என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • தேர்தல் நடத்தும் அதிகாரியாக மகளிர் திட்ட இயக்குனர் செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • போட்டியிட விரும்புவோர், 10-ந் தேதி மாலை 3 மணிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும்.

    கோவை,

    கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 23-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    கோவை மாவட்ட திட்டக்குழுவுக்கு மாவட்ட ஊராட்சிகளில் இருந்து 5 உறுப்பினர்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சியில் இருந்து 13 என 18 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள்-17, மாநகராட்சி உறுப்பினர்கள்-100, ஏழு நகராட்சிகளின் மொத்த உறுப்பினர்கள்-198, மொத்தமுள்ள 33 பேரூராட்சிகளின் மொத்த உறுப்பினர்கள்-513 என 825 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

    இவர்களில், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி நகராட்சியில் தலா ஒன்று, தாளியூர் பேரூராட்சியில் ஒன்று என மூன்று காலியிடங்கள் உள்ளன. அதனால் 822 உறுப்பினர் கள் ஓட்டுப்போட தகுதியானவர்களாக இருக்கின்றனர்.

    இதற்கான இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் கிராந்திகுமார் சமீபத்தில் வெளியிட்டார். தேர்தல் நடத்தும் அதிகாரியாக மகளிர் திட்ட இயக்குனர் செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

    போட்டியிட விரும்புவோர், வருகிற 10-ந் தேதி மாலை 3 மணிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். 12-ந் தேதி காலை 11 மணிக்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 14-ந் தேதி பிற்பகல் 3 மணிக்குள் வேட்பு மனுவை திரும்ப பெறலாம்.

    போட்டி இருந்தால் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்படும் ஓட்டுச்சாவடியில், 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும்.

    கலெக்டர் அலுவலக பழைய கட்டிடம், இரண்டாவது தளத்தில் அறை எண் 1-ல், மாலை 4 மணி முதல் ஓட்டுகள் எண்ணப்படும்.

    தேர்தல் நடவடிக்கைகள் 24-ந் தேதி முடியும். தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம் 28-ந் தேதி நடத்த வேண்டுமென, மாநில தேர்தல் ஆணையம் உத்தர விட்டிருக்கிறது.

    • வால்பாறை-பொள்ளாச்சி ரோட்டில் காலை, மாலை நேரங்களில் காட்டு விலங்குகளை அதிகம் பார்க்க முடியும்.
    • வனவிலங்குகளுக்கு தொந்தரவு தரும்வகையில் நடக்கக்கூடாது.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இங்கு சிறுத்தை, யானை, புலி, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.

    அதிலும் குறிப்பாக வால்பாறை-பொள்ளாச்சி ரோட்டில் காலை, மாலை நேரங்களில் காட்டு விலங்குகளை அதிகம் பார்க்க முடியும். வால்பாறையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதி உள்ளது. இந்த வழியாக தினமும் 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்த நிலையில் வால்பாறையை சேர்ந்த ஒருவர் நேற்று காரில், அந்த வழியாக சென்று உள்ளார். அப்போது வால்பாறை புதுத்தோட்டம் பகுதியில் ஒரு சிறுத்தை சாலையோரம் படுத்து கிடந்தது. எனவே அவர் இதுகுறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்து உள்ளார். இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள வனவர்களுக்கு உஷாராக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து வால்பாறை வனச்சரக அதிகாரி வெங்கடேஷ் கூறுகையில், வால்பாறையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதுத்தோட்டம் பகுதியில் வனவிலங்குகள் அதிகம் உள்ளன. எனவே அங்கு இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வனவிலங்குகளுக்கு தொந்தரவு தரும்வகையில் நடக்கக்கூடாது. அதிலும் குறிப்பாக சிறுத்தை, யானை உலா வந்தால், மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். அவை இருக்கும் இடத்தில் இருந்து முடிந்தவரை விலகி செல்ல வேண்டும். அதனை விடுத்து வனவிலங்குகளை போட்டோ எடுப்பது, சத்தம் போட்டு கூச்சலிடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    • ஒத்த கருத்துடைய அனைவரும் ஒன்றிணைந்து ஒரே அணியில் செயல்படுவார்கள்.
    • தமிழக அமைச்சர்கள் தாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை பார்த்து பேச வேண்டும். பொறுப்பற்ற முறையில் வார்த்தைகளை விடக்கூடாது.

    கோவை:

    கோவை சின்னியம்பாளையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது கூட அந்த மாநிலத்தின் துணை முதலமைச்சர் மேகதாதுவில் அணைகட்ட நடவடிக்கை எடுத்து வருகிறார். அப்படி மேகதாதுவில் அணை கட்டினால் காவிரி டெல்டா பகுதி பாலைவனமாக மாறிவிடும்.

    எனவே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இன்னும் மவுனம் காத்து இருக்காமல் தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தற்போது தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த அறிவிப்பானது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல உள்ளது. எனவே அரசு மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது. அந்த எண்ணத்தையும் கைவிட வேண்டும்.

    தமிழகத்தில் நிலவும் சட்டம் -ஒழுங்கு பிரச்சினைக்கு முக்கிய காரணமே டாஸ்மாக் கடைகள் தான். இதனால் பல வழிகளில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் அதிகம் கூடக் கூடிய இடங்களில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த படி அதனை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அரசு பள்ளிகளில் உள்ள சத்துணவு கூடங்கள் அனைத்தும் பராமரிப்பின்றி கிடக்கிறது. அதனை சீர் செய்ய வேண்டும். கொங்கு மண்டல பகுதிகளில் மழையால் சேதம் அடைந்த வாழை பயிர்களுக்கு, விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்.

    மேலும் தென்னை விவசாயிகள் நீண்ட நாட்களாக கேட்டு வரும் கொப்பரை தேங்காய் கொள்முதலுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில், பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணை வழங்க வேண்டும்.

    பொதுமக்கள் நடமாடும் இடங்களில் விளம்பர பேனர்களை வைப்பதை அனைத்து கட்சிகளும் தவிர்க்க வேண்டும். தமிழக அமைச்சர்கள் தாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை பார்த்து பேச வேண்டும். பொறுப்பற்ற முறையில் வார்த்தைகளை விடக்கூடாது.

    அவர்கள் மற்றவர்களுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். அடுத்த மாதம் 15-ந் தேதி மூப்பனாரின் பிறந்த நாளையொட்டி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தஞ்சையில் மிக பிரமமாண்டமாக மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்துகட்சி தலைவர்களும் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து நிருபர்கள், வைத்தியலிங்கம் இல்ல திருமணவிழாவில், டி.டி.வி.தினகரன் மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோர் சந்தித்து கொண்டது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ஒத்த கருத்துடைய அனைவரும் ஒன்றிணைந்து ஒரே அணியில் செயல்படுவார்கள். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பா.ஜ.க, த.மா.கா மற்றும் கூட்டணி கட்சிகள் அனைத்தும் இணைந்து ஒரே அணியாக செயல்பட்டு வெற்றி வாகை சூடுவோம் என்றார்.

    • கே.ஜி.மில் அருகே அதிவேகமாக வந்த கார், வளைவில் திரும்ப முடியாமல் மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.
    • சம்பந்தப்பட்ட இடங்களில் வேகத்தடை-டிவைடர் வைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வடவள்ளி,

    கோவை வடவள்ளி - தொண்டாமுத்தூர் ரோட்டில் கே.ஜி.மில் அருகே நேற்று இரவு அதிவேகமாக வந்த கார், வளைவில் திரும்ப முடியாமல் மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் மின்கம்பம் சுக்குநூறாக நொறுங்கியது.

    எனவே மின்கம்பியில் பயங்கர தீப்பொறி கிளம்பியது. இதனை பார்த்த பொதுமக்கள் அங்கு வந்து பார்த்தனர். அப்போது காரில் இருந்த 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி பிழைத்தனர்.

    அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொண்டாமுத்தூர் சாலையில் கடந்த வாரம் அதிகாலை கர்நாடக பஸ்- ஜீப் மோதி விபத்து நடந்தது. வடவள்ளி-தொண்டாமுத்தூர் சாலையில் வேகத்தடை இல்லை. எனவே அங்கு அதிவேகமாக வாகனங்கள் இயக்கப்படுகிறது.

    இதனால் போக்குவரத்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களில் வேகத்தடை-டிவைடர் வைத்து, வாகன விபத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • வலி நிவாரணி மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து போதை மருந்தாக மாற்றுகின்றனர்.
    • 70 போதை மாத்திரைகள், ரூ. 1,400 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    கோவை,

    கோவை மாநகரில் வாலிபர்களிடம் போதைப்பழக்கம் அதிகரித்து வருகிறது. எனவே இதனை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில்,பேரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே, சிலர் போதை மாத்திரைகளை பதுக்கி விற்பதாக, பெரிய கடைவீதி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்தின்பேரில் 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். எனவே அவர்களிடம் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் போதை மருந்து, ஊசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. எனவே அவர்களை போலீசார் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    இதில் அவர்கள் கரும்புக்கடை சேரன் நகரை சேர்ந்த கூலி தொழிலாளி தம்பி (எ) அக்பர் அலி (வயது 27), குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த தொழிலாளி ரியாஷ் கான் (23) என்பது தெரியவந்தது. இவர்கள் வலி நிவாரணி மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து போதை மருந்தாக மாற்றி, ஊசி மூலம் உடம்பில் செலுத்துவது தெரிய வந்தது.

    எனவே போதை மாத்திரை, மருந்துகள் விற்றதாக, மேற்கண்ட 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 70 போதை மாத்திரைகள், செல்போன், மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ. 1,400 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    ஆர்.எஸ்.புரம் கிருஷ்ணசாமி ரோட்டில் கஞ்சா விற்றதாக, தெற்கு உக்கடம் ஜி.எம் நகரை சேர்ந்த மீன் கடை தொழிலாளி ஷாஜகான் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா, மொபட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    • காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், மாநகராட்சி ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை மாநகராட்சி 1-வது வார்டு பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான நகர்புற நலவாழ்வு மையத்தினை (ஆரம்ப சுகாதார நிலையம்) அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் நிதி ஒதுக்கீடு செய்து, அமைத்து நேற்று காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இதன் தொடர்ச்சியாக வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி நகர்புற நலவாழ்வு மையத்தினை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி மரக்கன்று நட்டு வைத்து சிறப்பித்தார்.

    நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியன், வட்ட செயலாளர் ராஜசேகரன், பிரபாகரன், மண்டல சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் பவுன்ராஜ், மருத்துவர் அஸ்வின்ராஜ், உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, காங்கிரஸ், கொ.ம.தே.க உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், மாநகராட்சி ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.  

    • பேரூராட்சி பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது.
    • பேரூராட்சி தலைவர் மரகதம் வீரபத்திரன் மரக்கன்றுகளை நட்டார்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

    உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பேரூராட்சி பகுதியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்பினர் மற்றும் பேரூராட்சி இணைந்து பேரூராட்சி பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது.

    முதற்கட்டமாக பேரூராட்சி அருகில் உள்ள தனியார் பள்ளியில் பேரூராட்சி தலைவர் மரகதம் வீரபத்திரன் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.

    இதில் பேரூராட்சி துணைத்தலைவர் சண்முகசுந்தரம் கவுன்சிலர்கள் ஸ்ரீதரன், ராஜேஸ்வரி, சித்ரா, ஜெயலட்சுமி, சாவித்திரி, பேரூராட்சி அலுவலர்கள், தன்னார்வ அமைப்பினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பேரூராட்சி பகுதிகள் முழுவதும் பேரூராட்சிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் நகர் பகுதிகள் சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெறும் என செயல் அலுவலர் வீரபாண்டியன் தெரிவித்தார். 

    • வாகனத்தின் மூலம் ஒலிபெருக்கி மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலமாக விழிப்புணர்வு.
    • ஆன்லைன் மோசடி போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    கோவை,

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல், காவலர் செயலி, சைபர் குற்றங்கள், டெலிகிராம் போன்றவற்றால் ஏற்படும் அபாயங்கள், ஆன்லைன் மோசடி போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள், பள்ளி, கல்லூரி பகுதிகள், வணிக வளாகங்கள் போன்ற பகுதிகளில் மாநகர காவல்துறையின் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இவர்கள் தங்களுக்கு என பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள வாகனத்தின் மூலம் ஒலிபெருக்கி மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலமாக இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    மாநகர காவல் ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ரோகிணி, ஈஸ்வரன், பிரேமலதா மற்றும் தலைமைக் காவலர் ராஜ்பிரியா ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • செங்காம்பு கருவேப்பிலைக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும்.
    • கருவேப்பிலைக்கு குறைந்த பட்ச விலையாக கிலோவுக்கு ரூ.20 நிர்ணயம் செய்ய வேண்டும்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மேட்டுப்பாளையம் தாலுகா உள்ளது.

    இதில் தோலம்பாளையம், வெள்ளியங்காடு, காளம்பாளையம், தேக்கம்பட்டி, சிறுமுகை, இலுப்பநத்தம், பெள்ளேபாளையம், ஜடையம்பாளையம், சிக்காரம்பாளையம், பெள்ளாதி பகுதிகளில் கத்திரி, வெண்டை, புடலங்காய், சுரக்காய், முள்ளங்கி, தங்காளி, வெண் பூசணி உள்ளிட்ட பல்வேறு நாட்டு காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகிறது.

    இதுபோக பெள்ளேபாளையம், சிக்காரம்பாளையம், பெள்ளாதி, மருதூர், கிட்டாம்பாளையம், மங்களக்கரைபுதூர், ஜடையம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் வாழை மற்றும் நாட்டுகாய்களுக்கு இணையாக கருவேப்பிலை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இங்கு விளைவிக்கப்படும் கருவேப்பிலை திருச்சி, கரூர், கோவை, நாமக்கல், ஈரோடு, சென்னை, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

    இப்பகுதியில் விளையும் செங்காம்பு கருவேப்பிலைக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். மேலும் ஒரு சில விவசாயிகள் கருவேப்பிலையை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேளாண்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதனிடையே தற்போது கருவேப்பிலைக்கு 1 கிலோவிற்கு ரூ.4 மட்டுமே கிடைத்து வருகிறது. இதனால் விவசாயிகள் வெட்டு கூலி கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே உரிய விலை கிடைக்காததால் பெள்ளோபாளையம், பட்டக்காரனூர், பெள்ளாதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் கருவேப்பிலைக்கு களைக்கொல்லி மருந்துகளை அடித்து வருகின்றனர். இதனால் கருவேப்பிலைகள் செடியிலேயே கருகி உதிர்ந்து வருகின்றனர். இதன் காரணமாக விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர்.

    இதுகுறித்து கிட்டாம்பாளையத்தை சேர்ந்த விவசாயி பாலமுருகன் கூறியதாவது:-

    மேட்டுப்பாளையம் தாலுகாவில் நாட்டு காய்கள், வாழைக்கு அடுத்த படியாக கருவேப்பிலையும் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இதில் இப்பகுதியில் விளையும் கருவேப்பிலைக்கு நல்ல மணம் உள்ளதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் இதற்கு நல்ல கிராக்கி உள்ளது.

    இதனிடையே கருவேப்பிலை நடவு செய்து 1 வருடத்தில் அறுவடைக்கு தயாராகும். அதன்பின் 4 மாதத்திற்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். 1 ஏக்கருக்கு சுமார் 4 முதல் 6 டன் வரை கருவேப்பிலை கிராப் தரும்.

    இதன்படி 1 கிலோவிற்கு குறைந்த பட்சம் ரூ.20 விலை கிடைத்தால் மட்டுமே விவசாயிகள் இதில் குறைந்த பட்ச லாபம் பார்க்க முடியும். ஆனால் தற்போது கிலோவிற்கு ரூ.4 மட்டுமே விலை கிடைத்து வருகிறது.

    இதனால் செயவதறியாமல் விவசாயிகள் சிலர் இதனை காட்டுக்கு உரமாக போட்டு வருகின்றனர். ஒரு சிலர் களைக்கொல்லி மருந்து அடித்து வருகின்றனர்.

    இதனிடையே அரசு கருவேப்பிலைக்கு குறைந்த பட்ச விலையாக கிலோவுக்கு ரூ.20 நிர்ணயம் செய்ய வேண்டும் என கூறினர்.

    • கடையில் இருந்து புகை வருவதாக அந்த வழியாக சென்றவர்கள் தகவல் தெரிவித்தனர்.
    • கடையின் உரிமையாளர் வடக்கிப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

    கோவை,

    பொள்ளாச்சி அருகே உள்ள பணிக்கம்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 51). இவர் சூலக்கல் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையை கிணத்துக்கடவு அருகே உள்ள தேவராய புரத்தை சேர்ந்த கிருஷ்ணவேணி (38) என்ற பெண் கவனித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு கிருஷ்ணவேணி வழக்கம் போல கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார். கடையில் இருந்து புகை வருவதாக அந்த வழியாக சென்றவர்கள் கிருஷ்ணவேணிக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் உடனடியாக சென்று கடைக்கு சென்று தீயை அணைத்தார். இதில் கடையில் இருந்த வேட்டி, சேலைகள் எரிந்து இருந்தது. அந்த வழியாக சென்ற வயரும் கருகி இருந்தது. எனவே மின் கசிவு காரணமாக தீ பிடித்து இருக்கலாம் என நினைத்து கிருஷ்ணவேணி வீட்டிற்கு சென்றார்.

    அவர் மறுநாள் காலையில் கடையை திறக்க சென்றார். அப்போது கடையில் இருந்த எண்ணை பாக்கெட்டுகள், சூடன், திரி ஆகியவற்றை சேதப்படுத்தி யாரோ மர்ம நபர் தீ வைத்து விட்டு சென்றது தெரிய வந்தது. மேலும் அவர்கள் கடைக்குள் ஆபாச வார்த்தைகளை எழுதி விட்டும் சென்றிருந்தனர்.

    இது குறித்து கடையில் உரிமையாளர் வடக்கிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் போலீசார் சந்தேகம்படும்படி சுற்றித்திரிந்த சூலக்கல்லை 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் தான் கடையில் தீ வைத்து ஆபாச வார்த்தைகளை எழுதி இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

    • ஹேமலதா தனது யூடியூப் சேனலில் ஒருசில வர்த்தக முதலீட்டு விளம்பரங்கள் போட்டார்.
    • ஹேமலதா கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ஏமாற்றி இருக்கலாம்.

    கோவை,

    கோவையில் முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக கூறி, லட்சக்கணக்கில் பணமோசடி செய்ததாக, மாடர்ன் மம்மி யூடியூப் சேனல் நிர்வாகி ஹேமலதா, கணவர் ரமேஷ், கேமராமேன் அருணாச்சலம் ஆகிய 3 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை விளாங்குறிச்சி அக்கம்மாள் கார்டனை சேர்ந்த ஹேமலதா கடந்த 2000-ம் ஆண்டு மாடர்ன் மம்மி என்ற பெயரில் யூடியூப் சேனலை தொடங்கி உள்ளார். இவர் ஆரம்பத்தில் பதிவிட்ட வீடியோக்கள், நடுத்தர இல்லத்தரசிகளிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இதனால் அவரது சேனலை ஆயிரக்கணக்கானோர் பார்க்கத் தொடங்கினர். மாடர்ன் மம்மி சேனலுக்ககான அளப்பரிய வரவேற்பு, ஒருசில வணிக நிறுவனங்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    எனவே அவர்கள் தங்களின் விற்பனை பொருட்களை பிரபலப்படுத்தும்படி கேட்டு கொண்டனர். அதன்படி ஹேமலதாவும் வீடியோ பதிவிட்டார். ஹேமலதா போட்ட விற்பனை பதிவுகள், வாடிக்கையாளரை மிகவும் கவர்ந்தது.

    ஹேமலதாவின் யூடியூப் சேனலை நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் அதிகம் பார்த்து வருகின்றனர். எனவே அவர்களை மேலும் கவரும் வகையில் யூடியூப் சேனலில் சுய லாபத்துடன் கூடிய வர்த்தக விளம்பரங்களை பதிவு செய்வது என்று முடிவு செய்தார்.

    அப்போதுதான் அவருக்கு ஆன்லைன் மூலம் முதலீட்டு விளம்பரம் செய்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் யோசனை வந்தது. இதன்படி அவர் தனது யூடியூப் சேனலில் ஒருசில வர்த்தக முதலீட்டு விளம்பரங்கள் போட்டார். இது வாடிக்கையாளர்களிடம் ஈர்ப்பை ஏற்படுத்தியது.

    எனவே அவர்கள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தினர். அப்போது அவர்களுக்கு முதிர்வு தேதியில் ஏற்கெனவே சொன்னபடி ஹேமலதா பணத்தை அனுப்பி வைத்து உள்ளார். இது வாடிக்கையாளர்களிடம் கூடுதல் ஆர்வத்தை தூண்டியது. எனவே சின்ன மண்புழுவை போட்டு பெரிய மீனை பிடிப்பது என்று ஹேமலதா முடிவு செய்தார்.

    இதனை தொடர்ந்து அவர் மாடர்ன் மம்மியில், எங்களிடம் ரூ.1200 முதலீடு செய்தால் 20 நாட்களில் ரூ.1500 வழங்கப்படும் என்று வீடியோ பதிவு செய்தார். ஹேமலதா ஏற்கனவே முந்தைஅறிவுப்புகளுக்கு பேசியபடி பணம் கொடுத்து உள்ளதால், வாடிக்கையாளர்கள் முண்டியடித்து கொண்டு பணம் கட்டினர்.

    இந்த வகையில் ஹேமலதாவுக்கு லட்சக்கணக்கில் பணம் சேர்ந்து உள்ளது. இந்த நிலையில் பணமுதிர்வு காலம் வந்தது. அந்த நேரத்தில் ஹேமலதா செல்போனை சுவிட்ச்ஆப் செய்து தலைமறைவானார். இது வாடிக்கையார்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், இது தொடர்பாக கோவை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்து உள்ளார்.

    எனவே போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தான் ஹேமலதா முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக கூறி பலரை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் வசூலித்த விவரம் தெரிய வந்து உள்ளது.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், யூடியூபர் ஹேமலதா கிட்டத்தட்ட 595 வீடியோக்களை சேனலில் பதிவிட்டு உள்ளார். இவருக்கு 1.59 லட்சம் பார்வையாளர்கள் உள்ளனர். ஹேமா பதிவிட்ட அனைத்து வீடியோக்களையும் சுமார் ஒரு கோடியே 89 லட்சத்து 21 ஆயிரத்து 371 பேர் பார்த்து உள்ளனர்.

    எனவே ஹேமலதா கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ஏமாற்றி இருக்கலாம் என்று கருதுகிறோம். எனவே மாடர்ன் மம்மி சேனல் மூலம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் இதுதொடர்பாக போலீசாரிடம் புகார் தரவேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை திரும்ப பெற்றுத்தர முடியும் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    மேலும் கைதான யூடியூ பர் ஹேமலதா, அவரது கணவர் உள்பட 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கான நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகிறார்கள்.

    • வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் ரெயில் இயக்கப்பட்டு வந்தது.
    • இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ரெயில் நிலையங்களில் நிற்கும்.

    கோவை,

    கோவையில் இருந்து திருப்பதிக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் ரெயில் இயக்கப்பட்டு வந்தது.

    இந்த ரெயிலில் கோவை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இந்த ரெயிலில் பயணித்து திருப்பதிக்கு சென்று வந்தனர்.

    இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்தது. ரெயிலை கூடுதல் நாட்களும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பயணிகளிடம் எழுந்தது.

    இந்த நிலையில் கோவை-திருப்பதி இடை யே செவ்வாய்க்கிழமை மட்டும் இயக்கப்பட்டு வந்த ரெயில், நிரந்தரமாக வாரத்துக்கு 4 நாட்கள் இயக்கப்பட உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை-திருப்பதி இடையே செவ்வாய்க்கிழமை தோறும் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த ரெயிலானது, வாரத்துக்கு 4 நாட்கள் நிரந்தரமாக இயக்கப்பட உள்ளது.

    அதன்படி கோவை-திருப்பதி விரைவு ரெயில் (எண்:22616) செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.10 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் பிற்பகல் 1.20 மணிக்கு திருப்பதி சென்றடையும்.

    திருப்பதி-கோவை ரெயில் (எண்: 22615) திங்கட்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமைகளில் பிற்பகல் 3 மணிக்கு திருப்பதியில் புறப்பட்டு, அதே நாள் இரவு 10.45 மணிக்கு கோவை வந்தடையும்.

    இந்த ரெயிலானது திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×