என் மலர்tooltip icon

    ஈரோடு

    • திடீரென லாரியும், சரக்கு வாகனமும் நேருக்குநேர் மோதி விபத்தானது.
    • சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் ஹரிஸ்குமார், கிளீனர் மஞ்சுநாத் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

    ஈரோடு:

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இருந்து தேங்காய் லோடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி பெங்களூரு நோக்கி சென்றது. இந்த லாரியை தர்மபுரி மாவட்டம் ஈசல்பட்டியை சேர்ந்த கருணாகரன் (32) என்பவர் ஓட்டி சென்றார்.

    இதேபோல் கர்நாடகாவில் இருந்து கேரளாவை நோக்கி ஒரு சரக்கு வாகனம் புறப்பட்டது. இதை கர்நாடகா மாநிலம் டுங்கூரை சேர்ந்த ஹரிஸ்குமார் (28) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் கிளீனராக அதே பகுதியை சேர்ந்த மஞ்சுநாத் (30) என்பவரும் வந்தார்.

    தேங்காய் லாரியும், சரக்கு வாகனமும் இன்று அதிகாலை 2.45 மணி அளவில் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரியும், சரக்கு வாகனமும் நேருக்குநேர் மோதி விபத்தானது.

    இதில் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் ஹரிஸ்குமார், கிளீனர் மஞ்சுநாத் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். லாரி டிரைவர் கருணாகரன் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதுபற்றி தெரிய வந்ததும் அம்மாபேட்டை சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் காயத்துடன் உயிருக்கு போராடிய லாரி டிரைவர் கருணாகரனை மீட்டு பவானியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தில் பலியான டிரைவர் ஹரிஸ்குமார், கிளீனர் மஞ்சுநாத் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தின் காரணமாக பவானி-மேட்டூர் சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் பொக்லைன் மூலம் விபத்தில் சிக்கிய வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வாகன போக்குவரத்து தொடங்கியது.

    • பீகார் உள்பட பல்வேறு மாநிலங்களில் ரெயில்கள் தாக்கப்படுவதால் ரப்தி சாகர் எக்ஸ்பிரஸ் ரெயிலை திடீர் என ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்தது.
    • ஒரே நேரத்தில் ஏராளமான பயணிகள் திரண்டதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதியது. பின்னர் அவர்கள் பஸ்களிலும், வேறு ரெயில்களிலும் புறப்பட்டு சென்றனர்.

    ஈரோடு:

    மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக வடமாநிலங்களில் கலவரம் நடந்து வருகிறது. மேலும் ரெயில்கள் தீ வைத்து எரிக்கப்பட்டும் ரெயில் நிலையங்கள் சூறையாடப்பட்டும் வருகிறது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பீகார் மாநிலம் பரோணிக்கு நேற்று காலை 10.50 மணி அளவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளுடன் ரப்தி சாகர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர் வழியாக நேற்று மாலை 5 மணி அளவில் ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்தடைந்தது.

    பீகார் உள்பட பல்வேறு மாநிலங்களில் ரெயில்கள் தாக்கப்படுவதால் ரப்தி சாகர் எக்ஸ்பிரஸ் ரெயிலை திடீர் என ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்தது.

    இதுகுறித்து ஈரோடு ரெயில் நிலையத்தில் அறிவிப்பு செய்யப்பட்டது. இதனால் அந்த ரெயிலில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ரெயில் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து சென்னை வரையாவது ரெயிலை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் ரெயில்வே அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதையடுத்து மாலை 6.20 மணிக்கு ரப்தி சாகர் எக்ஸ்பிரஸ் மீண்டும் எர்ணாகுளத்துக்கு புறப்பட்டது.

    இதன் காரணமாக அந்த ரெயிலில் பயணித்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் ஈரோடு ரெயில் நிலையத்தில் இறங்கினர். அவர்கள் எப்படி செல்வது என்று தெரியாமல் தவித்தனர். ஒரே நேரத்தில் ஏராளமான பயணிகள் திரண்டதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதியது. பின்னர் அவர்கள் பஸ்களிலும், வேறு ரெயில்களிலும் புறப்பட்டு சென்றனர்.

    • சிறுமியிடம் கருமுட்டை எடுத்த விவகாரத்தில் தொடர்புடைய மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று விசாரணை நடத்தினர்.
    • சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை ஆகியோரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை சட்டவிரோதமாக எடுத்தது தொடர்பாக சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை பெண் புரோக்கர் மாலதி, போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த ஜான் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலே ஒவ்வொரு நாளும் புதிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட சிறுமியிடம் ஏ.டி.எஸ்பி. கனகேஸ்வரி தலைமையிலான போலீசார், சென்னையை சேர்ந்த உயர்மட்ட மருத்துவ குழுவினர் என தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

    சிறுமியிடம் கருமுட்டை எடுத்த விவகாரத்தில் தொடர்புடைய மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

    இந்நிலையில் சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர் மாலதி, ஜான் ஆகியோரின் காவல் முடிவடைந்ததால் அவர்களை மீண்டும் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது பெண் புரோக்கர் மாலதியை 5 நாள் காவலில் விசாரிக்க போலீசார் அனுமதி கேட்டனர்.

    ஆனால் நீதிமன்றம் ஒரு நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தது. இதன்படி நேற்று முன்தினம் மாலை 4 மணி முதல் விடிய விடிய போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து அவரது வங்கி கணக்கில் எத்தனை முறை பண பரிமாற்றம் நடந்துள்ளது என்ற விவரங்களை சேகரித்தனர். எந்தெந்த நாட்களில் பண பரிமாற்றம் நடந்துள்ளது. சிறுமியை தவிர வேறு சில பெண்களை புரோக்கர் மாலதி மூளை சலவை செய்து கருமுட்டையை எடுத்து உள்ளாரா? என்பது குறித்து அவரிடம் விரிவாக விசாரணை நடத்தினர்.

    நேற்று மதியம் வரை பெண் புரோக்கர் மாலதியிடம் விசாரணை நடைபெற்றது. பின்னர் அவர் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டு நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவர் மீண்டும் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை ஆகியோரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    பெண் புரோக்கர் மாலதியிடம் பெற்ற சில முக்கிய தகவலை அடிப்படையாக வைத்து சிறுமியின் தாய் மற்றும் வளர்ப்பு தந்தையிடம் விசாரணை நடத்தினால் மேலும் பல்வேறு தகவல் கிடைக்க வாய்ப்பு உள்ளதால் போலீசார் அவர்களை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    இதற்காக வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்ய முடிவு செய்து உள்ளனர்.

    • கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளை சாலையோரம் போட்டுவிட்டு அங்கு உள்ள மறைவான இடத்திற்கு சென்று தப்பி ஓடிவிட்டனர்.
    • இந்த காட்சிகள் அனைத்தும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகி இருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த காஞ்சிகோவில் அருகே உள்ள பெத்தாம்பாளையம் பிரிவில் முத்தாயம்மாள் (52) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 9.30 மணியளவில் இவர் வழக்கம் போல் வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    அப்போது முத்தாயம்மாள் மளிகை கடைக்கு ஒரு வாலிபர் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக வந்தார். அவர் கேட்ட பொருட்களை முத்தாயம்மாள் அவரிடம் கொடுத்து விட்டு கடையை விட்டு வெளியே வந்தார்.

    அப்போது திடீரென அந்த வாலிபர் கண்ணிமைக்கும் நேரத்தில் முத்தாயம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி ஓடினார். சிறிது தூரத்தில் மற்றொரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தார். அவரது மோட்டார் சைக்கிளில் அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்தாயம்மாள் திருடன்..திருடன் என கத்தினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் ஒன்று கூடி கொள்ளையர்களை விரட்டினர். அப்போது அந்த கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளை சாலையோரம் போட்டுவிட்டு அங்கு உள்ள மறைவான இடத்திற்கு சென்று தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த காட்சிகள் அனைத்தும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகி இருந்தது.

    இதுகுறித்து காஞ்சி கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து பதிவு எண்ணை கொண்டு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள ஜவான் பவன் முன்பு ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    சூரம்பட்டி:

    ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள ஜவான் பவன் முன்பு ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர்கள் சரவணன், மக்கள்ராஜன், திருச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட துணைத்தலைவர் ராஜேஷ் ராஜப்பா, இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் செந்தூர் ராஜகோபால், மண்டல தலைவர்கள் ஜாபர் சாதிக், விஜயபாஸ்கர், மாவட்ட முன்னாள் தலைவர் ஈ.ஆர். ராஜேந்திரன், முத்துகுமார், உதயகுமார், செந்தில்ராஜா, முன்னாள் நகர தலைவர் குப்பண்ணா சந்துரு, ஈரோடு பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் விஜய் கண்ணா, விவசாய அணி மாவட்ட தலைவர் பெரியசாமி, வக்கீல் அணி ராஜேந்திரன், மகளிர் அணி புவனேஷ்வரி, முகமது அர்சத், பாட்சா உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    • தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.
    • மருந்து, கோதுமை உள்பட பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

    ஈரோடு:

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. மக்கள் உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்காக தவித்து வருகின்றனர். அனைத்து பொருட்களின் விலை உயர்வால் சாதாரண நடுத்தர மக்கள் ஏழை மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    குழந்தைகள் குடிக்க பால் இன்றி தவித்து வருகின்றனர். இலங்கை மக்களுக்கு உதவும் விதமாக பல்வேறுநாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்தியாவும் பெட்ரோல், கோதுமையை இலங்கைக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. முதல்-அமைச்சரும் இலங்கைக்கு முடிந்த உதவியை செய்யுங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.

    அதனை ஏற்று தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. மருந்து, கோதுமை உள்பட பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அரசு அலுவலர்கள் ஒருநாள் ஊதியத்தை இலங்கை அரசுக்காக கொடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மதுவிலக்கு டி.எஸ்.பி. சண்முகம் தனது ஒரு மாத ஊதியமான ரூ.89 ஆயிரத்து 136-யை இலங்கை மக்களுக்கு உதவிடும் பொருட்டு தமிழக அரசுக்கு மாவட்ட போலீஸ் துறை வாயிலாக அனுப்பி வைத்துள்ளார். இவரது இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரை போலீசார், பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • பவானி ஊராட்சி கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.
    • பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    பவானி:

    பவானி ஊராட்சி கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

    இதனால் பவானி நகர் முழுவதும், மூன்றோடு, ஊராட்சிக்கோட்டை, ஜீவாநகர், செங்காடு, குருப்பநாயக்கன் பாளையம், நடராஜபுரம், ராணா நகர், ஆண்டிகுளம், என்ஜி.ஜி.ஓ. காலனி, கூடுதுறை, வி.மேட்டுப்பாளையம், சன்னியாசிபட்டி, வரதநல்லூர், சங்கரகவுண்டன்பாளையம், மொண்டிபாளையம், கண்ணாடிபாளையம், மயிலம்பாடி, ஆண்டிபாளையம், சக்தி நகர், கொட்ட காட்டுப்புதூர், மோளகவுண்டன்புதூர், செலம்பகவுண்டன்பாளையம்,வாய்க்கால்பாளையம், ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    • பவானி அருகே மண் தொழிலாளர் வீதி சின்ன ஆற்றோரம் கஞ்சா விற்பனை செய்வதாக பவானி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
    • கஞ்சா விற்பனை செய்த 3 பேரை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    பவானி:

    பவானி அருகே மண் தொழிலாளர் வீதி சின்ன ஆற்றோரம் கஞ்சா விற்பனை செய்வதாக பவானி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

    இதன் அடிப்படையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் அசோகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த விஜயன், பாம்பாட்டி மணி, மாணிக்கம் ஆகிய 3 பேரையும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • சென்னிமலை பகுதியிலும் கந்து வட்டி கொடுமை உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் சென்றது.
    • அதிக வட்டி வாங்கி வரும் கந்து வட்டி வசூலிக்கும் நபர்களின் பட்டியலை உளவு பிரிவு போலீசார் ரகசியமாக சேகரித்து வருகின்றனர்.

    சென்னிமலை: –

    சென்னிமலை பகுதியில் நிதி நிறுவனம், பைனான்ஸ், அடகு கடை என்ற பெயரில் தினசரி வசூல் விட்டு அதிக வட்டி வாங்கி வரும் கந்து வட்டி வசூலிக்கும் நபர்களின் பட்டியலை உளவு பிரிவு போலீஸார் சேகரித்து வருகின்றனர்.

    சென்னிமலை அருகே மணிமலைகரடு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றும் நபர் கடன் தொல்லையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதை தொடர்ந்து சென்னிமலை பகுதியிலும் கந்து வட்டி கொடுமை உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் சென்றது.

    அதை தொடர்ந்து சென்னிமலை ஒன்றிய பகுதியில் தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் கடைக்காரர்களை குறிவைத்து நிதி நிறுவனம், பைனான்ஸ், அடகு கடை என்ற பெயரில் வெற்று பத்திரங்களில் கையெழுத்து பெற்று கடன் கொடுத்து தினசரி வசூல், மீட்டர் வட்டி, தின வட்டி என அதிக வட்டி வாங்கி வரும் கந்து வட்டி வசூலிக்கும் நபர்களின் பட்டியலை உளவு பிரிவு போலீசார் ரகசியமாக சேகரித்து வருகின்றனர்.

    இந்த ரகசிய தகவல் கசிய தொடங்கியதால் சென்னிமலை பகுதியில் கந்து வட்டி கும்பல் அலறிதுடித்து வருகின்றனர்.

    தற்போது பணம் பெற்ற நபர்களிடம் மிரட்டும் தோனியை விட்டு பம்பி பணிந்து கடன் தொகையினை வசூலித்து வருகின்றனர்.

    ஆசனூர் வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த புள்ளிமானை வேட்டையாடிய 10-க்கும் மேற்பட்ட செந்நாய்கள் ஒன்று சேர்ந்து கூட்டமாக மான் இறைச்சியை கடித்து குதறி சாப்பிட்டது.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசிக்கின்றன. குறிப்பாக பவானிசாகர், தலமலை, ஆசனூர் மற்றும் தாளவாடி வனப்பகுதியில் செந்நாய்கள் அதிகளவில் காணப்படுகிறது.

    செந்நாய்கள் எப்போதும் கூட்டமாக நடமாடுவதோடு மான் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டை யாடும்போது 10-க்கும் மேற்பட்ட நாய்கள் ஒன்று சேர்ந்து வேட்டையாடி பின்னர் இறைச்சியை உண்பது வழக்கம்.

    இந்நிலையில் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை யோரத்தில் ஆசனூர் வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த புள்ளி மானை வேட்டையாடிய 10-க்கும் மேற்பட்ட செந்நாய்கள் ஒன்று சேர்ந்து கூட்டமாக மான் இறைச்சியை கடித்து குதறி தின்றன.

    தற்போது பெய்த மழையால் ஆசனூர் வனப்பகுதி பசுமையாக காட்சியளிக்கிறது. இதனால் பசுமையாக இருந்து புற்களை சாப்பிட வரும் புள்ளிமான்களை செந்நாய்கள் கூட்டம் கூட்டமாக தாக்கி வேட்டையாடி வருகின்றன.

    • ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 11 நாட்களுக்கு மேலாக தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
    • தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 11 நாட்களுக்கு மேலாக தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மேலும் ஒரே நாளில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 699 ஆக உயர்ந்துள்ளது. நேற்று கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 952 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 11 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற சொந்த வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்கள் சொந்தமாக வீட்டுமனை வைத்திருந்தால் ரூ.4 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.
    • இத்தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற சொந்த வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்கள் சொந்தமாக வீட்டுமனை வைத்திருந்தால் அவர்களா–கவே வீடு கட்டி கொள்ள நிதியுதவி வழங்கப்படுகிறது.

    தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கனவே கட்டப்பட்ட குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற நிதியுதவி அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இத்தொழிலாளர்கள் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.4 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.

    நலவாரியத்தில் பதிவு பெற்று 3 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து புதுப்பித்தல் உள்ள தொழிலாளர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். சொந்த வீட்டுமனை வைத்திருந்தால் 300 சதுரடி அளவில் வீடு கட்ட இடவசதி இருக்க வேண்டும். இந்நிலம் அத்தொழிலாளி அல்லது அவரது குடும்ப உறுப்பினர் பெயரில் இருக்க வேண்டும். நில உரிமைக்கான பட்டா முறையாக பெற்றிருக்க வேண்டும்.

    நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற ரூ.4 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும். அத்தொழிலாளியின் ஆண்டு வருவாய் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

    தகுதியானவர்கள் நலவாரிய உறுப்பினர் அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, குடும்ப உறுப்பினர் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல், ஒரு புகைப்படம், வருமான வரி சான்றிதழ் ஆகியவற்றை tnuwwb.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    கூடுதல் விபரம் அறிய ஈரோடு சென்னிமலை சாலை அரசு ஐ.டி.ஐ. பின்புறம் உள்ள ஒருங்கி ணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகத்தில் இயங்கும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம் அல்லது 0424 2275592 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம்.

    இத்தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் முருகேசன் தெரிவித்துள்ளார். 

    ×