ளார். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்.

    அனைவருக்கும் கல்வி திட்டத்தில் மத்திய அரசு வழங்க வேண்டிய ஆயிரத்து 1500 கோடி ரூபாயில் மத்திய அரசு இதுவரை வழங்கியுள்ள 102 கோடி ரூபாய் போக மீதியுள்ள தொகை பெறுவதற்காக நான் மத்திய மந்திரியை சந்திக்க உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterSengottaiyan

    கொடிவேரி அணையில் குளித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பங்களாபுதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    டி.என்.பாளையம்:

    கோபி செட்டிபாளையத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர். இவரது மகன் லூர்து ஆண்ட்ரூஸ்.

    லூர்து ஆண்ட்ரூஸ் மற்றும் அவரது நண்பர்கள் நேற்று மோட்டார் சைக்கிள்களில் சுற்றுலா சென்றனர். ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையை பார்க்க வந்தனர்.

    அணையில் தண்ணீர் கொட்டியபடி பாய்ந்து சென்று கொண்டிருந்ததை கண்ட அவர்களுக்கு அதில் குளிக்க ஆர்வம் ஏற்பட்டது. இதனால் கொடிவேரி அணையில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது லூர்து ஆண்ட்ரூஸ் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில் அவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார்.

    அவரது நண்பர்கள் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டது.

    இது பற்றி அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதபடி ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கு அவரது உடலை பார்த்து அழுதபடி உள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆப்பக்கூடல் அருகே கள்ளக்காதல் ஜோடியின் பழக்கம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்ததை அடுத்து இருவரும் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டனர்.
    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள அத்தாணி காலனியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி பெயர் ஜோதி (வயது 37). கூலி வேலை பார்த்து வருகிறார். ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    அம்மாபேட்டை அருகே உள்ள சிங்கம்பேட்டை அடுத்த சீரங்கன் பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (39). எலக்ட்ரீசியனாக இருந்தார். இவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

    ஜோதி வேலைக்கு செல்லும் இடத்தில் சுரோசும் மின்சாரம் பணி சம்பந்தமாக சென்றபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதுவே கள்ளக்காதலாக மாறியது. கள்ளக்காதலர்கள் இருவரும் தனியாக சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

    இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் இருவரது வீட்டுக்கும் தெரிய வந்தது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

    இதனால் கள்ளக்காதலர்கள் இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். இருவரது வீட்டிலும் வி‌ஷயம் தெரிந்ததால் அவமானமாக உள்ளது என்று புலம்பிய அவர்கள் இந்த முடிவை எடுத்தனர்.

    அத்தாணி காலனி மாதேஸ்வரன் தோட்டத்துக்கு நேற்று இரவு கள்ளக்காதலர்கள் சென்றனர். அங்கு இருந்து மின் கம்பத்தில் கொக்கி மூலம் மின்சாரத்தை எடுத்து இருவரது உடலிலும் மின் சாரத்தை பாய்ச்சினர்.

    இதில் இருவரது உடலிலும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்கள்.

    இன்று காலை தோட்டத்துக்கு வந்த தோட்டத்துக்காரர்கள் மேலும் அந்த வழியாக சென்றவர்களும் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இருவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ஈரோடு அருகே ரெயில் மோதி 75 வயது மதிக்கத்தக்க முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த மகுடஞ்சாவடி ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் சுமார் 75 மதிக்கத்தக்க முதியவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்து கிடந்த முதியவர் கருப்பு பச்சை நீலம் கலந்த டீ சர்ட் அணிந்திருந்தார். வேட்டியும் அணிந்து இருந்தார் இறந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. முதியவர் தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதி இறந்தது இருப்பது தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×