என் மலர்tooltip icon

    கடலூர்

    வேப்பூர் அருகே நூதன முறையில் லாரிகளில் மணல் கடத்திய 2 டிரைவர்களை போலீசார் கைது செய்தனர்.
    வேப்பூர்:

    வேப்பூர் அருகே உள்ள மேமாத்தூர் மணிமுக்தாற்றில் இருந்து லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக போலீஸ் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உஷாரான வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் பாக்யராஜ், தலைமை காவலர்கள் பக்தவத்சலம், தனஞ்செழியன், சதன் ஆகியோர் மேமாத்தூரில் இருந்து வரும் சாலையில் பெரியநெசலூர் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை மடக்கி, சோதனை செய்தனர். 2 லாரிகளிலும் தேங்காய் மட்டை மற்றும் மூட்டைகள் இருந்தன. மேலும் அவை, தார்பாயால் மூடப்பட்டு இருந்தன. ஆனால் லாரியின் பின்கதவு வழியாக தண்ணீர் கசிந்து சொட்டு, சொட்டாக வடிந்தது. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    இதையடுத்து தார்பாயை அகற்றி போலீசார் சோதனை செய்தனர். 2 லாரிகளிலும் தலா 6 யூனிட் மணல் ஏற்றப்பட்டு, அதன் மீது தேங்காய் மட்டை மற்றும் மூட்டைகளை அடுக்கி வைத்து, தார்பாயால் மூடி, சரக்கு ஏற்றி செல்வதுபோல் நூதன முறையில் அதனை கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து 2 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்து, போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் லாரி டிரைவர்கள், சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த புளியம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் ஜெகநாதன்(வயது 45), ஓமலூர் அண்ணா நகரை சேர்ந்த அர்ச்சுனன் மகன் வெங்கடாசலம்(49) ஆகியோர் என்பதும், மேமாத்தூர் மணிமுக்தாற்றில் இருந்து சேலத்திற்கு மணல் கடத்தி செல்வதும், இதேபோல் பல மாதங்களாக 2 பேரும் நூதனமுறையில் லாரிகளில் மணல் கடத்தி விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    காணும் பொங்கலையொட்டி பிச்சாவரம் மற்றும் செஞ்சி கோட்டைக்கு இன்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் இருந்தனர். நேரம் ஆக ஆக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.
    சிதம்பரம்:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கோலாகலமாக நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. நேற்று உழவர் திருநாளான மாட்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

    இன்று காணும் பொங்கல் பண்டிகை ஆகும். இதையொட்டி தமிழர்கள் சுற்றுலா மையங்களுக்கு செல்வது வழக்கம்.

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளை பகுதியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இங்குள்ள உப்பனாறு அருகே மருத்துவ குணம் கொண்ட சுரபுன்னை காடுகள் உள்ளன.

    எனவே இதனை ரசிப்பதற்காக வெளிநாடுகள் மற்றும் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

    இன்று காணும் பொங்கலையொட்டி காலை முதலே சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் ஆனந்தமாக படகு சவாரி செய்து சுரபுன்னை காடுகளை பார்த்து ரசித்தனர்.

    ஒரே நேரத்தில் ஏராளமானோர் திரண்டதால் படகு சவாரி செய்ய பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். முன்னதாக நேற்று பொங்கல் பண்டிகையையொட்டி படகு போட்டி நடந்தது. இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள கோட்டையில் இன்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் இருந்தனர். நேரம் ஆக ஆக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.

    செஞ்சி கோட்டையில் உள்ள வரலாற்று சின்னங்களை பார்த்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.

    சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கோட்டை அடிவாரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜன், இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், மதுசூதனன், சப்-இன்ஸ்பெக்டர் சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் மேற்பார்வையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பெண் போலீசாரும் சாதாரண உடையில் வந்து கண்காணித்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் திடீர் கடைகள் உருவானது.

    காணும் பொங்கலையொட்டி செஞ்சிக்கோட்டை களை கட்டியது.

    கடலூரில் இன்று நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானது.

    கடலூர்:

    கடலூர் செம்மண்டலம் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் உள்ளது. இங்கிருந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளுக்கும் அரிசி, சர்க்கரை, உளுந்து, பாமாயில், கோதுமை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் லாரி மற்றும் வேன்களில் கொண்டு செல்லப்படுகிறது.

    இந்த வளாகத்தில் அலுவலக கட்டிடமும் உள்ளது. 2 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தில் பொருட்கள் இருப்பு பதிவேடுகள், அங்கு வேலைபார்க்கும் ஊழியர்களின் பதிவேடுகள், ஓய்வு பெற்றோரின் ஆவணங்கள் உள்ளது.

    இன்று காலை 5 மணி அளவில் இந்த அலுவலகத்தில் திடீர் என புகை கிளம்பியது. அதிர்ச்சி அடைந்த காவலாளிகள் என்ன என்று பார்த்த போது அங்கு தீ எரிந்து கொண்டு இருந்தது. உடனடியாக கடலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் நெருப்பு மேலும் பற்றி எரிய தொடங்கியது. அந்த பகுதியில் உள்ள அறைகள் முழுவதும் தீ பற்றி எரிந்தது. இதனால் அந்த இடம் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

    தொடர்ந்து தீ எரிந்ததால் நெல்லிக்குப்பம், கடலூர் முதுநகர் உள்ளிட்ட பகுதியில் இருந்து 7 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்தனர். அவர்களும் போராடி தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் நெருப்பு கட்டுக்குள் வரவில்லை. தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகிறார்கள்.

    தீ விபத்தில் அலுவலக அறைகளில் உள்ள முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானது. தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிபத்துக்ககான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தீ விபத்து குறித்து அறிந்த அந்த பகுதியில் உள்ளவர்கள் திரண்டனர். இந்த இடம் நகரில் மைய பகுதியில் உள்ளது. இந்த வழியாகத்தான் நெல்லிக்குப்பம், பண்ருட்டி, புதுச்சேரி ஆகிய பகுதிக்கு பஸ்கள் செல்ல வேண்டும். பொதுமக்கள் அதிகளவில் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கபட்டது.

    பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க சந்தைகளில் மக்கள் குவிந்ததால், பண்டிகை தற்போது களைகட்டி இருக்கிறது.
    கடலூர்:

    பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க சந்தைகளில் மக்கள் குவிந்ததால், பண்டிகை தற்போது களைகட்டி இருக்கிறது. கோலப்பொடி தொடங்கி மாடு கட்டும் கயிறுகள் வரைக்கும் அனைத்து பொருட்களையும் வாங்கி சென்றனர்.

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (புதன்கிழமை) உலகெங்கும் உள்ள தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. கிராமங்களை பொறு த்தவரை தொடர்ந்து 3 நாட்கள் களைகட்டி இருக்கும். தை முதல் நாளில் தைப்பொங்கல், மறுநாள் மாட்டுப்பொங்கல், அதை தொடர்ந்து காணும் பொங்கல் என்று கொண்டாட்டங்கள் நிறைந்து காணப்படும்.

    பொங்கல் என்றாலே தித்திக்கும் கரும்பு, சர்க்கரை பொங்கல் தான் நினைவுக்கு வரும். இதையொட்டி, பொங்கலிடுவதற்கான புதுப்பானை, பச்சரிசி, மஞ்சள் கொத்து, வெல்லம், மாட்டுப்பொங்கலுக்கு மாடுகளுக்கான கழுத்து மணி, வண்ண, வண்ண கயிறு போன்ற முக்கிய பொருட்களுக்காக கிராமத்து சந்தைகளில் எண்ணற்ற கடைகள் விரிக்கப்பட்டு, வியாபாரமும் படுஜோராக நடந்து வருகிறது.

    அந்த வகையில், நெல்லிக்குப்பத்தை அடுத்த காராமணிக்குப்பத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நடக்கும் வாரச்சந்தை நேற்று நடந்தது. இதில் பொங்கல் பண்டிகைக்கான பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. நெல்லிக்குப்பத்தை சுற்றிலும் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் சந்தைக்கு வந்து, பொங்கலிடுவதற்கு தேவையான மண்பானைகள், கரும்பு, காய்கறிகள், மாடுகளுக்கு தேவையான வண்ண வண்ண கயிறுகளை வாங்கி சென்றனர். மேலும் பண்டிகை நாளில் வீட்டு வாசலை அலங்கரிக்கும் வண்ண கோலப்பொடிகளையும் பெண்கள் ஆர்வத்துடன் வாங்கியதை பார்க்க முடிந்தது. இதனால் சந்தை வழக்கத்தை விட மக்கள் கூட்டம் நிரம்பி களைக்கட்டி காணப்பட்டது.

    இதேபோல் கடலூர் உழவர் சந்தையிலும் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் விற்பனைக்காக குவிந்து இருந்தன. கடலூர் உழவர் சந்தைக்கு நேற்று காலையில் இருந்தே கரும்பு, மஞ்சள்கொத்துகள் வரத்தொடங்கின. ஒரு கரும்பு ரூ.15 முதல் 20 வரைக்கும் ஜோடி கரும்பு ரூ.30 முதல் 40 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.

    அதேபோல் மஞ்சள் கொத்து ரூ.10 முதல் ரூ.20 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. வாழைத்தார் குறைந்த பட்சம் ரூ.150 முதல் அதிகபட்சம் ரூ.200 வரைக்கும், 12 முதல் 15 பழங்கள் எண்ணிக்கை கொண்ட ஒரு சீப் ரூ.20 முதல் ரூ.25-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

    பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று கடலூர் உழவர் சந்தைக்கு தலா 5 டன் கரும்பு மற்றும் வாழைத்தார், 4 டன் மஞ்சள் கொத்துகள் வரத்து காணப்பட்டது. இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் 2 நாட்களுக்கு கரும்பு, வாழைத்தார் மற்றும் மஞ்சள் கொத்து ஆகியவற்றின் வரத்து அதிகரிக்கும் என உழவர் சந்தை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்த கார் டிரைவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுக்குப்பம் பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தலில் தலைவர் பதவிக்கு நடுக்குப்பத்தை சேர்ந்த சக்திவேல் வெற்றி பெற்றார்.

    இவரை எதிர்த்து போட்டியிட்ட பெருமாள் என்பவர் தோல்வி அடைந்தார். இதனால் இருதரப்பினர் ஆதரவாளர்களுக்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது.

    இந்த முன்விரோதத்தில் பஞ்சாயத்து தலைவர் சக்திவேலின் ஆதரவாளரான ராஜதுரை என்பவரது ஹலோபிளாக் கொட்டகைக்கு தீ வைக்கப்பட்டது.

    அங்கு தூங்கி கொண்டு இருந்த ராஜதுரை அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இந்த சம்பவம் குறித்து ராஜதுரை முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். புகார் மனுவில் தன்னை பெருமாளின் ஆதரவாளர்கள் உயிரோடு எரித்து கொல்ல முயன்றதாக கூறியிருந்தார்.

    இது தொடர்பாக போலீசார் சொரத்தங்குழியை சேர்ந்த ஜெயராமன் என்பவரை கைது செய்தனர்.

    இந்த தகவல் ஜெயராமனின் மகன் அனந்தராமனுக்கு (வயது 27) தெரிந்தது. இவர் சென்னையில் கால்டாக்சி டிரைவராக உள்ளார். அவர் சொந்த ஊரான சொரத்தங்குழி வந்தார்.

    அவர் ஹாலோபிளாக் உரிமையாளர் ராஜதுரையிடம் ஏன் எனது தந்தை மீது பொய் புகார் கொடுத்தீர்கள் என்று கேட்டு தகராறு செய்தார். பின்னர் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு மண்எண்ணை கேனுடன் சென்றார்.

    போலீசார் எனது தந்தை மீது பொய்வழக்கு பதிந்துள்ளனர் என்று கூறி தனது உடலில் அனந்தராமன் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். கண் இமைக்கும் நேரத்தில் அவரது உடலில் தீ பற்றியது. அவர் அலறி துடித்தவாறு தீ பற்றிய உடலுடன் அங்கும் இங்கும் ஓடினார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் விரைந்து வந்து அனந்தராமன் உடலில் பற்றிய தீயை அணைத்தனர்.

    பின்னர் அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அனந்தராமனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அதன்பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அனந்தராமனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஆனாலும் அனந்தராமனின் நிலைமை மோசமானதால் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர் இறந்தார். இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக அ.தி.மு.கவை சேர்ந்த செல்லதுரை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 19 வார்டுகள் உள்ளன.

    இதில் அ.தி.மு.க. 5 வார்டுகளையும் தி.மு.க. 4 வார்டுகளையும் பா.ம.க. 4 வார்டுகளையும் தே.மு.தி.க. 1 வார்டையும் பா.ஜ.க 1 வார்டையும் சுயேட்சை 4 வார்டுகளையும் கைப்பற்றியது.

    இன்று ஊராட்சி ஒன்றிய குழுதலைவரை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 18-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் செல்லத்துரை ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.

    அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதனால் ஒன்றிய குழு தலைவராக அ.தி.மு.கவை சேர்ந்த செல்லதுரை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அவருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜ.க உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் வாழ்த்து கூறினர்.
    தந்தை கைதான மனவேதனையில் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையம் முன்பு டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றார்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பம் அருகே உள்ள சொரத்தங்குழியை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் அனந்தராமன் (வயது 27). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அனந்தராமன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை அவர் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையம் முன்பு வந்தார். பின்னர் அவர் ஒரு கேனில் கொண்டு சென்ற பெட்ரோலை, தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில், அனந்தராமன் போலீஸ் நிலையத்துக்குள் ஓட முயன்றார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் போலீசார், அனந்தராமனை தடுத்து, அவரது உடலில் எரிந்த தீயை அணைத்தனர். இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    உள்ளாட்சி தேர்தல் முன்விரோதத்தால் ஹாலோ பிளாக் விற்பனையாளரை எரித்துக் கொல்ல முயன்ற வழக்கில் ஜெயராமன் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் தனது தந்தை கைதான மனவேதனையில் அனந்தராமன் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் நிலையம் முன்பு டிரைவர் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கடலூரில் உள்ள பிரபல நகை கடையில் திருடிய ஊழியரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 97 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.
    கடலூர்:

    கடலூர் முதுநகர் போலீஸ் சரகம் சான்றோர்பாளையம் காந்திநகரை சேர்ந்தவர் கலைச்செல்வம் (வயது 29). இவர் கடலூர் திருப்பாதிரிபுலியூர் சுப்பராய செட்டி தெருவில் உள்ள பிரபல நகை கடையில் நெக்லஸ் பிரிவில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் தினசரி கடைக்கு வந்ததும் நெக்லஸ்களை கடை ஊழியர்களிடம் எடுத்து கொடுப்பதும், இரவு நேரத்தில் நெக்லஸ்களை சரிபார்த்து லாக்கரில் வைப்பதும் வழக்கம். கடந்த 6 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த கலைச்செல்வம் பணியின் போது விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து வந்ததால் இவர் மீது கடை உரிமையாளர் முரளி இவர் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார்.

    கடந்த சில நாட்களாக கலைச்செல்வம் அடிக்கடி விடுமுறை எடுத்து வந்தார். தற்போதும் அவர் விடுமுறையில் இருந்ததால் கடை உரிமையாளர் முரளி மற்றும் ஊழியர்கள் நெக்லஸ் பிரிவில் உள்ள நகைகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது 1 கிலோ தங்கநகை குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் முரளி கடை ஊழியர் கலைச்செல்வத்தை தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இது குறித்து திருப்பா திரிப்புலியூர் போலீசில் முரளி புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டு அபிநவ் உத்தரவின் பேரில் துணை போலீஸ்சூப்பிரண்டு சாந்தி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், பால்சுதர், சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் குற்றபிரிவு போலீசார் அடங்கிய தனிப்படையினர் கலைச்செல்வத்தை தீவிரமாக தேடிவந்தனர்.

    இதன் இடையே அவர் வெளியூரில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து கலைச் செல்வனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 97 பவுன் நகை மற்றும் அவரது வீட்டில் இருந்த டி.வி. மோட்டார்சைக்கிள் மற்றும் பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இது குறித்து விசாரணை நடத்தப்பட்டதில் பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது.

    கடையில் நெக்லஸ் பிரிவில் வேலை பார்த்த கலைச்செல்வன் அங்குள்ள நகைகளை ஒவ்வொன்றாக திருடி ஒரு நிதி நிறுவனத்தில் அடகு வைத்துள்ளார். அந்த பணத்தை பெற்றுக்கொண்டு நண்பர்களுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். அதோடு வீட்டுக்கு தேவையான ஆடம்பர பொருட்களையும் வாங்கி குவித்துள்ளார். மேற்கண்டவை விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி கூறியதாவது :-

    நண்பர்களுடன் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக கலைச்செல்வன் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை செலவு செய்துள்ளார். மீதம் உள்ள நகைகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் வேறு ஏதேனும் திருட்டு சம்பவத்தில் இவர் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் மார்கழி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேர்களை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்து வருகிறார்கள்.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் மார்கழிமாதம் ஆருத்ரா தரிசனவிழா சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு க்கான விழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகளும் காலை மாலையில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற்று வருகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டி கேஸ்வரர் ஆகிய தேர்கள் அலங்கரிக்கப்பட்டன. தேர்கள் செல்வதற்காக 4 ரத வீதிகளின் சாலைகளும் சீர் அமைக்கப்பட்டன.

    தேரோட்டத் தையொட்டி இன்று அதிகாலை சாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு அதன்பின்பு அலங்கரிக்கப்பட்டு மேள தாளங்களுடன் தேர்களுக்கு எடுத்து செல்லப்பட்டது.

    அதன்பின்பு பக்தர்கள் கோ‌ஷம் முழங்க தேர்கள் இழுக்கப்பட்டன. முதலில் விநாயகர் தேரும், 2-வதாக சுப்பிரமணியர் தேரும், 3-வதாக நடராஜர் தேரும், 4-வதாக சிவகாமசுந்தரி அம்பாள் தேரும், 5-வதாக சண்டிகேஸ்வரர் தேரும் இழுக்கப்பட்டன. தேர்கள் கிழக்கு ரதவீதி வழியாக புறப்பட்டு, தெற்கு ரதவீதி, மேற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி வழியாக இன்று மாலை கீழரத வீதியை வந்து அடைகிறது.

    தேர்களை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர்செல்லும் 4 ரதவீதிகளிலும் பல வண்ணங்களில் கோலங்கள் போடப்பட்டிருந்தது. தேர்களுக்கு முன்பு சிவனடியார்கள் கைலாய வாத்தியம் முழங்க திருவாசகம் ஓதியபடி சென்றனர்.

    தேரோட்டத்தில் கலந்து கொள்ள சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். அதுபோல் கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று அதிகாலையிலே சிதம்பரத்தில் வந்து குவிந்தனர்.

    சிதம்பரத்தில் 4 ரதவீதிகளிலும் திரும்பிய திசைகளில் எல்லாம் பக்தர்கள் காணப்பட்டனர்.

    தேரோட்டத்தை யொட்டி சிதம்பரத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நாளை 10-ந் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா நடைபெறுகிறது. நாளை அதிகாலை 3 மணிமுதல் 6 மணிவரை ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பா ளுக்கும் நடராஜருக்கும் மகாஅபிஷேகம் நடை பெறுகிறது.

    காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடைபெறுகிறது. அதன்பின்பு 2 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபை பிரவேசமும் நடைபெறுகிறது. இதையடுத்து 11-ந் தேதி இரவு பஞ்சமூர்த்திகள் முத்து பல்லாக்கு வீதி உலாவுடன் உற்சவம் நிறைவுபெறுகிறது.

    ஆருத்ராதரிசன விழாவை காண கடலூர் மற்றும் விழுப்புரம் மாட்டத்திலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இந்தவிழாவில் லட்சக ணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நாளை உள்ளூர் விடுமுறைவிடப்பட்டுள்ளது.
    மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அலுவலரை லாரி ஏற்றி கொல்ல முயன்ற வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் மே.மாத்தூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் ராயர் மகன் கலைச்செல்வன் (வயது 33). இவர் மணல் கடத்தலை தடுப்பதற்காக சம்பவத்தன்று மேமாத்தூர் மணிமுக்தாறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த லாரியை அவர் வழிமறித்தார். ஆனால் டிரைவர் லாரியை நிறுத்தாமல், கலைச்செல்வன் மீது லாரி ஏற்றி கொல்ல முயன்றார். இதில் சுதாரித்துக் கொண்ட அவர் விலகி உயிர் தப்பினார்.

    பின்னர் இதுகுறித்து வேப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கிராம நிர்வாக அலுவலரை லாரி ஏற்றி கொல்ல முயன்றது கச்சிபெருமாநத்தத்தை சேர்ந்த சின்னக்கண்ணு மகன் சிவக்குமார்(27) என்பதும், அவர் மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், சிவக்குமாரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    கைதான சிவக்குமார் மீது வேப்பூர் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும், எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையத்தில் மணல் கடத்தல் வழக்கும் உள்ளது. இதனால் அவரது தொடர் குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு, சிவக்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் சிவக்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டார்.

    இதையடுத்து கடலூர் மத்திய சிறையில் உள்ள சிவக்குமாரிடம், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் போலீசார் வழங்கினர்.
    கடலூர் அருகே குமளங்குளத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவியேற்க கிராமமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    நெல்லிக்குப்பம்:

    கடலூர் ஒன்றியம் குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை பெரியார் அரசு கல்லூரியில் கடந்த 2-ந் தேதி நடைபெற்றது. இதில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலட்சுமி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் முதலில் அறிவித்தனர்.

    மறுநாள் காலையில் பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்ட விஜயலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் விஜயலட்சுமிக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அதிகாரிகள் வழங்கினர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலட்சுமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ஜெயலட்சுமியின் ஆதரவாளர்கள் மற்றும் கிராம மக்கள் நேற்று குமளங்குளத்தில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற ஜெயலட்சுமிக்கு சான்றிதழ் வழங்காமல், பெயர் குளறுபடியால் விஜயலட்சுமிக்கு வழங்கப்பட்ட வெற்றி சான்றிதழை ரத்து செய்ய வேண்டும். இந்த குளறுபடிக்கு காரணமான சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான பதவியேற்பு விழாவை ரத்து செய்ய வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர்.

    இதேபோல் குமளங்குளம் ஊராட்சிக்குட்பட்ட ராணிப்பேட்டை, சூரியன் பேட்டை, மூலக்குப்பம், நரியன்குப்பம், வாண்ட ராஜன் குப்பம், வன்னியர்புரம் அணைக்கட்டு புதுப்பாளையம் ஆகிய கிராமங்களிலும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

    இதற்கிடையே குமளங்குளம் ஊராட்சிமன்ற தலைவராக விஜயலட்சுமி பதவிஏற்கும் விழா, வாண்டராஜன்குப்பம் பகுதியில் உள்ள கிராம சேவை மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இன்று காலை 10 மணிக்கு அவர் பதவிஏற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மேற்பார்வையில் ஏராளமான போலீசார் கிராமசேவை மையத்தின் முன்பு குவிக்கப்பட்டிருந்தனர்.

    அப்போது ஜெயலட்சுமியின் ஆதரவாளர்கள் 100 பெண்கள் உள்பட 500 பேர் திரண்டு வந்து பதவி ஏற்பு விழா நடத்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் அங்கிருந்த போலீசார் இது அரசு நடத்தும் விழா இதனை தடுக்க கூடாது. எனவே இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்று கூறினர்.

    ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். தேர்தலில் ஜெயலட்சுமி தான் அதிக ஓட்டுகள் பெற்றுள்ளார். அதிகாரிகள் குளறுபடியால் விஜயலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர்.

    விஜயலட்சுமியை ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்பதை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எங்களது வாக்காளர் அடையாள அட்டை, ரே‌ஷன் கார்டு மற்றும் அரசு ஆவணங்கள் அனைத்தையும் உங்களிடம் ஒப்படைத்து விடுவோம் என்றனர். அவர்களிடம் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    விஜயலட்சுமி ஊராட்சிமன்ற தலைவராக பதவிஏற்பதற்கு பெண்கள் மற்றும் கிராமமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே ஜெயலட்சுமியின் தரப்பினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பண்ருட்டியில் நள்ளிரவில் உளுந்து மண்டி குடோனில் ரூ.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி காந்தி ரோடு பெரியபள்ளிவாசல் அருகே பாக்கு குடோன், உளுந்து குடோன் நடத்தி வருபவர்கள் சிகாபுதீன் (வயது 56), சிராஜுதீன் (56) இவர்கள் 2 பேரும் தொழிலதிபர்கள்.

    பாக்கு குடோன், உளுந்து குடோனில் 50-க்கும் மேற்பட்டோர்வேலை பார்த்து வருகிறார்கள்.

    நேற்று இரவு 10 மணியளவில் வேலை முடிந்ததும் ஊழியர்கள் கதவுகளை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்கள். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம மனிதர்கள் குடோனின்களில் உள்ள இரும்பு கதவுகளை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்பு அவர்கள் அங்கிருந்த பெரிய லாக்கரை உடைக்க முயன்றனர். அதை உடைக்க முடியவில்லை. அதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்த பீரோ மற்றும் மேஜை டிராயர்களை உடைத்தனர்.

    பின் அதில் இருந்த ரூ.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்து விட்டு சென்று விட்டனர். இன்று காலை குடோனுக்கு ஊழியர்கள் வந்தனர். அப்போது இரும்பு கேட் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் இது குறித்து குடோன் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சிகாபுதீன் , சிராஜுதீன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்பு அவர்கள் குடோனுக்குள் சென்று பார்த்தபோது அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளை போய் இருந்தது தெரிவந்தது.

    இரும்பு லாக்கரை கொள்ளையர்களால் உடைக்க முடியாததால் அதில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பணம் தப்பியது.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று கொள்ளை நடந்த குடோனை பார்வையிட்டனர்.

    இதற்கிடையே பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜனும் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டார். இந்த கொள்ளையில் துப்பு துலக்க கடலூரில் இருந்து போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.

    அது கொள்ளை நடந்த குடோனில் மோப்பம் பிடித்து விட்டு வெளியே ஓடி நின்றது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு. கைரேகைகளை பதிவுசெய்தனர்.

    உளுந்து மண்டி குடோனில் பணம் கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடிவரு கின்றனர்.

    பண்ருட்டியில் நள்ளிரவில் நடந்த இந்த கொள்ளைசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×