என் மலர்
ஈரோடு
- ஈரோடு குமலன்குட்டை பகுதியில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனா்.
- இருவரிடம் உரிய ஆவணங்கள் சமர்பித்து பெற்று செல்லலாம் என பறக்கும் படையினர் அறிவுறுத்தினர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 3 பறக்கும் படை, 3 நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இக்குழுவினர் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரும் பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் இன்று அதிகாலை வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில், காரை ஓட்டி வந்தவரிடம் ரூ.2 லட்சம் ரொக்கம் இருந்தது. அவரிடம் விசாரணை நடத்தியதில், அந்த நபர் கேரளா மாநிலத்தை சேர்ந்த மாட்டு வியாபாரி ரபீக் என்பதும், கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு மாடுகள் வாங்க பணத்தை எடுத்து வந்ததாக கூறியுள்ளார்.
இருப்பினும், அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் ரூ.2 லட்சத்தையும் பறிமுதல் செய்து, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல், ஈரோடு குமலன்குட்டை பகுதியில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்கு வந்த காரில் சோதனை செய்தபோது, காரில் ரூ.2.20 லட்சம் ரொக்கம் இருந்தது. இதையடுத்து காரை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கேரளாவை சேர்ந்த முனீர் என்பதும், கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு மாடு வாங்க பணத்தை எடுத்து வந்ததும் தெரியவந்தது.
ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து, தேர்தல் பிரிவு கட்டுப்பாட்டு அலுவலரிடம் ஒப்படைத்தனர். இருவரிடம் உரிய ஆவணங்கள் சமர்பித்து பெற்று செல்லலாம் என பறக்கும் படையினர் அறிவுறுத்தினர். ஒரே நாளில் 2 வியாபாரிகளிடம் பறக்கும் படையினர் ரூ.4.20 லட்சம் பறிமுதல் செய்திருப்பது வெளிமாநில மாட்டு வியாபாரிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி அருகே சிறுவலூர் மீன் கிணறு, சின்ன மூப்பன் வீதியைச் சேர்ந்தவர் தன சேகர் (வயது 36). இவருக்கும் விரியங்கிணற்று பாளையத்தை சேர்ந்த பாலாமணி என்பவருக்கும் இடையே கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு 10 வயதில் வந்தனா என்ற மகளும், 7 வயதில் மோனீஸ் என்ற மகனும் உள்ளனர். வந்தனா 5-ம் வகுப்பும், மோனீஸ் 2-ம் வகுப்பும் படித்து வந்தனர். தனசேகரும், பாலாமணியும் வெள்ளாங்கோவிலில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.
தனசேகர் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று கணவன்-மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரத்தில் தென்னை மரத்தில் வண்டுகளை கட்டுப்படுத்தும் விஷ மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து மகனுக்கும், மகளுக்கும் கொடுத்துள்ளனர். பின்னர் கணவன்-மனைவி இருவரும் விஷத்தை குடித்துள்ளனர். வந்தனா, மோனீஸ் இருவரும் குடித்த போது கசப்பு காரணமாக கீழே துப்பி விட்டு கதறி அழுதனர்.
அதற்குள் தனசேகரனும், பாலமணியும் விஷம் குடித்து உயிருக்கு போராடினர். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரது வீட்டுக்கு ஓடி வந்தனர். நான்கு பேரையும் மீட்டு பெருந்துறை உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே, தனசேகரனும் பாலமணியும் உயிரிழந்தனர். குழந்தைகள் வந்தனாகவும், மோனீசும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் வந்தனா, மோனீஸ் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- வாக்களிக்க வசதியாக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
- பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 636 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 760 பெண் வாக்காளர்களும், திருநங்கை வாக்காளர்கள் 37 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
இடைத்தேர்தலையொட்டி இவர்கள் வாக்களிக்க வசதியாக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் மின்சார வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் கூட்ட நெரிசல் இன்றி வாக்களிக்க தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, வாக்குச்சாவடிகள் தயார்படுத்தும் பணி தீவிரமாக நடந்தது வருகிறது.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 237 வாக்குச்சாவடிகளில், 4 இடங்களில் உள்ள 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டு, அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள போலீசாருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், வாக்காளர்கள் அதிகம் உள்ள பி.பி.அக்ரஹாரம், ராஜாஜிபுரம், வளையக்கார வீதி, மகாஜன பள்ளி ஆகிய 4 இடங்களில் உள்ள 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும். மேலும் அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, அமைதியாக தேர்தல் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.
- நாளை கடைசி நாள் என்பதால் தி.மு.க. வேட்பாளர் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்வார்கள்.
- அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 8-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 14-ந்தேதி சென்னையில் காலமானார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானது. இதைத்தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம், ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று கடந்த 7-ந்தேதி அறிவித்தது.
அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. கடந்த 10-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அன்று 3 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். 11 மற்றும் 12-ந் தேதி விடுமுறை தினமாகும். அதைத்தொடர்ந்து 13-ந்தேதி நடந்த வேட்புமனு தாக்கலின்போது 6 பேர் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் முதல் இன்று (வியாழக்கிழமை) வரை தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை ஆகும். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்ய நாளை (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும். போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் நாளை பகல் 11 மணியில் இருந்து பிற்பகல் 3 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.
நாளை கடைசி நாள் என்பதால் தி.மு.க. வேட்பாளர் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்வார்கள். மேலும் சுயேச்சை வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற வருகிற 20-ந்தேதி கடைசி நாள் ஆகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 8-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
- அத்தியாவசிய தேவைகளுக்காக ரொக்க பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் எடுத்துச்செல்லும்போது உரிய ஆவணங்கள் வைத்துக்கொள்ள வேண்டும்.
- உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த நிர்மலா, முஸ்தபா, சண்முகம் ஆகியோரிடம் மொத்தம் ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்து 860 திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. எனவே வாக்காளர்களுக்கு பண பட்டுவாடாவை தடுக்கும் வகையில் ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் ரொக்க பணம் கொண்டு செல்வதுதடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக ரொக்க பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் எடுத்துச்செல்லும்போது உரிய ஆவணங்கள் வைத்துக்கொள்ள வேண்டும்.
தேர்தல் பறக்கும் படை, சோதனைச்சாவடி, நிலையான கண்காணிப்பு படையினரின் சோதனையின் போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்படும் ரொக்க பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். அதன்படி கடந்த 10-ந் தேதி முதல் தினசரி பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. நேற்று காலை வரை ரூ.5 லட்சத்து 52 ஆயிரத்து 860 பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த நிர்மலா, முஸ்தபா, சண்முகம் ஆகியோரிடம் மொத்தம் ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்து 860 திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை ஈரோடு கிழக்கு தொகுதி எல்லை பகுதியான பவானி ரோடு சுண்ணாம்பு ஓடை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி என்.சதீஸ்குமார் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஈரோடு நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் அந்த காரில் ரூ.1 லட்சம் சிக்கியது.
விசாரணையில் காரில் பணம் கொண்டு வந்தவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் திருவள்ளுவர் வீதியை சேர்ந்த தபஸ் மந்தல் என்பது தெரியவந்தது. பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக கொண்டு வந்ததாக அவர் தெரிவித்தார். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லை. எனவே பணத்தை பறிமுதல் செய்த பறக்கும்படையினர் ரூ.1 லட்சத்தை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டுவரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்தனர்.
- நேற்று மாலை முதல் தி.மு.க.வினர் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.
- இந்த முறை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என தி.மு.க.வினர் தேர்தல் பணிகளை தொட ங்கி உள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் வரும் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் தி.மு.க சார்பில் வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அ.தி.மு.க-பா.ஜ.க தேர்தலை புறக்கணித்துள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
இதனால் ஈரோடு தேர்தல் களம் கடந்த முறை போன்று பரபரப்பு இல்லாமல் காட்சியளிக்கிறது. அமைச்சர் முத்துசாமி தலைமையில் தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்பு நிர்வாகிகளை நேரில் சந்தித்து தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை முதல் தி.மு.க.வினர் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.
அமைச்சர் முத்துசாமி தலைமையில் வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் மற்றும் நிர்வாகிகள் பெரியார் நகர் பகுதி, கள்ளுக்கடை மேடு, ஓடைப்பள்ளம் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை கூறி வாக்கு சேகரித்தனர். அதைத்தொடர்ந்து இன்று 2-வது நாளாக காலை 7 மணிக்கு தி.மு.க.வினர் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.
இன்று எஸ்.கே.சி ரோடு, மாமலை வீதி போன்ற பகுதிகளில் ஒவ்வொரு வீடாகச் சென்று தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்குசேகரித்து வருகின்றனர். கடந்த 2023-ம் ஆண்டு நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த முறை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என தி.மு.க.வினர் தேர்தல் பணிகளை தொட ங்கி உள்ளனர்.
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார்.
- நாம் தமிழர் சார்பில் மா.கி. சீதாலட்சுமி (முதுகலை ஆய்வியல் திறைஞர் (M.A, M.Phil.,) போட்டியிடுகிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு பிப்ரவரி 5-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார்.
பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தேர்தலை புறக்கணித்து உள்ளது. பா.ஜ.க,, தே.மு.தி.க. ஆகிய கட்சிகளும் போட்டியிடாமல் விலகி உள்ளன. நாம் தமிழர் சார்பில் மா.கி. சீதாலட்சுமி (முதுகலை ஆய்வியல் திறைஞர் (M.A, M.Phil.,) போட்டியிடுகிறார்.
இதனால் தற்போது முதல் முறையாக நாம் தமிழர் கட்சி ஆளும் கட்சியான தி.மு.க.வை நேரடியாக தேர்தல் களத்தில் சந்திக்கிறது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையை திமுக இன்று தொடங்கி உள்ளது. இதன்படி பெரியார் நகரில் வீடு வீடாக சென்று வேட்பாளர் சந்திரகுமார் மற்றும் அமைச்சர் முத்துசாமி ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.
- தேர்தல் பறக்கும் படையினர் ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
- பணத்தை மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள தேர்தல் அலுவரிடம் ஒப்படைத்தனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை, கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் தேர்தல் பறக்கும் படையினர் ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது காரில் ரூ.1 லட்சம் பணம் இருப்பது தெரிய வந்தது. இது குறித்து காரை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை நடத்திய போது அவர் கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த ஜவுளி வியாபாரி முஸ்தபா என தெரிய வந்தது.
ஈரோடு மாவட்டத்தில் ஜவுளி வாங்க வந்திருப்பதாக கூறினார். எனினும் பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் அந்த பணத்தை மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள தேர்தல் அலுவரிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல் நேற்று ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட குமலன்குட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் ரூ. 1.22 லட்சம் இருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த பா.ம.க கவுன்சிலர் பப்லு உள்பட 3 பேர் என தெரியவந்தது. அவர்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்கள் வார்டில் உள்ள பொதுமக்களுக்கு வழங்குவதற்காக புத்தாடை வாங்க ஈரோடு வந்ததாக தெரிவித்தனர்.
எனினும் அவர்கள் கொண்டு வந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து மாநகராட்சி தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
ஏற்கனவே அரசு ஒப்பந்ததாரரிடம் ரூ.1 லட்சம் பணமும், லேத் பட்டறை உரிமையாளரிடம் ரூ.1.80 லட்சமும், பெண் ஒருவரிடம் ரூ.50 ஆயிரத்து 860 என மொத்தம் இதுவரை ரூ.5 லட்சத்து 52 ஆயிரத்து 860 பணம் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் இதற்கு முன்பு நடைபெற்ற பெரும்பாலான இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியே வெற்றி பெற்றுள்ளது.
- தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை அதை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பதற்கு தி.மு.க.வினர் திட்டமிட்டு உள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு பிப்ரவரி 5-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
தி.மு.க. வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் போட்டியிடும் நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தேர்தலை புறக்கணித்து உள்ளது. பா.ஜ.க,, தே.மு.தி.க. ஆகிய கட்சிகளும் போட்டியிடாமல் விலகி உள்ளன.
இதனால் தி.மு.க.வுக்கும், சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி இதுவரை பல்வேறு தேர்தல்களை சந்தித்துள்ளது. அப்போதெல்லாம் இது போன்று பிரதான கட்சியுடன் அந்த கட்சி நேரடி மோதலில் ஈடுபட்டது இல்லை. தற்போது முதல் முறையாக நாம் தமிழர் கட்சி ஆளும் கட்சியான தி.மு.க.வை நேரடியாக தேர்தல் களத்தில் சந்திக்கிறது.
தமிழகத்தில் இதற்கு முன்பு நடைபெற்ற பெரும்பாலான இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. அப்போதெல்லாம் ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் களத்தில் நின்று போட்டியை ஏற்படுத்தி உள்ளன. ஆனால் ஈரோடு இடைத்தேர்தலில் பிரதான கட்சிகள் போட்டியில் இருந்து பின் வாங்கியதால் தி.மு.க. வேட்பாளருக்கும், நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கும் இடையே மட்டுமே போட்டி ஏற்பட்டிருப்பதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்பர பரப்பின்றியே காணப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏற்கனவே நடைபெற்ற இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றிருந்தார். தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை அதை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பதற்கு தி.மு.க.வினர் திட்டமிட்டு உள்ளனர்.
தி.மு.க. அரசின் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்பதன் மூலமாகவும், முக்கிய எதிர்க்கட்சிகள் களத்தில் இல்லாததாலும் தி.மு.க. வேட்பாளரை இதுவரை இல்லாத வகையில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க முடியும் என்று தி.மு.க. தலைவர்கள் நம்புகிறார்கள்.
இதற்கு முன்பு நடைபெற்ற பல்வேறு இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி சார்பில் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொகுதிக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அது போன்று யாரும் பிரசாரம் செய்ய செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதனால் உள்ளூர் தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் மட்டுமே அங்கு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு கட்சியின் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும்.
- சுயேச்சை வேட்பாளர்கள் சின்னங்களை தேர்வுசெய்து வேட்புமனுவில் குறிப்பிட வேண்டும்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதி இடைத்தே ர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நட க்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் தேர்தல் மன்னன் பத்மராஜன் உள்பட 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்த னர்.
வேட்புமனு தாக்கல் செய்துள்ள 3 பேரும் ஈரோடு அல்லாத வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள். ஈரோடு மாவட்டம் அல்லது ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட யாரும் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
இடைத்தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு கட்சியின் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். சுயேச்சையாக போட்டியிடு பவர்களுக்காக தேர்தல் ஆணையம் 135 சின்னங்கள் ஒதுக்கி உள்ளது. சுயேச்சை வேட்பாளர்கள் அந்த பட்டியலை பார்த்து விரும்பும் 3 சின்னங்களை தேர்வுசெய்து வேட்புமனுவில் குறிப்பிட வேண்டும்.
இதில் ஏதாவது ஒரு சின்னம் ஒதுக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே சின்னம் கேட்டு இரு ந்தால் குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும்.
- வாக்குப்பதிவுக்கு 480 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
- முதல் கட்ட சரிபார்ப்பு பணி நேற்று முடிவடைந்ததை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது.
ஈரோடு:
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 237 வாக்குச்சாவடி மையங்களில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவுக்கு 480 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இதை முன்னிட்டு, வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல் நிலை சரிபார்க்கும் பணி பெங்களூரு பெல் நிறுவனத்தின் மூலம் கடந்த 6-ந்தேதி முதல் ஈரோடு மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் நடைபெற்று வந்தது. இதில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல் கட்ட சரிபார்ப்பு பணி முடிவுற்ற பின்னர், இந்திய தேர்தல் ஆணையம் 5 சதவீதம் மாதிரி வாக்குப்பதிவு நடத்திட உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, முதல் கட்ட சரிபார்ப்பு பணி நேற்று முடிவடைந்ததை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. இந்த பணியை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் மாதிரி வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன், 19 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயிற்சி நடத்துவதற்காக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான மனிஷிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
இந்த ஆய்வின்போது, ஈரோடு ஆர்.டி.ஓ.ரவி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் முஹம்மது குதுரத்துல்லா, தேர்தல் பிரிவு தாசில்தார் சிவசங்கர் உள்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
- ஈரோடு கிராமடையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
- சந்திரகுமார் தி.மு.க.வில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளரான வி.சி.சந்திரகுமார் (வயது 57) ஈரோடு கிராமடையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வி.சி.சந்திரகுமாரின் மனைவி அமுதா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
வி.சி.சந்திரகுமார் ஜவுளி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். 1987-ம் ஆண்டு ஈரோடு அ.தி.மு.க வார்டு பிரதிநிதியாக இருந்தார். பின்னர் நடிகர் விஜயகாந்த் மீது கொண்ட பற்றால் விஜயகாந்த் ரசிகர் மன்ற தலைவராக செயல்பட்டார்.
பின்னர் விஜயகாந்த் 2005-ம் ஆண்டு தே.மு.தி.க.வை தொடங்கிய போது வி.சி.சந்திரகுமார் தே.மு.தி.க.வில் இணைந்து அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக பணியாற்றினார்.

2008-ம் ஆண்டு ஈரோடு தொகுதி மறுசீரமைக்கப்பட்டு ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு என பிரிக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதியில் முதலியார் பிரிவினருக்கு கணிசமான ஓட்டு வங்கி உள்ளது.
இதன் காரணமாக 2011-ம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டியிட்டார்.
அப்போது அந்த தேர்தலில் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து தி.மு.க சார்பில் தற்போதைய அமைச்சர் சு.முத்துசாமி போட்டியிட்டார். அந்த தேர்தலில் வி.சி.சந்திரகுமார் 69 ஆயிரத்து 166 வாக்குகள் பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட முத்துசாமி 58 ஆயிரத்து 522 வாக்குகள் பெற்றார். இந்த தேர்தலில் சந்திரகுமார் 10 ஆயிரத்து 644 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஈரோடு கிழக்கு தொகுதியின் முதல் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் 2016-ம் ஆண்டு வி.சி.சந்திரகுமார் தே.மு.தி.க தலைமையிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தி.மு.க.வில் இணைந்தார். அவருக்கு தி.மு.க.வில் மாநில கொள்கை பரப்பு அணி இணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
2016-ம் ஆண்டு நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் தி.மு.க சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிட்டார்.
இந்த தேர்தலில் சந்திரகுமார் 57 ஆயிரத்து 85 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தென்னரசு 64 ஆயிரத்து 879 வாக்குகள் பெற்று 7 ஆயிரத்து 794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பின்னர் சந்திரகுமார் தி.மு.க.வில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் சேலம் தொகுதி பொறுப்பாளராக பணியாற்றினார். 2021 சட்டமன்ற தேர்தலில் குமாரபாளையம் தொகுதி பொறுப்பாளராகவும் 2023-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராகவும் பணியாற்றினார். அரவக்குறிச்சி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முழு நேரமாக தேர்தல் பணியாற்றியதும் குறிப்பிடத்தக்கது.






