என் மலர்
கடலூர்
விருத்தாசலம் அருகே பரவலூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் முடிந்த உடன் கோவில் பூசாரிகள் கோவிலை பூட்டிவிட்டு வழக்கம்போல வீட்டிற்கு சென்றனர்.
நள்ளிரவு சமயம் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இன்று காலை கோவிலில் நடைதிறப்பதற்காக பூசாரி மணி வந்தார். அப்போது கோவிலின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்ற பார்த்து பார்த்த போது உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது கண்டு பதறி போனார்.
இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
இதுகுறித்து கோவில் பூசாரி மணி விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கோவிலுக்கு சென்றனர். கோவிலை சுற்றிலும் பார்வையிட்ட போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்ட சுரங்கத்துறை உதவி இயக்குனர் லலிதா. இவர் இன்று காலை காரில் கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை டிரைவர் ஓட்டினார். இந்த கார் கடலூர் அருகே அன்னவல்லி பகுதியில் சென்று கொண்டிருந்தது.
அப்போது வடலூரில் இருந்து கடலூர் நோக்கி வேளாண்துறை உதவி இயக்குனர் பார்த்தசாரதி என்பவர் காரில் வந்தார்.
அந்த சமயம் முன்னால் சென்ற வாகனத்தை முந்தும்போது கண் இமைக்கும் நேரத்தில் இந்த கார் சுரங்கதுறை உதவி இயக்குனர் சென்ற கார்மீது பக்கவாட்டில் வேகமாக உரசியது. இதில் நிலை தடுமாறி சுரங்கத்துறை உதவி இயக்குனர் லலிதாவின் கார் சாலையில் உருண்டு சென்றது.
அப்போது அந்த பகுதியில் அன்னவல்லி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சாலை ஓரம் நின்று பேசிகொண்டிருந்தனர். கார் உருண்டு வருவதை பார்த்து அவர்கள் அங்கிருந்து விலக முயன்றனர். ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் உருண்டு வந்தகார் இவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் அன்னவல்லி பகுதியை சேர்ந்த வீரமுத்து என்பவர் காருக்கு அடியில் சிக்கி பலியானார்.
இந்த விபத்தில் அதேபகுதியை சேர்ந்த பால்ராஜ் (27), அஜித் (25), சத்தியமூர்ததி (24), அசோக் (24), ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இவர்கள் சாலையில் அங்கும் இங்குமாக கிடந்தனர்.
இதேபோல் இந்த விபத்தில் உதவி இயக்குனர் லலிதா, லலிதாவின் கார் டிரைவர் ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார்கள்.
இதற்கிடையில் அதிகாரி லலிதாவி கார் மீது உரசிய வேளாண் உதவி இயக்குனர் பார்த்தசாரதியின் கார் திடீர்ரென “லாக்”ஆனது இதனால் அவர் படுகாயத்துடன் கூச்சல் போட்டார். இதனை அறிந்த ஏராளமான கிராம மக்கள் அங்கு திரண்டனர்.
அவர்கள் கார் கண்ணாடிகளை உடைத்து பார்த்த சாரதியை மீட்டனர். படுகாயம் அடைந்த அதிகாரிகள் உள்பட 7 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ்வேன் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
வேப்பூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 60). பத்திரங்கள் விற்பனை செய்து வருகிறார்.
நேற்று இரவு கண்ணனும் அவரது மனைவியும் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டனர்.
இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் நள்ளிரவில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
பின்னர் அவர்கள் அருகில் வசித்து வந்த விவசாயி ராஜா (40) என்பவர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் பீரோவில் இருந்த நகை பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இதேபோல் வேப்பூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி இவரது மனைவி லதா (வயது 50). இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று இருந்தார். இவரது வீட்டிலும் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கண்ணன் , ராஜா மற்றும் லதா ஆகியோரின் வீட்டு கதவுகள் திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவர்கள் இது குறித்து வீட்டின் உரிமையாளருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த வீடுகளை பார்வையிட்டு அங்கிருந்த பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். 3 வீடுகளிலும் கொள்ளை போன நகை பணத்தின் மதிப்பு தெரியவில்லை.
3 வீடுகளின் கதவுகளை உடைத்து பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். ஒரே நாள் இரவில் 3 வீடுகளில் கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்களுக்கிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒவ்வொரு தேர்தலின் போதும், நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இளம் தலைமுறையினரை முழுமையாக தேர்தலில் பங்கெடுக்க செய்யும் விதமாக அவர்களை ஊக்குவிப்பதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ந்தேதி தேசிய வாக்காளர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. வாக்களிக்கும் உரிமையையும், இந்தியாவின் ஜனநாயகத்தையும் கொண்டாடும் நாளான இந்நாளில், ஒவ்வொரு வாக்காளர்களும் தாங்கள் வாக்களிப்பதை ஒரு கடமையாக கருத வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் நோக்கமே வாக்காளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய வேண்டும், குறைந்த வயதில் உள்ள வாக்காளர்களை அதிகளவில் பங்கெடுக்க செய்வதே ஆகும். இதற்காக எத்தனையோ விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறது. அவ்வாறு இருந்தும் ஒவ்வொரு முறை தேர்தலின் போதும் வாக்குப்பதிவு என்பது நினைத்த அளவுக்கு உயர்ந்ததாக தெரியவில்லை.
இன்றைய ஆண்ட்ராய்டு காலத்தில் வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர தேர்தல் ஆணையம் எத்தனையோ விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த இளம் வாக்காளர்கள், ஒரு விரல் புரட்சி என்று கூறி தங்களது வாக்கை பதிவு செய்தவுடன், செல்போனில் புகைப்படங்களை எடுத்து, அதை தங்களது சமூக வலைதள பக்கம் மற்றும் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டசாக வைத்து வருவதை பார்த்து இருப்போம். ஆனால், அந்த காலத்தில் இருந்தே எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லாமல், தனது ஜனநாயக கடமையை ஒருவர் செவ்வனே செய்து ஒரு விரல் புரட்சியை புரிந்து வருகிறார். அவருக்கு வயது 106.
ஆம், கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள பெருமுளை கிராமத்தை சேர்ந்தவர் சின்னபையன். 106 வயதுடைய இவருக்கு 3 மகள்கள், 6 பேர குழந்தைகள் மற்றும் 15 கொள்ளு பேர குழந்தைகள் உள்ளனர். இவர் உள்ளாட்சி தொடங்கி நாடாளுமன்ற தேர்தல் வரைக்கும் தனது வாக்கை பதிவு செய்ய தவறியதில்லை.
நமது வாக்கு நமது எதிர்காலம் என்று இளம் தலைமுறையினருக்கு ஓர் வழிகாட்டியாக விளங்கும் சின்னபையனை, பெருமூளை கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு தேசிய வாக்காளர் தினமான நேற்று விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரவீன்குமார், நேரடியாக சென்று அவரை கவுரவித்தார். அப்போது ஒரு தாம்பூல தட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் உள்ளிட்ட பொருட்களை வைத்து, சப்-கலெக்டர் பிரவீன்குமார் தலைமுறைகள் கண்ட சின்னபையனிடம் வழங்கினார்.
அதேபோல், இளம் வாக்காளர்களை ஊக்குவிக்கும் விதமாக பெருமூளை கிராமத்தை சேர்ந்த சேர்ந்த ராயர் காந்தி மகள் ஜோதி (20) என்பவரும் வருவாய்த்துறை சார்பில் கவுரவிக்கப்பட்டார். அப்போது திட்டக்குடி தாசில்தார் செந்தில்வேல், தேர்தல் துணை தாசில்தார் மஞ்சுளா, வருவாய் ஆய்வாளர் குமரன், சப்-இன்ஸ்பெக்டர் வீரசேகரன், காவலர் சதீஷ் மற்றும் கிராம மக்கள் பலர் உடன் இருந்தனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்கும் ஜனநாயக கடமையை செய்திட முடியும். எனவே அந்த வாய்ப்பையும் உரிமையையும் இழந்து விடாதீர்கள். வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்தால் தான் நாட்டை முன்னேற்ற பாதைக்கு எடுத்து செல்ல முடியும்.
இதுகுறித்து சின்னப்பையன் கூறுகையில், வாக்களிப்பது என்பது ஒரு ஜனநாயக கடமையாகும், ஆகையால் தான் ஒவ்வொரு தேர்தலின் போதும் முதலில் எனது வாக்கை செலுத்தி விட்டு தான் அடுத்த வேலையை பார்க்க செல்வேன். அந்த அளவுக்கு உறுதியாக இருந்தேன். காமராஜர், கக்கன் காலம் தொடங்கி இன்று வரைக்கும் வாக்களித்து விட்டேன். ஆனால் அந்த காலத்தில் வாக்களிக்கும் போது வேட்பாளர்கள் எப்படி பட்டவர், அவரது நோக்கங்கள் என்ன என்பது குறித்து அறிந்து தான் வாக்களிப்போம். ஆனால் தற்போது கவர்ச்சி திட்டங்கள், ஓட்டுக்கு பணம் என்று மாறி, மக்களை ஏமாற்றும் ஒரு செயலாக மாறிவிட்டது.
மேலும் வாக்குச்சீட்டு, வாக்குப்பதிவு முறை என்று இருமுறைகளையும் கையாண்டு இருக்கிறேன். அப்போது குறிப்பிட்ட சின்னங்களே இருந்தது. ஆனால் தற்போது அதிகப்படியான சின்னங்கள் இருப்பதால், குழப்பங்கள் ஏற்படுகிறது. இன்றைய இளைய சமுதாயம் வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதை உணர்ந்து தேர்தலில் தங்களது முழு பங்களிப்பை அளிக்க வேண்டும். அப்போது தான் நாம் விரும்பும், நமது கோரிக்கைகளையும், கண்ணீரையும் துடைக்கும் ஒரு அரசு நமக்கு கிடைக்கும் என்றார்.
தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் பல்வேறு மாவட்டங்களில் தேர்வு எழுதியவர்களை ரகசியமாக போலீசார் கண்காணித்தனர்.
இதுதொடர்பாக கீழக்கரை ராமேஸ்வரம் ஆகிய தேர்வு மையங்களில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் இந்த மையங்களில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தேர்வு பெற்ற 99 பேர் அதிரடியாக நீக்கப்பட்டனர்.
இந்த மோசடியில் இடைத்தரகர்கள் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கடலூர் சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் போலீசார் உள்ளூர் போலீஸ் படை உதவியுடன் பண்ருட்டி சிறுகிராமம், விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் அதிரடி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஏஜெண்டுகளிடம் தொடர்பு உடையவர்களாக கூறப்படும் 2 பேர் பண்ருட்டி சிறுகிராமம், விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

சென்னையில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் பண்ருட்டி சிறுகிராமத்தை சேர்ந்த இடைத்தரகர் ராஜசேகர் என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். கைதான ராஜசேகர் குரூப்-4 தேர்வில் முதல் 50 இடத்தில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்து வருகிறது. விருத்தாசலத்திலிருந்து அழைத்து வரப்பட்ட மகாலட்சுமியிடம் இது தொடர்பாக போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாடு முழுவதும் வருகிற 26-ந்தேதி குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நிலையில், குடியரசு தினவிழாவில் பயங்கரவாதிகள் நாசவேலையில் ஈடுபட இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து நாடுமுழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் கடந்த 8-ந்தேதி குமரி மாவட்டத்தில் களியக்காவிளை சோதனை சாவடியில்ல் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே தமிழக பகுதியிலும் வழக்கத்தை விட இந்த முறை போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் சிறுபாக்கம் வனப்பகுதிகளை கொண்டதாகும். சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதிகளில் இருந்து இதன் வழியாக தான் கடலூர் மாவட்டத்துக்கு வாகனங்கள் வர முடியும். எனவே சேலம்-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறுபாக்கத்தில் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள சோதனை சாவடி மையத்தில் போலீசார் கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் உத்தரவின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட போலீசார் 2 குழுக்களாக 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். சோதனைச்சாவடியில் மணல் மூட்டைகளை கொண்டு சாலையின் இருபகுதியிலும் அடுக்கி வைத்தபடி, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் அந்த வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி, தீவிர சோதனை செய்தே பின்னரே அங்கிருந்து அனுப்பி வைத்து வருகின்றனர். முன் எப்போதும் இல்லாத வகையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் சிறுபாக்கம் சோதனை சாவடியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூர்:
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் ஆலம்பாடி புதுக்காலனியை சேர்ந்தவர் கலையரசன் (வயது 24). இவர் கடலூர் நத்தவெளியில் உள்ள தனது அக்காள் வீட்டில் தங்கி இருந்தார். அங்குள்ள செல்போன் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அதே கடையில் 22 வயது இளம்பெண் ஒருவரும் வேலை பார்த்து வந்தார்.
அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. அவர்கள் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
சம்பவத்தன்று கலையரசன் தனது காதலியை தனது அக்காள் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு யாரும் இல்லை. பின்னர் அவரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
அதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரும் திருப்பூர் சென்றனர். அங்கு ஒரு பனியன் கம்பெனியில் வேலையில் சேர்ந்தனர். அப்போது அவர் தனது காதலியிடம் உன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் நீ உன்னுடைய நிர்வாண படத்தை எனக்கு செல்போனில் அனுப்ப வேண்டும் என்று கூறினார். அதன்பேரில் அவரும் தன்னுடைய நிர்வாண படத்தை கலையரசனுக்கு அனுப்பினார்.
அதனை தொடர்ந்து கலையரசன் தனது காதலியிடம் மேலும் நிர்வாண படங்களை கேட்டு தொந்தரவு செய்து வந்தார். இதனால் உஷாரான அந்த இளம்பெண் கலையரசனை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த கலையரசன், பேஸ்புக்கில் அந்த இளம்பெண்ணின் நிர்வாண படங்களை பதிவு செய்தார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் அந்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக கடலூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலியின் நிர்வாண படங்களை பேஸ்புக்கில் பதிவு செய்த கலையரசனை கைது செய்தனர்.
அதன் பின்பு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை காவலில் வைக்கும் படி நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கலையரசன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியில் உள்ள ஒரு தனியார் சிமெண்டு ஆலையில் இருந்து, சிமெண்டு தயார் செய்ய தேவையான மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு, சேலம் அடுத்த வாழப்பாடியில் உள்ள மற்றொரு சிமெண்டு ஆலையை நோக்கி லாரி ஒன்று நேற்று காலையில் புறப்பட்டது. இதை திருச்சி மாவட்டம் முசிறி சோர்குடி கிராமத்தை சேர்ந்த பிச்சை மகன் சுப்பையா(வயது 49) என்பவர் ஓட்டி சென்றார்.
லாரி காலை 10.30 மணிக்கு சிறுபாக்கம் அடுத்த மாங்குளம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென லாரியில் தீப்பற்றியது. சிறிது நேரத்தில் மளமளவென தீ, லாரி முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. உடனே டிரைவர் நடுரோட்டில் லாரியை நிறுத்திவிட்டு, குதித்து உயிர் தப்பினார்.
மேலும் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளும், இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி அறிந்த சிறுபாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தனிப்பிரிவு ஏட்டு தனசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அந்த பகுதியில் போக்குவரத்தை நிறுத்தினர்.
இதனிடையே வேப்பூர், சின்னசேலம் பகுதி தீயணைப்பு நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னரே தீயை அவர்களால் அணைக்க முடிந்தது. இருப்பினும் லாரி முழுவதும் எரிந்து எலும்புக்கூடானது.
லாரியில் இருந்த மூலப்பொருட்களின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து சிறுபாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடுரோட்டில் லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், சேலம்-விருத்தாசலம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிதம்பரத்தில் பிரசித்திபெற்ற தில்லைக்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சிதம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த கோவிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கோவிலின் உள்புறத்தில் 4 உண்டியல்களும், வெளியில் ஒரு உண்டியலும் வைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை பணத்தை இந்த உண்டியல்களில் செலுத்துவது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு பூஜை முடிந்ததும் கோவிலின் நடை சாத்தப்பட்டது. கோவில் காவலராக தில்லைக்காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலு உள்ளார். இவர் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு கோவில் கதவு பூட்டை திறந்து, உள்ளே சென்றார். அப்போது ஒரு உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அதில் இருந்த காணிக்கை பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதுபற்றி உடனடியாக அவர், கோவில் செயல் அலுவலர் ராஜாசரவணகுமாருக்கும், சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்முருகன், ராஜா மற்றும் போலீசார் விரைந்து சென்று, உடைக்கப்பட்ட உண்டியலை பார்வையிட்டு அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், சுற்றுச்சுவர் மீது ஏறி கோவிலுக்குள் குதித்து, கடப்பாரையால் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது. ஆனால் எவ்வளவு பணம் கொள்ளை போனது என்பது பற்றி தெரியவில்லை. சமீபத்தில்தான் 5 உண்டியல்களும் திறக்கப்பட்டு காணிக்கை பணம் எண்ணப்பட்டது. அப்போது அதில், ரூ.7¾ லட்சத்திற்கு மேல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர். நகரின் மத்தியில் உள்ள தில்லைக்காளியம்மன் கோவிலில் கொள்ளை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






