search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தில் பற்றிய தீயை அணைக்க போராடும் தீயணைப்பு படை வீரர்கள்.
    X
    நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தில் பற்றிய தீயை அணைக்க போராடும் தீயணைப்பு படை வீரர்கள்.

    கடலூரில் நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தில் தீ விபத்து

    கடலூரில் இன்று நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானது.

    கடலூர்:

    கடலூர் செம்மண்டலம் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் உள்ளது. இங்கிருந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளுக்கும் அரிசி, சர்க்கரை, உளுந்து, பாமாயில், கோதுமை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் லாரி மற்றும் வேன்களில் கொண்டு செல்லப்படுகிறது.

    இந்த வளாகத்தில் அலுவலக கட்டிடமும் உள்ளது. 2 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தில் பொருட்கள் இருப்பு பதிவேடுகள், அங்கு வேலைபார்க்கும் ஊழியர்களின் பதிவேடுகள், ஓய்வு பெற்றோரின் ஆவணங்கள் உள்ளது.

    இன்று காலை 5 மணி அளவில் இந்த அலுவலகத்தில் திடீர் என புகை கிளம்பியது. அதிர்ச்சி அடைந்த காவலாளிகள் என்ன என்று பார்த்த போது அங்கு தீ எரிந்து கொண்டு இருந்தது. உடனடியாக கடலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் நெருப்பு மேலும் பற்றி எரிய தொடங்கியது. அந்த பகுதியில் உள்ள அறைகள் முழுவதும் தீ பற்றி எரிந்தது. இதனால் அந்த இடம் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

    தொடர்ந்து தீ எரிந்ததால் நெல்லிக்குப்பம், கடலூர் முதுநகர் உள்ளிட்ட பகுதியில் இருந்து 7 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்தனர். அவர்களும் போராடி தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் நெருப்பு கட்டுக்குள் வரவில்லை. தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகிறார்கள்.

    தீ விபத்தில் அலுவலக அறைகளில் உள்ள முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானது. தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிபத்துக்ககான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தீ விபத்து குறித்து அறிந்த அந்த பகுதியில் உள்ளவர்கள் திரண்டனர். இந்த இடம் நகரில் மைய பகுதியில் உள்ளது. இந்த வழியாகத்தான் நெல்லிக்குப்பம், பண்ருட்டி, புதுச்சேரி ஆகிய பகுதிக்கு பஸ்கள் செல்ல வேண்டும். பொதுமக்கள் அதிகளவில் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கபட்டது.

    Next Story
    ×