என் மலர்tooltip icon

    ஈரோடு

    • அ.தி.மு.க. என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் பிரச்சனை இல்லை.
    • கட்சி கட்டுப்பாட்டை மீறி மனு தாக்கல் செய்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் வி.சி.சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

    இந்நிலையில் வேட்புமனு தாக்கல் நேற்றுமுன்தினத்துடன் நிறைவடைந்தது. இடைத்தேர்தலில் மொத்தம் 55 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஈரோடு அக்ரஹார வீதியைச் சேர்ந்த செந்தில் முருகன் என்பவரும் தேர்தலில் போட்டியிட சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவும் ஏற்கப்பட்டது.

    இவர் ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளராக உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க புறக்கணித்த நிலையில் தேர்தலில் இவர் போட்டியிடுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    அ.தி.மு.க.வில் இருந்த செந்தில் முருகன் கடந்த 2023-ம் ஆண்டு ஓ.பி.எஸ் அணியில் இருந்து அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். அணி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.

    அடுத்த சில நாட்களில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் செந்தில் முருகன் அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்து ஈரோடு மாவட்ட அ.தி.மு.க எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணை செயலாளராக பொறுப்பேற்று வந்தார்.

    தற்போது இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடவில்லை என அறிவித்த நிலையில் செந்தில் முருகன் கட்சி கட்டுப்பாட்டை மீறி மனு தாக்கல் செய்து உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது குறித்து செந்தில் முருகன் கூறும்போது, ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள பிரச்சினைகள் எனக்கு அதிகம் தெரியும். நிச்சயமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவேன். அதற்காக அ.தி.மு.க. என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் பிரச்சனை இல்லை.

    ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு என்னென்ன திட்டங்கள் கொண்டு வருவேன் என்பது குறித்து பிரசாரத்தில் எடுத்துரைப்பேன். நிச்சயம் எனக்கு இந்த தேர்தல் திருப்புமுனைமையாக இருக்கும்.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்துள்ளார். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நாளையில் இருந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் நான் பிரசாரத்தை தொடங்குகிறேன் என்றார்.

    இதுகுறித்து ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் கே.வி.ராமலிங்கம் கூறும் போது, செந்தில் முருகன் அ.தி.மு.க.வில் இருப்பது உண்மைதான். கட்சி தலைமை அறிவிப்புக்கு மாறாக அவர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதியானால் அவர் மீது நிச்சயம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து கட்சி தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார். 

    • யானை அருகே சென்று அதிக சத்தம் எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தக் கூடாது.
    • செல்போனில் யானைகளை படம் எடுக்க கூடாது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    குறிப்பாக கடம்பூர் ஆசனூர் மலைப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. சமீப காலமாக யானைகள் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் நடமாடுவது, கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவது தொடர் கதையாகி வருகிறது.

    தற்போது யானைகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடம் மாறி வருவதால் மலைப்பகுதியை ஒட்டி இருக்கும் கிராம மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி ஆசனூர் அடுத்த செம்மண் திட்டு என்ற பகுதியில் சாலையை 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைக் கூட்டங்கள் கடந்து சென்றன. திடீரென யானை கூட்டம் சாலையை கடந்து சென்றதால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து தங்களது வாகனங்களை சிறிது தொலைவிலேயே நிறுத்தினர்.

    பின்னர் யானை கூட்டம் வனபகுதிக்குள் சென்றதும் வாகன ஓட்டிகள் அந்தப் பகுதி வழியாக கடந்து சென்றனர்.

    இதுகுறித்து வனத்துறை யினர் கூறும்போது, தற்போது வனப்பகுதியில் கொசுக்கடி தொல்லை அதிகரித்து இருப்பதால் யானைகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இட த்திற்கு இடம் பெயர்ந்து கொண்டே இருக்கும். யானை கூட்டங்கள் ஒரே இடத்தில் இருக்காது.

    தற்போது தாளவாடி, ஆசனூர் வனப்பகுதி அருகே உள்ள சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே இந்த பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். எக்காரணம் கொண்டும் வாகனங்களை வனப்பகுதியில் நிறுத்த வேண்டாம்.

    இதேப்போல் யானைகளுக்கு எந்த ஒரு தொந்தரவும் கொடுக்கக் கூடாது. குறிப்பாக யானை அருகே சென்று அதிக சத்தம் எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தக் கூடாது. செல்போனில் யானைகளை படம் எடுக்க கூடாது. இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • அனைத்து கட்சிகளும் நேரடியாக மோதும் சூழல் ஏற்பட்டுள்ளது.
    • தேர்தல் களப்பணியை தொடங்க முடியாமல் திணறல்.

    பெருந்துறை:

    ஈரோடு கிழக்கு இடை த்தேர்தலில் முக்கிய கட்சிகளான அதிமுக, பா.ஜ.க., தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணித்துள்ளன. இதன் காரணமாக இத்தொகுதியில் தி.மு.க., நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் நேரடியாக மோதும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

    தற்போது ஆளும் கட்சி யான தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி ஆகியோரின் வேட்பு மனுக்கள் உள்பட 55 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

    சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்று வரும் நிலையில் அண்மையில் மாநில கட்சியாக நாம் தமிழர் கட்சிக்கு அந்தஸ்து வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

    ஆனால் அக்கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. நாம் தமிழர் கட்சியை பொறுத்த வரை முன்பு கரும்புடன் கூடிய விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

    2024 மக்களவைத் தேர்தலில் இக்கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த கரும்புடன் கூடிய விவசாயி சின்னம் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதையடுத்து மைக் சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    8 சதவீத வாக்குகளுடன் தற்போது மாநில கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளதால் நாம் தமிழர் கட்சிக்கு இதுவரை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட வில்லை.

    இம்முறை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டால் கிட்டத்தட்ட இதுவே நாம் தமிழர் கட்சிக்கு நிரந்தர சின்னமாக இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே விவசாயி அல்லது மைக் சின்னத்தை ஒதுக்கீடு செய்யுமாறு நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளது.

    இதுதொடர்பாக ஈரோடு கிழக்கு தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் மணிஷ் கூறுகையில், கரும்பு விவசாயி அல்லது மைக் சின்னம் ஒதுக்கீடு செய்யு மாறு நாம் தமிழர் கட்சியினர் கேட்டுள்ளனர். கரும்புடன் உள்ள விவசாயி சின்னம் ஏற்கனவே வேறு கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டதால் அந்த சின்னம் கிடைக்க வாய்ப்பில்லை.

    நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்படும் சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்கும். நாம் தமிழர் கட்சிக்கு என்ன சின்னம் என்பது குறித்து நாளை 20-ந்தேதி தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    பிப்ரவரி 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்னும் தேர்தலுக்கு முழுமையாக 15 நாட்கள் மட்டுமே உள்ளது.

    இன்னும் சின்னம் அறிவிக்கப்படாததால் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி சின்னத்தைக் கூறி வாக்கு களை சேகரிக்க முடியாமல் தவிக்கிறார். பொது மக்களையும் வாக்காளர்களையும் சந்தித்து சின்னத்தை கூறாமல் வாக்குகளை சேகரிக்கிறார்.

    தற்போது தொகுதி முழுவதும் திமுக வேட்பாளர் சந்திரகுமார் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள நிலையில், அவருக்கு இணையாக தேர்தல் களப்பணியை தொடங்க முடியாமல் நாம் தமிழர் கட்சியினர் சுணங்கி போய் உள்ளனர்.

    இதன் காரணமாக தேர்தல் களத்தில் திமுகவை தவிர சுயேச்சைகள் மற்றும் உள்ளிட்ட எந்த கட்சியும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடாததால் ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் களம் ஒரு வழி பாதையாக மாறிவிட்டது.

    • ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    • வரும் பிப்ரவரி 5-ந் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 10-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.

    இறுதி நாளான நேற்று தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார், தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருக்கு மாற்றாக அவரது மனைவி அமுதா மனு தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியும் மனு தாக்கல் செய்தார். இதேபோல் சிறிய அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மொத்தத்தில் 58 வேட்பாளர்கள் 65 வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

    இதில் தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் 4 மனுக்கள், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 3 மனுக்கள் என கூடுதலாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதில் தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் சொத்து மதிப்பு ரூ.2.56 கோடி ரூபாய் என காண்பிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் இன்று காலை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது. இதற்காக ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மணிஷ், கிழக்கு தொகுதி பொது பார்வையாளர் அஜய் குமார் குப்தா ஆகியோர் தலைமையில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.

    இதையொட்டி தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது பிரதிநிதிகள் உடன் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்திருந்தனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி தனது பிரதிநிதிகள் உடன் வந்திருந்தார்.

    தி.மு.க சார்பில் சந்திரகுமார் வரவில்லை. அவர்களது பிரதிநிதிகள் வந்திருந்தனர். வேட்பு மனுக்கள் பரிசீலனையில் தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் மனு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மனுக்கள் ஏற்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் தெரிவித்தார். மதியம் 12.30 நிலவரப்படி மேலும் 20 சுயேச்சை வேட்பாளர்களில் மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து மதியம் 2 மணிக்கு பிறகு எவ்வளவு மனுக்கள் ஏற்கப்பட்டது என்ற முழுமையான விபரம் தெரியவரும் என்ற அதிகாரிகள் தெரிவித்தனர். தகுதியில்லாத சில மனுக்களை அலுவலர் நிராகரித்தார். இதைத்தொடர்ந்து வரும் 20-ந் தேதி வேட்பு மனுக்கள் திரும்ப கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னத்துடன் ஒதுக்கீடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஒரே சின்னத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் கேட்டால் அவர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வரும் பிப்ரவரி 5-ந் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    இதற்காக 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. பதற்றமான 9 வாக்குச்சாவடி மையங்களில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து வருகிற பிப்ரவரி 8-ந் தேதி (சனிக்கிழமை) சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெறுகிறது. அன்று மதியம் முடிவுகள் தெரிந்துவிடும்.

    • வேட்புமனுக்களை வாபஸ் பெற நாளை மறுநாள் கடைசி நாள் ஆகும்.
    • அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 14-ந்தேதி சென்னையில் காலமானார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானது. இதைத்தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம், ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று கடந்த 7-ந்தேதி அறிவித்தது.

    அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. கடந்த 10-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. நேற்று கடைசி நாள் தி.மு.க. வேட்பாளர் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார்கள். மேலும் சுயேச்சை வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்தனர். மொத்தம் 65 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து இன்று வேட்புமனுக்கள் மீது பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற நாளை மறுநாள் கடைசி நாள் ஆகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 8-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

    • நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
    • வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த வில்லரசம்பட்டி, ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர் அதே பகுதியில் கடந்த 16 வருடமாக கோழிப்பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். 2 தகர செட்டுகள் அமைத்து கோழிக்குஞ்சுகளை வளர்த்து வருகிறார். கோழிக்குஞ்சுகள் பெரியதானதும் அவற்றை விற்று விடுவார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பாலசுப்ரமணி 5 ஆயிரம் கோழி குஞ்சுகளை வாங்கி 2 தகர செட்டுகளில் அடைத்து வைத்திருந்தார். ஒரு செட்டில் 2,500 கோழிக்குஞ்சுகள் வீதம் 2 செட்டில் 5 ஆயிரம் கோழிக்குஞ்சுகளை அடைத்து வளர்த்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கோழிப்பண்ணையில் இருந்து புகை வெளியேறி சிறிது நேரத்தில் தீப்பற்றி எறிய தொடங்கியது. இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பாலசுப்பிரமணிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் இது குறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    எனினும் இந்த தீ விபத்தில் ஒரு தகர செட்டில் இருந்த 2,500 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி இறந்தன. அந்த தகர செட்டு முழுவதும் தீயில் எரிந்து கரிக்கட்டையானது. 2500 கோழிக்குஞ்சுகள் ரூ.1.50 லட்சமும், தகர செட்டு ரூ.13 லட்சமும் என மொத்தம் ரூ. 15 லட்சம் மதிப்பான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. தீயணைப்பு வீரர்கள் உரிய நேரத்தில் செயல்பட்டதால் மற்றொரு தகர செட்டில் இருந்த 2,500 கோழி குஞ்சுகள் உயிர் தப்பின.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்ததாக தெரிய வந்துள்ளது.

    • ஈரோட்டில் இருந்து கவுந்தப்பாடியில் உள்ள மாமியார் வீட்டிற்குச் சென்றபோது விபத்து.
    • கட்டுப்பாட்டை இழந்த பைக், பாலத்தின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.

    ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் ராகுல். 27 வயதாகும் ராகுல் இன்ஸ்டா பிரபலம். ராகுலுக்கு சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர்.

    நகைச்சுவையாகவும், வேடங்கள் போட்டு வெளியிடும் வீடியோக்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தார்.

    கலகலப்பான அவரது பேச்சு பார்வையாளர்களை ரசிக்க வைத்தது. அதற்காகவே அதிக நேரம் செலவிட்டு ரீல்ஸ்களை பதிவிட்டு வந்தார்.

    மேலும், ராகுல் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி நேரு நகர் சேர்ந்த வேலுமணி என்பவரது மகளை திருமணம் செய்தார்.

    இந்நிலையில், ராகுல் நேற்று இரவு அவரது பல்சர் RS200 பைக்கில் ஈரோட்டில் இருந்து கவுந்தப்பாடியில் உள்ள மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

    அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பைக், பாலத்தின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் ராகுல் தூக்கி வீசப்பட்டு பைக் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது. இதில், ராகுல் தலையில் பலத்த காயமந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    • கடந்த 10-ந்தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது.
    • வேட்புமனு மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது.

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.-வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14-ந்தேதி காலமானார். அதனைத்தொடர்ந்து, டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது.

    பிப்ரவரி 5-ந்தேதி வாக்குப்பதிவும், 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி கடந்த 10-ந்தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. இன்று மதியம் 3 மணியுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்தது. திமுக சார்பில் போட்டியிடும் சந்திர குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமி ஆகியோர் கடைசி நாளான இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

    நாளை வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெறும், வேட்புமனுவை திரும்பப்பெற 20-ந்தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

    அதிமுக, பாஜக உள்ளிட்ட முன்னணி கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன.

    • பல்வேறு தேர்தலில் போட்டியிட்டு வருகிறேன்.
    • ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் ஏராளமான சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தனர்.

    அப்போது அகில இந்திய ஊழல் தடுப்பு கூட்டமைப்பின் தேசிய தலைவராக இருக்கும் அபி ஆழ்வார் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தார்.

    அப்போது அவரது கழுத்தில் 50, 100, 200, 500 ரூபாய் நோட்டுகளை மாலையாக அணிந்து வந்தார். ஈரோடு மாநகராட்சி அலுவலக நுழைவு வாயில் அருகே வந்த போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து கழுத்தில் பணம் மாலையுடன் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்றனர். இதனால் அந்த நபர் ஆத்திரமடைந்து போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    அப்போது அபி ஆழ்வார் கூறும்போது, இந்தியா முழுவதும் ஊழலுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு இருக்கிறேன். அதிகாரிகள் லஞ்சம் வாங்க கூடாது. பொதுமக்களும் லஞ்சம் கொடுத்து காரியங்களை சாதிக்கக்கூடாது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு தேர்தலில் போட்டியிட்டு வருகிறேன்.

    தற்போது 52-வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காக வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருக்கிறேன். ஆனால் போலீசார் என்னை அனுமதிக்கவில்லை என்றார்.

    பின்னர் சிறிது நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த பண மாலையை கழற்றி கையில் வைத்துக் கொண்டார். அதன் பின்னர் அவர் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டார். இதனால் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • தி.மு.க-நாம் தமிழர் கட்சிக்கு இடையே இருமுனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.
    • நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று மாலை முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14-ந்தேதி உடல் நலக்குறைவால் இறந்தார்.

    இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தி.மு.க சார்பில் வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகள், பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து விட்டன. ஆனால் அதே சமயம் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க-நாம் தமிழர் கட்சிக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய 10-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

    இதில் அரசு விடுமுறை நீங்கலாக கடந்த 10-ந்தேதி, 13-ந்தேதி, 17-ந்தேதி ஆகிய 3 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த 10-ந்தேதி 3 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்தனர். அதைத்தொடர்ந்து கடந்த 13-ந் தேதி 6 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 9 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

    தி.மு.க, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் கடைசி நாளான இன்று வேட்பு மனு தாக்கல் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர்.



    இதையொட்டி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வழக்கத்தை விட பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று காலை 11 மணிக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமி கட்சியினருடன் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    அவரைத் தொடர்ந்து 12.30 மணி அளவில் தி.மு.க வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் ஈரோடு அரசு மருத்துவமனை தேர்தல் பணிமனையிலிருந்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து மேலும் சில சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. வருகிற 20-ந் தேதி வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னத்துடன் அறிவிக்கப்படுகிறது.

    வருகிற பிப்ரவரி 5-ந்தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. அதைத்தொடர்ந்து 8-ந்தேதி சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், அ.தி.மு.க, தே.மு.தி.க, நாம் தமிழர் கட்சி, சுயேட்சைகள் என 96 வேட்பாளர்கள் 121 வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் 38 மனுக்கள் தள்ளுபடி ஆகி 83 மனுக்கள் ஏற்கப்பட்டன. 6 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டு 77 பேர் களத்தில் இருந்தனர்.

    ஆனால் இந்த முறை முக்கிய எதிர் கட்சிகளான அ.தி.மு.க, பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலை புறக்கணித்து உள்ளதால் தி.மு.க-நாம் தமிழர் கட்சிக்கு இடையே இருமுனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

    இதுபோக ஒரு சில சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதனால் இந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எந்த ஒரு பரபரப்பு இன்றி உள்ளது.

    இந்த நிலையில் ஈரோடு தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று நடிகர் விஜய் அறிவித்து உள்ளார்.

    தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசாரம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. அமைச்சர் முத்துசாமி தலைமையில் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை ஆதரித்து தி.மு.க.வினர், அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒவ்வொரு பகுதியாக வீடு வீடாகச் சென்று தி.மு.க.வின் மக்கள் திட்டங்களை கூறி உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

    இதைப்போல் விசைத்தறி கூடங்களுக்கு நேரடியாக சென்று நெசவாளர்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். இதைப் போல் தி.மு.க வேட்பாளரை ஆதரித்து இன்று மாலை அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, செந்தில்பாலாஜி ஆகியோர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். இனி வரக்கூடிய நாட்களில் மற்ற அமைச்சர்கள் பிரசா ரம் மேற்கொள்ள உள்ளனர்.

    நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று மாலை முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்னும் ஓரிரு நாட்களில் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்து உள்ளனர்.

    • வனப்பகுதியை விட்டு யானை சாலையை கடந்து வேறு பகுதிக்கு செல்வதும் உண்டு.
    • வன விலங்குகள் அவ்வப்போது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்வதும், சாலையை கடப்பதும் வழக்கம்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இந்த மலைப்பகுதியில் யானை, மான், கரடி, சென்னாய் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இவற்றில் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு யானை சாலையை கடந்து வேறு பகுதிக்கு செல்வதும் உண்டு.

    இந்த சமயங்களில் சாலையில் சிறிது நேரம் நின்று சாலையோரம் உள்ள மூங்கில் தூரிகளை உடைத்து சுவைத்து விட்டு செல்லும். கடந்த 4 நாட்களாக மேற்கு மலை தாமரைக்கரை பகுதி சாலையில் ஒற்றை காட்டுயானை ஒன்று சாலையிலேயே நடந்து சென்றும், அந்த பகுதியில் உள்ள மூங்கில் தூர்களை சுவைத்தும், சாலையில் யாரும் செல்ல முடியாத அளவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி பகல் நேரத்தில் சாலையில் உலாவருவதாகவும் அந்த பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று வரும் அந்தியூர் பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகின்றார்.

    மேலும் இந்த ஒற்றை யானையால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நின்றும், வனப்பகுதிக்குள் யானை சென்ற பிறகு சாலையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் அந்த பகுதிக்கு செல்லும் வாகன ஓட்டிகள், மலைவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

    மேலும் இது குறித்து வனத்துறையினர் வன விலங்குகள் அவ்வப்போது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்வதும், சாலையை கடப்பதும் வழக்கம்.

    எனவே வாகனத்தில் செல்பவர்கள் வனப்பகுதிகளுக்குள் மிகுந்த எச்சரிக்கையோடு பாதுகாப்போடும் செல்ல வேண்டும். மேலும் அங்கே சாலையைக் கடக்கும் விலங்குகளை படம் பிடிப்பது, அதன் அருகில் செல்வது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும். எனவே மிகுந்த எச்சரிக்கையோடு செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றனர்.

    • நாளை (சனிக்கிழமை) வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது.
    • வேட்புமனுக்களை வாபஸ் பெற வருகிற 20-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 14-ந்தேதி சென்னையில் காலமானார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானது. இதைத்தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம், ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று கடந்த 7-ந்தேதி அறிவித்தது.

    அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. கடந்த 10-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அன்று 3 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். 11 மற்றும் 12-ந் தேதி விடுமுறை தினமாகும். அதைத்தொடர்ந்து 13-ந்தேதி நடந்த வேட்புமனு தாக்கலின்போது 6 பேர் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் முதல் நேற்று வரை தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை ஆகும். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்புமனுதாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆகும். போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் இன்று பகல் 11 மணியில் இருந்து பிற்பகல் 3 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.

    இன்று கடைசி நாள் என்பதால் தி.மு.க. வேட்பாளர் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்வார்கள். மேலும் சுயேச்சை வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. நாளை (சனிக்கிழமை) வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற வருகிற 20-ந்தேதி கடைசி நாள் ஆகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 8-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

    ×