என் மலர்tooltip icon

    கடலூர்

    • கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு மீண்டும் ரெயில்கள் இயக்கப்பட்டாலும், கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான ரெயில்கள் நிற்பதில்லை.
    • உழவன் எக்ஸ்பிரஸ், மன்னை எக்ஸ்பிரஸ், திருப்பதி எக்ஸ்பிரஸ் மற்றும் மகால் சூப்பர் பாஸ்ட் ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் விழுப்புரத்திற்கு அடுத்தபடியாக சிதம்பரம் ரெயில் நிலையத்தில் தான் நிற்கிறது.

    கடலூர்:

    போக்குவரத்தில் மிகவும் இன்றியமையாததாக இருப்பது ரெயில் போக்குவரத்து. ரெயில் பயணத்தின் போதே பொதுமக்கள், தாங்கள் பாதுகாப்பாக செல்வதை உணருகின்றனர். நீண்ட தூர பயணம் மேற்கொள்பவர்கள் ரெயிலில் செல்வதற்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதனால் தான் ரெயில்களில் எப்போதும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றது.

    அந்த வகையில் கொரோனா ஊரடங்குக்கு முன்பு கடலூர் வழியாக இயக்கப்பட்ட 11 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உள்பட அனைத்து ரெயில்களிலும் அதிகளவில் பொதுமக்கள் கூட்டம் இருந்தது. இதனால் கடலூர் மாவட்ட மக்கள் பெரிதும் பயன் அடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு மீண்டும் ரெயில்கள் இயக்கப்பட்டாலும், கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான ரெயில்கள் நிற்பதில்லை. குறிப்பாக தினசரி இயக்கப்படும் காரைக்கால் எக்ஸ்பிரஸ் கடலூர் மாவட்டத்தில் உள்ள எந்தவொரு ரெயில் நிலையத்திலும் நிற்பதில்லை. விழுப்புரத்தில் இருந்து புறப்படும் ரெயில் கடலூர் மாவட்டத்தை கடந்து 122 கி.மீட்டர் தூரம் சென்று மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் தான் நிற்கிறது. இதனால் வேளாங்கண்ணி, காரைக்கால், நாகப்பட்டிணம் செல்லக்கூடிய கடலூர் மாவட்ட மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

    மேலும் உழவன் எக்ஸ்பிரஸ், மன்னை எக்ஸ்பிரஸ், திருப்பதி எக்ஸ்பிரஸ் மற்றும் மகால் சூப்பர் பாஸ்ட் ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் விழுப்புரத்திற்கு அடுத்தபடியாக சிதம்பரம் ரெயில் நிலையத்தில் தான் நிற்கிறது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மற்றும் கடலூர் துறைமுகம் ரெயில் நிலையங்களில் நிற்பதில்லை. இதேபோல் கன்னியாகுமரியில் இருந்து கடலூர் வழியாக புதுச்சேரிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நிற்பதில்லை.

    மாவட்டத்தின் தலைநகரிலேயே பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிற்காமல் செல்வதால், பொதுமக்கள் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனால் வேறு வழியின்றி அதிக செலவு செய்து பஸ்களில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

    இதுகுறித்து கடலூர் மக்கள் கூறுகையில், மாவட்ட தலைநகரான கடலூரில் 2 ரெயில் நிலையங்கள் உள்ளன. ஆனால் இந்த ரெயில் நிலையங்களில் பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிற்பதில்லை. கடலூரை ரெயில்வே நிர்வாகம் புறக்கணித்து வருகிறது. இதனால் ரெயில் பயணங்களை மேற்கொள்ளும் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே அனைத்து ரெயில்களும் கடலூரில் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • வங்கக்கடலில் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கரையோரம் சில நாட்களுக்கு முன்பு குறைந்த காற்றுழுத்த தாழ்வு நிலை உருவானது.
    • 1-ம் எண் கூண்டு தூரத்தில் புயல் உருவாகி இருப்பதை குறிப்பதாகும்.

    கடலூர்:

    வங்கக்கடலில் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கரையோரம் சில நாட்களுக்கு முன்பு குறைந்த காற்றுழுத்த தாழ்வு நிலை உருவானது. இது மேலும் வலுவடைந்து நேற்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளது.

    இது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (புதன்கிழமை) சத்தீஸ்கர் மாநிலம் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் காரணமாக கடலூர், நாகை மற்றும் பாம்பன் துறைமுக அலுவலகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 1-ம் எண் கூண்டு தூரத்தில் புயல் உருவாகி இருப்பதை குறிப்பதாகும்.

    • வீடு கட்டுவதற்கு கடன் வாங்கி மாதத் தவணை கட்டாத நபருக்கு வங்கி ஊழியர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
    • பணம் கட்ட வேண்டும் என கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டு கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் சேர்ந்தவர் கருணாமூர்த்தி (வயது 47).இவர் தனியார் வங்கியில் 2 லட்சத்து 10 ஆயிரம் வீடு கட்டுவதற்கு கடன் வாங்கி உள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக லோன் வாங்கியதற்கு மாத தவணை கட்டவில்லை. இதன் காரணமாக வங்கி ஊழியர்கள் கருணாமூர்த்தி வீட்டிற்கு நேரில் சென்று பணம் கட்ட வேண்டும் என கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டு கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் கருணா மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் வங்கி ஊழியர்கள் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் அருகே 2 கோஷ்டியினர் மோதல்- 8 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    • தந்தை கார்த்தி , சிவமூர்த்தி என்பவரிடம் சென்று கேட்டபோது கார்த்தியையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே நெல்லிக்குப்பம் தமிழ் குச்சிபாளையம் சேர்ந்தவர் கார்த்தி. இவரது மகன் புகழேந்தி மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் இருசக்கர வாகனத்தில் வான் பக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மாட்டுவண்டி சென்று கொண்டிருந்தபோது அதிலிருந்து நபர் மாடுகளை குச்சியால் அடித்துக் கொண்டிருந்த போது புகழேந்தி மீது பட்டது. இதனைப் புகழேந்தி கேட்டபோது மாட்டு வண்டியில் சென்றவர் திடீரென்று தாக்கினார். இதனை அறிந்த தந்தை கார்த்தி , சிவமூர்த்தி என்பவரிடம் சென்று கேட்டபோது கார்த்தியையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    மேலும் இந்த தகராறில் சிவமூர்த்தியை, கார்த்தி தரப்பினர் தாக்கியதாக தெரிகிறது. இதில் கார்த்தி, புகழேந்தி மற்றும் சிவமூர்த்தி ஆகிய 3 பேர் காயம் அடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் கார்த்தி கொடுத்த புகாரின் பேரில் பெரிய சோழவள்ளியை சேர்ந்த சிவமூர்த்தி, சத்தியமூர்த்தி, பக்கிரி, ரவிவர்மா ஆகிய 4 பேர் மீதும், சிவமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் டி.குச்சிப்பாளையம் சேர்ந்த ஜீவா, வினோத், புகழ், கார்த்தி என 8 பேர் மீது போலீசார் தனித்தனி புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் போதை பொருட்கள் தாராளமாக கிடைக்கிறது.
    • அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயத்திற்கும் வீடுகளுக்கும் 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.

    தருமபுரி:

    அ.தி.மு.க.வின் இடைக்கால பொது செயலாளர் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக தருமபுரிக்கு எடப்பாடி பழனிச்சாமி இன்று வந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:-

    அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கம். அதனை கண்ணை இமை காப்பதுபோல காப்பாற்றியவர் ஜெயலலிதா. இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய இயக்கத்தில் உங்களின் ஆசியோடு இடைக்கால பொது செயலாளர் என்ற உயர்ந்த பொறுப்பு கிடைத்துள்ளது.

    இந்த பொறுப்பை ஏற்றவுடன் உங்கள் அழைப்பை ஏற்று ஓடோடி வந்துள்ளேன். இங்கு எழுச்சிமிகு வரவேற்பை கொடுத்துள்ளீர்கள்.

    இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி, அவர்களின் வாழ்வை பாதிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும். சூதாட்டத்தை தடை செய்வதற்கு மக்கள் கருத்து கேட்பை நடத்துவது சரியல்ல.

    தருமபுரி மாவட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட எண்ணேகோல் புதூர் தும்பல அள்ளி மற்றும் அணையாளம் அணைக்கட்டு முதல் தூள்செட்டி ஏரி வரையிலான நீர் பாசன திட்டங்கள் தற்போது ஆமை வேகத்தில் செயல்பட்டு வருகிறது.

    இதை விரைவாக செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் இங்குள்ள விவசாயிகள் பெரிதும் பயன்பெறுவார்கள். இதேபோன்று பாலக்கோடு பகுதியில் ஜெர்தலாவ் கால்வாய் முதல் புலிக்கரை ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரும் நீர் பாசன திட்டமும் முனைப்புடன் செயல்படுத்தப்படாமல் உள்ளது.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். நீர் பாசன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் தருமபுரி மாவட்டம் செழிப்பான மாவட்டமாக மாறும்.

    தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் போதை பொருட்கள் தாராளமாக கிடைக்கிறது. இதை தடுப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயத்திற்கும் வீடுகளுக்கும் 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது தமிழக அரசு மின் கட்டண உயர்வு அறிவித்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் சொத்து வரி உயர்வு, வீட்டு வரி உயர்வு உள்ளிட்ட வரி ஏற்றத்தால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உட்பட்டு வருகின்றனர்.

    அ.தி.மு.க. தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீது வேண்டுமென்றே திட்டமிட்டு தமிழக அரசு பொய் வழக்குகளை போட்டு வருகிறது. இந்த வழக்குகளை முறியடித்து அ.தி.மு.க. வீறு கொண்டு எழும்.

    தி.மு.க.வுடன் கைகோர்த்துக்கொண்டு அ.தி.மு.க.வில் இருந்த சில துரோகிகளால் கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை சந்தித்தது.

    இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், உல்பா பலர் கலந்து கொண்டனர்.

    • விருத்தாசலம் அருகே பாட்டி வீட்டுக்கு சென்ற இளம்பெண்ணை காணவில்லை.
    • இவர் 12-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே சாவடிகுப்பத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் கீர்த்தனா(வயது19). இவர் 12-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். கடந்த 4-ந் தேதி மாலை தனது பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு கீர்த்தனா வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் அவர் பாட்டி வீட்டிற்கு செல்லவில்லை, அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் எங்கும் அவரை காணவில்லை. இதுகுறித்து கீர்த்தனாவின் தந்தை சுப்பிரமணி விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணை நடத்தி காணாமல் போன கீர்த்தனாவை தேடி வருகின்றனர்.

    • கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள விஜயமாநகரம் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுரு.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள விஜயமாநகரம் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுரு. அவரது மகன் கதிர்வாணன்(வயது 13). இவர் இன்று காலை வயலுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகள் மலர்விழி (3) தனது வீட்டுமுன்பு விளையாடி கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் கதிர்வாணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சிறுமி மலர்விழி மீது மோதியது. இந்த விபத்தில் சிறுமி துடி துடித்து இறந்தாள்.

    இதுகுறித்து மங்கலம்பேட்டை போலீசார் வழக்குபதிந்து சிறுவனின் தந்தை சிவகுருைவ கைது செய்தனர். கைதான அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதேபோல விபத்தை ஏற்படுத்திய சிறுவன் கதிர்வாணனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரணை நடந்து வருகிறது.

    • கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரம் ஆபீசர் குடியிருப்பில் வசித்து வருபவர் முத்தழகன்.
    • விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனத்தை கண்காணிப்பு கேமரா மூலம் தேடி வருகின்றனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரம் ஆபீசர் குடியிருப்பில் வசித்து வருபவர் முத்தழகன். ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவரது மகன் பரமகுரு (வயது30). இவர்சென்னை பெங்களூர் ஆகிய இடங்களில் கேபிள் நடத்தி வந்தார்.

    இவர் இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் வடலூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். பண்ருட்டி அருகே கொள்ளுகாரன் குட்டைஎன்ற இடத்தில் சென்ற போது மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதனால் பலத்த காயமடைந்த பரமகுரு சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் முத்தாண்டி குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இவரது உடலை கைப்பற்றி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனத்தை கண்காணிப்பு கேமரா மூலம் தேடி வருகின்றனர்.

    • விருத்தாசலத்தில் டீக்கடைக்காரர் திடீரென காணவில்லை.
    • டீக்கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு வருவதாக கூறியவர் வீடு சென்று சேரவில்லை. அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியும் அவர் எங்கும் காணவில்லை.

    கடலூர்:

    விருத்தாசலம் பொன்னேரி பைபாஸ் சாலையில் டீக்கடை வைத்து இருப்பவர் காளிதாஸ்(வயது 36). இவர் கடந்த 7-ந் தேதி மதியம் 3 மணி அளவில் டீக்கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு வருவதாக கூறியவர் வீடு சென்று சேரவில்லை. அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியும் அவர் எங்கும் காணவில்லை. இது குறித்து அவரது மனைவி விஜயலட்சுமி விருத்தாசலம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணை நடத்தி காணாமல் போன காளிதாசைத் தேடி வருகின்றனர்.

    • பண்ருட்டி அருகே பிளஸ்-1 மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    • சுகப்பிரியா 2 நாள் விடுமுறையாக கடந்த 6-ந் வீட்டுக்கு வந்திருந்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த நன்னிகுப்பத்தை சேர்ந்தவர் சிவக்கொழுந்து. இவரது மகள் சுகப்பிரியா (வயது 16). இவர், உளுந்தூ ர்பேட்டையில் உள்ள தனியார்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். சுகப்பிரியா 2 நாள் விடுமுறையாக கடந்த 6-ந் வீட்டுக்கு வந்திருந்தார். வீட்டில் இவரது தாயாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாகமன உளைச்சலில் இருந்த இவர் வீட்டில் தூக்குபோட்டுக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த வர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக முண்டி யம் பாக்கம் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து முத்தாண்டி க்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெய்வேலி அருகே ஆசை வார்த்தைகூறி சிறுமிக்கு திருமணம் போக்சோவில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • மாணவியின் தாய் நெய்வேலி நகர நிலையத்தில் புகார் அளித்தார்.மேலும் தனது மகளை வேகாக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த அரிபாலன் மகன் ராமு (எ) ராம்குமார்(21) என்பவர் கடத்தி சென்று இருக்கலாம் என குறிப்பிட்டிருந்தார்.

    கடலூர்:

    நெய்வேலி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவரது மகள் சமீபத்தில் நடந்த 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்துள்ளார். இதனால் தோல்வி அடைந்த பாடத்தை தேர்வு எழுதுவதற்கு குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் டியூஷன் சென்டருக்கு தினமும் வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த மாதம் 9-ந் தேதி டியூஷனுக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இது குறித்து மாணவியின் தாய் நெய்வேலி நகர நிலையத்தில் புகார் அளித்தார்.மேலும் தனது மகளை வேகாக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த அரிபாலன் மகன் ராமு (எ) ராம்குமார்(21) என்பவர் கடத்தி சென்று இருக்கலாம் என குறிப்பிட்டிருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் வேகாக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த ராமு என்கிற ராம்குமார் சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்தது தெரியவந்தது. இதனைய டுத்து ராம் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    கடலூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.

    கடலூர்:

    அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரின் பணி நேரத்தை நீடித்து வெளியிட்டுள்ள அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில துணை தலைவர் டாக்டர் புலிகேசி தலைமை தாங்கினார்.

    மாவட்ட தலைவர் டாக்டர் சசிகுமார், மாவட்ட செயலாளர் டாக்டர் குலோத்துவச்சோழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் டாக்டர்கள் சிவகுமார், பாலச்சந்தர், அமுதா, வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு விளக்க உரையாற்றினார்கள். இதனை தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் கோஷங்கள் எழுப்பினர். முடிவில் டாக்டர் அருண் குமார் நன்றி கூறினார்.

    ×