search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் பெண்களை குறிவைத்து ஏமாற்றிய யூடியூபர் ஹேமலதா
    X

    கோவையில் பெண்களை குறிவைத்து ஏமாற்றிய யூடியூபர் ஹேமலதா

    • ஹேமலதா தனது யூடியூப் சேனலில் ஒருசில வர்த்தக முதலீட்டு விளம்பரங்கள் போட்டார்.
    • ஹேமலதா கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ஏமாற்றி இருக்கலாம்.

    கோவை,

    கோவையில் முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக கூறி, லட்சக்கணக்கில் பணமோசடி செய்ததாக, மாடர்ன் மம்மி யூடியூப் சேனல் நிர்வாகி ஹேமலதா, கணவர் ரமேஷ், கேமராமேன் அருணாச்சலம் ஆகிய 3 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை விளாங்குறிச்சி அக்கம்மாள் கார்டனை சேர்ந்த ஹேமலதா கடந்த 2000-ம் ஆண்டு மாடர்ன் மம்மி என்ற பெயரில் யூடியூப் சேனலை தொடங்கி உள்ளார். இவர் ஆரம்பத்தில் பதிவிட்ட வீடியோக்கள், நடுத்தர இல்லத்தரசிகளிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இதனால் அவரது சேனலை ஆயிரக்கணக்கானோர் பார்க்கத் தொடங்கினர். மாடர்ன் மம்மி சேனலுக்ககான அளப்பரிய வரவேற்பு, ஒருசில வணிக நிறுவனங்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    எனவே அவர்கள் தங்களின் விற்பனை பொருட்களை பிரபலப்படுத்தும்படி கேட்டு கொண்டனர். அதன்படி ஹேமலதாவும் வீடியோ பதிவிட்டார். ஹேமலதா போட்ட விற்பனை பதிவுகள், வாடிக்கையாளரை மிகவும் கவர்ந்தது.

    ஹேமலதாவின் யூடியூப் சேனலை நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் அதிகம் பார்த்து வருகின்றனர். எனவே அவர்களை மேலும் கவரும் வகையில் யூடியூப் சேனலில் சுய லாபத்துடன் கூடிய வர்த்தக விளம்பரங்களை பதிவு செய்வது என்று முடிவு செய்தார்.

    அப்போதுதான் அவருக்கு ஆன்லைன் மூலம் முதலீட்டு விளம்பரம் செய்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் யோசனை வந்தது. இதன்படி அவர் தனது யூடியூப் சேனலில் ஒருசில வர்த்தக முதலீட்டு விளம்பரங்கள் போட்டார். இது வாடிக்கையாளர்களிடம் ஈர்ப்பை ஏற்படுத்தியது.

    எனவே அவர்கள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தினர். அப்போது அவர்களுக்கு முதிர்வு தேதியில் ஏற்கெனவே சொன்னபடி ஹேமலதா பணத்தை அனுப்பி வைத்து உள்ளார். இது வாடிக்கையாளர்களிடம் கூடுதல் ஆர்வத்தை தூண்டியது. எனவே சின்ன மண்புழுவை போட்டு பெரிய மீனை பிடிப்பது என்று ஹேமலதா முடிவு செய்தார்.

    இதனை தொடர்ந்து அவர் மாடர்ன் மம்மியில், எங்களிடம் ரூ.1200 முதலீடு செய்தால் 20 நாட்களில் ரூ.1500 வழங்கப்படும் என்று வீடியோ பதிவு செய்தார். ஹேமலதா ஏற்கனவே முந்தைஅறிவுப்புகளுக்கு பேசியபடி பணம் கொடுத்து உள்ளதால், வாடிக்கையாளர்கள் முண்டியடித்து கொண்டு பணம் கட்டினர்.

    இந்த வகையில் ஹேமலதாவுக்கு லட்சக்கணக்கில் பணம் சேர்ந்து உள்ளது. இந்த நிலையில் பணமுதிர்வு காலம் வந்தது. அந்த நேரத்தில் ஹேமலதா செல்போனை சுவிட்ச்ஆப் செய்து தலைமறைவானார். இது வாடிக்கையார்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், இது தொடர்பாக கோவை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்து உள்ளார்.

    எனவே போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தான் ஹேமலதா முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக கூறி பலரை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் வசூலித்த விவரம் தெரிய வந்து உள்ளது.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், யூடியூபர் ஹேமலதா கிட்டத்தட்ட 595 வீடியோக்களை சேனலில் பதிவிட்டு உள்ளார். இவருக்கு 1.59 லட்சம் பார்வையாளர்கள் உள்ளனர். ஹேமா பதிவிட்ட அனைத்து வீடியோக்களையும் சுமார் ஒரு கோடியே 89 லட்சத்து 21 ஆயிரத்து 371 பேர் பார்த்து உள்ளனர்.

    எனவே ஹேமலதா கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ஏமாற்றி இருக்கலாம் என்று கருதுகிறோம். எனவே மாடர்ன் மம்மி சேனல் மூலம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் இதுதொடர்பாக போலீசாரிடம் புகார் தரவேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை திரும்ப பெற்றுத்தர முடியும் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    மேலும் கைதான யூடியூ பர் ஹேமலதா, அவரது கணவர் உள்பட 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கான நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகிறார்கள்.

    Next Story
    ×