search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசார் கைது செய்த நகை கடை ஊழியர் கலைச்செல்வனையும், அவரிடமிருந்து கைபற்றப்பட்ட பொருட்களையும் படத்தில் காணலாம்
    X
    போலீசார் கைது செய்த நகை கடை ஊழியர் கலைச்செல்வனையும், அவரிடமிருந்து கைபற்றப்பட்ட பொருட்களையும் படத்தில் காணலாம்

    சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக கடலூர் பிரபல நகை கடையில் திருடிய ஊழியர் கைது

    கடலூரில் உள்ள பிரபல நகை கடையில் திருடிய ஊழியரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 97 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.
    கடலூர்:

    கடலூர் முதுநகர் போலீஸ் சரகம் சான்றோர்பாளையம் காந்திநகரை சேர்ந்தவர் கலைச்செல்வம் (வயது 29). இவர் கடலூர் திருப்பாதிரிபுலியூர் சுப்பராய செட்டி தெருவில் உள்ள பிரபல நகை கடையில் நெக்லஸ் பிரிவில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் தினசரி கடைக்கு வந்ததும் நெக்லஸ்களை கடை ஊழியர்களிடம் எடுத்து கொடுப்பதும், இரவு நேரத்தில் நெக்லஸ்களை சரிபார்த்து லாக்கரில் வைப்பதும் வழக்கம். கடந்த 6 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த கலைச்செல்வம் பணியின் போது விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து வந்ததால் இவர் மீது கடை உரிமையாளர் முரளி இவர் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார்.

    கடந்த சில நாட்களாக கலைச்செல்வம் அடிக்கடி விடுமுறை எடுத்து வந்தார். தற்போதும் அவர் விடுமுறையில் இருந்ததால் கடை உரிமையாளர் முரளி மற்றும் ஊழியர்கள் நெக்லஸ் பிரிவில் உள்ள நகைகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது 1 கிலோ தங்கநகை குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் முரளி கடை ஊழியர் கலைச்செல்வத்தை தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இது குறித்து திருப்பா திரிப்புலியூர் போலீசில் முரளி புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டு அபிநவ் உத்தரவின் பேரில் துணை போலீஸ்சூப்பிரண்டு சாந்தி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், பால்சுதர், சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் குற்றபிரிவு போலீசார் அடங்கிய தனிப்படையினர் கலைச்செல்வத்தை தீவிரமாக தேடிவந்தனர்.

    இதன் இடையே அவர் வெளியூரில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து கலைச் செல்வனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 97 பவுன் நகை மற்றும் அவரது வீட்டில் இருந்த டி.வி. மோட்டார்சைக்கிள் மற்றும் பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இது குறித்து விசாரணை நடத்தப்பட்டதில் பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது.

    கடையில் நெக்லஸ் பிரிவில் வேலை பார்த்த கலைச்செல்வன் அங்குள்ள நகைகளை ஒவ்வொன்றாக திருடி ஒரு நிதி நிறுவனத்தில் அடகு வைத்துள்ளார். அந்த பணத்தை பெற்றுக்கொண்டு நண்பர்களுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். அதோடு வீட்டுக்கு தேவையான ஆடம்பர பொருட்களையும் வாங்கி குவித்துள்ளார். மேற்கண்டவை விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி கூறியதாவது :-

    நண்பர்களுடன் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக கலைச்செல்வன் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை செலவு செய்துள்ளார். மீதம் உள்ள நகைகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் வேறு ஏதேனும் திருட்டு சம்பவத்தில் இவர் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×