என் மலர்
தமிழ்நாடு

ரப்தி சாகர் ரெயில் ரத்து செய்யப்பட்டதால் ஈரோடு ரெயில் நிலையத்தில் 2 ஆயிரம் பயணிகள் தவிப்பு
- பீகார் உள்பட பல்வேறு மாநிலங்களில் ரெயில்கள் தாக்கப்படுவதால் ரப்தி சாகர் எக்ஸ்பிரஸ் ரெயிலை திடீர் என ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்தது.
- ஒரே நேரத்தில் ஏராளமான பயணிகள் திரண்டதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதியது. பின்னர் அவர்கள் பஸ்களிலும், வேறு ரெயில்களிலும் புறப்பட்டு சென்றனர்.
ஈரோடு:
மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக வடமாநிலங்களில் கலவரம் நடந்து வருகிறது. மேலும் ரெயில்கள் தீ வைத்து எரிக்கப்பட்டும் ரெயில் நிலையங்கள் சூறையாடப்பட்டும் வருகிறது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பீகார் மாநிலம் பரோணிக்கு நேற்று காலை 10.50 மணி அளவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளுடன் ரப்தி சாகர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர் வழியாக நேற்று மாலை 5 மணி அளவில் ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்தடைந்தது.
பீகார் உள்பட பல்வேறு மாநிலங்களில் ரெயில்கள் தாக்கப்படுவதால் ரப்தி சாகர் எக்ஸ்பிரஸ் ரெயிலை திடீர் என ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்தது.
இதுகுறித்து ஈரோடு ரெயில் நிலையத்தில் அறிவிப்பு செய்யப்பட்டது. இதனால் அந்த ரெயிலில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ரெயில் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து சென்னை வரையாவது ரெயிலை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் ரெயில்வே அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதையடுத்து மாலை 6.20 மணிக்கு ரப்தி சாகர் எக்ஸ்பிரஸ் மீண்டும் எர்ணாகுளத்துக்கு புறப்பட்டது.
இதன் காரணமாக அந்த ரெயிலில் பயணித்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் ஈரோடு ரெயில் நிலையத்தில் இறங்கினர். அவர்கள் எப்படி செல்வது என்று தெரியாமல் தவித்தனர். ஒரே நேரத்தில் ஏராளமான பயணிகள் திரண்டதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதியது. பின்னர் அவர்கள் பஸ்களிலும், வேறு ரெயில்களிலும் புறப்பட்டு சென்றனர்.