என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலக வளாகத்தில் சத்தியமங்கலம் நகர நிலவரித்திட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தாசில்தாராக வேல்முருகன், நில அளவை ஆய்வாளராக பன்னீர்செல்வம் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த அலுவலகத்தில் சத்தியமங்கலம் நகராட்சி பகுதியில் உள்ள நில அளவை மற்றும் பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த அலிமுல்லா என்பவர் நிலவரி திட்ட தாசில்தார் வேல்முருகன், நில அளவை ஆய்வாளர் பன்னீர் செல்வம் ஆகியோரை சந்தித்து பட்டா பெயர் மாற்றம் தொடர்பாக விண்ணப்பித்தார்.
இதையடுத்து அவர்கள் பட்டா பெயர் மாற்றத்துக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டனர். அனைத்து ஆவணங்களும் முறையாக இருந்தும் பணம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த அலிமுல்லா இது குறித்து ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை அலிமுல்லாவிடம் கொடுத்து அனுப்பினர். அவர் நேற்று மாலை அலுவலகத்துக்கு சென்று தாசில்தார் வேல்முருகன், நில அளவை ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோரிடம் லஞ்ச பணத்தை கொடுத்தார்.அப்போது அங்கு தயாராக இருந்த லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையிலான போலீசார் திடீரென மாலை 6 மணியளவில் அலுவலகத்துக்குள் நுழைந்து கையும் களவுமாக அவர்களை பிடித்தனர்.
பின்னர் லஞ்சஒழிப்பு போலீசார் அலுவலகத்தை பூட்டிக் கொண்டு சோதனை நடத்தினர். மேலும் அதிகாரிகள், ஊழியர்களின் செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் அலுவலகத்தில் திடீர்சோதனை நடத்தினர். மாலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை நள்ளிரவு 1மணிவரை நீடித்தது.
பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் நிலவரி திட்ட தாசில்தார் வேல்முருகன், நில அளவை ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோரை கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் 2பேரையும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு இன்று காலை அழைத்து வந்தனர். அங்கு அவர்கள் 2பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். லஞ்ச ஒழிப்புபோலீசில் சிக்கிய தாசில்தார் வேல்முருகன், நில அளவை ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் முடிவுசெய்துள்ளனர்.
புஞ்சைபுளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே விண்ணப்பள்ளி அடுத்த அன்னே கவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 32). வேன் டிரைவர்.இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அதே பகுதியைச் சேர்ந்தவர் அல்லி முத்து (31). கூலி தொழிலாளி. இவருக்கும் திருமணமாகவில்லை. அல்லி முத்துவின் சித்தி வசந்தி (50) அதே பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் மகேந்தி ரனுக்கும் வசந்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.மகேந்திரனுக்கும் வசந்திக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் குறித்து அல்லிமுத்துக்கு தெரிய வந்தது. அவர் மகேந்திரனை சித்தியுடனான கள்ளத் தொடர்பை கை விடுமாறு கண்டித்துள்ளார். ஆனால் மகேந்திரன் அதை காதில் வாங்கிக்கொள்ளவில்லை.
இந்நிலையில் நேற்று இரவு மகேந்திரன் வசந்தி வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கு வந்த அல்லிமுத்து மகேந்திரனுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த அல்லிமுத்து மகேந்திரனை கையால் கடுமையாகத் தாக்கினார். இதையடுத்து மகேந்திரன் அருகிலிருந்த சமுதாய கூட திண்ணையில் மயங்கி விழுந்து இறந்தார். அல்லிமுத்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மகேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அல்லிமுத்துவை தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்தம் பாதிப்பு 14 ஆயிரத்து 325 ஆக உயர்ந்தது.
அதே நேரத்தில் நேற்று 3 பேர் மட்டுமே குணமாகி வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 13 ஆயிரத்து 982 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு 150 பேர் பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 193 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஈரோடு டவுன் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசாருக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் உள்பட அனைத்து போலீசாரும் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இதில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் 2 போலீசாருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து 3 பேரும் நேற்று பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
ஈரோடு அசோகபுரம் கலைமகள் வீதி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 65). கூலித்தொழிலாளி. இவர் நோயினால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் நோய் குணமாகவில்லை. இதனால் விரக்தி அடைந்த சீனிவாசன் ஈரோடு பவானி ரோடு அசோகபுரம் பகுதியில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி ஈரோடு கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் ஏ.பி.டி. ரோடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் நந்தகோபால் (வயது 15). 5-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று தனது நண்பர்களுடன் நந்தகோபால் ஈரோடு காவிரி ஆற்றில் குளிப்பதற்காக வைராபாளையம் பகுதிக்கு சென்றார்.
பின்னர் அவர் தனது நண்பர்களுடன் குளித்து கொண்டு இருந்தார். அப்போது நந்தகோபால் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே நந்தகோபால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு குமிளம்பரப்பு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் சித்தோடு பச்சப்பாளி வசுவப்பட்டி என்ற கிராமத்தில் கால் மிதியடி தயாரிக்கும் நிறுவனம், பழைய துணிகளை மறுசுழற்சி செய்து பஞ்சாக மாற்றும் கம்பெனி ஆகியவை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிறுவனத்தில் பகல் நேரத்தில் மட்டும் ஊழியர்கள் வேலைப்பார்ப்பார்கள். இரவில் யாரும் இருக்க மாட்டார்கள். வழக்கம் போல் நேற்று பணி முடிந்ததும் ஊழியர்கள் அனைவரும் சென்று விட்டனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த கம்பெனியில் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் இது குறித்து பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.
தீயணைப்பு துறையினரின் முதல் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. பகல் நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டு இருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டு இருக்கும்.
இது குறித்து சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மொடக்குறிச்சி:
தமிழகத்தில் தனியார் நிறுவனம் விவசாய நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய்கள் பதித்து வருகிறது. இதற்கு விசாயிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இதே போல் பாரத் பெட்ரோலிய நிறுவனம் (ஐ.டி.பி.எல்.) கோவையில் இருந்து பெங்களூரு தேவ கொந்தி வரை விவசாய நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இதனால் திருப்பூர் ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறார்கள். மேலும் இந்த திட்டத்தை சாலையோரம் கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மொடக்குறிச்சி பகுதியில் இந்த திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக மொடக்குறிச்சி அருகே உள்ள அட்டவனை அனுமன்பள்ளி அடுத் பழையபாளையம் பகுதியில் நில எடுப்பு அறிவிப்பாணை விவசாயிகளிடம் வழங்க அரச்சலூர் வருவாய் அலுவலர் கமலவதி மற்றும் அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்றனர்.
இது பற்றி தகவல் அறிந்த விவசாயிகள் அங்கு குவிந்தனர். அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய நிலங்களை தரமாட்டோம். நில எடுப்பு ஆணையை பெற்று கொள்ள மாட்டோம் என கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் இதற்கு எதிராக கோஷ மிட்டனர்.
இதனால் அதிகாரிகள் அங்கு இருந்து திரும்பி சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதில் ஐ.டி.பி.எல். திட்ட எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளரும், தற்சாற்பு விவசாயிகள் சங்க மாநில தலைவருமான பொன்னையன், குணசேகரன், முருகேசன் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






