search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று தேரோட்டம்
    X
    சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று தேரோட்டம்

    ஆருத்ரா தரிசனவிழா: சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று தேரோட்டம்

    உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் மார்கழி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேர்களை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்து வருகிறார்கள்.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் மார்கழிமாதம் ஆருத்ரா தரிசனவிழா சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு க்கான விழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகளும் காலை மாலையில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற்று வருகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டி கேஸ்வரர் ஆகிய தேர்கள் அலங்கரிக்கப்பட்டன. தேர்கள் செல்வதற்காக 4 ரத வீதிகளின் சாலைகளும் சீர் அமைக்கப்பட்டன.

    தேரோட்டத் தையொட்டி இன்று அதிகாலை சாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு அதன்பின்பு அலங்கரிக்கப்பட்டு மேள தாளங்களுடன் தேர்களுக்கு எடுத்து செல்லப்பட்டது.

    அதன்பின்பு பக்தர்கள் கோ‌ஷம் முழங்க தேர்கள் இழுக்கப்பட்டன. முதலில் விநாயகர் தேரும், 2-வதாக சுப்பிரமணியர் தேரும், 3-வதாக நடராஜர் தேரும், 4-வதாக சிவகாமசுந்தரி அம்பாள் தேரும், 5-வதாக சண்டிகேஸ்வரர் தேரும் இழுக்கப்பட்டன. தேர்கள் கிழக்கு ரதவீதி வழியாக புறப்பட்டு, தெற்கு ரதவீதி, மேற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி வழியாக இன்று மாலை கீழரத வீதியை வந்து அடைகிறது.

    தேர்களை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர்செல்லும் 4 ரதவீதிகளிலும் பல வண்ணங்களில் கோலங்கள் போடப்பட்டிருந்தது. தேர்களுக்கு முன்பு சிவனடியார்கள் கைலாய வாத்தியம் முழங்க திருவாசகம் ஓதியபடி சென்றனர்.

    தேரோட்டத்தில் கலந்து கொள்ள சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். அதுபோல் கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று அதிகாலையிலே சிதம்பரத்தில் வந்து குவிந்தனர்.

    சிதம்பரத்தில் 4 ரதவீதிகளிலும் திரும்பிய திசைகளில் எல்லாம் பக்தர்கள் காணப்பட்டனர்.

    தேரோட்டத்தை யொட்டி சிதம்பரத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நாளை 10-ந் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா நடைபெறுகிறது. நாளை அதிகாலை 3 மணிமுதல் 6 மணிவரை ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பா ளுக்கும் நடராஜருக்கும் மகாஅபிஷேகம் நடை பெறுகிறது.

    காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடைபெறுகிறது. அதன்பின்பு 2 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபை பிரவேசமும் நடைபெறுகிறது. இதையடுத்து 11-ந் தேதி இரவு பஞ்சமூர்த்திகள் முத்து பல்லாக்கு வீதி உலாவுடன் உற்சவம் நிறைவுபெறுகிறது.

    ஆருத்ராதரிசன விழாவை காண கடலூர் மற்றும் விழுப்புரம் மாட்டத்திலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இந்தவிழாவில் லட்சக ணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நாளை உள்ளூர் விடுமுறைவிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×