என் மலர்
கடலூர்
- கடந்த 17-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
- பூதங்குடி பகுதியில் இருந்து மெட்ரோ அதிகாரிகள் தண்ணீரை ஆய்வு செய்து தான் சென்னைக்கு அனுப்பி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்குகிறது வீராணம் ஏரி. சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. வெயில் தாக்கம் காரணமாக ஏரி வறண்டதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்ட நிலையில், தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைப்பதற்காக மேட்டூர் அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி கடந்த 17-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நீர் கல்லணை, கீழணை வழியாக வடவாறு மூலம் வீராணம் ஏரியை வந்தடைந்தது. இதன் மூலம் வறண்டு கிடந்த ஏரியில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. இதையடுத்து சென்னைக்கு மீண்டும் குடிநீர் அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது. அதன்படி கடந்த 29-ந்தேதி முதல் சென்னைக்கு வினாடிக்கு 30 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பும் இடமான பூதங்குடி மற்றும் வெய்யலூர் பகுதியில் தண்ணீர் பச்சை நிறத்தில் காட்சி அளித்து வருகிறது. இவை அகலம் குறைந்த பகுதிகள். மற்ற இடங்களில் தண்ணீர் வழக்கம் போல் உள்ளது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். கால்நடைகள், பறவைகள் தண்ணீர் குடிப்பதால் ஏதேனும் ஆபத்து நேரிடுமோ என்று பீதி அடைந்தனர்.
இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, பூதங்குடி பகுதியில் இருந்து மெட்ரோ அதிகாரிகள் தண்ணீரை ஆய்வு செய்து தான் சென்னைக்கு அனுப்பி வருகின்றனர்.
தற்போது தண்ணீர் பச்சை நிறத்தில் இருப்பதாக தகவல் பரவியது. இதற்கு காரணம் தண்ணீரில் படர்ந்துள்ள பாசி தான். தண்ணீரில் உள்ள செடி, கொடிகள் எல்லாம் சேர்ந்து தெரியும் போது, அவை பச்சை நிறத்தில் தெரிகிறது. மற்றபடி எவ்வித ரசாயனமும் கலக்கவில்லை. தண்ணீரை மெட்ரோ அதிகாரிகள் மாதிரி எடுத்து ஆய்வு செய்து விட்டார்கள். தண்ணீரில் எதுவும் கலக்கவில்லை. ஆகவே பொதுமக்கள் இதுபற்றி அச்சப்பட தேவையில்லை என்றார்.
- இருவரின் உடலையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- வழக்கு பதிவு செய்த போலீசார் கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காட்டாண்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் என்கிற குமரவேல் (வயது 32). பால் வண்டி டிரைவர். இவரது மனைவி மீனா (20). இருவரும் வீட்டின் மாடியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிய நிலையில் குழந்தை இல்லை. வேலைக்கு சென்று நேற்று இரவு 10 மணிக்கு குமரவேல் வீடு திரும்பினார். பின்னர் குமரவேல் மற்றும் அவரது மனைவி இருவரும் உறங்க சென்றனர்.
இன்று காலை வெகுநேரமாகியும் குமரவேலும், மீனாவும் வெளியில் வராததால், அவரது பெற்றோர் மாடிக்கு சென்று பார்த்தனர். வீடு உள்பக்கமாக பூட்டியிருந்தது. கதவை தட்டியும் அவர்கள் வெளியில் வரதாதால், ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது கணவன், மனைவி இருவரும் ஒரே சேலையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் இது குறித்து காடாம்புலியூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை இல்லாத ஏக்கத்தால் இந்த துயர முடிவை கணவன், மனைவி இருவரும் எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
- வடகிழக்கு திசையில் நகர்ந்து, நாளை காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக் கூடும்.
- வங்கக்கடலில் தூரத்தில் புயல் உருவாகுவதற்கு வாய்ப்பு உள்ளது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கடலூர்:
மத்திய மேற்கு மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து வடகிழக்கு திசையில் நகர்ந்து, நாளை காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக் கூடும்.
இது புயலாக மாறினால் ரீமேக் என புயலுக்கு பெயர் சூட்ட உள்ளனர். புயலாக வலுப்பெற்ற பின் வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கக் கடற்கரை நோக்கிச் செல்லும். வருகிற 26-ந் தேதி மேற்கு வங்கக் கடற்கரை பகுதியில் தீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் கடலூர் துறைமுகத்தில் இன்று காலை 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதில் வங்கக்கடலில் தூரத்தில் புயல் உருவாகுவதற்கு வாய்ப்பு உள்ளது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே கடலில் வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியதின்பேரில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- காரணமாக தலைமை தபால் நிலையம் பஸ் நிறுத்தத்தில் 50 லட்சம் மதிப்பீட்டில் பஸ் நிறுத்தம் கட்டப்பட்டு உள்ளது.
- சாலையில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு மற்றும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவி வந்தது.
கடலூர்:
கடலூர் மஞ்சகு ப்பத்தில் தலைமை தபால் நிலையம் பஸ் நிறுத்தம் உள்ளது.
இந்த பஸ் நிறுத்தம் வழியாக கடலூரில் இருந்து பண்ருட்டி, விழுப்புரம், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 24 மணி நேரமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. இதன் காரணமாக தலைமை தபால் நிலையம் பஸ் நிறுத்தத்தில் 50 லட்சம் மதிப்பீட்டில் பஸ் நிறுத்தம் கட்டப்பட்டு உள்ளது.
இந்நிலையில் தினந்தோறும் இவ்வழியாக செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் பஸ்கள் இந்த பஸ் நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றாமல், சாலையில் பஸ்களை நிறுத்தி பயணி களை ஏற்றுவதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு மற்றும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவி வந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பஸ் நிறுத்தத்திற்குள் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல் நிற்காமல் வெளியில் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் ஒரு அரசு பஸ், புதுச்சேரி அரசு பஸ் உள்பட 8 அரசு மற்றும் தனியார் பஸ்களுக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதித்து டிரைவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் பஸ் நிறுத்தத்திற்குள் பஸ்கள் செல்லாமல் சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.
- ஒவ்வொரு ஆண்டும் சத்திய ஞான சபை தொடக்க விழா கொண்டாடப்படுவது வழக்கம்
- ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டனர்.
வடலூர்:
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் நிறுவிய சத்திய ஞானசபை உள்ளது. ராமலிங்க அடிகளார் 23.5.1867-ம் ஆண்டு வைகாசி மாதம் 11-ந் தேதியன்று சத்திய ஞானசபையை நிறுவினார்.
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் சத்திய ஞான சபை தொடக்க விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி 158-ம் ஆண்டு தொடக்கவிழா நேற்று நடைபெற்றது.
விழாவையொட்டி கடந்த 7 நாட்களாக அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் மற்றும் திரு அருட்பா முற்றோதல் நடந்தது. தொடர்ந்து தருமச்சாலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு அகவல் பாராயணம் பாடப்பட்டது. தொடர்ந்து 7.30 மணியளவில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து தரும சாலையின் சிறப்புகள் குறித்து வில்லுப்பாட்டு, இசை நிகழ்ச்சி, ஜீவகாருண்ய ஒழுக்கம் சத் விசாரம், சொற்பொழிவு, திரு அருட்பா இன்னிசை, திரு அருட்பா 6-ஆம் திருமுறை சத் விசாரம், சன்மார்க்க நெறி சத் விசாரம், நான்கு வகை ஒழுக்கம், வள்ளலார் அருளிய ஞானசரியை ஆகியவை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன் மற்றும் வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய நிர்வாக அதிகாரி ராஜா சரவணக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
வள்ளலாரின் திருக்கரத்தால் ஏற்றி வைக்கப்பட்ட அணையா அடுப்பு இன்று வரை தொடர்ந்து எரிந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. ஜீவகாருண்யத்தை பறைசாற்றும் வகையில் ஏற்படுத்தப்பட்ட சத்திய தரும சாலையானது பலரது சகாயத்தாலேயே நடைபெற்று நிலைபெற வேண்டும் என்பதால், ஜீவதயவுடைய புண்ணியர்கள் பொருள் முதலியன உதவி செய்து அதனால் வரும் லாபத்தை பாகஞ் செய்து கொள்ள வேண்டும் என்பது வள்ளலாரின் கூற்று.
அன்று முதல் சத்திய தரும சாலையில் தினசரி 3 வேளையும் சாதி, மதம், இனம், தேசம், நிறம் என எவ்வித பேதமும் இன்றி அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மழை, வெள்ளம், புயல் என இயற்கை பேரிடர்கள் மற்றும் கொரோனா தொற்று நேரத்திலும் கூட தொடர்ந்து தினசரி மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- அங்கு இருந்த சிறுவன் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏறி வாகனத்தை இயக்கினான்.
- 2 பெண்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் அரசு மருத்துவமனையில் வழக்கமாக பொதுமக்கள் சிகிச்சைகாக வந்து கொண்டிருந்தனர். அப்போது சிகிச்சைக்காக நோயாளியுடன் ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நோயாளியை இறக்கி உள்ளே அழைத்து சென்றார்.
இந்நிலையில் அங்கு இருந்த சிறுவன் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏறி வாகனத்தை இயக்கினான். அந்த நேரத்தில் ஆம்புலன்ஸ் வேகமாக சென்று அங்கு நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. அதில் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர். அந்த 2 பெண்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.
ஆம்புலன்சை இயக்கிய சிறுவன் - 2 பெண்கள் மீது மோதல்#Cuddalore #Ambulance #Accident #MMNews #Maalaimalar pic.twitter.com/cBrtF1OX5O
— Maalai Malar தமிழ் (@maalaimalar) May 23, 2024
- பலத்த காயமடைந்த 2 வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உள்பட 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
- ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் 4 வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி, தூக்கணாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இங்கு 100-க்கும் மேற்பட்ட வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கி இருந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ரெட்டிசாவடி அடுத்த உடலப்பட்டு பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. நேற்று நள்ளிரவு வட மாநிலத்தை சேர்ந்த 2பேர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் என 3 பேர் மேம்பாலம் எடை தரம் தொடர்பாக பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் அந்த பகுதியில் உள்ள இரும்பு பொருட்களை திருடுவதற்காக வந்தனர். இதனை பார்த்த வடமாநில இளைஞர்கள் உட்பட 3 பேர் இரும்பு பொருட்களை திருட வந்த கும்பலை தடுத்து நிறுத்தினர்.
அப்போது திடீரென்று அந்த கும்பல் 3 பேரை சரமாரியாக ஆயுதங்களால் கொடூரமாக தாக்கினார்கள். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனை தொடர்ந்து பலத்த காயமடைந்த 2 வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உள்பட 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இத்தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஆசீஸ் சுக்கிலா (வயது 26), உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிஷ்ணோசிங் (வயது 21) விழுப்புரத்தை சேர்ந்த முருகன் (வயது 26) ஆகியோர் என தெரியவந்தது. சாலை அமைக்கும் பணிகளுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநில இளைஞர்கள் தங்கி வேலை செய்து வரும் நிலையில் அந்த பகுதியில் ஒரு சில கும்பலால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டும் எழுந்து உள்ளது. இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜை நடைபெற்றது.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த ரெட்டிச் சாவடி சிங்கிரிகுடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 14-ந் தேதி கொடியேற்று விழாவுடன் தொடங்கியது. பின்னர் பல்லக்கில் சாமி, மாட வீதியில் வீதி உலா நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனத்தில் சாமி வீதி உலா மற்றும் கருடசேவை விழா நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சி யான தேரோட்டம் இன்று (22-ந் தேதி) நடை பெற்றது. இதனையொட்டி அதிகாலை 4.30 மணி லட்சுமி நரசிம்மர் பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து லட்சுமி நரசிம்ம பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில், ஊர்வலமாக கம்பீரமாக பூக்களால் அலங்கரிக்கப் பட்ட தேரில் எழுந்தருளி னார். பின்னர் அங்குத் திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா... கோவிந்தா..." என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

முக்கிய மாடவீதியில் தேரோட்டம் நடைபெற்று பின்னர் நிலையை அடைந்தது. இதனைத் தொடர்ந்து இன்று நரசிம்மர் அவதாரம் தினமான நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
நாளை (23-ந் தேதி) காலை மட்டையடி உற்சவம், இரவில் இந்திர விமானத்தில் சாமி வீதி உலாவும், 24-ந் தேதி புஷ்ப யாகம், 25-ந் தேதி இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது.
- கிராமத்தில் சுமார் 120 குடும்பம் வசிக்கின்றன.
- தங்கள் ஊரே ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்படுவதாக கிராம மக்கள் புலம்புகின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் நிலவுக்கு சென்று வரும் நிலைக்கு விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது. ஆனால், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னகார மேடு கிராமம், வளர்ச்சியின்றி பின்தங்கியுள்ளதாக குமுறுகின்றனர் ஊர் மக்கள்.
கிராமத்தில் சுமார் 120 குடும்பம் வசிக்கின்றன. கிராம மக்கள் சொல்லும் சொல் கேட்டால் எங்கள் கிராமத்தில் வாழ எங்களுக்கு உகந்த இடமில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர்.

காரணம் என்னவென்றால், குடிக்க நீரின்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதோடு மற்ற கிராமங்களில் உள்ள சாலை வசதி, போக்குவரத்து வசதி, நியாய விலைக்கடை கூட இல்லை என குமுறல் சத்தம் அதிகாரிகளுக்கு கேட்காமல், அங்குள்ள மக்களின் காதுகளுக்கு மட்டுமே கேட்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
எனவே தொழில்நுட்ப ரீதியாக உலகம் முன்னேறி வரும் காலத்தில்.. தங்கள் ஊரே ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்படுவதாக சின்னக்காரமேடு கிராம மக்கள் புலம்புகின்றனர். அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமம் என்பதால் பெண் தரக்கூட தயங்குவதாக நொந்துபோய் உள்ளனர் சின்னகார மேடு கிராம மக்கள்.
- போலீசார் இருதரப்பை சேர்ந்த 10 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
- மறியல் போராட்டத்தால் கடலூர்-சிதம்பரம் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடலூர்:
கடலூர் முதுநகர் அருகே உள்ள சங்கொலிக்குப்பம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தீமிதி திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. முதல் நாள் திருவிழாவின் போது சங்கொலிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த இரு தரப்பு இளைஞர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில், கடலூர் முதுநகர் போலீசார் இருதரப்பை சேர்ந்த 10 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதில் ஒரு தரப்பை சேர்ந்த 3 வாலிபர்களை கைது செய்தனர்.
இந்நிலையில் மற்றொரு தரப்பை சேர்ந்தவர்களை கைது செய்வதற்காக கடலூர் முதுநகர் போலீசார், இன்று காலை சங்கொலிக்குப்பம் கிராமத்திற்கு சென்றனர். தகவல் அறிந்த அந்த பகுதி பொதுமக்கள், தங்கள் பகுதி இளைஞர்களை கைது செய்யக்கூடாது என்று கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ஊருக்குள் செல்ல முடியாமல் போலீசாரை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து சங்கொலிக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் கடலூர்-சிதம்பரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, இன்ஸ்பெக்டர் ரேவதி மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், இதற்கு முன்பு நாங்கள் அளித்த பல்வேறு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, தற்போது எங்கள் பகுதி இளைஞர்களை கைது செய்யக்கூடாது என்று கூறினர்.
அதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். சாலை மறியலை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என்று கூறினார். இதனையேற்ற பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் கடலூர்-சிதம்பரம் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- வாழை மற்றும் கரும்பு பயிர்களை டிராக்டரை கொண்டு யாரோ அழிக்க முயற்சித்தது தெரிய வந்தது.
- பயிர்களை சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த வெள்ளப்பாக்கம் பகுதியில் உள்ள 10 ஏக்கர் நிலத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சுசீலா தேவநாதன் உள்ளிட்ட 4 பேர் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த இடம் தொடர்பாக சுசீலா தேவநாதன் தரப்பினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இங்கு பயிரிடப்பட்ட வாழை மற்றும் கரும்பு பயிர்கள் மீது டிராக்டரால் உழவு செய்யப்பட்டிருந்தது. இதனை அவ்வழியே சென்றவர்கள் இன்று காலை பார்த்து, ஊராட்சி தலைவர் சுசீலாவிற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பார்த்த போது, வாழை மற்றும் கரும்பு பயிர்களை டிராக்டரை கொண்டு யாரோ அழிக்க முயற்சித்தது தெரிய வந்தது.

தொடர்ந்து ஊராட்சி தலைவர் சுசீலா தேவேந்திரன் மற்றும் அவரது தரப்பினர் வெள்ளகேட் பகுதிக்கு திரண்டு வந்தனர். பயிர்களை சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் காசிநாதன், அழகானந்தம் ஆகியோரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், பலராமன், சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் ஆகியோர் விரைந்து வந்தனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பயிர்களை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதனையேற்ற ஊராட்சி தலைவர் மற்றும் அவரது தரப்பினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- சித்திரை மாதம் முடிந்து இன்று வளர்பிறை முகூர்த்த நாட்கள் என்பதால் தேவநாத சுவாமி கோவிலில் அதிகாலை 4 மணி முதல் திருமணங்கள் நடைபெற தொடங்கியது.
- திருமண ஜோடிகள் திருவந்திபுரம் முகப்பு பகுதியில் இருந்து கோவிலுக்கு நடந்து சென்றனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். தேவநாதசாமி கோவிலில் திருமணம் செய்து கொள்ள பிராத்தனை செய்து கொண்டவர்கள் இங்கு திருமணம் செய்து கொண்டு தேவநாதசாமியை தரிசித்து சென்று வருகின்றனர். இக்கோவிலில் முகூர்த்த நாட்களில் 100 முதல் 300-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்று வருகிறது.
திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் முன்பு உள்ள மலையில் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்று வருகிறது. மேலும் முகூர்த்த நாட்களில் அதிக அளவில் திருமணம் நடைபெற்று வருவதால் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் இந்து சமய அறநிலைய துறை சார்பில் திருவந்திபுரத்தில் புதிதாக திருமண மண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
சித்திரை மாதம் முடிந்து இன்று வளர்பிறை முகூர்த்த நாட்கள் என்பதால் தேவநாத சுவாமி கோவிலில் அதிகாலை 4 மணி முதல் திருமணங்கள் நடைபெற தொடங்கியது. இதனை தொடர்ந்து திருவந்திபுரம் ஊர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்தன. மேலும் திருமண ஜோடிகள் திருவந்திபுரம் முகப்பு பகுதியில் இருந்து கோவிலுக்கு நடந்து சென்றனர்.
இந்த நிலையில் கோவில் திருமண மண்டபத்தில் 70 திருமணங்களும், அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் சுமார் 30 திருமணங்கள் என 100 திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். தொடர்ந்து இன்று ஏராளமான பொதுமக்கள் தேவநாத சாமி கோவிலில் நீண்ட நேரம் வரிசையில் தேவநாத சாமியை கும்பிட்டு சென்றனர். மேலும் புதுமண தம்பதிகள் நீண்ட வரிசையில் நின்று சாமி கும்பிட்டு சென்றனர்.
மேலும் கடலூர்-பாலூர் சாலையில் காலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அதிகாலை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்ததோடு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி வந்தனர்.






