search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிச்சாவரத்தில் சுற்றுலா பயணிகளுக்கான படகு போட்டி நடந்தது.
    X
    பிச்சாவரத்தில் சுற்றுலா பயணிகளுக்கான படகு போட்டி நடந்தது.

    பிச்சாவரம் - செஞ்சி கோட்டையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    காணும் பொங்கலையொட்டி பிச்சாவரம் மற்றும் செஞ்சி கோட்டைக்கு இன்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் இருந்தனர். நேரம் ஆக ஆக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.
    சிதம்பரம்:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கோலாகலமாக நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. நேற்று உழவர் திருநாளான மாட்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

    இன்று காணும் பொங்கல் பண்டிகை ஆகும். இதையொட்டி தமிழர்கள் சுற்றுலா மையங்களுக்கு செல்வது வழக்கம்.

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளை பகுதியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இங்குள்ள உப்பனாறு அருகே மருத்துவ குணம் கொண்ட சுரபுன்னை காடுகள் உள்ளன.

    எனவே இதனை ரசிப்பதற்காக வெளிநாடுகள் மற்றும் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

    இன்று காணும் பொங்கலையொட்டி காலை முதலே சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் ஆனந்தமாக படகு சவாரி செய்து சுரபுன்னை காடுகளை பார்த்து ரசித்தனர்.

    ஒரே நேரத்தில் ஏராளமானோர் திரண்டதால் படகு சவாரி செய்ய பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். முன்னதாக நேற்று பொங்கல் பண்டிகையையொட்டி படகு போட்டி நடந்தது. இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள கோட்டையில் இன்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் இருந்தனர். நேரம் ஆக ஆக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.

    செஞ்சி கோட்டையில் உள்ள வரலாற்று சின்னங்களை பார்த்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.

    சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கோட்டை அடிவாரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜன், இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், மதுசூதனன், சப்-இன்ஸ்பெக்டர் சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் மேற்பார்வையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பெண் போலீசாரும் சாதாரண உடையில் வந்து கண்காணித்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் திடீர் கடைகள் உருவானது.

    காணும் பொங்கலையொட்டி செஞ்சிக்கோட்டை களை கட்டியது.

    Next Story
    ×