என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • கம்பெனியில் வேலை பார்த்த வாலிபர் ஒருவருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது.
    • இளம் பெண்ணின் கணவர் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார்.

    பொள்ளாச்சி,

    கோவை பொள்ளாச்சி அருகே உள்ள குறிஞ்சி நகரை சேர்ந்தவர் 35 வயது இளம்பெண்.

    இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இளம்பெண் புளியம்பட்டியில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    அப்போது அதே கம்பெனியில் வேலை பார்த்த வாலிபர் ஒருவருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.

    இளம்பெண் தனது கணவர் மற்றும் குழந்தைகள் வீட்டில் இல்லாத நேரத்தில் கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

    இந்த விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக இளம்பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று இளம்பெண் தனது கணவரிடம் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். பின்னர் அவர் அவரது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.

    வேலைக்கு சென்று நீண்ட நேரம் ஆகியும் இளம்பெண் வீட்டிற்கு திரும்பாததால் அவரை அவரது கணவர் பல்வேறு இடங்களில் தேடினார்.

    ஆனால் அவர் கிடைக்க வில்லை. இதுகுறித்து இளம் பெண்ணின் கணவர் தன்னையும், தனது குழந்தைகளையும் தவிக்க விட்டு சென்ற மனைவியை மீட்டு தரும்படி பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.  

    • ஏக்கருக்கு 700 கிலோ வரை விதை போட்டால், 8 ஆயிரம் கிலோ விளைச்சல் கிடைக்கும்.
    • தொடர் நஷ்டத்தை சந்திக்க விரும்பாத பெரும் பாலான விவசாயிகள் வாழை, பாக்கு என பயிர் சாகுபடியை மாற்றினர்.

    கோவை,

    தமிழகத்தில் அன்றாட சமையலில் சின்ன வெங்காயத்துக்கு முக்கிய பங்கு உண்டு.

    இதற்கு உணவில் சுவை சேர்க்கும் மகத்துவம் உண்டு. அதுவும் தவிர உடலுக்கு குளிர்ச்சி தரும். எனவே பொதுமக்கள் உணவில் அதிகமாக சேர்த்து வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், வேடப்பட்டி, மாதம்பட்டி, ஜாகீர்நாயக்கன்பாளையம், தாளியூர், தீத்திப்பாளையம், தென்கரை, ஆலாந்துறை, மத்வராயபுரம், தென்னமநல்லூர், கலிக்கநாயக்கன்பட்டி, தேவராயபுரம் உள்ளிட்ட கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி நடைபெற்று வந்தது.

    இது மிதமான தட்பவெப்பநிலை நிலவும் பகுதிகளில் செழிப்பாக வளரும் 70 நாள் பயிர். ஆண்டுக்கு 2 முறை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு 4 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

    ஏக்கருக்கு 700 கிலோ வரை விதை போட்டால், 8 ஆயிரம் கிலோ விளைச்சல் கிடைக்கும். ஆனால் கடந்த ஆண்டில் வெங்காயம் சாகுபடி செய்த பெரும்பாலான விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வில்லை.மேலும் தொடர் மழையால் வெங்காய்தை அறுவடை செய்வதிலும், அதனை பாதுகாப்பதிலும் சிரமம் ஏற்பட்டது. கடந்த முறை கிலோ ரூ.35 வரை வியாபாரிகளால் சின்ன வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டது.

    இதன் காரணமாக தற்போது சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய பெரும்பாலான விவசாயிகள் தயக்கம் காட்டி உள்ளனர். தொடர் நஷ்டத்தை சந்திக்க விரும்பாத பெரும் பாலான விவசாயிகள் வாழை, பாக்கு என பயிர் சாகுபடியை மாற்றினர்.

    இதன் காரணமாக நடப்பாண்டில் 40 சதவீத விவசாயிகள் மீண்டும் சின்ன வெங்காயம் பயிர் செய்வதை தவிர்த்து உள்ளனர். இதனால் அதன் தட்டுப்பாடு அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து வரும் சின்ன வெங்காயம் வரத்தும் குறைய தொடங்கி யுள்ளது. முன்பெல்லாம் அதனை உரித்தால் தான் கண்ணீர் வரும் என்பார்கள். ஆனால் தற்போது அதன் விலையை கேட்டாலே கண்ணீர் வரும் நிலை உள்ளது.

    அந்தளவிற்கு அதன் விலையானது உச்சத்ததை எட்டி உள்ளது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.180க்கு மேல் விற்பனை யாகி வருகிறது. இதனால் சமையலில் சின்ன வெங்கா யத்தை பயன்படுத்துவதும் குறைந்து வருகிறது.

    தற்போது ஜூன் மாத தொடக்கத்தில் ஒரு சில விவசாயிகள் மீண்டும் சின்ன வெங்காய சாகு படியை தொடங்கினர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி பருவமழை தொடங்கவில்லை.

    கடந்த ஆண்டு ஒரு கிலோ விதை வெங்காயம் ரூ.15 முதல் 20க்கு விற்பனை யானது. தற்போது அதன் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

    முன்பெல்லாம் சின்ன வெங்காயம் பயிரிட்டால் ஒரு ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் மட்டுமே செலவாகும். ஆனால் தற்போது ரூ.1.5 லட்சம் வரை செலவாகிறது. அப்படியே செலவு செய்தாலும் தற்போது ஏக்கருக்கு 4 டன் வரை மட்டுமே மகசூல் கிடைத்து வருகிறது.

    மேலும் சின்ன வெங்காயத்தில் தற்போது நுனிக ருகல், பூஞ்சை தாக்குதல் அதிகளவில் உள்ளது. எனவே பயிர்களை காய்ப் பாற்ற 4 தடவைகள் கூடுதலாக மருந்து தெளிக்க வேண்டி உள்ளது.

    இதுகுறித்து கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

    பருவமழையை நம்பி காத்திருந்ததால் சின்ன வெங்காயம் சாகுபடி தள்ளிபோனது. ஜூனில் கிலோ ரூ.65க்கு விற்ப னையான சின்ன வெங்காயம் தற்போது கிலோ ரூ.145க்கு விற்பனையாகிறது. கடந்தாண்டு அறுவடை நேரத்தில் பருவமழை தொடங்கியது.

    இதனால் அங்கு பயிரிடப்பட்டு இருந்த சின்ன வெங்காயத்தை அறு வடை செய்வதில், எங்களுக்கு பெருத்த சிரமநிலை ஏற்பட்டது. விளைச்சலும் போதிய அளவுக்கு இல்லை.

    இந்த ஆண்டு பருவமழை போதியளவு பெய்ய வில்லை. 4 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஊட்டியை போன்ற சீதோஷ்ண நிலை வேண்டும். தற்போது விவசாயிகளிடத்தில் சின்ன வெங்காயம் இருப்பு இல்லை.

    எனவே ஆகஸ்டு மாதம் வரைக்கும் வெங்காய தட்டுப்பாடு என்பது தொடரும். இதனால் விலையேற்றமும் நீடிக்கும்.

    வேளாண்துறை, வேளாண் விற்பனைத்துறை, தோட்டக்கலைத்துறை ஆகியவை ஒன்றிணைந்து மாநிலம் முழுவதும் விவசாயிகள் என்னென்ன பயிரிடுகின்றனர்.

    எவ்வளவு ஏக்கரில் பயிரிடுகின்றனர். மாநிலத்தின் தேவை எவ்வளவு, அறுவடை செய்தால் கிடைக்கும் மகசூலின் அளவு போதுமானதாக இருக்குமா, விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்குமா, நஷ்டம் ஏற்படுமா, இருப்பு வைத்து விற்றால் லாபம் கிடைக்குமா என்பது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டு அதனை அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

    மேலும் காய்கறிகள் சாகுபடி செய்யும் விவசாயிகளிடம் உரிய விலை கிடைக்கும் பயிர்களை சாகுபடி செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அப்படி செய்தால் தடுப்பாடும் வராது. விலையும் உயராது.

    கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டுக்கு முன்பு வரை சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இங்கு 5 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மட்டுமே பயிரிடப்பட்டு உள்ளது.

    கடந்த ஆண்டை விட 10 ஏக்கர் சாகுபடி பரப்பு குறைந்து விட்டதால் தற்போது பயிரிட்டுள்ள வெங்காயத்தை ஆகஸ்டு மாத இறுதியில் மற்றும் செப்டம்பர் மாத துவக்கத்தில் தான் அறுவடை செய்ய முடியும்.

    அதுவரை தட்டுப்பாடு நிலையே நீடிக்கும். கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து வரும் வெங்காயமும் குறைந்து விட்டதால் தமிழகத்திற்கு வரும் அளவு படிப்படியாக குறைய தொடங்கும். இதனால் வெங்காயம் விலை தற்ச மயம் குறைய வாய்ப்பில்லை.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • ஜூன் மாத இறுதியில் இருந்து நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது.
    • சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    கோவை:

    கோவை மாநகரில் 26 வார்டுகள், 20க்கும் மேற்பட்ட நகரையொட்டிய கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக சிறுவாணி அணை விளங்குகிறது.

    49.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து தினமும் குடிநீருக்காக 10 கோடி லிட்டர் (100 எம்.எல்.டி) தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

    கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அணையின் நீர்மட்டம் 5 அடிக்கும் கீழ் குறைந்தது. ஜூன் மாதத்தில் அணையின் நீர்மட்டம் ஒரு அடிக்கு குறைவாக சரிந்தது.

    இதனால் சிறுவாணி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட வார்டுகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் லாரிகள் மூலமாக தண்ணீர் வினியோகிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஜூன் மாத இறுதியில் இருந்து நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. கடந்த சில நாட்களாக பலத்த மழையும் பெய்தது.

    இதனால் அணைக்கு செல்லும் முத்தியாறு, பட்டியலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளம் அப்படியே அணைக்கு வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டமும் வெகுவாக உயர தொடங்கியது.

    மெல்ல மெல்ல உயர தொடங்கிய சிறுவாணி அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 12 அடியாக உயர்ந்தது. வரும் நாட்களில் இன்னும் அணையின் நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    அணையின் நீர்மட்டம் உயர தொடங்கி உள்ளதால், அங்கிருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு 3 கோடியில் இருந்து 7 கோடி லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    செப்டம்பர் வரை பருவமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • சாலையில் நடந்து சென்ற மூதாட்டி அங்கம்மாள் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
    • தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வடவள்ளி,

    கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பஜனை கோவில் வீதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி அங்கம்மாள் (வயது98).

    இவர் இன்று காலை அந்த பகுதியில் உள்ள கழிவறைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

    மாதம்பட்டி-தொண்டாமுத்தூர் சாலையில் தீயணைப்பு நிலையம் அருகே வந்த போது, சாலையில் நடந்து சென்ற மூதாட்டி அங்கம்மாள் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

    அந்த சமயம் அந்த வழியாக தொண்டாமுத்தூரில் இருந்து மாதம்பட்டி நோக்கி தனியார் பள்ளி வாகனம் மாணவர்களை ஏற்றி கொண்டு வந்தது.

    சாலையில் மூதாட்டி விழுந்ததை பார்த்த வாகனத்தின் டிரைவர், அவர் மீது மோதாமல் இருக்க வாகனத்தை திருப்பி இயக்க முயன்றார். அப்போது மூதாட்டி பள்ளி வாகனத்தின் பின் டயரில் சிக்கி கொண்டார்.

    இதில் அவர் மீது பஸ்சின் டயர் ஏறி இறங்கியதால் மூதாட்டி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து ஓடி வந்து வாகனத்தை மறித்து டிரைவரை சிறை பிடித்தனர். சம்பவம் குறித்து தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து இறந்த மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பள்ளி வாகனத்தின் டிரைவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பள்ளி வாகனத்தின் டயரில் சிக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மதுக்கரை துணை மின்நிலையத்தில் நாளை (13-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • தகவலை குனியமுத்தூர் மின்பகிர்மானவட்ட செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்து உள்ளார்.

    கோவை,

    மதுக்கரை துணை மின்நிலையத்தில் நாளை (13-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே கே.ஜி.சாவடி, எம்.ஜி.ஆர்.நகர், பாலத்துறை, சுகுணாபுரம், பைபாஸ் ரோடு, பி.கே.புதூர், சாவடி புதூர், மதுக்கரை, காளியாபுரம், அறிவொளி நகர், எட்டிமடை, கோவைப்புதூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடைபடும்.

    மேற்கண்ட தகவலை குனியமுத்தூர் மின்பகிர்மானவட்ட செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்து உள்ளார். கோவை மின்வாரிய செயற்பொறியாளர் அறம்வளர்த்தான் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், டாடாபாத் துணைமின்நிலையத்தில் வருகிற 15-ந்தேதி மாதாந்திர பணிகள் நடக்கிறது.

    எனவே அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மேட்டுப்பாளையம் சாலை, அழகேசன் ரோடு, நாராயணகுரு ரோடு, சாய்பாபா கோவில், மனையியல் கல்லூரி, வனக்கல்லூரி, முருகன் மில்ஸ், என்.எஸ்.ஆர் சாலை, பாரதி பார்க் கிராஸ்-1,2,3, ராஜா அண்ணாமலை ரோடு, சென்ட்ரல் தியேட்டர், திவான்பகதூர்சாலை, பூ மார்க்கெட், பட்டேல் சாலை, காளீஸ்வரா நகர், செல்லப்பகவுண்டர் சாலை, சி.எஸ்.டபிள்யூ. மில்ஸ், ரங்கே கவுடர் சாலை, சுக்கர்வார்பேட், மரக்கடை, தெப்பக்குள மைதானம், ராம்நகர், அவிநாசி சாலை, காந்திபுரம் பஸ் நிலையம், காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, சித்தாபுதூர், பாலசுந்தரம் சாலை, புதியவர் நகர், ஆவாரம்பாளையம், டாடாபாத், அழகப்பசெட்டியார் சாலை, 100 அடி ரோடு, சிவானந்தா காலனி, அட்கோ காலனி, அலமு நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்று கூறப்பட்டு உள்ளது.

    • 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகளிர் விண்ணப்பிக்கலாம்.
    • பயிற்சியில் சேர விரும்பும் மகளிருக்கு உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை.

    கோவை,

    கோவை அரசு மகளிர் ஐ.டிஐ.-யில் நாளை முதல் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரில் இயங்கிவரும் அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் முன்னுரிமை விண்ணப்பதாரர்களுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் நாளை (ஜூலை 13) முதல் நேரடி சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதில், 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகளிர் விண்ணப்பிக்கலாம். இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அல்லது நேரில் வருவோருக்கு உதவி மையம் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

    பயிற்சியில் சேர விரும்பும் மகளிருக்கு உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை மற்றும் சிறப்பு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. இங்கு ஓராண்டு பயிற்சிகளான டெஸ்க்டாப் பப்ளிஷிங் ஆபரேட்டர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அண்ட் புரோகிராமிங் அசிஸ்டன்ட், ஐஓடி டெக்னீ சியன் (ஹெல்த் கேர்), சூவிங் டெக்னாலஜி தொழிற்பிரிவுகளும், இரண்டு ஆண்டு பயிற்சி களான இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், எலக்ட்ரானிக் மெக்கானிக், இன்பர்மே ஷன் டெக்னாலஜி, மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் டெக்னீஷியன் ெதாழிற்பி ரிவுகளும், 6 மாத கால பயிற்சியான ஸ்மார்ட் போன் டெக்னாலஜி-ஆப் டெஸ்டர் தொழிற்பிரிவும் பயிற்றுவிக்கப்படுகிறது. பயிற்சியில் தேர்ச்சி பெற்றால் மத்திய அரசின் தேசிய தொழிற்சான்றிதழ் (என்சிவிடி) வழங்கப்படும்.

    அனைத்து பயிற்சியாளர்களுக்கும் மாதம் தலா ரூ.750 உதவித்தொகை புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் பயின்றவர்களுக்கு மாதம் ரூ.1,000, மடிக்கணினி, மிதி வண்டி, சீருடை, தையற்கூலி, காலணி, பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள், 30 கிலோ மீட்டர் தொலைவு வரை இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்படுகிறது.

    இதுதவிர நவீன தொழிற்வளர்ச்சியை அறிந்து கொள்ளும் பொருட்டு இன்டர்ன்ஷிப் பயிற்சி, தொழில்நிறுவ னங்களை பார்வையிடுதல் போன்றவை ஏற்பாடு செய்யப்படுகிறது. பயிற்சி முடியும் தருவாயில் வளாக நேர்காணல் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தேங்காய்க்கு உரிய விலை கேட்டு, தேங்காயை உடைத்தனர்.
    • போராட்டத்தில் 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    வடவள்ளி,

    தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் தேங்காய்க்கு உரிய விலை கேட்டு தமிழகம் தழுவிய தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது.

    இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஒன்றியம் ஆலந்துறை பகுதியில் தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது.

    போராட்டத்திற்கு தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க கோவை மாவட்ட துணைச் செயலாளர் வீராசாமி தலைமை தாங்கினார்.

    சங்க மாநில துணைத்தலைவர் காளப்பன், மாவட்ட குழு உறுப்பினர் ஆறுச்சாமி, குப்புசாமி, மாவட்ட பொருளாளர் தங்கவேல், மாவட்டத் துணைத் தலைவர் சங்கரன், விவசாய சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த போராட்டத்தில் 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தேங்காய்க்கு உரிய விலை கேட்டு, தேங்காயை தரையில் உடைத்து போராட்டம் நடத்தினர்.

    மேலும் தேங்காய்க்கு கிலோவிற்கு 50 ரூபாய் தமிழக அரசு கொள்முதல் செய்திட வேண்டும். கொப்பரை தேங்காய் கிலோவுக்கு 140 ரூபாய் வழங்க வேண்டும். வன விலங்குகளால் தென்னை விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்திற்கு உரிய காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்பட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    • குற்ற சம்பவத்துடன் தொடர்புடைய வாகனங்களை நிறுத்துவதற்காக தனி வாகன நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    • உள்ளாட்சி நிர்வாகம் சீர்படுத்த வேண்டும் என காவல் நிலையத்திற்கு வருவோர் கோரிக்கை விடுத்தனர்.

    சூலூர்,

    சூலூர் காவல் நிலைய வளாகத்தில் குற்ற சம்பவத்துடன் தொடர்புடைய வாகனங்களை நிறுத்துவதற்காக தனி வாகன நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் அங்கு எப்போதும் 30 கார்கள், 50 பைக்குகளை பார்க்க முடிகிறது.

    சூலூரை சேர்ந்த சிலர் போலீஸ் நிலைய வளாகத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு வெளியூருக்கு சென்று திரும்புகின்றனர். இதனால் காவல் நிலையத்திற்கு வரும் வாகனங்களை நிறுத்த போதிய இடம் இல்லை.

    சூலூர் காவல் நிலைய வளாகத்தில் கருமத்தம்பட்டி மகளிர் காவல் நிலையமும் இயங்கி வருகிறது. இங்கு வரும் புகார்தாரர்கள் வாகனங்களை நிறுத்த இடம் தேடி அலைவது வாடிக்கையாக உள்ளது.

    போலீஸ் நிலையத்தின் அருகில் ஒன்றிய அலுவலகம், தாசில்தார் அலுவலகம் மற்றும் சப் ரிஜிஸ்டர் அலுவலகம் ஆகியவை உள்ளன. இங்கு வருபவர்கள் வாகனங்களை காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி விட்டு செல்வதால் இடப் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே இதனை உள்ளாட்சி நிர்வாகம் சீர்படுத்த வேண்டும் என காவல் நிலையத்திற்கு வருவோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    மேலும் பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்திற்கு வருவோர் காவல் நிலைய வளாகத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு மணிக்கணக்கில் நேரத்தை செலவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

    • ஆன்பி எஸ்.என்.எஸ். நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
    • மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்

    சரவணம்பட்டி,

    குமரி மாவட்டம் விளவங்கோடு அருகே உள்ள இரையுமன்துறை சுனாமி காலனியை சேர்ந்தவர் சில்வாடிமை. இவரது மகள் ஆன்பி (வயது 19). இவர் இவர் கோவை கோவில்பாளையம் அருகே குரும்பபாளையத்தில் உள்ள எஸ்.என்.எஸ். நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    ஆன்பி வையாபுரி நகரில் உள்ள கல்லூரி விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். கடந்த 2 நாட்களாக மனவேதனை அடைந்து காணப்பட்ட அவர் கல்லூரிக்கு செல்லாமல் விடுதியில் உள்ள அறையில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று அறையில் இருந்த ஆன்பி விடுதியில் உள்ள குளியல் அறைக்கு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சக மாணவிகள் கதவை தட்டினர். ஆனால் அவர் திறக்கவில்லை. இதனையடுத்து அவர்கள் விடுதி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது ஆன்பி வாட்டர் ஹீட்டர் பைப்பில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து பிணமாக கிடந்தார். கோவில்பாளையம் போலீசார் விரைந்து சென்று நர்சிங் மாணவி ஆன்பி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மாணவியின் தாய் விமலாராணி அவரது கணவரை பிரிந்து கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ஒருவரை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்தார். இதன்காரணமாக மாணவிக்கும், அவரது தாய்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதனால் மனவேதனை அடைந்த நர்சிங் மாணவி ஆன்பி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. பின்னர் போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • மாணவியின் பெற்றோர் பெயிண்டருடனான காதலை கைவிடுமாறு அறிவுரை கூறினர்.
    • போலீசார் பெயிண்டர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த 26 வயது பெயிண்டருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெவித்தனர்.

    மேலும் பெயிண்டருடனான காதலை கைவிடுமாறு தங்களது மகளுக்கு அறிவுரை கூறினர். இது குறித்து மாணவி தனது காதலனிடம் கூறினார். இதனையடுத்து பெயிண்டர் கடந்த மாதம் 20-ந் தேதி மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ராமேசுவரத்துக்கு கடத்தி சென்றார். அங்குள்ள நண்பர் ஒருவர் வீட்டில் மாணவியுடன் அவர் இருந்தார். கடந்த 23-ந் தேதி பெயிண்டர் மாணவியை அந்த பகுதியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்தார். பின்னர் 2 பேரும் அங்குள்ள முல்லை நகரில் தனியாக வீடு எடுத்து தங்கினர். அப்போது பெயிண்டர் மாணவியை 16 நாட்களாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்.

    கடந்த 8-ந் தேதி 2 பேரும் அங்கு இருந்து புறப்பட்டு ஈரோடு மாவட்டம் அந்தியூர் கிட்டாம்பாடி பிரிவில் உள்ள சந்துகாடு என்ற இடத்தில் உள்ள பெயிண்டரின் உறவினர் வீட்டில் தங்கி இருந்தனர்.

    மாணவி மாயமானது குறித்து அவரது பெற்றோர் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். அப்போது அவர் பெயிண்டருடன் சந்து காட்டில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் மாணவியை மீட்டனர். பெயிண்டரை கைது செய்து மேட்டுப்பாளையத்துக்கு அழைத்து வந்தனர்.

    அப்போது மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பெயிண்டர் மாணவியை திருமணம் செய்து 16 நாட்களாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் நர்சிங் மாணவியை கடத்தி சென்று 16 நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்த பெயிண்டர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 500 கிலோ தக்காளி கோவை மாவட்ட விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
    • தக்காளி ரேஷன் கடைகளில் கிலோ ரூ.60க்கு விற்பனையாகிறது,

    கோவை,

    அன்றாட சமையலில் முக்கிய பங்கு வகிப்பது தக்காளி தான். அனைத்து சமையல்களிலுமே தக்காளியின் பயன்பாடு அதிகமாக உள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இந்தியா முழுவதும் தக்காளியின் விலை விண்ணை முட்டு அளவிற்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.150யையும் தாண்டி விற்பனையாகி வந்தது.

    நாளுக்கு நாள் தக்காளியின் விலை அதிகரிப்பதால் தற்போது, சமையலில் தக்காளியின் பயன்பாடு வெகுவாக குறைந்து விட்டது.

    பெரும்பாலானவர்கள் தக்காளி இல்லாமலேயே சமைக்க தொடங்கி விட்டனர். பெரும்பாலான ஓட்டல்களிலும் தக்காளி சட்னி நிறுத்தப்பட்டு விட்டன.

    கோவையை பொறுத்த வரை காய்கறி மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.120க்கு விற்பனையாகி வருகிறது. சில்லரை விலை கடைகளிலும் இதை விட விலை அதிகமாக உள்ளது.

    காய்கறி மார்க்கெட்டுகளில் விலை அதிகரித்து காணப்பட்ட போதிலும் ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட உழவர் சந்தைகளில் நாட்டு தக்காளி ரூ.80க்கும், ஆப்பிள் தக்காளி ரூ.90க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    தக்காளியின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை செய்யப்பட்டது.

    அதன்படி கோவை மாவட்டத்தில் 20 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இன்று காலை முதல் அந்த கடைகளில் தக்காளி விற்பனையானது நடைபெற்றது. அந்த கடைகளில் ரூ.60க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது.

    மக்களும் ரேஷன்கடைகளில் ஆர்வத்துடன் குவிந்து தக்காளியை வாங்கி சென்றனர். தக்காளியை ரேஷன் கடைகளில் விற்க நடவடிக்கை எடுத்த அரசுக்கும் அவர்கள் நன்றி தெரிவித்து கொண்டனர். இதுகுறித்து கூட்டுற வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    தக்காளி விலை உயர்வை அடுத்து பொதுமக்கள் குறைந்த விலையில் வாங்கும் வசதியாக கோவை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

    அதன்படி கோவையில் ஒலம்பஸ், ஒண்டிப்புதூர், சாய்பாபா காலனி, கே.கே.புதூர், குனியமுத்தூர், பெரியநாயக்கன் பாளையம், பி.என்புதூர், இடையர்பாளையம், கணபதி, கவுண்டம்பா ளையம், செல்வபுரம், வெள்ளக்கிணறு உள்பட 20 இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது வரை 500 கிலோ தக்காளி கோவை மாவட்ட விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் ரேஷன் கடைகளில் 1 கிலோ தக்காளி ரூ.60க்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் ரேஷன் கடைகளில் சென்று தக்காளி வாங்கி பயன் அடையலாம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    கோவையில் தக்காளி விற்பனை செய்யப்படும் ரேஷன் கடைகள் விபரம்:

    முத்துராமலிங்கம் வீதி 2 ராமநாதபுரம், 80 அடி சாலை ஓலம்பஸ், மாரி யம்மன் கோவில் வீதி ஓண்டிப்புதூர், திருச்சி சாலை ஓண்டிப்புதூர், என்.எஸ்.ஆர்.சாலை, சாய்பாபா காலனி, கே.கே.புதூர் சாய்பாபா காலனி, குனியமுத்தூரில் 2 கடை, பாரதி நகர் பெரியநாயக்கன் பாளையம், இளங்கோவ டிகள் வீதி பி.என்.புதூர், மாரியம்மன் கோவில் வீதி பி.என்.புதூர், ஜெயாநகர் நீலிக்கோணாம்பாளையம், அனயன்காடு எஸ்.ஆர்.டி.லே அவுட் சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் அங்கப்பா பள்ளி எதிரில், தேவாங்க நகர் இடையர்பா ளையம், கே.ஆர்.ஜி.நகர் கணபதி, மூவர் நகர் கவுண்டம்பாளையம், முத்துசாமி காலனி செல்வபுரம், வெள்ளக்கி ணறு, கே.கே.புதூர் கோவில் மேடு கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது.

    • ஜாகீர் உசேன் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் அவரது மகன் இல்லை.
    • போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சூலூர்:

    அசாமை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (வயது28). இவரது மனைவி கைரொன்னிஷா (26). இவர்களுக்கு கைரூல் இஸ்லாம் (7) என்ற மகன் இருந்தான்.

    ஜாகீர் உசேன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோவை வந்தார். பின்னர் சூலூர் அருகே உள்ள சின்ன கலங்கல் பகுதியில் உள்ள நூற்பாலையில் வேலைக்கு சேர்ந்தார். அங்கேயே குடும்பத்துடன் தங்கியும் வந்தார். கைரொன்னிஷாவும் கணவருடன் வேலைக்கு சென்றார்.

    தினமும் காலையில் வேலைக்கு செல்லும் கணவன், மனைவி 2 பேரும் மாலையில் தான் வீடு திரும்புவார்கள். இதனால் கைரூல் இஸ்லாம் மட்டும் வீட்டில் இருப்பார்.

    நேற்று வழக்கம் போல 2 பேரும் வேலைக்கு சென்றனர். கைரூல் இஸ்லாம் வீட்டில் இருந்தார். 11 மணியளவில் அவரது தாய் வீட்டிற்கு வந்து மகனுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு, தானும் சாப்பிட்டார். பின்னர் அவர் வேலைக்கு சென்று விட்டார்.

    இதையடுத்து சிறுவன், அருகே வசிக்கும் மற்ற சிறுவர்களுடன் விளையாட சென்றார்.

    இந்த நிலையில் ஜாகீர் உசேன் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் அவரது மகன் இல்லை. அக்கம்பக்கம் தேடி பார்த்தார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவர் சூலூர் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் மாதையின் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து சிறுவனை தேடினர்.

    அப்போது அங்குள்ள புதரில் சிறுவன் மர்மமான முறையில் இறந்து கிடந்தான். போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பார்வையிட்டனர். அப்போது மாணவனின் கழுத்தில் பனியனால் இறுக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்தது.

    இதனால் சிறுவனை யாரோ கொலை செய்து இங்கு கொண்டு வந்து வீசி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சிறுவனை கொலை செய்தது யார்? கொலை செய்ததற்கான காரணம் என்ன? சிறுவனின் பெற்றோருக்கும், வேறு யாருக்கும் ஏதவாது முன் விரோதம் இருந்து அதில் சிறுவன் கொல்லப்பட்டனா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தினர்.

    அப்போது சிறுவனின் தந்தைக்கும், அவரது உறவுப்பெண்ணுக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணும் அதே மில்லில் தான் வேலை பார்த்து வந்தார்.

    அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அந்த பெண்ணை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ×