என் மலர்
கடலூர்
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலி புதுநகர் 13-வது வட்டம் பகுதியை சேர்ந்தவர் சுருளிராஜன் (வயது 46). இவர் நெய்வேலி என்.எல்.சி.யில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை சுருளிராஜன் நெய்வேலி டவுன்ஷிப்பில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது செடுத்தான்குப்பம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 25) மற்றும் மேலக் குப்பம் பகுதியை சேர்ந்த தயாநிதி (26) ஆகிய 2 பேரும் அங்கு வந்தனர்.
அவர்கள் சுருளிராஜனிடம் மதுகுடிக்க பணம் கேட்டனர். சுருளிராஜன் தன்னிடம் பணம் இல்லை என கூறினர். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராஜ்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுருளிராஜனை சரமாரியாக குத்தினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே ராஜ்குமாரும், தயாநிதியும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த சுருளிராஜனை மீட்டு சிகிச்சைக்காக புதுவை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் சுருளி ராஜன் புகார் செய்தார். புகாரின் பேரில் ராஜ்குமார், தயாநிதி ஆகிய 2 பேர் மீதும் இன்ஸ்பெக்டர் ரவீந்தர்ராஜ் வழக்கு பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தார். தயா நிதியை வலைவீசி தேடிவருகிறார்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த முத்தாண்டி குப்பம் அருகே உள்ள ஆத்திரிகுப்பத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 47), விவசாயி. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன் (40) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் கலியபெருமாள் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டு உறவினர்களான பலராமன் மற்றும் பாலமணிகண்டன் ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அரிகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்களான மருதாசலம், வெள்ளக்குட்டி, கலைச் செல்வி, ராஜாமணி ஆகியோருடன் அங்கு வந்தார்.
அரிகிருஷ்ணன் முன்விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு கலியபெருமாளிடம் வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றி இருதரப்பை சேர்ந்தவர்களும் தகராறில் ஈடுபட்டனர். இது கோஷ்டி மோதலாக மாறியது. அரிகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேரும் சேர்ந்து கலியபெருமாள், பலராமன் மற்றும் பாலமணிகண்டன் ஆகியோரை சரமாரியாக கத்தியால் குத்தி, கட்டையால் தாக்கினர்.
இந்த தாக்குதலில் கலியபெருமாள் உள்ளிட்ட 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து முத்தாண்டிகுப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் வழக்குபதிவு செய்த அரிகிருஷ்ணன், மருதாசலம் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். தலைமறைவாக உள்ள கலைச்செல்வி, ராஜாமணி மற்றும் வெள்ளக்குட்டியை தேடி வருகிறார்.
கடலூர்:
கடலூர் செம்மண்டலம் தவுலத் நகர் பகுதியை சேர்ந்த பாபு (வயது 55). விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
கடந்த 11-ந் தேதி சுற்றுலா வேனுக்கு தகுதி சான்றிதழ் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது விழுப்புரம் லஞ்சஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த புரோக்கர் செந்தில்குமார் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரும் சிலையில் அடைக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து கடலூரில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின் வீட்டில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் ரூ.30 லட்சம், தங்கநகைகள் மற்றும் வெள்ளி நகைகளை கைப்பற்றினர்.
பாபுவின் வங்கி லாக்கர்களில் தங்க நகைகள் மற்றும் ஆவணங்கள் மறைத்து வைத்திருக்கலாம் என லஞ்ச ஒழிப்பு போலீசார் கருதினர். அதனைத் தொடர்ந்து கடந்த 19-ந் தேதி கடலூர் மஞ்சக்குப்பம் மற்றும் பாரதி சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பாபுவின் பெயரில் உள்ள 3 வங்கி லாக்கர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் திறந்து சோதனையிட்டனர்.
அதில் 10 கிலோ தங்க நகைகள், 20 கிலோ வெள்ளி பொருட்கள்இருந்தன. பின்பு அவற்றை மதிப்பீடு செய்து மீண்டும் லாக்கர்களில் வைத்து பூட்டி சீல் வைத்தனர்.
இந்த நிலையில் விழுப்புரம் லஞ்சஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் போலீசார் 2-வது முறையாக கடலூர் செம்மண்டலத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்றனர். பின்பு அங்கு பாபுவின் பெயரில் இருந்த 2 லாக்கர்களை திறந்து சோதனை செய்தார்கள். அதில் 500 கிராம் தங்க நகைகள் பலகோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் இருந்தன.
இதையடுத்து நகை மதிப்பீட்டாளரை வரவழைத்து நகைகள் மதிப்பிடப்பட்டன. பின்பு நகைகளும், சொத்து ஆவணங்களும் லாக்கரில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.
கடலூர் மஞ்சக்குப்பம் விநாயகர் கோவில் அருகே உள்ள தனியார் வங்கியிலும் பாபுவின் பெயரில் லாக்கர் உள்ளது. அந்த லாக்கரிலும் கோடிக்கணக்கான நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
இன்று காலை விழுப்புரம் லஞ்சஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் 4 போலீசார் கடலூர் வந்தனர். பின்பு அவர்கள் அந்த வங்கிக்கு சென்று பாபுவின் பெயரில் உள்ள 6-வது லாக்கரை திறந்து சோதனை செய்தனர். அதிலும் தங்க நகைகளும், ஏராளமான சொத்துக்களின் ஆவணங்களும் இருந்தன.
இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் 2 ஆயிரம் பவுன் தங்க நகைகள், வெள்ளி நகைகள் இருப்பது தெரியவந்தது. மேலும் பாபுவின் பெயரில் கோடிக் கணக்கான சொத்துக்கள் கடலூர், சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருப்பது தெரிய வந்துள்ளது. கடலூரில் 6 இடங்களில் வீடுகள் உள்ளன.
மேலும் அவர் பினாமி பெயரிலும் சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. #RTO #DVACRaid
சிறுப்பாக்கம் பகுதியில் கள்ள சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்வதாக விருத்தாச்சலம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் மணமல்லிக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் போலீசார் விருத்தாச்சலம் அருகே உள்ள சிறுப்பாக்கம் அடுத்த வடபாதி ஏரிக்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு காரில் கள்ளச்சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்த வட பாதியை சேர்ந்த சரத்குமார் (வயது 28). திண்டிவனம் அடுத்த ஓங்கூர் கிராமத்தை சேர்ந்த முரளி(27) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 550 லிட்டர் கள்ள சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் மணமல்லி கூறும் போது, திண்டிவனத்தை சேர்ந்த முரளி, அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரிடம் எரிசாராயம் வாங்கி அதனை சரத்குமார் என்பவர் மூலம் கடத்திச் சென்று சிறுபாக்கம் பகுதியில் விற்பனை செய்து வந்தனர்.
இதுகுறித்து வந்த தகவலின் பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 150 லிட்டர் சாராயத்துடன் ஒரு காரையும், 2 வாலிபர்களையும் கைது செய்தோம். அதில் சரத்குமார் என்பவர் தப்பி ஓட்டம் பிடித்தார். அவரைத் தேடி வந்தோம்.
இந்நிலையில் ஏழுமலையை போலீஸார் கைது செய்து விட்டதால் தற்போது காஞ்சிபுரம் மலைப்பகுதியிலிருந்து கள்ளச்சாராயத்தை கடத்தி வந்து சரத்குமாரும், முரளியும் சிறுபாக்கம் பகுதியில் விற்பனை செய்து வந்தனர். அவர்களை தற்போது கைது செய்து 550 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
இவ்வாறு தெரிவித்தார். பகுதியில் கள்ள சாராயம் மற்றும் எரிசாராயம் விற்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனை முழுமையாகத் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
விருத்தாசலம் பூதாமூரில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பல வீதிகள் உள்ளன. இதில் ஆர்.கே.ஆர் நகர் பகுதியில் சிதம்பரம் விருத்தாசலம் மெயின் ரோட்டில் மற்றும் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
இப்பகுதி மக்களின் வசதிக்காக விருத்தாச்சலம் தெற்கு பெரியார் நகர், தங்கம் நகர், பெருமாள் கோவில் பகுதியில் இருந்து ஆழ்துளை மோட்டார் மூலம் நேரடி குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் இணைப்பின் மூலம் காலை மற்றும் மாலை வேலைகளில் பொது மக்கள் குடிநீர் பிடித்து பயன்படுத்தி வந்தனர்.
நேரடி இணைப்பு என்பதால் அழுத்தம் தாங்காமல் குடிநீர் வரக்கூடிய குழாய் ஆங்காங்கே சேதமடைந்து தண்ணீர் வீணாகி வந்தது.
ஆர்.கே.நகர் பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்தனர். மேலும் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர். பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் அவதி அடைந்தனர்.
இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் விருத்தாசலம் சிதம்பரம் சாலையில் பூதாமூர் பஸ் நிறுத்தத்தில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 8 மணியிலிருந்து 8.30 மணி வரை அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் கிடைத்து விரைந்து வந்த விருத்தாசலம் போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தி உரிய அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பெயரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
சிவகங்கை மாவட்டம் ஒட்டக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 35).
இவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை மிரட்டி தனது கூட்டாளிகளுடன் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ராஜமாணிக்கம் மற்றும் அவரது கூட்டாளிகள் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டனர். பின்னர் கொள்ளையடித்த பணத்தோடு வேப்பூர் பகுதிக்கு வந்தனர். அங்கு வைத்து பணத்தை பங்குவைத்து கொண்டிருந்தனர்.
அப்போது ராஜமாணிக்கத்துக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் இடையே பணத்தை பிரிப்பதில் திடீரென வாக்கு வாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி ராஜமாணிக்கத்தை அவரது கூட்டாளிகள் தாக்கினர். பின்னர் அரிவாளால் ராஜமாணிக்கத்தை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் ராஜமாணிக்கம் மயங்கி விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவரை வேப்பூர் வனப்பகுதி அருகே போட்டுவிட்டு அங்கிருந்து அவரது கூட்டாளிகள் தப்பி ஓடிவிட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராஜமாணிக்கத்தை மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு ராஜமாணிக்கம் இறந்தார்.
கொலை சம்பவம் குறித்து ராஜமாணிக்கத்தின் தாய் ஜெயா வேப்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து ராஜமாணிக்கத்தை கொலை செய்த அவரது கூட்டாளிகள் யார்? அவர்கள் எங்கெல்லாம் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டனர் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமறைவாக உள்ள ராஜமாணிக்கத்தின் கூட்டாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் வேப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் மணி(வயது 50). இவரது மனைவி ராஜம்(45). மணி அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் விருத்தாசலம் ரெயில்வே ஜங்ஷன் அருகில் உள்ள ரெயில் நகரில் வீட்டுமனை வாங்கி அதில் வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டில் மாடுகளையும் வளர்த்து வருகிறார். அந்த வீடு அப்பகுதியில் தனிவீடாக அமைந்துள்ளது.
இதனால் கணவன்- மனைவி இருவரும் அவ்வப்போது அந்த வீட்டுக்கு வந்து மாடுகளுக்கு தீவனம் வைத்துவிட்டு நெய்வேலிக்கு சென்று விடுவார்கள்.
இந்நிலையில் இன்று காலை கணவன்-மனைவி இருவரும் விருத்தாசலம் ரெயில் நகரில் உள்ள வீட்டுக்கு வந்தனர். ராஜம் மாடுகளுக்கு தீவனம் வைத்துக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த வட மாநில வாலிபர் ஒருவன் திடீரென வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து ராஜத்தை சரமாரியாக தாக்கினான்.
அப்போது அவரது கணவர் மணி ஓடி வந்து தடுக்க முயன்றார். அவரையும் சரமாரியாக தாக்கினான். இதனால் கணவன், மனைவி இருவரும் பயந்தபடி தங்கள் வீட்டுக்குள் ஓடி சென்று கதவை பூட்டிகொண்டனர். அப்போது அந்த மர்ம வாலிபர் வீட்டின் பின்புற கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தான்.
கணவன்-மனைவி இருவரையும் களை கொத்தியால் கொடூரமாக தலையில் வெட்டினான். இதில் அவர்களது தலையில் இருந்து ரத்தம் கொட்டியது.
இதுகுறித்து தொலைபேசி மூலம் விருத்தாசலத்தில் உள்ள உறவினர்களுக்கு மணி தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் அவரது உறவினர்கள் அங்கு விரைந்து வந்தனர். அப்போது அங்கு நின்ற அந்த மர்ம வாலிபர் பிடித்து விசாரித்தனர். அவர்களையும் அந்த மர்ம நபர் சரமாரியாக தாக்கினான்.

தகவல் அறிந்து விருதாச்சலம் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அந்த வாலிபரை மீட்டு வேனில் ஏற்றினார்கள்.
அப்போது அவன் போலீசாரையும் தாக்கினான். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து கை, கால்களை கட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
அந்த வாலிபரால் தாக்கப்பட்ட மணி, அவரது மனைவி ராஜம் ஆகியோர் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் மேலும் அவருடன் 2 வாலிபர்கள் வந்தது தெரியவந்தது. தப்பி ஓடிய அந்த வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நடுக்குப்பத்தில் பழமை வாய்ந்த வீரகம்ப அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுற்றுப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.
கோவிலின் உள்ளே உண்டியல் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அந்த உண்டியலில் காணிக்கை பணம் செலுத்தி வந்தனர்.
கோவிலின் பூசாரி நேற்று இரவு பூஜை முடிந்ததும் கதவை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் மர்ம மனிதர்கள் கோவிலின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை ஒரு பையில் மூட்டையாக கட்டி கொண்டு சென்று விட்டனர்.
இன்று காலை அந்த வழியாக வந்தவர்கள் கோவிலின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. இந்த உண்டியலில் ரூ.1 லட்சம் வரை பணம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலின் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம் வடபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகமுத்து. இவரது மகன் சீனுவாசன்(வயது 25). இவர் இன்று காலை 11 மணியளவில் கடலூரை அடுத்த கூத்தப்பாக்கம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று சீனுவாசனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். அப்போது லாரியின் சக்கரம் அவர் தலைமீது ஏறியது. இதில் சீனுவாசன் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். விபத்தில் இறந்த சீனுவாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெய்வேலி புதுநகர் 13-வது வட்டம் சோழன் தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 45). இவர் என்.எல்.சி. நிறுவனத்தில் போக்குவரத்து துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
சிதம்பரத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஞானசேகரன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்றிருந்தார்.
இதையறிந்த மர்ம மனிதர்கள் நள்ளிரவு ஞானசேகரன் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கு பீரோவில் இருந்த 2 பவுன் நகை, ½ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.30 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
நேற்று இரவு ஞானசேகரன் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நகை-பணம் கொள்ளை போய் இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து தெர்மல் நகர் போலீசில் ஞானசேகரன் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகின்றார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி கீழக்கரையை சேர்ந்தவர் வீரநாராயணன் (வயது 51). இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். ராணுவ வீரராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற வீரநாராயணன், புவனகிரியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இதற்காக அவருக்கு வங்கி சார்பில் துப்பாக்கி வழங்கப்பட்டது. தினமும் பணிமுடிந்ததும், வீரநாராயணன் அந்த துப்பாக்கியை தனது வீட்டுக்கு எடுத்து சென்று விடுவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த வீரநாராயணன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் குமராட்சி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவரது உடல் அருகே கிடந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
அதில், எனக்கு மூட்டு வலி இருப்பதால், தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணமில்லை. யாரையும் துன்புறுத்த வேண்டாம் என்று எழுதப்பட்டிருந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து குமராட்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






