என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் மத்திய சிறையில் சுவர் இடிந்து விழுந்ததில் கைதியின் கால் முறிந்தது. அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    கடலூர்:

    கடலூர் கேப்பர்மலையில் மத்திய சிறை உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    மதுரையை சேர்ந்த சுரேஷ் (வயது 42) என்பவர் விசாரணை கைதியாக இந்த சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

    அதேபோல் சென்னையை சேர்ந்த ரூபன் என்பவர் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். ரூபனும், சுரேசும் அடுத்தடுத்த அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இன்று காலை சுரேஷ் அங்குள்ள தடுப்புச்சுவரை பிடித்துக் கொண்டு அடுத்த அறையில் உள்ள ரூபனிடம் பேசி கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அந்த தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது.

    இதில் சுரேசுக்கு காலில் முறிவு ஏற்பட்டது. அவர் கூச்சலிட்டார்.

    உடனே சிறை காவலர்கள் அங்கு விரைந்து வந்தனர். சுரேசை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    தமிழ்நாடு மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரின் மூத்த உதவியாளரும் அவரது இரு மகன்களும் கள்ளக்குறிச்சி அருகே இன்று நடந்த கார் விபத்தில் உயிரிழந்தனர். #Minister #Jayakumar #EdappadiPalanisamy
    கடலூர்:

    தமிழ்நாடு மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரின் மூத்த நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்தவர் லோகநாதன். இவரது இரு மகன்களான நிர்மல் குமார், சிவராமன் ஆகியோருடன் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார்.

    கடலூர் மாவட்டம் கள்ளகுறிச்சி அருகே உள்ள வேப்பூர் பகுதியை நெருங்கி போது எதிரே வந்த பஸ் கார் மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தாருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். #Minister #Jayakumar #EdappadiPalanisamy
    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே இன்று காலை அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் அதிகாரி மற்றும் 2 மகன்கள் உயிரிழந்தனர்.
    வேப்பூர்:

    சென்னை மேடவாக்கத்தை சேர்ந்தவர் லோக நாதன் (வயது 60). மீன்வளத்துறையில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் தனது மகன்கள் சிவராமன் (40), நிர்மல்குமார் (35) மற்றும் மருமகள், பேத்தியுடன் தீபாவளி கொண்டாடுவதற்காக சொந்த ஊரான கரூர் தான்தோன்றி மலை பகுதிக்கு சென்றார். தீபாவளி கொண்டாடி விட்டு இன்று காலை அங்கிருந்து காரில் குடும்பத்தினருடன் சென்னை புறப்பட்டார்.

    இந்த கார் இன்று காலை 6.30 மணிக்கு கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கூத்தக்குடி ரெயில்வே மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தது.

    அப்போது வேப்பூரில் இருந்து கள்ளக்குறிச்சியை நோக்கி அரசு பஸ் ஒன்று முன்னால் சென்றது.

    அரசு பஸ் டிரைவர் திடீரென்று பஸ்சை வளைவில் திருப்பினார். இதனால் பின்னால் வந்து கொண்டிருந்த கார் நிலை தடுமாறி பஸ்சின் பின்புறம் வேகமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது.

    இந்த விபத்தில் காரில் பயணம் செய்த லோகநாதன், சிவராமன், நிர்மல்குமார் ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி அதே இடத்தில் பலியானார்கள். லோகநாதனின் மருமகள் இடிபாடுகளுக்குள் சிக்கி காயம் அடைந்தார். உடனிருந்த சிறுமி காயமின்றி உயிர் தப்பினாள்.

    இது குறித்து வேப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், சப்- இன்ஸ்பெக்டர்கள் டைமன் துரை, கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்த பெண்ணை போலீசார் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் சிக்கிய காரை பொக்லைன் எந்திரம் மூலம் போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.

    வேப்பூர் அருகே கூத்தக்குடி ரெயில்வே மேம்பாலம் வளைவில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அந்த இடத்தில் விபத்தை தடுப்பதற்கு போக்குவரத்து போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.
    கடலூரில் வாகன சோதனையின் போது கைப்பற்றிய ஹாவாலா பணத்தை மறைத்து வைத்த 3 ஏட்டுகளை டிஸ்மிஸ் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுத்துள்ளார்.
    கடலூர்:

    கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் கடந்த ஆண்டு வேப்பூர் போலீஸ் நிலைய ஏட்டு ரவிக்குமார், கம்மாபுரம் போலீஸ் நிலைய ஏட்டு செல்வராஜ், சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலைய ஏட்டு அந்தோணிசாமிநாதன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆம்னி பஸ்சை வழிமறித்து சோதனை செய்தனர். அந்த பஸ்சில் வந்த ஒருவர், கொண்டு வந்திருந்த பையில் ரூ.50 லட்சம் ஹவாலா பணம் இருந்தது.

    ஆனால் அந்த பணத்தை கைப்பற்றிய போலீஸ் ஏட்டுகள் 3 பேரும் ரூ.20 லட்சத்தை எடுத்து அங்குள்ள புதரில் மறைத்து வைத்தனர். மீதி பணத்தை மட்டும் கடலூர் புதுநகர் போலீசில் ஒப்படைத்தனர்.

    இதுதொடர்பாக பணத்தின் உரிமையாளர் புகார் செய்தார். இதையடுத்து புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த பணம் மீட்கப்பட்டது. பணத்தை மறைத்து வைத்தது தொடர்பாக போலீஸ் ஏட்டு ரவிக்குமார் உள்பட 3 பேர் மீதும் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    பின்னர் அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடந்தது. இதில் 3 ஏட்டுகளும் கூட்டாக சேர்ந்து பணத்தை எடுத்து மறைத்து வைத்தது உறுதி செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அவர்கள் 3 பேரையும் டிஸ்மிஸ் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நடவடிக்கை எடுத்துள்ளார். #tamilnews
    கடலூரில் மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் அந்தப் பகுதியில் வேறு யாருக்காவது மர்ம காய்ச்சல் உள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. #Mysteryfever
    கடலூர்:

    தமிழகத்தில் பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இதை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கடலூர் மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தினமும் 300-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெறுகின்றனர். அரசு ஆஸ்பத்திரிக்கு நோயாளிகள் வருகை அதிகரித்து உள்ளது.

    காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்து பார்த்ததில் இதுவரை 14 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ள தனி வார்டில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதேபோல் பன்றிகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 பேர் புதுவை மற்றும் சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் மர்ம காச்சலுக்கு கடலூரில் வாலிபர் ஒருவர் பலியாகி உள்ளார். இதுபற்றிய விபரம் வருமாறு:-

    கடலூர் புருகீஸ்பேட்டையை சேர்ந்தவர் விமல் (வயது 33). இவருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்தது. இதனால் அவர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இவர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது தெரியவந்தது. இது குறித்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் கீதா உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ குழுவினர் கடலூர் புருகீஸ்பேட்டை பகுதியில் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கி வருகின்றனர்.

    மேலும் அந்தப் பகுதியில் வேறு யாருக்காவது மர்ம காய்ச்சல் உள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. #Mysteryfever

    குற்ற சம்பவங்களை தடுக்க நகரின் முக்கிய இடங்களில் ரூ.1 லட்சம் மதிப்பில் 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
    ஸ்ரீமுஷ்ணம்:

    ஸ்ரீமுஷ்ணம் கடைவீதியில் இரவு நேரங்களில் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து விட்டதால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு ஸ்ரீமுஷ்ணம் வர்த்தகர்கள் நல சங்கம் சார்பில் ஸ்ரீமுஷ்ணம் நகரின் முக்கிய இடங்களில் ரூ.1 லட்சம் மதிப்பில் 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

    இதனை பயன்பாட்டுக்கு கொண்டுவரும் நிகழ்ச்சி ஸ்ரீமுஷ்ணம் காந்தி சிலை அருகே நடைபெற்றது. இதற்கு வர்த்தக சங்க தலைவர் சோக்கு சிவானந்தம் தலைமை தாங்கினார். செயலாளர் தங்க.பன்னீர்செல்வம் வரவேற்றார். அரிமா சங்க செயலாளர் பூவராகமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கண்காணிப்பு கேமராக்களின் கட்டுப்பாட்டு கணினிகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுதாகரன், வர்த்தகர் சங்க பிரமுகர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வர்த்தக சங்க பொருளாளர் தங்கராசு நன்றி கூறினார். 
    கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரியானது சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும், விவசாய பாசனத்துக்கும் முதன்மையாக நீர் ஆதாரமாக விளங்குகிறது.

    கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி முதல் கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால் ஏரி நிரம்பி வழிந்தது. இதையடுத்து வீராணம் ஏரியில் இருந்து ஆகஸ்ட் 11-ந் தேதியில் இருந்து சென்னைக்கும், விவசாய பாசனத்துக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதற்கிடையே மழை பெய்யாததாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும் வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்தது. நீர்மட்டமும் படிப்படியாக குறைந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. நேற்று 690 கன அடி தண்ணீர் வந்தது. இன்று அது சற்று அதிகரித்து 800 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரியின் நீர்மட்டமும் மீண்டும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று நீர்மட்டம் 43.70 அடியாக இருந்தது. இன்று அது 43.95 அடியாக உயர்ந்துள்ளது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் நேற்று முதல் வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு அனுப்பப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இன்றும் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இருப்பினும் சென்னைக்கு தொடர்ந்து 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. இதேப்போல் தொடர்ந்து மழை பெய்தால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயரும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #VeeranamLake
    கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #Denguefever
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு காய்ச்சலுக்காக நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். ஏற்கனவே டாக்டர்கள் செய்த பரிசோதனையில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் 20-க்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் சிதம்பரம் மீதிக்குடி ரமேஷ் (வயது 40), திருவந்திபுரம் சுப்பிரமணி (55), பாச்சாரப்பாளையம் ராஜசேகர் (24), காட்டுமன்னார்கோவில் குணமங்கலம் வசந்தகுமார் (20), செம்மண்டலம் காசிநாதன் மனைவி செல்வி (40), நெல்லிக்குப்பம் ரங்கநாதன் மகள் நித்தியஸ்ரீ (8), வல்லம்படுகை கச்சிராயர் மனைவி மணிமேகலை (50), நெய்வேலி கமலேஷ் (35), மாளிகைமேடுவை சேர்ந்த நிஷாந்தி(13), புதுவை கன்னியக்கோவில் பகுதியை சேர்ந்த சீனிவாசன்(25) ஆகியோருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை டாக்டர்கள் உறுதிப்படுத்தினர்.

    இதையடுத்து அந்த 10 பேருக்கும் டெங்கு சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் தங்கள் பகுதியின் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் சிகிச்சை பெற வந்தனர்.

    புறநோயாளிகள் பிரிவில் வந்தவர்களில் தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 120 பேருக்கு ரத்தப்பரிசோதனை செய்யப்பட்டது.

    அதில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருப்பது தெரியவந்தது. அவர்களை தனி வார்டில் அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். #Denguefever

    பண்ருட்டி அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 10 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    பண்ருட்டி:

    நாகை மாவட்டம் பெருஞ்சேரி பகுதியை சேர்ந்த 30-க் கும் மேற்பட்ட பக்தர்கள் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு ஒரு வேனில் புறப்பட்டனர்.

    அந்த வேன் இன்று காலை 10 மணி அளவில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மேல்மாம்பட்டு பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் மொபட்டில் வந்த ஒருவர் திடீரென சாலையை கடக்க முயன்றார்.

    இதை சற்றும் எதிர்பாராத வேன் டிரைவர் அவர் மீத மோதாமல் இருப்பதற்காக திடீர் பிரேக்போட்டார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தவேன் ரோட்டில் தாறுமாறாக ஓடி தலைகுப்புற கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கி திருவாரூரை சேர்ந்த முரளி (வயது 44), அவரது மனைவி தையல் நாயகி (35), மகள் தனுஸ்ரீ (6), நாகை மாவட்டத்தை சேர்ந்த சுஜாதா (35), அவரது மகள் அனுஸ்ரீ (1), ரேணுகா (27), பத்மாவதி (55) உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடைந்த 10 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த விபத்தினால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான வேனை பொக்லைன் எந்திரம் மூலம் போலீசார் அப்புற படுத்தினர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் 2-வது நாளாக தொடர் மழை

    கடலூர்:

    தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. இதைத் தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிமுதல் மழை பெய்யத்தொடங்கியது. கடலூர் நகரில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இரவு 1 மணிக்கு தொடங்கிய மழை அதிகாலை 5 மணிவரை தொடர்ந்து பெய்தது.

    நேற்று காலையில் சாரல் மழை பெய்தது. பின்னர் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இன்றும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    கடலூர், திருப்பாதிரி புலியூர், நெல்லிக்குப்பம் போன்ற இடங்களில் நேற்று இரவு விடிய, விடிய பலத்த மழை பெய்தது. அதுபோல் சேத்தியாத்தோப்பு, ஒரத்தூர், வளையமாதேவி, மஞ்சக்கொல்லை, வீரமுடையான் நத்தம், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, லால்பேட்டை போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    அதுபோல் ஸ்ரீமுஷ்ணம், குணமங்கலம், புதுகுப்பம், சேத்தம்பட்டு, காவனூர், காட்டுமன்னார்கோவில், குமராட்சி மற்றும் பண்ருட்டி, கண்டரக்கோட்டை, புதுப்பேட்டை, காடாம்புலியூர், அண்ணாகிராமம் போன்ற பகுதிகளில் காலை 6 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை தொடர்ந்து பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி காணப்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் கடும் அவதியடைந்தனர். குடைபிடித்தபடியும், நனைந்தபடியும் செல்லும் நிலை ஏற்பட்டது.

    கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா போன்ற பகுதிகளில் இன்றும் கடல் கொந்தளிப்பும், பலத்த காற்றும் வீசியது. இதனால் மீனவர்கள் இன்று2-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. படகுகள் கடற்கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளன.

    பரங்கிப்பேட்டை 6 மில்லி மீட்டர்.

    அண்ணாமலைநகர் -58.80

    சிதம்பரம் -46.80.

    கடலூர்-29.30

    வானமாதேவி-16.50

    பண்ருட்டி-9.20

    ஸ்ரீமுஷ்ணம்-9.10

    குப்பநத்தம்-7.50

    மாவட்டம் முழுவதும் 461.25 மி.மீ. மழை பெய்துள்ளது.

    விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் சாரல்மழை பெய்தது. மரக்காணம், அனுமந்தை, கூனிமேடு, எண்டியூர், பிரம்மதே‌ஷம் போன்ற பகுதிகளில் காலை 6 மணிக்கு லேசான மழை பெய்யத்தொடங்கியது. பின்னர் பலத்த மழை பெய்தது. 9 மணி வரை பலத்த மழை கொட்டியதால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    எக்கியார்குப்பம், கூனிமேடுகுப்பம், கீழ்புத்துப்பட்டு, அனிச்சக்குப்பம் உள்பட 19 மீனவ கிராம மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கடல் கொந்தளிப்பும், சூறைகாற்று வீசுவதால் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

    இதனால் படகுகள் அனைத்தும் கடற்கரையோரம் நிறுத்தப்பட்டன.

    ஓடும் ரெயிலில் பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருத்தாசலம்:

    சென்னை திருவெற்றியூரைச் சேர்ந்தவர் சிவகணேஷ் (வயது 37). தனியார் நிறுவன ஊழியர். இவர் தன்னுடைய மனைவி தனலட்சுமி (34) மற்றும் குடும்பத்தினருடன் திண்டுக்கல்லில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை புறப்பட்டனர்.

    அப்போது அவர்கள் பயணம் செய்த ரெயில் பெட்டியில் பயணம் செய்த ஒரு வாலிபர் தனலட்சுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. உடன் தனலட்சுமி விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் இறங்கி இருப்புப்பாதை போலீசில் புகார் செய்தார். 

    சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர் திண்டுக்கல் அருகே உள்ள சித்தையன்கோட்டையைச் சேர்ந்த அகமத்துல்லா (37) என்பது தெரியவந்தது. உடன் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 2 குழந்தைகள் சாவில் உள்ள மர்மம் தொடர்பாக தலைமறைவாக உள்ள தாயை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கட்டமுத்துப்பாளையத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் புதுவையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெயசித்ரா(வயது 27). இவர்களுக்கு மிதுன் (4) என்ற மகனும், லட்சன் என்ற 8 மாத கைக்குழந்தையும் இருந்தன.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு லட்சன் வீட்டில் இருந்து அண்டாவில் இருந்த தண்ணீரில் மூழ்கி இறந்தான். அப்போது தாய் ஜெயசித்ரா தலைமறைவாகி விட்டார். பின்னர் அவரை போலீசார் பிடித்த போது, குழந்தை அண்டாவில் தவறி விழுந்து இறந்தது என்று தெரிவித்தார். இதனால் போலீசார் அவரை விட்டு விட்டனர். இந்த சம்பவத்திற்கு பிறகு சிலம்பரசன் தனது மனைவி மற்றும் மகன் மிதுனுடன் விழுப்புரம் மாவட்டம் பனங்குப்பத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டுக்கு குடி வந்தார். அதே கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மிதுன் யூ.கே.ஜி. படித்து வந்தான்.

    நேற்று சிலம்பரசன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் ஜெயசித்ராவும், மிதுனும் இருந்தனர். இந்த நிலையில் வீட்டின் பின்புறம் இருந்த தண்ணீர் தொட்டியில் சிறுவன் மிதுன் பிணமாக மிதந்தான். இதையடுத்து ஜெயசித்ரா தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இது குறித்து சிலம்பரசன் வளவனூர் போலீசில் புகார் செய்தார். அதில் எனது 2 குழந்தைகளின் சாவில் ஜெயசித்ரா மீது சந்தேகம் உள்ளது என்று கூறியிருந்தார். இதையடுத்து 2 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் அமுக்கி ஜெயசித்ரா கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேக்கின்றனர்.

    இந்த 2 சம்பவங்களும் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்துள்ளது. எனவே 2 மாவட்ட போலீசாரும் தலைமறைவாக உள்ள ஜெயசித்ராவை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயசித்ராவின் செல்போன் நம்பரை ஆய்வு செய்து, அவர் யாரிடம் பேசினார் என்ற விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் சந்தேகம் படும்படியாக யாராவது இருந்தார்களா? என்று அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோவை சோதனை செய்து வருகின்றனர். ஜெயசித்ராவை பிடித்து தீவிர விசாரணை நடத்தினால் தான் 2 குழந்தைகள் எப்படி இறந்தது என்று தெரிய வரும்.
    ×