search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்கா பறிமுதல்
    X
    குட்கா பறிமுதல்

    பண்ணாரி சோதனை சாவடியில் லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.20 லட்சம் குட்கா பறிமுதல்

    பண்ணாரி சோதனை சாவடியில் லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.20 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவர், கிளீனர் கைது செய்யப்பட்டனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனை சாவடி வழியாக குட்கா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சத்தியமங்கலம் டி.எஸ்.பி. சுப்பையா, இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் இன்று அதிகாலை 3.30 மணியளவில் பண்ணாரி சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    அப்போது வந்த ஒரு லாரியை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் ஏராளமான மூட்டைகள் இருந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் மூட்டைகளை பிரித்து பார்த்தனர்.

    அப்போது லாரியின் பின்பக்கத்தில் இருந்த மூட்டைகளில் மக்காச்சோளம் இருந்தது. பின்னர் லாரிக்குள் இருந்த மூட்டைகளை பிரித்து பார்த்த போது அதில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக், உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

    லாரியில் 24 மூட்டைகளில் மக்காச்சோளமும், 80 மூட்டைகளில் குட்கா, பான்பராக் உள்ளிட்ட போதை பொருட்கள் 5 டன் அளவுக்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 20 லட்சம் ஆகும்.

    இதையடுத்து போலீசார் லாரி டிரைவர் மற்றும் கிளீனரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது டிரைவர் கர்நாடகாவை சேர்ந்த காந்தராஜ் (38) என்பதும், கிளீனர் ஊட்டியை சேர்ந்த சதீஷ் (35) என்பதும் தெரிய வந்தது.

    மேலும் அவர்கள் கர்நாடக மாநிலம் ஹனூர் பகுதியில் இருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்துக்கு குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து இந்த குட்கா பொருட்கள் யாருக்கு கொண்டு வரப்பட்டது என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பின்னர் போலீசார் குட்காவுடன் லாரியை பறிமுதல் செய்து சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    Next Story
    ×