என் மலர்
கடலூர்
குழந்தை மற்றும் வளர் இளம்பருவ தொழிலாளர்கள் மறுவாழ்வு மற்றும் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
குழந்தை தொழிலாளர் தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் திருத்த சட்டம் 2016-ன்படி 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எவ்வித தொழிலிலும் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் 14 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அல்லது வளர் இளம் பருவத்தினரை வேலைக்கு அமர்த்தினால் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 2-ம் சேர்த்து விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது பற்றி மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு முகாம்கள், கூட்டங்கள், ஆய்வுகள் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது.
மாவட்டத்தில் 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்க அமைக்கப்பட்ட தடுப்பு படைகள் மூலம் 20 கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 14 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 6 கடைகளின் உரிமையாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் தண்டனை பெற்று வழங்கப்பட்டதுடன், நீதிமன்ற அபராதமாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் விதிக்கப்பட்டது. மேலும் ஒருவருக்கு அபராதத்துடன் 2 ஆண்டு சிறை தண்டனையும் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே கடலூரை குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைத்துத்துறை அலுவலர்களின் பங்கேற்புடன் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் அன்புசெல்வன் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், சப்-கலெக்டர் சரயூ, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெங்கடேசன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாயத்தேவர், மாவட்ட தொழில்மைய உதவி இயக்குனர் லட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பானுகோபன், மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் ஜெயந்திரவிச்சந்திரன், ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் ரங்கநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, ஸ்ரீமுஷ்ணம், குறிஞ்சிப்பாடி, காட்டு மன்னார்கோவில், பெண்ணாடம், விருத்தாசலம், நெய்வேலி போன்ற பகுதிகளில் மழை பெய்தது.
இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. நேற்று இரவும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குளிர்ந்தகாற்று தொடர்ந்து வீசிக்கொண்டே இருந்தது.
கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா, அக்கரைக்கோரி போன்ற கடல் பகுதிகளில் இன்றும் கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகள் கரையோரம் நிறுத்தப்பட்டது.
கடலூர் நகரில் இன்று காலையிலும் மழை தூறிக்கொண்டே இருந்தது. சாலையின் இருபுறமும் மழைநீர் ஆறுபோல் ஓடியது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரும் அவதியடைந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன்சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் சம்பா நடவு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தொடர்மழை பெய்து வருவதால் விவசாய நிலங்களில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளது.
அதேபோல் நெல்லிக்குப்பம் பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் நடப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. அந்த பகுதியில் உள்ள வயல்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. அதேபோல் பண்ருட்டி, சிதம்பரம் போன்ற பகுதிகளிலும் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள திருவெண்ணைநல்லூர் கிராமத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக சுமார் 500 ஏக்கர் பரப்பளவிலான வயல் மழைநீரில் மூழ்கியது.
இதில் நடப்பட்ட ஒருவாரமே ஆன நாற்றுகள் நீரில் அடித்து செல்லப்பட்டன.
கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த ஏரியானது சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.
வீராணம் ஏரியின் மூலம் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
கல்லணையில் இருந்த கடந்த 30-ந் தேதி கீழணைக்கு முறைப்பாசன தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதை யடுத்து அன்று வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்தது. பாசனத்துக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. சென்னை குடிநீருக்காவும் நீர் அனுப்பப்பட்டது.
இதைத்தொடர்ந்து காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், சேத்தியாத்தோப்பு ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதையொட்டி ஏரியில் இருந்து பாசனத்துக்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
மழை காரணமாக ஏரியின் பாதுகாப்பு கருதி கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்புவது நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை வீராணம் ஏரியின் நீர்மட்டம் 45.50 அடியாக உள்ளது. ஏரிக்கு 548 கனஅடி மழைநீர் வந்து கொண்டிருக்கிறது.
தொடர்ந்து சென்னைக்கு 74 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. #VeeranamLake
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் அன்சர்மீரான் (வயது 29). இவர் ஐ.எஸ். என்ற தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சிறையை தகர்த்து அன்சர்மீரானை கடத்த பயங்கரவாத அமைப்பு சதித்திட்டம் தீட்டுவதாக மத்திய புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். அவர் அடைக்கப்பட்டுள்ள அறையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் இரவும், பகலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி நாகை மாவட்டம் மயிலாடுதுறை நீடூரை சேர்ந்தவர் மன்சூர்அலி (வயது 52) என்பவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் திடீரென்று சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கடலூர் மத்திய சிறையில் இன்று காலை மேலும் ஒரு கைதி தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதுபற்றி விவரம் வருமாறு:-
விழுப்புரம் மாவட்டம் மாம்பழம்பட்டு பகுதியை சேர்ந்த முருகன்(வயது 37) கடந்த சில நாட்களுக்கு முன்பு சாராய வழக்கில் விழுப்புரம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இன்று காலை அறையில் அவர் திடீரென்று தான் அணிந்திருந்த ஜட்டியை எடுத்து கழுத்தில் இறுக்கி தற்கொலை செய்ய முயன்று மயங்கி விழுந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ஜெயிலர் இதைபார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் ஜெயில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே அவர்கள் விரைந்து வந்து மயங்கி கிடந்த முருகனை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து முதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார், சிறைத்துறை அதிகாரிகளும் கைதி முருகன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தசம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கச்சிராயப்பாளையம்:
விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள அக்கராயப்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 38). இவருடைய மனைவி அஞ்சலை(30). சுரேஷ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் அஞ்சலை வீட்டில் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதையடுத்து அவரை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அதில் அஞ்சலையுடன் அதே பகுதியை சேர்ந்த சங்கர்(20) என்பவர் அதிக நேரம் செல்போனில் பேசியது தெரியவந்தது. இதையடுத்து பெங்களூருவில் தங்கியிருந்த சங்கரை போலீசார் பிடித்து விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து வந்திருந்தனர். இந்த நிலையில் அதிகாலை சங்கர், போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் தலைமையிலான 2 தனிப்படை போலீசார் சங்கரை தேடி வந்தனர்.
இந்நிலையில் அக்கராயப்பாளையம் காட்டுப்பகுதியில் சங்கர் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று சங்கரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அஞ்சலையை தீ வைத்து எரித்துக்கொலை செய்ததாக சங்கர் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
எனக்கும், அஞ்சலைக்கும் ஒரே ஊர் இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்தேன். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அஞ்சலை என்னுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். செல்போன் அழைப்பையும் ஏற்க மறுத்தார்.
இதனால் சம்பவத்தன்று நான் அஞ்சலையின் வீட்டுக்கு சென்று, ஏன் என்னுடன் பேச மறுக்கிறாய்? என அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், வெளிநாட்டில் இருக்கும் தனது கணவர், ஊருக்கு வருவதால் என்னிடம் பேச முடியாது என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த நான் அவரை கையால் தாக்கினேன்.
உடனே அஞ்சலை தனது வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து வந்து தன்மீது ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்யப்போவதாக மிரட்டினார். அப்போது நீ என்னை மிரட்டுகிறாயா என்று கேட்டேன். பின்னர் நானே உன்னை கொலை செய்து விடுகிறேன் என்று கூறி, அஞ்சலை மீது தீ வைத்து விட்டு வீட்டில் இருந்து வெளியே வந்தேன். அஞ்சலையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
உடனே நானும் வீட்டுக்குள் சென்று எதுவும் தெரியாதது போல் நடித்தேன். அஞ்சலையின் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தேன். பின்னர் அஞ்சலையை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றேன். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அஞ்சலையை கொண்டு சென்றனர். அப்போது நான் செல்லவில்லை.
இந்த நிலையில் அஞ்சலை ஆஸ்பத்திரியில் இறந்து விட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது.
இதை அறிந்த நான் போலீசார் எப்படியும் என்னை பிடித்து விடுவார்கள் என்ற பயத்தில் பெங்களூரு சென்று விட்டேன். இருப்பினும் போலீசார் என்னை பிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து சங்கரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான பிரபு (கள்ளக்குறிச்சி), ரத்தின சபாபதி (அறந்தாங்கி), கலைச்செல்வன் (விருத்தாசலம்) ஆகியோர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் முதல்-அமைச்சருக்கு எதிராக பேசி வருவதாக கூறப்படுகிறது.
இதையொட்டி அந்த 3 எம்.எல்.ஏ.க்கள் மீதும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து கலைச்செல்வன் எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
சபாநாயகரிடமிருந்து எனக்கு நோட்டீஸ் வரவில்லை. நோட்டீஸ் வந்தபிறகு அதுகுறித்து நான் பதில் சொல்கிறேன். நான் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.தான். இரட்டை இலை சின்னம் எங்கு இருக்கிறதோ அங்கு நான் இருப்பேன்.
சின்னம்மா சசிகலா தான் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்.
இதுதொடர்பாகவும், இரட்டை இலை சின்னம் சம்பந்தமாகவும் கோர்ட்டில் வழக்கு உள்ளது. அதில் ஒரு முடிவு வரட்டும்.
நான் முதல்- அமைச்சருக்கு எதிராக செயல்படவில்லை. கூட்டத்தில் முதல்- அமைச்சருக்கும் எதிராகவும் நான் பேசவில்லை.

இதுவரை எந்த நோட்டீசும் எனக்கு வரவில்லை. அப்படி வந்தால் அதை சட்டப்படி எதிர் கொள்வேன். நான் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக உள்ளேன்.
இந்தநிலையில் நான் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடுகிறேன் என்று கூறுவது ஏற்புடையது அல்ல.
இந்த ஆட்சி மீது மக்களுக்கு இருக்கும் எண்ணம் எப்படி பட்டது என்று அனைவருக்கும் தெரிந்ததே.
இவ்வாறு அவர் கூறினார். #KalaiselvanMLA #ADMK #Kalaiselvan
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள தென்குத்து பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி அமுதா (வயது 50). இவர் தம்பிபேட்டையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு வினோத்குமார் என்ற மகன் உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிவகுமார் இறந்து விட்டார். இதனால் அமுதா தனது மகன் வினோத்குமாருடன் தென்குத்து பகுதியில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் வினோத்குமார் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையொட்டி தென்குத்தில் உள்ள தனது வீட்டை பூட்டி விட்டு அமுதா புதுவைக்கு சென்று விட்டார்.
இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் நேற்று இரவு அமுதாவின் வீட்டுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கடப்பாரையால் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
வீட்டில் பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்தனர். மேலும் வீட்டின் மற்றொரு அறையில் இருந்த லேப்-டாப், கேமரா ஆகியவற்றையும் கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். கொள்ளை போன நகை மற்றும் பொருட்களின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.
நேற்று இரவு அமுதா புதுவையில் இருந்து தென்குத்துக்கு வந்தார். வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்களெல்லாம் சிதறி கிடந்தன.
வீட்டுக்குள் கத்தி, கடப்பாரை போன்ற பயங்கர ஆயுதங்கள் கிடந்தது. மர்ம மனிதர்கள் வீட்டில் உள்ள நகை மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இது குறித்து வடலூர் போலீசில் அமுதா புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொள்ளையர்கள் விட்டு சென்ற கத்தி, கடப்பாரை போன்ற பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.
ஆசிரியை வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவத்தால் அந்த பகுதி பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்தவர் கணேஷ் குமார் (வயது 48). இவர் நெய்வேலியை அடுத்த அசோக் நகர் பகுதியில் பாக்கு மட்டையில் பொருட்கள் தயார் செய்து விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
கணேஷ் குமார் வழக்கம் போல் வியாபாரம் முடிந்த பின்னர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு புறப்பட்டார். இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் கடையின் உள்ளே கல்லா பெட்டியில் இருந்த ரூ.14 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
காலையில் கடைக்கு வந்த கணேஷ் குமார் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போய் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து நெய்வேலி டவுண்ஷிப் போலீசில் கணேஷ் குமார் புகார் செய்தார் அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து கடையில் கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலை வீசி தேடி வருகின்றார்.
மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்ற பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும்.
பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க கடலூர் உழவர் சந்தையில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வேளாண் வணிக துணை இயக்குனர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். உழவர்சந்தை நிர்வாக அலுவலர் ஆறுமுகம், உதவி வேளாண்மை அலுவலர்கள் சீனிவாசன் பாரதி, கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு, மண்வளம் பாதிப்பு குறித்து பொதுமக்களிடம் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து வருங்காலங்களில் துணி பைகள், சணல் பைகள் ஆகியவற்றை பயன்படுத்தி சுற்றுச்சூழல் மற்றும் மண்வளத்தை பாதுகாக்க அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என பொதுமக்களிடம் கூறப்பட்டது.
பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதற்காக சணல் பைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உழவர் சந்தை ஊழியர்கள் கலந்து கொண்டனர். #PlasticBan
நெய்வேலி வட்டம் 29-ஐ சேர்ந்தவர் ஜஸ்டஸ். இவரது மகன் மிதுன்சர்மா (வயது 19). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்காக படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மிதுன்சர்மா பெற்றோர் அனுமதி இன்றி சொந்த ஊருக்கு வந்ததாக தெரிகிறது.
இதனால் அவரது தாய், ஏன் சரியாக படிக்காமல் ஊருக்கு வந்தாய் என்று கூறி மிதுன்சர்மாவை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த மிதுன்சர்மா நேற்று முன்தினம் இரவு மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மிதுன்சர்மாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதுபற்றி தகவல் அறிந்த தெர்மல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தற்கொலை செய்து கொண்ட மிதுன்சர்மாவின் உடலை பார்வையிட்டு உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஜஸ்டஸ் தெர்மல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி அமைந்துள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடியாகும். விவசாயிகளின் உயிர் நாடியாகவும், சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் இந்த ஏரி விளங்கி வருகிறது.
இந்த ஏரி நிரம்பி தற்போது கடல்போல் காட்சி அளிக்கிறது. ஏரியின் நீர்மட்டம் 45.20 அடியாக உள்ளது. வீராணம் ஏரியில் கடந்த 4 நாட்களாக நீரினுள் இருந்து காற்றுக்குமிழ்கள் கொப்பளித்து கொண்டே இருக்கிறது. இதை பொதுமக்கள் அதிகளவில் வந்து ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். ஏரியில் தங்கப்புதையல் இருக்கலாம் என்று ஒரு தகவல் பொதுமக்கள் மத்தியில் பரவி உள்ளது.
இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
வீராணம் ஏரியில் ஒவ்வொரு ஆண்டும் காற்றுக்குமிழ்கள் வெளியேறி வருகின்றன. இதைப்பார்த்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பீதியடைந்து வருகிறார்கள். மேலும் அந்த காற்றுக்குமிழ்கள் வெளியேறும் இடத்தில் புதையல் இருப்பதாகவும் பொதுமக்களிடையே தகவல் பரவி வருகிறது.
கடந்த 2 ஆண்டாக கொள்ளுமேடு அருகே தென்ரெட்டை மதகு பகுதியில் சுமார் 3 அடி சுற்றளவில் அருகருகே காற்றுக்குமிழ்கள் கொப்பளித்து வெளியே வந்தன.
இதேபோல் கடந்த ஆண்டும் அதே இடத்தில் காற்றுக்குமிழ்கள் கொப்பளித்து வெளியே வந்தது. அதனை மணல் மூட்டை கொண்டு அடைத்து பார்த்தனர். இருப்பினும் அந்த காற்றுக்குமிழ்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.
சோழர்கள் காலத்தில் விவசாய பயன்பாட்டுக்காக வீராணம் ஏரியை உருவாக்கினார்கள். இந்த ஏரியை அமைக்கும் பணியில் ஏராளமான படை வீரர்கள் ஈடுபட்டனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக ஏரியில் ஆங்காங்கே கிணறுகள் தோண்டப்பட்டன. நாளடைவில் அந்த கிணறுகள் அடைபட்டு இருக்கலாம். சமீபத்தில் ஏரியில் தூர்வாரும் பணி நடந்தது. அதனால் அந்த பகுதியில் நீர் குமிழ்கள் உருவாக வாய்ப்பு உள்ளது.
எனினும் பொதுமக்களின் அச்சத்தையும், பீதியையும் போக்கும் வகையில் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உயர் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி வீராணம் ஏரியை ஆய்வு செய்ய வேண்டும். ஏரியில் குமிழ்கள் வெளியேறும் இடத்தில் தொல்லியல் துறையினர் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #Veeranamlake
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலி புதுநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்டின். இவர் என்.எல்.சி.யில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் நிதின் வர்மா (வயது 19). இவர் பிளஸ்-2 படித்துள்ளார். நிதின் வர்மா தற்போது பெங்களூரில் உள்ள தனியார் நீட் தேர்வு பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வருகிறார்.
இந்த நிலையில் நீட் தேர்வு பள்ளியில் விடுமுறை எடுத்து கொண்டு நிதின்வர்மா பெங்களூருவில் இருந்து நெய்வேலிக்கு புறப்பட்டார். நேற்று முன்தினம் நிதின் வர்மா சொந்த ஊருக்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த ஜெஸ்டின் தனது மகன் நிதின் வர்மாவை எதற்காக அடிக்கடி விடுமுறை எடுத்து கொண்டு ஊருக்கு வருகிறாய். இங்கு வருவதுக்கு பதில் அங்கிருந்து நன்றாக படி என கூறி கண்டித்தார்.
இதில் மனம் உடைந்த நிதின் வர்மா வீட்டில் யாருடனும் பேசாமல் தனிமையில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் தூக்குபோட்டு நிதின் வர்மா தற்கொலை செய்து கொண்டார்.
வெளியே சென்ற நிதின் வர்மாவின் பெற்றோர் வீட்டுக்கு வந்தனர். அப்போது நிதின்வர்மா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் இது குறித்து நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய நிதின் வர்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தந்தை கண்டித்ததால் நீட் தேர்வு பயிற்சி பள்ளி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






