என் மலர்
கடலூர்
மங்கலம்பேட்டை:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள எடைசித்தூரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி ரேகா (வயது 25). இவரும், அதே பகுதியை சேர்ந்த தனது அண்ணன் மனைவி கஸ்தூரி (30), பரமசிவம் (41) உள்பட 39 பேர் நூறுநாள் திட்டத்தில் எடைசித்தூர் எல்லையில் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் திடீரென இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இதில் ரேகா, கஸ்தூரி மற்றும் பரமசிவம் ஆகியோரை இடி தாக்கியது. இதில் ரேகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கஸ்தூரி, பரமசிவம் ஆகிய 2 பேர் பலத்த காயம் அடைந்தார். இதைப்பார்த்து அங்கு வேலை செய்து கொண்டிருந்த மற்ற தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து மங்கலம்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பலத்த காயம் அடைந்த கஸ்தூரி, பரமசிவத்தை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி தமிழரசன் மங்கலம்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்த செம்பேரி கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 24). விவசாயி.
இவர் நேற்று மாலை பெண்ணாடத்துக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து தனது மொபட்டில் புறப்பட்டு சென்றார்.
பெண்ணாடம் மாளிகை கோட்டம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வேல்முருகன் சென்றார். அங்கு மது வாங்கி குடித்த அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். அப்போது அந்த வழியாக மாளிகை கோட்டத்தை சேர்ந்த வேல்முருகனின் நண்பர் விமல் மினி லாரியில் வந்தார்.
டாஸ்மாக் கடை அருகே மயங்கி கிடந்த வேல்முருகனை பார்த்ததும் விமல் மினி லாரியை விட்டு கீழே இறங்கி அவரையும், மொபட்டையும் மினி லாரியில் ஏற்றிக் கொண்டு வேல்முருகனின் வீட்டுக்கு சென்றார்.
வீட்டில் இருந்தவர்களிடம் நடந்த விவரத்தை விமல் கூறினார். பின்னர் அவர்கள் வேல்முருகனை மினி லாரியில் இருந்து கீழே இறக்கியபோது அவர் இறந்து விட்டதை அறிந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வேல்முருகனின் குடும்பத்தினர் வேல்முருகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் இது குறித்து வேல்முருகனின் பெற்றோர் பெண்ணாடம் போலீசில் புகார் செய்தனர். அதில் தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர்.
புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வேல்முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனின் நண்பர் விமலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோட்டக்குப்பத்தை அடுத்த கூனிமேடு பஸ் நிறுத்தம் அருகில் நேற்று முன்தினம் இரவு போலீஸ் ஏட்டு பாஸ்கரன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை சந்தேகத்தின்பேரில் போலீசார் வழிமறித்தனர். போலீசாரை பார்த்ததும் காரை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு அதில் வந்த 2 பேர் தப்பி ஓடினர். உடனே போலீசார் விரட்டிச்சென்று ஒருவரை பிடித்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து அந்த காரை போலீசார் சோதனை செய்தனர். அதில், 16 அட்டைப்பெட்டிகளில் 744 மதுபாட்டில்கள் இருந்தன. தொடர்ந்து, பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கார் டிரைவர் என்பதும், புதுச்சேரி மாநிலம் முத்திரையர்பாளையத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 34) என்பதும், தப்பி ஓடியவர் புதுச்சேரி காந்தி நகரை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பதும், புதுச்சேரியில் இருந்து மரக்காணம் பகுதிக்கு மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து ராமச்சந்திரனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள காரையும் பறிமுதல் செய்து கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பன்னீர்செல்வத்தை தேடி வருகின்றனர்.
கடலூர் அருகே பெரியகங்கனாங்குப்பம் தென்பெண்ணையாற்றங்கரையில் கும்தாமேடு தரைப்பாலம் அருகே அம்மன் சிலை ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தென்பெண்ணையாற்றங்கரைக்கு ரெட்டிச்சாவடி போலீசார் விரைந்து சென்று அம்மன் சிலையை மீட்டனர். அந்த சிலை பித்தளையால் செய்யப்பட்டு இருந்தது. அது ஒரு அடி உயரமும், ¾ அடி அகலமும் 6 கிலோ எடையுமாக இருந்தது. அதனை ஆற்றங்கரையில் வீசிச்சென்றது யார்? என்பது தெரியவில்லை. இது பற்றி ரெட்டிச்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






