என் மலர்
கடலூர்
- 3 வாலிபர்கள் இவரை வழிமறித்து இவரிடமிருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்தனர்.
- சிதம்பரம் நகர போலீசார் 3 வாலிபர்களையும் கைது செய்து விசாரித்தனர்.
கடலூர்:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த உமையாள்பதி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சக்கிஅழகன் (வயது 28). இவர் சிதம்பரத்திற்கு ஒரு சில பணிகளுக்காக வந்துவிட்டு மீண்டும் சீர்காழிக்கு செல்ல சிதம்பரம் பஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் இவரை வழிமறித்து இவரிடமிருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்தனர்.
அப்போது சக்திஅழகனின் கூச்சல் சப்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் 3 வாலிபர்களையும் சுற்றிவளைத்து பிடித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த சிதம்பரம் நகர போலீசார் 3 வாலிபர்களையும் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் 3 வாலிபர்களும் ஒமக்குளம் சுரேந்தர் (22), நாஞ்சலூர் சந்துரு (23), மடப்புரம் அன்புமணி (22) என்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து 3 பேர் மீதும் வழிப்பறி, கொலை முயற்சி போன்ற பிரிவுகளில் சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
- 30.12.2022 மூலம் ரூ.1,000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக ஆக உயர்த்தி வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
- சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தாரை நேரில் அணுகி பயன்பெறலாம்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ர மணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு அரசால் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனு டையோர் ஓய்வூதியம் மற்றும் இலங்கை அகதிகளுக்கான மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் 30.12.2022 மூலம் ரூ.1,000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக ஆக உயர்த்தி வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம் பெற்று வரும் 18,047 மாற்றுத்திறனுடைய பயனாளிகளுக்கு 2023 ஜனவரி மாதம் முதல் ஓய்வூதியம் ரூ.1,000 ல் இருந்து ரூ. 1,500 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. எனவே, 2023 ஜனவரி மாதம் முதல் ரூ.1,500 கிடைக்கப் பெறாத சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதியம் ரூ.1,000 பெற்று வரும் பயனாளிகளில் 40 சதவீதம் மாற்றுத்திறன் உடையோர் எவரும் இருந்தால், தங்களது மாற்றுத்திறன் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் தங்களது வட்டத்தின் சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தாரை நேரில் அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் பல்வேறு நோய்களால் தொடர்ந்து அவதி அடைந்து வந்தனர்.
- வாகனங்களில் சென்ற பொதுமக்கள் குல்லா மற்றும் குளிர் தாக்காத படி முகத்தில் துணிகளை கட்டி சென்றதையும் காண முடிந்தது.
கடலூர்:
மார்கழி மாதம் என்றாலே மாதம் முழுவதும் பனி பொழிவு மற்றும் குளிர்ந்த காற்று வீசி வருவது வழக்கம். இந்த நிலையில் மார்கழி மாதம் தொடங்கிய நிலையில் அதிகாலையில் பனி மூட்டம், மதியம் வெயில், இரவு குளிர்ந்த காற்று மற்றும் அவ்வப்போது மழை என சீதோஷ்ண மாற்றம் இருந்து வந்த காரணத்தினால் பொதுமக்கள் பல்வேறு நோய்களால் தொடர்ந்து அவதி அடைந்து வந்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர், நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காலை 7 மணி வரை வழக்கத்தைவிட அதிக அளவில் பனிப்பொழிவு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி மார்கழி மாதம் முடிந்து 2 வாரம் ஆன நிலையில் நெல்லிக்குப்பம் மேல்பட்டாம்பாக்கம் நடுவீரப்பட்டு, திருவந்திபுரம், வெல்லப்பாக்கம், நத்தப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலையில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டு வந்தது இந்த கடும் பனி பொழிவு காலை 7 மணி வரை படர்ந்து காணப்பட்டது.
இதன் காரணமாக இந்த பகுதிகளில் நள்ளிரவு முதல் வழக்கத்தை விட அதிக குளிர் காணப்பட்டது. மேலும் காலை நேரங்களில் வழக்கத்தை விட பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்ட நிலையில் இன்று முகூர்த்த நாட்கள் என்பதால் இருசக்கர வாகனங்களில் சென்ற பொதுமக்கள் குல்லா மற்றும் குளிர் தாக்காத படி முகத்தில் துணிகளை கட்டி சென்றதையும் காண முடிந்தது.
மேலும் ெரயில், பஸ், லாரி, கார் வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் காலை 7 மணி வரை முகப்பு விளக்கு எரிய வைத்தபடி சென்றதையும் காண முடிந்தது. இதனைத் தொடர்ந்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் பனிமூட்டம் காரணமாக கடும் அவதி அடைந்தனர்.
- ராஜேஸ்வரியின் 2-வது மகளான மீனா (வயது 5) சேதப்படுத்தியதாக தெரிகிறது.
- பிரதாப், பிரகாஷ் உள்ளிட்ட 3 பேர் கொண்ட கும்பல் பணத்தை கொடு இல்லையேல் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள தொப்புளிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கமலம். இவரது வீட்டில் ராஜேஸ்வரி என்பவர் தங்கியிருந்து வீட்டு வேலை செய்து வந்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் கமலம் வீட்டின் மொட்டை மாடியில் உலர வைக்கப்பட்டிருந்த மணிலாவை, ராஜேஸ்வரியின் 2-வது மக–ளான மீனா (வயது 5) சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதை பார்த்து ஆத்திரமடைந்த கமலம் அவரது மகன், மகள் ஆகியோர் மீனாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மீனா பரிதாபமாக இறந்தாள். இது தொடர்பாக கமலம் உள்ளிட்ட 3 பேரையும் நெய்வேலி தெர்மல் போலீசார் கைது செய்–தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனிடையே கமலம் உள்ளிட்ட 3 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இந்நிலையில் கொலை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக கமலம், ராஜேஸ்வரியின் உறவினர்களிடம் சமரசம் பேசி குறிப்பிட்ட அளவு பணம் தருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் கூறியபடி ராஜேஸ்வரியின் உறவினர்களிடம் பணம் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனிடையே ராஜேஸ்வரியின் குடும்பத்தால் தனக்கு ஆபத்து உள்ளது என்று கமலம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் கமலம் வீட்டின் அருகில் தெர்மல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி தலைமையிலான போலீசார் மறைந்து இருந்து கண்காணித்தனர்.
அப்போது அங்கு வந்த ராஜேஸ்வரியின் உறவினர்களான பிரதாப், பிரகாஷ் உள்ளிட்ட 3 பேர் கொண்ட கும்பல் பணத்கதை கொடு இல்லையேல் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர். அங்கு மறைந்திருந்த போலீசார், அவர்–களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்–றனர். உடனே பிரகாஷ் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து போலீ–சா–ரிடம் காட்டி, எங்–களை பிடிக்க முயற்சி செய்–தால் சுட்டுவிடுவேன் என்று மிரட்டினார். பின்னர் அவர்கள் 3 பேரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பிச்சென்றனர். தப்பி ஓடிய 3 பேரையும் பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார், தப்பிச் சென்ற 3 பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நெய்வேலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் மாமங்கலம் கிராமத்தில் பொதுமக்கள் வசிக்கக்கூடிய சாலை வழியாக எடுத்துச் செல்லப்படுகிறது.
- சேரும் சகதியுமாக மாறிவிடுகிறது. சாலையும் மிகவும் படுமோசமான குண்டும் குழியுமாக உள்ளது.
கடலூர்:
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்த விரிவாக்க பணிகளுக்காக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் வட்டம், மாமங்கலம் ஊராட்சி ஆண்டி ப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள புத்தேரியில் எடுக்கப்படும் செம்மண் மணல் கற்களை லாரியில் ஏற்றி செல்கிறார்கள்.
தனியார் நிறுவனம் சார்பில் ஒப்பந்த அடிப்ப டையில் தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் மாமங்கலம் கிராமத்தில் பொதுமக்கள் வசிக்கக்கூடிய சாலை வழியாக எடுத்துச் செல்லப்படுகிறது. மாமங்கலம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருவதால் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் சாலை வழியாக பள்ளிக்கு வருகிறார்கள்.
அப்பொழுது செம்மண் ஏற்றி செல்லும் லாரி அதி வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதுவரை 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சாலைகளிலே தண்ணீர் ஊற்றி செல்வதால் சேரும் சகதியுமாக மாறிவிடுகிறது. சாலையும் மிகவும் படுமோசமான குண்டும் குழியுமாக உள்ளது.
இதனால் அவ்வழியே செல்லும் பள்ளி, கல்லூரி பேருந்துகளும், மோட்டார் சைக்கிளில் செல்லும் பொதுமக்களும் அவதி அடைந்து ஒதுங்க கூட முடியவில்லை. மணல் ஏற்றி வரும் லாரிகள் சாலைகளில் விதிமுறை களை பின்பற்றாமல் அதி வேகமாக சென்று வருகிறது. பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இருக்கும் பகுதிகளில் கூட லாரியின் வேகத்தை குறைக்காமல் சென்று வருவதால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுமா என பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.
அது மட்டும் இன்றி தனியார் நிலங்களில் மண் குவிக்கப்பட்டு கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுகிறது. செம்மண் எடுக்கும் இடத்தில் அரசு அறிவித்த அளவைவிட 50 அடிக்கும் மேலாக வெட்டப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர், காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.
பள்ளி ஆரம்பிக்கும் நேரங்களில் லாரிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என சமூக ஆர்வளர்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புற மக்கள் கோரிக்கை விடுத்தது உள்ளனர்.
- கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது.
- போலீஸ் அணிவகுப்பை கலெக்டர் பார்வையிட்டு மரியா தையை ஏற்றுக்கொண்டார்.
கடலூர்:
குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கடலூர் அண்ணா விளையாட்டு மைதானம் சுத்தம் செய்யப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை செய்து போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் காரில் வந்தார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கலெக்டர் பாலசுப்பிரமணியம் காலை 8.05 மணிக்கு தேசிய கொடியை ஏற்றினார். அப்போது போலீஸ் பேண்டு வாத்திய குழுவினர் தேசிய கீதம் இசைத்தனர். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் திறந்த ஜீப்பில் சென்று போலீஸ் அணிவகுப்பை கலெக்டர் பார்வையிட்டு மரியா தையை ஏற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருட்செ ல்வன் தலைமையில் அணி வகுப்பு நடைபெற்றது. இதில் காவல்துறை, தீயணைப்பு துறை, ஊர்காவல்படை, தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித்திட்ட, சாரண-சாரணிய, செஞ்சிலுவை சங்க மாணவ- மாணவிகள் அணிவகுத்து வந்தனர். பின்னர் காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 90 போலீஸ்காரர்களுக்கு முதல்-அமைச்சரின் காவலர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் பாலசுப்பிரமணியம் வழங்கினார். பின்னர் தியாகிகளுக்கும், மறைந்த தியாகிகளின் மனைவிகளுக்கும் கலெக்டர் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை, மருத்துவம், வேளாண்மைத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 183 பேருக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். தொடர்ந்து வருவாய்த்துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட தொழில் மைய அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 35 பயனாளிகளுக்கு 2 கோடி 86 லட்சம் 35 ஆயிரம் 185 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாலசுப்பிரமணியம் வழங்கினார்.
விழாவில் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் அய்யப்பன் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், கூடுதல் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர், மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகன், வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- ரமேஷ் கொரோனா காலத்தில் சொந்த ஊருக்கு வந்தார்.
- இன்று அதிகாலை ரமேஷ் வீட்டின் வாசலில் இரத்தம் சிந்திக் கடந்தது.
கடலூர்:
வேப்பூர் அருகே அரியநாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38). இவருக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. இவரது மனைவி ராதிகா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை செய்து இறந்தார். இதையடுத்து இவரது பிள்ளைகள் ராதிகாவின் பெற்றோரிடம் வளர்ந்து வருகின்றனர். சிங்கப்பூரில் பணி செய்து வந்த ரமேஷ் கொரோனா காலத்தில் சொந்த ஊருக்கு வந்தார். அது முதல் இங்கேயே தனியாக வசித்து வருகிறார்.
இவரது தந்தை கருப்பையாவிற்கு 2 மனைவிகள், முதல் மனைவியின் மகன் ரமேஷ். தற்போது இவரது தந்தை 2-வது மனைவி, 2 பிள்ளைகளுடன் அதே ஊரில் தனியாக வசித்து வருகிறார். இதனால் ரமேஷ் தனியாக வசித்து வந்தார். இதனால் தனியாக வசித்து வரும் ரமேஷ், மனநிலை பாதிக்கப்பட்டவர் போல சில நேரங்களில் சாலைகளில் சுற்றித் திரிவார் என்று தெரிகிறது. இவர் 2 முறை சாலை விபத்தில் சிக்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று காலையில் வீட்டை விட்டு வெளியில் சென்ற ரமேஷ், இரவு 10 மணியளவில் வீடு திரும்பியுள்ளார். இன்று அதிகாலை ரமேஷ் வீட்டின் வாசலில் இரத்தம் சிந்திக் கடந்தது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தனர். அதில் வீட்டினுள் இரத்த வெள்ளத்தில் ரமேஷ் கிடந்ததை கண்டு அதிர்ச்சியுற்ற கிராம மக்கள் வேப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த இன்ஸ்பெக்டர் ராமச்ச ந்திரன் தலைமையிலான போலீசார் வீட்டிற்குள் சென்று ரமேஷின் உடலை கைப்பற்றினர். அதில் ரமேஷின் மார்பு பகுதியிலும், தலையில் பலத்த காயங்கள் இருப்பதைக் கண்டனர்.
மேலும், அவரின் வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவு வரையில் இரத்தம் சிந்தி இருந்தது. இதையடுத்து விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுணர்களையும், கடலூரில் இருந்து மோப்ப நாயினையும் வரவழைத்து வேப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தனியாக வசித்து வந்த ரமேஷினை முன்விரோதம் காரணமாக யாராவது கொலை செய்தனரா? சொத்துக்காக கொலை செய்யப்பட்டாரா? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
- 31 ந்தேதி (செவ்வாய் கிழமை) புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் தலைமையில் காலை 10.30 மணியளவில் நடைபெறும்.
- விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம்.
கடலூர்:
கடலூர் மாவட் கலெக்டர் பாலசுப்ர மணியம் விடு த்துள்ள செய்தி குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-
ஜனவரி மாத விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாய மேம்பா ட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வருகிற 31 ந்தேதி (செவ்வாய் கிழமை) புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் தலைமையில் காலை 10.30 மணியளவில் நடைபெறும். கடலூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த குறைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டி ற்கான ஆலோசனைகளை கோரிக்கைகளாக வைக்க வாய்ப்பு வழங்கப்படும்.
கூட்ட அரங்கில் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பம் உள்ள விவசாயிகள் தங்கள் சிட்டா, அடங்கல் கிசான் கடன் அட்டையுடன் காலை 8 மணிமுதல் 10.05 மணிக்குள் தங்களது பெயர், கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்கவுள்ள துறையின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்துக்கொள்ள கேட்டுக்கொள்ள ப்படு கிறார்கள். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம் இக்குறைகளுக்கு சம்மந்த ப்பட்ட துறையின் உயர் அலுவலர்கள் உரியபதில் அளிக்கவும் மேலும் தொடர் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- புவனகிரி ஒன்றியம் மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.
- கடந்த காலங்களில் என்.எல்.சி. நிர்வாகத்தால் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அப்போது ஏக்கர் ஒன்றுக்கு ரூ.6 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டது.
சேத்தியாத்தோப்பு;
என்.எல்.சி. 2-வது சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை கிராமங்களுக்குள் வரவிடாமல் தடுத்து வருகின்றனர். இதையடுத்து என்.எல்.சி. நிர்வாகம், கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் குடும்பத்திற்கு ஒருவருக்கு நிரந்தர வேலை, ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு, மாற்று இடம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இக்கிராமங்களில் நடைபயணம் மேற்கொண்டார். என்.எல்.சி. நிர்வாகம் தனியாரிடம் விற்பனை செய்யப்பட உள்ளது. எனவே, இந்த நிர்வாகம் கடலூர் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோஷத்துடன் நடைபயணத்தை நடத்தி சென்றார்.
இந்நிலையில் புவனகிரி ஒன்றியம் மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு கடந்த காலங்களில் என்.எல்.சி. நிர்வாகத்தால் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அப்போது ஏக்கர் ஒன்றுக்கு ரூ.6 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டது. இவர்களுக்கும் ஏக்கருக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். வீட்டிற்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று நள்ளிரவு கிராமங்களின் பொது இடங்களிலும், 300-க்கும் மேற்பட்டோர் வீடுகளிலும் கருப்பு கொடியேற்றி தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
தகவலறிந்து இன்று விடியற்காலையில் புவனகிரி டி.எஸ்.பி தீபன்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இன்று நாடு முழுவதும் குடியரசு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. எனவே, பொது இடங்களில் கருப்பு கொடி ஏற்றக்கூடாது என்று கிராம மக்களிடம் அறிவுறுத்தினார். இதையேற்ற கிராம மக்கள் பொது இடங்களில் இருந்து கருப்பு கொடியை அப்புறப்படுத்தினர். அதே வேளையில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி பறந்து வருகிறது. இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
- கருங்குழியை சேர்ந்த வேல்முருகன் என்பவரின் டிராக்டரில் எடுத்து க்கொண்டு சென்றார்.
- விரைந்து வந்து தீ மேலும் மேலும் தீ பரவாமல் தடுத்தனர்.
கடலூர்:
வடலூர் அருகே உள்ள கருங்குழியைச் சேர்ந்தவர் பாபு (வயது50) விவசாயி. இவர் நைனார் குப்பம் பகுதியில் உள்ள சொந்தநிலத்தில் நெல் அறுவடை செய்த பின்பு அதன் வைக்கோலை கருங்குழியை சேர்ந்த வேல்முருகன் என்பவரின் டிராக்டரில் எடுத்து க்கொண்டு சென்றார். அப்போது சாலையை கடந்த போது அந்த வழியே மின்இணைப்புக்கு செல்லும் மின்சார வயரில் உரசி தீப்பொறி ஏற்பட்டது. இதில் டிராக்டரில் ஏற்றி சென்ற வைக்கோல் கட்டு எரிந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் சத்தம் போட்டு டிராக்டர் நிறுத்தினர். இதுகுறித்து குறிஞ்சி ப்பாடிதீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அவர்கள் உடனே விரைந்து வந்து தீ மேலும் மேலும் தீ பரவாமல் தடுத்தனர், இது பற்றி வடலூர் போலீஸ் விசாரணை மேற்கொ ண்டனர்.
- விவசா யிகளின் கோரிக்கையினை ஏற்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முத்தரப்புக் கூட்டம் நடை பெற்றது.
- விவசாயிகளின் அறுவடை பணிகளுக்கு ஒத்துழைப்புவழங்கிட வேண்டும்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் 2023ஆண்டுக்கு தனியார் நெல்அறுவடை எந்திரங்களுக்கான வாடகையினை நிர்ணயம் செய்து செயல்படுத்த வேண்டுமென்ற விவசா யிகளின் கோரிக்கையினை ஏற்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முத்தரப்புக் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில் விவசா யிகள் மற்றும் தனியார் நெல் அறுவடை எந்திரங்கள் உரிமையாளர்களின் கருத்துக்களை கேட்டறி ந்ததன் அடிப்படையில் தனியார் நெல் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை நிர்ணயம் செய்துகடலூர், மாவட்டக லெக்டர் பாலசுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி 2023 ஆண்டுக்கு சம்பா நெற்பயிர்களை அறுவடை செய்ய , பெல்ட் டைப் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு மணி ஒன்றுக்கு வாடகையாக ரூ.2,400 , டயர் டைப் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு மணி ஒன்றுக்கு வாடகையாக ரூ.1,750 வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனவே நெல் அறுவடை எந்திர உரிமையாளர்கள் நிர்ணயம் செய்யப்பட்ட வாடகைத் தொகைக்கு மிகாமல் விவசாயிகளின் அறுவடை பணிகளுக்கு ஒத்துழைப்புவழங்கிட வேண்டும்.
தவறும் பட்சத்தில் கூடுதல் வாடகை கோரும் எந்திர உரிமையாளர்கள் மீதுசம்மந்தப்பட்ட பகுதி வட்டாட்சியர்கள், வேளாண்மைப் பொறி யியல் துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்களிடம் புகார் அளிக்கலாம் என கலெக்டர் பாலசு ப்ரமணியம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்ப ட்டுள்ளது.
- வேளாண்மை இடுபொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது
- 200 கிலோ என்ற அளவில் 50 சத மானியத்தில் 75 டன்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
கடலூர்:
மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பண்ருட்டி வட்டார விவசாயிகளுக்கு கடப்பாரை, மண்வெட்டி, களைக்கொத்தி, பாண்டுசட்டி போன்ற உபகரண ங்களுடன் வரப்பில் சாகுபடி செய்ய உளுந்து விதைகள், ஜிப்சம், ஜிங்க்சல்பேட், தார்ப்பாய்கள் போன்ற வேளாண்மை இடுபொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது என பண்ருட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், ளநடப்பு வருடத்தில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்ட வேளாண்மை துறைக்கான நிதிநிலை அறிக்கையில் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு வேளாண்மை இடுபொருட்கள் மானியத்தில் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பண்ருட்டி வட்டாரத்தில் நடப்பு ஆண்டில் கடப்பாரை, மண்வெட்டி, களைக் கொத்தி மற்றும் பாண்டு சட்டி உள்ளிட்ட வேளாண் கருவிகள் கொண்ட தொகுப்புகள் 357 விவசாய குடும்பங்களுக்கு ஒரு தொகுப்பு ரூ.1500 மானியத்தில் வழங்கப்படுகிறது.
மேலும் 622 ஏக்கர் நிலத்தில் வரப்பில் சாகுபடி செய்யக்கூடிய வகையில் உளுந்து விதைகள் மானியத்தில் வழங்கப்படுகிறது. ஜிப்சம் ஒரு ஏக்கருக்கு 200 கிலோ என்ற அளவில் 50 சத மானியத்தில் 75 டன்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் 374 ஏக்கர் நிலப்பரப்பில் இடக்கூடிய வகையில் ஏக்கர் ஒன்றுக்கு பத்து கிலோ ஜிங்சல்பேட் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படுகிறது. 104 தார்பாய்கள் ஒரு தார்ப்பாய் ரூ.830 மானியத்துடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்து பராமரிக்க கூடிய வகையில் பண்ருட்டி வட்டத்தில் 30,000 மரக்கன்றுகள் ஒரு மரக்கன்று ரூ.15 வீதம் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
இதில் தேக்கு, மகாகனி,குமிழ் போன்ற மர வேலைக்கு தகுதியுடைய மரக்கன்றுகளும் வழங்கப்பட்டு வருகிறது. தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி உழவன் செயலில் பதிவு செய்து பண்ருட்டி வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானிய விலையில் பெற்று பயனடைய பண்ருட்டி வேளாண்மை உதவி இயக்குனர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.






