search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "child workers Rescue"

    கடலூர் மாவட்டத்தில் 14 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் அன்புசெல்வன் கூறினார்.
    கடலூர்:

    குழந்தை மற்றும் வளர் இளம்பருவ தொழிலாளர்கள் மறுவாழ்வு மற்றும் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    குழந்தை தொழிலாளர் தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் திருத்த சட்டம் 2016-ன்படி 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எவ்வித தொழிலிலும் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் 14 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

    14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அல்லது வளர் இளம் பருவத்தினரை வேலைக்கு அமர்த்தினால் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 2-ம் சேர்த்து விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது பற்றி மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு முகாம்கள், கூட்டங்கள், ஆய்வுகள் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது.

    மாவட்டத்தில் 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்க அமைக்கப்பட்ட தடுப்பு படைகள் மூலம் 20 கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 14 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 6 கடைகளின் உரிமையாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் தண்டனை பெற்று வழங்கப்பட்டதுடன், நீதிமன்ற அபராதமாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் விதிக்கப்பட்டது. மேலும் ஒருவருக்கு அபராதத்துடன் 2 ஆண்டு சிறை தண்டனையும் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.

    ஆகவே கடலூரை குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைத்துத்துறை அலுவலர்களின் பங்கேற்புடன் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் அன்புசெல்வன் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், சப்-கலெக்டர் சரயூ, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெங்கடேசன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாயத்தேவர், மாவட்ட தொழில்மைய உதவி இயக்குனர் லட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பானுகோபன், மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் ஜெயந்திரவிச்சந்திரன், ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் ரங்கநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    ×