என் மலர்
ஈரோடு
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி, பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் பவானி, கோபி அரசு ஆஸ்பத்திரி, சிறுவலூர் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 5 மையங்களில் கடந்த 16-ந்தேதி முதல் கோவிஷுல்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
முதல் 3 நாட்களில் நூற்றுக்கும் குறைவானவர்களே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அதன் பின்னர் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. தற்போது வரை அரசு, தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சுகாதாரத்துறை பணியாளர்கள் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்திற்கு முதல் கட்டமாக 13 ஆயிரத்து 800 கோவிஷுல்டு டோஸ்கள் வந்துள்ளது. மாவட்டத்தில் கடந்த 16-ந்தேதி முதல் நேற்று வரை 1,925 முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதில் நேற்று முன்தினம் மட்டும் 197 முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதுவரை தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர். தற்போது முதல் கட்டமாக அரசு, தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக பிற துறை அரசு அலுவலர்களுக்கு தடுப்பூசி போடப்படும். அதன் பிறகு 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஈரோடு, ஜன. 27-
ஈரோட்டில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
வேளாண் சட்டங்கள் குறித்து பல கட்ட பேச்சுவார்த்தை மத்திய அரசு நடத்தி இருக்கிறது. விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் ஒத்தகருத்து வரவில்லை. வேளாண் சட்டங்களை கொண்டு வந்த நோக்கம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் வளர்ச்சியையும் உறுதிசெய்ய வேண்டும் என்பதற்காகத்தான்.
துரதிஷ்டவசமாக ஒரு சில மாநில விவசாயிகளின் போராட்டம் காரணமாக, தவறாக அவர்கள் வழிநடத்தப்படுவதன் காரணமாக இந்தியாவில் கோடிக்கணக்கான விவசாயிகள் நஷ்டம் அடையும் சூழல் ஏற்பட்டி ருக்கிறது. விவசாயிகளின் சந்தேகம் போகவில்லை. குறிப்பிட்ட மாநிலத்தில் உள்ள விவசாயிகள் இந்த போராட்டத்தில் பங்கு பெற்று இருக்கிறார்கள். இதற்கு ஒத்த கருத்து தேவை.
இருதரப்பிலும் தொடர் பேச்சுவார்த்தை அடிப்படையில் தான் முடிவு ஏற்பட வேண்டும். உண்மை நிலைக்கு ஏற்றவாறு செயல்பட தவறக்கூடாது. அவர்களும் இந்திய விவசாயிகள் தான். அனைவரின் மீதும் அக்கறை கொண்டவர்களாக மத்திய அரசு செயல்பட வேண்டும். குளிரிலும், மழையிலும் விவசாயிகள் டெல்லியில் 2 மாதங்களாக போராடி வருகிறார்கள்.
உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கி உள்ளது. அதன்படி பேச்சு நடத்தி ஒத்த கருத்து உருவாகும் என எதிர்பார்த்த சூழலில், குடியரசு தினத்தில் துரதிஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது. அப்பாவி விவசாயிகளுடன் சமூக விரோத கும்பல் புகுந்து குடியரசு தினத்தில் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தவும், பிரச்சனை தொடர, அதில் குளிர்காயவும் அந்த கும்பல் விவசாயிகளை வழி நடத்துகிறது.
தேர்தல் பிரச்சாரத்தில் அடுத்தகட்டமாக மனு வாங்கும் திட்டத்தை தி.மு.க அறிவித்துள்ளது. வாக்காளர்கள் குழம்பி போய் உள்ளனர். எதிர்கட்சி வாக்கு வங்கிக்காக செயல் படுகிறார்கள். தேர்தலுக்கு 3 மாதமே இருக்கும் நிலையில் இது போன்ற அறிவிப்பு ஆச்சரியமாகவும் வேடிக்கையாகவும் உள்ளது. எதிர்கட்சிகள் ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும். நாடக அரசியல் செய்ய கூடாது.
ஈரோட்டில் மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் தரத்திற்குரிய மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்ய வேண்டும். ஜெயலலிதா நினைவிடத்தை முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார். அதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய அளவில் தமிழகத்தில் தான் அதிக அளவு கொரோனா பரிசோதனைகள் செய்யப் பட்டுள்ளன. கொரோனா கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆளும்கட்சி, எதிர்கட்சிகள் யாராக இருந்தாலும் கொரோனா விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்.

சசிகலா விடுதலையால் அ.தி.மு.க வெற்றி பாதிக்காது. அ.தி.மு.க கூட்டணி வெற்றி பிரகாசமாக உள்ளது. ராகுல் காந்தி கொங்கு மண்டலத்தில் பிரச்சாரம் செய்தார். அவர் கண்மூடித்தனமாக மத்திய அரசு மீது குற்றம் சாட்டி உள்ளார். யார் பிரச்சாரம் செய்ய வந்தாலும் மக்கள் கூட்டம் கூடத்தான் செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோபிசெட்டிபாளையம் ஓடத்துறை பொம்மநாயக்கன்பாளையம் காமராஜர்நகரை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவருடைய மனைவி கவுசல்யாதேவி (வயது 24). இவர்கள் கடந்த 5 மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கவுசல்யாதேவி ஈரோடு ஆனைக்கல்பாளையத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படையில் போலீசாக கடந்த 2018-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட கவுசல்யாதேவி கடந்த 18-ந் தேதியில் இருந்து விடுப்பில் உள்ளார். மேலும் அவர் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை கவுசல்யாதேவி பரிதாபமாக உயிரிழந்தார்.
பெண் போலீஸ் உயிரிழந்த சம்பவம் ஆயுதப்படை போலீசாரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. நேற்று கோவை, திருப்பூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
இதையடுத்து அவர் இன்று 2-வது நாளாக ஈரோடு மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
• நான் தமிழன் இல்லை; ஆனால் தமிழை மதிக்கிறேன். தமிழை மத்திய அரசும், மோடியும் அவமதிப்பதை ஏற்க முடியாது.
• தமிழக மக்களுடன் எனக்கு இருப்பது அரசியல் பிணைப்பல்ல, குடும்ப பிணைப்பு.
• டெல்லியில் ஆட்சியில் இருப்பவர்கள் தமிழக கலாசாரத்தை மதிக்கவில்லை.
• இந்தியாவில் மற்ற மாநிலத்தில் உள்ளவர்கள் தமிழகத்தை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.
• ஜிஎஸ்டி, பெட்ரோல் விலை உயர்வு தமிழக மக்களை வெகுவாக பாதிப்படைய செய்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசியதை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மொழிபெயர்த்து கூறினார்.
சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம், சிக்கரசம்பாளையம், கொத்தமங்கலம், ராஜன் நகர், பீர்கடவு, அரியப்பம்பாளையம், செண்பகபுதூர், பெரியகுளம், டி.ஜி.புதூர், ஏழூர் உள்பட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் 4 டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள்.
இதில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.2 ஆயிரத்து 240-க்கும், முல்லைப்பூ ரூ.1,360-க்கும், காக்கடா ரூ.675-க்கும், செண்டுமல்லி ரூ.81-க்கும், பட்டுப்பூ ரூ.130-க்கும், ஜாதிமல்லி ரூ.800-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும், சம்பங்கி ரூ.40-க்கும், அரளி ரூ.160-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் ஏலம் போனது.
இதேபோல் நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.1,750-க்கும், முல்லைப்பூ ரூ.1,360-க்கும், காக்கடா ரூ.600-க்கும், செண்டுமல்லி ரூ.67-க்கும், பட்டுப்பூ ரூ.135-க்கும், ஜாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.820-க்கும், சம்பங்கி ரூ.40-க்கும், அரளி ரூ.180-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் விற்பனை ஆனது.
நேற்று முன்தினத்தை விட நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ ரூ.490-ம், காக்கடா ரூ.75-ம், செண்டுமல்லி ரூ.14-ம், ஜாதிமல்லி ரூ.200-ம் உயர்ந்திருந்தது. பட்டுப்பூ ரூ.5-ம், கனகாம்பரம் ரூ.120-ம் அரளி ரூ.20-ம் விலை குறைந்திருந்தது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனை சாவடி வழியாக குட்கா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சத்தியமங்கலம் டி.எஸ்.பி. சுப்பையா, இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் இன்று அதிகாலை 3.30 மணியளவில் பண்ணாரி சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது வந்த ஒரு லாரியை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் ஏராளமான மூட்டைகள் இருந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் மூட்டைகளை பிரித்து பார்த்தனர்.
அப்போது லாரியின் பின்பக்கத்தில் இருந்த மூட்டைகளில் மக்காச்சோளம் இருந்தது. பின்னர் லாரிக்குள் இருந்த மூட்டைகளை பிரித்து பார்த்த போது அதில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக், உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
லாரியில் 24 மூட்டைகளில் மக்காச்சோளமும், 80 மூட்டைகளில் குட்கா, பான்பராக் உள்ளிட்ட போதை பொருட்கள் 5 டன் அளவுக்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 20 லட்சம் ஆகும்.
இதையடுத்து போலீசார் லாரி டிரைவர் மற்றும் கிளீனரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது டிரைவர் கர்நாடகாவை சேர்ந்த காந்தராஜ் (38) என்பதும், கிளீனர் ஊட்டியை சேர்ந்த சதீஷ் (35) என்பதும் தெரிய வந்தது.
மேலும் அவர்கள் கர்நாடக மாநிலம் ஹனூர் பகுதியில் இருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்துக்கு குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து இந்த குட்கா பொருட்கள் யாருக்கு கொண்டு வரப்பட்டது என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பின்னர் போலீசார் குட்காவுடன் லாரியை பறிமுதல் செய்து சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.






