search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பண்ருட்டி அருகே போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்த கார் டிரைவர் மரணம்

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்த கார் டிரைவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுக்குப்பம் பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தலில் தலைவர் பதவிக்கு நடுக்குப்பத்தை சேர்ந்த சக்திவேல் வெற்றி பெற்றார்.

    இவரை எதிர்த்து போட்டியிட்ட பெருமாள் என்பவர் தோல்வி அடைந்தார். இதனால் இருதரப்பினர் ஆதரவாளர்களுக்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது.

    இந்த முன்விரோதத்தில் பஞ்சாயத்து தலைவர் சக்திவேலின் ஆதரவாளரான ராஜதுரை என்பவரது ஹலோபிளாக் கொட்டகைக்கு தீ வைக்கப்பட்டது.

    அங்கு தூங்கி கொண்டு இருந்த ராஜதுரை அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இந்த சம்பவம் குறித்து ராஜதுரை முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். புகார் மனுவில் தன்னை பெருமாளின் ஆதரவாளர்கள் உயிரோடு எரித்து கொல்ல முயன்றதாக கூறியிருந்தார்.

    இது தொடர்பாக போலீசார் சொரத்தங்குழியை சேர்ந்த ஜெயராமன் என்பவரை கைது செய்தனர்.

    இந்த தகவல் ஜெயராமனின் மகன் அனந்தராமனுக்கு (வயது 27) தெரிந்தது. இவர் சென்னையில் கால்டாக்சி டிரைவராக உள்ளார். அவர் சொந்த ஊரான சொரத்தங்குழி வந்தார்.

    அவர் ஹாலோபிளாக் உரிமையாளர் ராஜதுரையிடம் ஏன் எனது தந்தை மீது பொய் புகார் கொடுத்தீர்கள் என்று கேட்டு தகராறு செய்தார். பின்னர் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு மண்எண்ணை கேனுடன் சென்றார்.

    போலீசார் எனது தந்தை மீது பொய்வழக்கு பதிந்துள்ளனர் என்று கூறி தனது உடலில் அனந்தராமன் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். கண் இமைக்கும் நேரத்தில் அவரது உடலில் தீ பற்றியது. அவர் அலறி துடித்தவாறு தீ பற்றிய உடலுடன் அங்கும் இங்கும் ஓடினார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் விரைந்து வந்து அனந்தராமன் உடலில் பற்றிய தீயை அணைத்தனர்.

    பின்னர் அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அனந்தராமனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அதன்பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அனந்தராமனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஆனாலும் அனந்தராமனின் நிலைமை மோசமானதால் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர் இறந்தார். இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×