என் மலர்
கடலூர்
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. மேலும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இந்த நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு கடலூர் நகர பகுதியில் லேசான மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் இடி- மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.
நள்ளிரவு 2 மணி வரை தொடர்ந்து மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றது. இடியுடன் மழை பெய்ததால் நகரின் சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது. கடலூர், திருப்பாதிரிப்புலியூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம் போன்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
திருப்பாதிரிப்புலியூர் தேரடி வீதியில் மழைநீர் செல்ல போதிய வசதி இல்லாததால் மழைநீரும், சாக்கடை நீரும் சேர்ந்து தெப்பக்குளம்போல் தேங்கி நின்றது. இதனால் அந்த பகுதியில் துர் நாற்றம் வீசுகிறது. சேறும்- சகதியுமாக காட்சி அளித்தது.
கடலூர் நகர் பகுதியில் இன்று காலையும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
சிதம்பரம், குமராட்சி, பரங்கிப்பேட்டை, புவனகிரி, காட்டுமன்னார்கோவில் போன்ற இடங்களில் இன்று காலை முதலே மழை பெய்ய தொடங்கியது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதியடைந் தனர். அவர்கள் குடை பிடித்த படியும், மழையில் நனைந்தும் பள்ளி- கல்லூரிக்கு சென்றனர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை, களமருதூர், சேந்த நாடு போன்ற பகுதிகளில் இன்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியது.
அதுபோல மரக்காணம் அதனை சுற்று பகுதிகளிலும் இன்று காலை மழை பெய்தது.
கடலூர் அருகே கோண்டூர் பகுதி உள்ளது. இங்குள்ள சாலையோரம் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இன்று காலை பிணமாக கிடந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணமாக கிடந்த வாலிபரின் உடலை பார்வையிட்டனர். பிணமாக கிடந்தவர் முகத்தில் காயங்கள் காணப்பட்டது. மேலும் அவர் பேண்ட் மற்றும் சட்டை அணிந்திருந்தார். அங்கு நின்ற பொது மக்களிடம் இறந்து கிடந்தவர் யார் என்று போலீசார் கேட்டனர். இறந்தவர் எங்கள் பகுதியை சேர்ந்தவர் இல்லை என்றும், அவர் யார் என்று தெரியாது என்றும் பொதுமக்கள் கூறினர்.
இதைத்தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
வாலிபரின் முகத்தில் காயங்கள் இருப்பதால் அவரை யாராவது கடத்தி சென்று அடித்து கொலை செய்துவிட்டு பிணத்தை சாலையோரம் வீசி சென்றார்களா? அல்லது வாகனம் மோதி அவர் இறந்தாரா? பிணமாக கிடந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முகத்தில் காயத்துடன் வாலிபர் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த வடக்கு சாந்திபட்டு பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகள் வள்ளி (வயது 22).
இவர் பண்ருட்டி அருகே உள்ள கீழ்மாம்பட்டு அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த 29-ந் தேதி வள்ளி வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார். மாலையில் பணிமுடிந்து வீடு திரும்பவில்லை. இதனால் கவலையடைந்த பெற்றோர் வள்ளியை பல இடங்களில் தேடினர். எங்கும் காணவில்லை.
இதனைத் தொடர்ந்து காடாம்புலியூர் போலீசில் தந்தை வடிவேல் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் குமரய்யா வழக்குபதிவு செய்து மாயமான ஆசிரியையை தேடி வருகிறார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து நாவலூருக்கு நேற்று மாலை அரசு பஸ் ஒன்று சென்றது. அந்த பஸ்சை ஏ.அகரத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 40) என்பவர் ஓட்டி சென்றார். கண்டக்டராக சின்னத்துரை பணியில் இருந்தார்.
அந்த பஸ் நாவலூர் கிராமத்துக்கு சென்றுவிட்டு இரவு 7 மணி அளவில் திட்டக்குடிக்கு மீண்டும் புறப்பட்டது. அந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். ஆவினங்குடியை அடுத்த கொட்டாரம் சாலையில் பஸ் சென்று கொண்டிருந்த போது சாத்தநத்தம் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (28) என்பவர் அந்த பஸ்சை திடீரென்று வழிமறித்தார். பின்னர் அவர் பஸ்சின் டிரைவரிடம் தகராறு செய்து அவரை அடித்து உதைத்தார்.
இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சல் போட்டனர். உடனே சக்திவேல் தன்னிடம் இருந்த பேனா கத்தியை காட்டி மிரட்டினார். பின்பு அவர் கல்லை எடுத்து பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு ஓடிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து பஸ் கண்டக்டர் சின்னத்துரை ஆவினங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவுசெய்து சக்திவேலை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் அவர் குடிபோதையில் டிரைவரிடம் தகராறு செய்து, பஸ்சின் கண்ணாடியை உடைத்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கொத்தன்குடி தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 48). இவர் வேணுகோபால் பிள்ளை தெருவில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இவரது கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பதாகவும், குட்கா பொருட்கள் இவருக்கு லாரி மூலம் பார்சலில் வருவதாகவும் சிதம்பரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்று காலை சிதம்பரம் சப்- இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் சிதம்பரம் மேல வீதி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த பார்சல் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஒரு பார்சலில் குட்கா பொருட்கள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது அந்த குட்கா பொருட்கள் ஜெயக்குமாரின் மளிகை கடைக்கு செல்வது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்தனர். குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
சேத்தியாத்தோப்பு:
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள அழிச்சிக்குடி பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது26) இவர் அதே பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். இவரது மனைவி ரமா (20). இவர்களுக்கு திருமணமாகி 1 வருடம் ஆகிறது.
தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ரமா பிரசவத்துக்காக சேத்தியாத்தோப்பை அடுத்த பரதூர் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து தினமும் ஒரத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று பரிசோதனை செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி இரவு ரமாவுக்கு பிரசவவலி ஏற்பட்டது. உடனே வீட்டில் இருந்தவர்கள் ரமாவை சிகிச்சைக்காக ஒரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கிருந்த டாக்டர்கள் ரமாவுக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் ரமாவுக்கு குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்பட்டது. அவர் வலியால் துடித்தார்.
அதன் பின்னர் நேற்று மதியம் ரமாவின் உறவினர்களிடம் டாக்டர்கள் ரமாவுக்கு உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும் இங்கு அந்த வசதி இல்லாததால் அவரை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறினர்.
பின்னர் ரமாவை உடனடியாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் ஆண் குழந்தையை எடுத்தனர். ஆனால் அந்த குழந்தை இறந்தே பிறந்தது.
இதைத்தொடர்ந்து ரமாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு ரமாவும் பரிதாபமாக இறந்தார். ஆஸ்பத்திரி வளாகத்தில் காத்திருந்த ரமாவின் உறவினர்கள் பிரசவத்தில் தாய், குழந்தை இறந்ததை கேட்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் ஒரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றனர். டாக்டர்களை கண்டித்து ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால், இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-
ஒரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 50-க் கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற வருகிறார்கள். ஆனால் இங்கு போதிய டாக்டர்கள் இல்லை. 29-ந் தேதி இரவு பிரசவத்திற்காக ரமாவை அனுமதித்தோம்.
ஆனால் ரமாவுக்கு ஆபரேஷன் செய்யவேண்டும் என்ற தகவலை மறுநாள் மதியம்தான் கூறினார்கள். அதை முன்கூட்டியே தெரிவித்திருந்தால் நாங்கள் உடனே அவரை வேறு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று காப்பாற்றியிருப்போம்.

இப்போது தாயும், குழந்தையும் இறந்து விட்டனர். இதற்கு முழு காரணம் ஒரத்தூர் ஆரம்ப சுகாதாரநிலையத்தில் பணியாற்றி வரும் டாக்டர்களும், ஊழியர்களும் தான். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் இது போன்று சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கூறினார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
பிரசவத்தில் தாய், குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு காய்ச்சலுக்காக நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். ஏற்கனவே டாக்டர்கள் செய்த பரிசோதனையில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் 20-க்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் சிதம்பரம் மீதிக்குடி ரமேஷ் (வயது 40), திருவந்திபுரம் சுப்பிரமணி (55), பாச்சாரப்பாளையம் ராஜசேகர் (24), காட்டுமன்னார்கோவில் குணமங்கலம் வசந்தகுமார் (20), செம்மண்டலம் காசிநாதன் மனைவி செல்வி (40), நெல்லிக்குப்பம் ரங்கநாதன் மகள் நித்தியஸ்ரீ (8), வல்லம்படுகை கச்சிராயர் மனைவி மணிமேகலை (50), நெய்வேலி கமலேஷ் (35) உள்பட 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை டாக்டர்கள் உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து அந்த 10 பேருக்கும் டெங்கு சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் தங்கள் பகுதியின் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விழுப்புரம் முண் டியம்பாக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் சிகிச்சை பெற வந்தனர்.
புறநோயாளிகள் பிரிவில் வந்தவர்களில் தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 120 பேருக்கு ரத்தப்பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருப்பது தெரியவந்தது. அவர்களை தனி வார்டில் அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். #Swineflu #Dengue
காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக்கோரி கடலூர் தெற்குமாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் சிதம்பரத்தில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பா.ம.க. மாநில இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது:-
சிதம்பரம் பா.ம.க.வின் கோட்டை. டெல்டா பகுதிக்கு மோடி அரசால் ஆபத்து வந்துவிட்டது. காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உருவாக்க 3 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த திட்டம் காவிரி டெல்டா பகுதியில் அமைந்தால் இந்த பகுதி பாலைவனமாக மாறிவிடும். 85 கிராமங்கள் அப்புறப்படுத்தப்படும். மக்கள் அகதியாகி விடுவார்கள்.
கடலூர், கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, கொள்ளிடம் போன்ற ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்களில் பெரும் ஆபத்தை உண்டாக்கும். ஹைட்ரோ கார்பன் திட்டம் மூலம் 30 அடி அகலத்தில் 3 ஆயிரம் அடி ஆழத்துக்கு ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும். இதற்காக பூமிக்கு கீழே உள்ள பாறைகள் சக்திவாய்ந்த வெடி வைத்து தகர்க்கப்படும். இதனால் நில அதிர்வு ஏற்படும். அதுமட்டுமல்ல, கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்படும்.
தமிழகத்தில் உள்ள பூமி இன்னும் ஆயிரமாயிரம் காலம் நன்றாக இருக்கவேண்டும். நம் சந்ததியினர் இந்த பூமியில் வாழவேண்டும். இந்த பகுதியில் யாராவது ஆழ்துளை கிணறுகள் அமைக்க குழாய்களை இறக்கினால் அதை தடுத்து நிறுத்த வேண்டும். மத்திய மாநில அரசுகள் மக்களை கண்டு கொள்வதில்லை. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் பா.ம.க. கடுமையாக எதிர்க்கும். போராட்டமும் நடத்துவோம்.
மக்களுக்கு எந்த பிரச்சினைகள் வந்தாலும் அதை கண்டிக்கவும், தடுத்து நிறுத்தவும் நானும், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசும் முன்வருவோம். எனக்கு பதவி ஆசை கிடையாது. நான் 35 வயதினிலேயே பதவியை பார்த்துவிட்டேன். மக்களை பற்றி நினைக்காமல் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் கல்லாக்கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சியை மக்கள் தூக்கி எறியும் காலம் வந்துவிட்டது.
நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வரப்போகின்றது. எனவே ஹட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட்டுவிட்டு, காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அரசு அறிவிக்கவேண்டும். விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வர நாங்கள் விடமாட்டோம் இவ்வாறு அவர் பேசினார். #AnbumaniRamadoss
நெய்வேலி:
நெய்வேலி அருகே உள்ள ஊ.மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி நவீனா (வயது 24). இவர்களுக்கு பிரதிக்ஷா (2) என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் குழந்தை பிரதிக்ஷாவுக்கு உடல்நிலை சரியில்லை. எனவே அவளை நான் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்கிறேன் என நவீனா தனது கணவர் வீரமணியிடம் கூறினார். பின்னர் குழந்தை பிரதிக்ஷாவுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் இரவுவரை வீடு திரும்ப வில்லை. அதிர்ச்சியடைந்த வீரமணி உறவினர்கள் மற்றும் பல இடங்களில் மனைவி மற்றும் குழந்தையை தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து வீரமணி ஊ.மங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குபதிவு செய்து மாயமான நவீனா மற்றும் குழந்தை பிரதிக்ஷாவை தேடி வருகிறார்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் அனுமதியின்றி பட்டாசு விற்பதாக பண்ருட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஷ்னுபிரியா, ஜவ்வாதுஉசேன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று இரவு பண்ருட்டி பகுதிகளில் உள்ள கடைகளில் தீவிரசோதனை நடத்தினர்.
அப்போது பண்ருட்டி ரத்தினம்பிள்ளை மார்க்கெட்டில் மளிகைகடை நடத்திவரும் குமார் (வயது 42) என்பவர் கடையில் சோதனை செய்தபோது அங்கு மூட்டை மூட்டையாக பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் உரிய அனுமதியின்றி கடையில் பட்டாசு விற்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து குமாரை போலீசார் கைது செய்தனர். அந்த கடையில் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.






