என் மலர்tooltip icon

    ஈரோடு

    9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாளை 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும். பிற வகுப்புகளையும் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தி முதல்-அமைச்சர் அறிவிப்பார்.

    இந்தியளவில் பள்ளிக்கல்வித்துறை 3-வது இடத்திலிருந்து முதல் இடத்திற்கு வந்துள்ளது.

    தனியார் பள்ளிகளில் முழு கட்டணத்தை செலுத்தினால் தான் பொதுத்தேர்வை எழுத அனுமதிப்போம் என்று பள்ளிகள் கட்டாயப்படுத்தினால் அது குறித்து பெற்றோர்கள் அளிக்கும் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஈரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 75 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். பணியின்போது இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அதன்படி நேற்று 5-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் திரண்ட அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் விஜய மனோகரன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

    இதைத்தொடர்ந்து அவர்கள் தாலுகா அலுவலக வளாகம் முன்பு உள்ள ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    35 பெண்கள் உள்பட மொத்தம் 75 பேர் கைது செய்யப்பட்டு ஈரோடு மாநகராட்சி மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். மாலையில் போலீசார் அவர்களை விடுதலை செய்தாலும் வீடுகளுக்கு செல்லாமல் மண்டபத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
    அந்தியூர் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள பாலக்குட்டை பகுதியை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது 35). கூலித்தொழிலாளி. சவுந்தரராஜன் கடந்த 3 மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு் வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த சவுந்தரராஜன், விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு் சிகிச்சைக்காக அந்தியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சவுந்தரராஜன் இறந்தார். இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோட்டில் இருந்து கரூர் வரை தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் சார்பில் விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது.
    ஈரோடு:

    ஆயுர்வேதா, சித்தா, யுனானி மருத்துவர்கள், அலோபதியில் உள்ள 58 வகையான அறுவை சிகிச்சைகளை செய்யலாம் என மத்திய அரசு அறிவித்திருப்பதை கண்டித்தும், திரும்ப பெற வலியுறுத்தியும் நாடு முழுவதும் இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.

    இதில், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு- பெருந்துறை ரோட்டில் கடந்த 1-ந் தேதி முதல் ஐ.எம்.ஏ சார்பில் தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டர் கடந்த 5 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டம் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு வாகன பேரணி தொடங்கப்பட்டது.

    இந்த வாகன பேரணி ஓசூரில் தொடங்கி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் வழியாக ஈரோடு மாவட்டத்திற்கு இன்று வந்தது. இதையடுத்து ஈரோட்டில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு வாகன பேரணி தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்த பேரணிக்கு ஈரோடு ஐ.எம்.ஏ. கிளை தலைவர் பிரசாத் தலைமை தாங்கினார். தேசிய துணை தலைவர் சி.என்.ராஜா பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியானது, ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா வழியாக, அரசு மருத்துவமனை, ஈ.வி.என். ரோடு, ரெயில்வே நிலையம், காளைமாட்டு சிலை, கொல்லம்பாளையம், சோலார், கொடுமுடி, சிவகிரி வழியாக கரூர் மாவட்டத்தில் நிறைவடைந்தது.

    இதில், ஐ.எம்.ஏ. கிளை பொருளாளர் சுதாகர், துணை தலைவர் விஜயகுமார் தம்பிராஜன், செயலாளர் செந்தில்வேலு, முன்னாள் மாவட்ட தலைவர்கள் சக்ரவர்த்தி, சுகுமார், டாக்டர் அபுல்ஹசன் மற்றும் கோபி, சத்தி, பவானி, குமாரபாளையத்தை சேர்ந்த ஏராளமான டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
    கல்வி கட்டணத்தை குறைக்ககோரி பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் போக்குவரத்து துறையின் கீழ் செயல்பட்டு வந்த மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார துறையின் கீழ் இயங்கும் அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனையாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

    இதனை தொடர்ந்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையாகவும் தற்போது கொரோனா சிறப்பு மருத்துவமனையாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் மருத்துவம் பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில் அரசு மருத்துவ கல்லூரியாக அறிவிக்கபட்டும் தனியார் மருத்துவ கல்லூரியில் வசூலிக்கும் கல்வி கட்டணமான 4 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும், அரசு கல்லூரியில் வசூலிக்கும் 13 ஆயிரத்து 600 ரூபாயை கல்லூரி நிர்வாகம் வசூலிக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகள் அவர்களது பெற்றோர்கள் தொடர்ந்து தமிழக அரசிடம் கோரிக்கையை முன்வைத்து நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதனைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து கல்வி கட்டணத்தை குறைக்க கோரி 100- க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்லூரியின் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு கல்வி கட்டணத்தை குறைத்து உத்தரவு வழங்கும் வரையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
    ஈரோடு கோட்டை சின்னபாவடியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து வழிபட்டனர்.
    ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள பழமையான கோவில்களில் ஒன்று கோட்டை சின்னபாவடி பத்ரகாளியம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டு தோறும் குண்டம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 1-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 2-ந் தேதி பக்தர்கள் காவிரிக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர். 3-ந் தேதி இரவு 10 மணிக்கு அக்னி கவாளம் நிகழ்ச்சி நடந்தது.

    நேற்று முன்தினம் இரவு 9மணி அளவில் குண்டம் பற்ற வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குண்டம் பற்ற வைக்கப்பட்டது. குண்டத்தில் பக்தர்கள் காணிக்கையாக வாங்கி கோவிலுக்கு வழங்கிய எரி கரும்புகள் (குண்டத்துக்கான விறகு) எரிக்கப்பட்டது.

    இரவு முழுவதும் குண்டம் கொழுந்து விட்டு எரிந்து நேற்று அதிகாலையில் தீக்கனலாக மாறியது. 60 அடி நீளம், 3 அடி அகலம் மற்றும் 2 அடி உயரத்தில் பிரமாண்ட தீ குண்டத்தை கோவில் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் தயார் செய்தனர். காலை 7மணி அளவில் பக்தர்கள் தீ மிதிக்க குண்டம் தயார் செய்யப்பட்டது.

    பின்னர் கோவிலின் தலைமை பூசாரி தலைமையில் குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தலைமை பூசாரி பத்ரகாளி அம்மனிடம் குண்டம் இறங்க அனுமதி கேட்டு பூங்கரகம் எடுத்து வந்தார்.

    சாமி அருள்பெற்று ஆடிக்கொண்டே வந்த அவர் குண்டம் பூஜைக்கு பின்னர் முதல் நபராக தீ குண்டத்தில் மிதித்து நடந்து சென்றார். அவரைத்தொடர்ந்து காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபட்டனர். குண்டத்தில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானவர்கள் தீ மிதித்தனர்.

    விழாவையொட்டி ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் உள்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். தொடர்ந்து கோவிலில் பொங்கல் விழா மற்றும் மாவிளக்கு பூஜை நடந்தது.

    நேற்று மாலையில் சிறப்பு அலங்காரத்தில் பத்ரகாளியம்மன் வீதி உலா நடந்தது. பின்னர் அபிஷேக ஆராதனை மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. மறு அபிஷேகமும் நடந்தது.
    சித்தோடு அருகே ஏற்பட்ட தீ விபத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்ததுடன், 2 குடிசைகள் எரிந்து நாசம் ஆனது.
    ஈரோடு:

    சித்தோடு ராயபாளையம் சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவருடைய மனைவி லட்சுமி (வயது 60). இந்தநிலையில் நேற்று மதியம் கோபாலின் பேத்தி சவுமியா வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது கியாஸ் கசிந்து குடிசையின் ஒரு பகுதியில் தீ பரவியதாக கூறப்படுகிறது. 

    இதைத்தொடர்ந்து தீ மளமளவென பரவி அருகில் இருந்த செங்கோடனின் மனைவி லட்சுமி என்பவரின் குடிசை வீட்டிலும் தீப்பற்றியது. தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் கோபால் வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் அருகில் இருந்த தங்கராஜ் மற்றும் சேகர் ஆகியோரின் வீட்டின் முன்பு அமைக்கப்பட்டிருந்த பந்தலிலும் தீப்பிடித்தது.

    இதுகுறித்து பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் நிலைய அதிகாரி காந்தி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் கோபால், செங்கோடன் ஆகியோரின் வீடுகளில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசம் ஆனது.
    ஈரோடு கொல்லம்பாளையத்தில் கட்டப்பட்டு உள்ள 192 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பினை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி கொல்லம்பாளையம் எம்.ஜி.ஆர். நகரில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது. ரூ.17 கோடியே 28 லட்சம் செலவில் 192 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. சென்னையில் நடந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    இந்த புதிய அடுக்குமாடி குடியிருப்பில் பெரும்பள்ளம் ஓடை கள்ளியங்காடு ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசித்து வந்த 101 குடிசைவாசிகள், அசோகபுரி ஆக்கிரமிப்பு பகுதியில் வசித்து வந்த 45 குடிசைவாசிகள், ஜீவானந்தம் ரோடு பகுதியை சேர்ந்த 3 குடிசை வாசிகள், பிச்சைக்காரன் பள்ளம் ஓடை, கந்தையன் தோட்டம் பகுதிகளில் வசித்து வந்த 43 குடிசைவாசிகள் என 192 குடிசைவாசிகளுக்கு இந்த வீடுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

    வீடுகள் ஒவ்வொன்றும் தலா 400 சதுர அடியில் கட்டப்பட்டு உள்ளது. ஹால், படுக்கை அறை, சமையல் அறை, குளியல்அறை-கழிப்பறை உள்ளன. குடியிருப்பு பகுதி முழுமையும் கான்கிரீட் ரோடு, மழைநீர் வடிகால், கழிவுநீர் அகற்றும் வசதி, தண்ணீர் தொட்டி, பூங்கா, தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    திறப்பு விழாவையொட்டி கொல்லம்பாளையம் எம்.ஜி.ஆர். நகர் அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விழாவுக்கு ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா தலைமை தாங்கினார். சென்னையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடியிருப்பினை திறந்து வைத்ததும், ஈரோட்டில் மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
    பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இறந்த கிடந்த பெண் யனையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
    ஈரோடு:

    பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட புதுபீர்கடவு வனப்பகுதியில் நேற்று முன்தினம் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது போளி பள்ளம் என்ற இடத்தில் ஒரு யானை இறந்து கிடந்தது. இதுகுறித்து உடனே வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

    அதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இயக்குனர் நிகார் ரஞ்சன், மாவட்ட வன அலுவலர் அருண்லால் ஆகியோரின் உத்தரவின் பேரில், பவானிசாகர் வனச்சரக அதிகாரி சரவணன், வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றார்கள். பின்னர் யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    அதன்பின்னர் கால்நடை டாக்டர் அசோகன் கூறும்போது, இறந்து கிடந்தது சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்று கூறினார். மேலும் யானையின் உடல் கூறுகள் பரிசோதனைக்காக கோவைக்கு அனுப்பப்படும். அதன் முடிவு வந்த பின்னரே யானை எப்படி இறந்தது? என்று தெரியவரும் என்றார். பிறகு அதே இடத்தில் குழி தோண்டி யானையின் உடல் புதைக்கப்பட்டது.
    கோபி அருகே பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
    கோபி:

    கோபி அருகே உள்ள கவுந்தப்பாடி கண்ணாடிப்புதூரை சேர்ந்தவர் பானுமதி. கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ந் தேதி மர்ம நபர் ஒருவர் பானுமதியின் வீட்டுக்குள் நுழைந்து அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுவிட்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வந்தார்கள். விசாரணையில் பானுமதியின் நகையை பறித்தது திருச்சி மாவட்டம் தொட்டியத்தை சேர்ந்த நடராஜ் என்பவா் என்று தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து நடராஜை போலீசார் கைது செய்து கோபி குற்றவியல் 2-வது நடுவர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் மாஜிஸ்திரேட்டு விஸ்வநாதன் நடராஜனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
    பெருந்துறையில் வளர்ப்பு மகளை கர்ப்பிணியாக்கிய வியாபாரி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    ஈரோடு:

    பெருந்துறை சென்னிமலை ரோடு தீயணைப்பு நிலையம் அருகில் வசித்து வருபவர் முருகேசன் (வயது 35). பழைய இரும்புகளை வாங்கி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு சாந்தி (34) என்கிற மனைவியும், ஆர்த்தி (17) என்ற மகளும் உள்ளனர்.

    இந்தநிலையில் முருகேசன் தனக்கு ஆண் வாரிசு வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு முதல் மனைவி சாந்தியின் ஒப்புதலுடன் அவரது தங்கை கவுசல்யா (24) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

    கவுசல்யாவுக்கு தினேஷ் (9), விஜய் (6) என்ற 2 மகன்கள் பிறந்தனர்.

    இந்நிலையில் சாந்தியின் உறவினர் பெண் ஒருவர் திண்டுக்கல் பகுதியில் இருந்து தன்னுடைய 13 வயது மகளுடன் முருகேசன் வீட்டுக்கு வந்து ஒன்றாக குடும்பம் நடத்தினார். 13 வயது சிறுமியை முருகேசன் வளர்ப்பு மகளாக பாதுகாத்து வந்தார். இதற்கிடையே முருகேசனின் முதல் மனைவி சாந்தி மகள் ஆர்த்தியுடன் ராசிபுரத்திற்கு சென்று விட்டார்.

    இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தான் வளர்த்து வந்த 13 வயது சிறுமியிடம் முருகேசன் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் வற்புறுத்தி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் சிறுமி கர்ப்பமானார். இந்த விஷயம் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு, அவருடைய தாய்க்கு தெரியவந்தது.

    இதுபற்றி நியாயம் கேட்டபோது உன் மகளின் கர்ப்பத்தைக் கலைத்துவிடு என்று முருகேசன் மிரட்டியதாக தெரிகிறது.

    இதைத்தொடர்ந்து சிறுமியின் தாய் பெருந்துறை போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தார்கள். பின்னர் பெருந்துறை முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். மாஜிஸ்திரேட்டு சபினா, முருகேசனை ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார்.
    ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் சின்ன வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்து உள்ளது.
    ஈரோடு:

    தமிழகத்தில் வெங்காயத்தின் விலை கடந்த அக்டோபர் மாதம் திடீரென கிடுகிடுவென உயர்ந்தது. அப்போது ஈரோட்டில் சின்ன வெங்காயம் அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ.130 வரை விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து வெங்காயத்தின் வரத்து அதிகரிக்க தொடங்கியதும், விலை குறைந்தது. கடந்த சில வாரங்களாக ஒரு கிலோ சின்ன வெங்காயம் சுமார் ரூ.45க்கு விற்பனையானது.

    இந்தநிலையில் சின்ன வெங்காயத்தின் விலை மீண்டும் உயர தொடங்கி இருப்பது, இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் கடந்த வாரத்தை காட்டிலும், இந்த வாரம் சின்ன வெங்காயத்தின் விலை இரு மடங்கு உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் பெரிய வெங்காயத்தின் விலையும் ஒரு கிலோ ரூ.30-ல் இருந்து ரூ.50 வரை உயர்ந்து உள்ளது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், “ஈரோடு காய்கறி மார்க்கெட்டுக்கு வெளிமாநிலங்களில் இருந்து வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து வெங்காயத்தின் வரத்து கடந்த சில நாட்களாக குறைந்துவிட்டது. இதனால் வெங்காயத்தின் விலை உயர்ந்து உள்ளது. ஈரோடு மார்க்கெட்டுக்கு தினமும் சுமார் 150 டன் வெங்காயம் வரத்து இருந்து வந்தது. அதில் பாதி அளவு மட்டுமே தற்போது வருகிறது. மீண்டும் வெங்காயத்தின் வரத்து அதிகமானால் விலை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது”,என்றனர்.
    ×